மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்
கேள்வி-பதில்
##~##
பிரம்மகுமாரராகிய சனத்குமாரரே முருகப் பெருமானாக அவதரித்ததாக புராணக் கதை ஒன்றில் படித்தேன். இந்தக் கதை எந்தப் புராணத்தில் உள்ளது?

- கீர்த்தனா, ஈரோடு.

ஈசனுக்கு ஒரு மகன் பிறந்து, அவனால் தாரகாசுரன் அழிய வேண்டும் என்று புராணம் கூறும். அதற்கேற்ப, ஈசனுடன் உமையவளை இணைக்கும் முயற்சியில் தேவர்கள் ஈடுபட்டனர் என்று கந்தபுராணமும் தெளிவுபடுத்தும்.

ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிவந்த தீப்பொறி சரவணப் பொய்கையில் இணைந்து முருகன் தோன்றினான் என்கிற வரலாற்றை, 'குமார ஸம்பவம்’ என்ற தலைப்பில் எழுதிய காப்பியத்தில் காளிதாசன் குறிப்பிடுவான். பெரும்பாலான தகவல்கள் ஈசனின் புதல்வனாக கந்தனைச் சொல்லும். சனத்குமார ஸம்ஹிதையில் மாறுபட்ட விளக்கம் இருக்கலாம்.

யுக மாறுதலில் எழுதப்பட்ட புராணங்களில், மாறுபட்ட தகவல்கள் இருப்பது உண்டு. எனினும், கந்தபுராணத் தகவல் நம்பிக்கைக்கு உகந்தது. சிறந்த மகான்களை இறைவனின் அவதாரமாக மிகைப்படுத்திக் குறிப்பிடுவது உண்டு. சங்கரரின் அவதாரமாக ஆதிசங்கரர் தோன்றினார். அத்துடன் நில்லாமல், மண்டனமிச்ரரை பிரம்மனின் அவதாரமாகவும், அவரின் மனைவியை சரஸ்வதியின் அவதாரமாகவும் குறிப்பிடுவது உண்டு. தசாவதாரம்  மேற்கொண்ட திருமாலுக்கு இன்னும் 14 அவதாரங்களை சுட்டிக்காட்டுவது உண்டு. கபிலரை, திருமாலின் அவதாரமாகச் சொல்வார்கள். சூரிய புத்திரனான கர்ணனை ஸஹஸ்ரகவசனின் அவதாரமாகச் சொல்வர்.

எந்தப் பொருளில் சிறப்பம்சம் மிளிர்கிறதோ, அது எனது பங்கு (யத்யத்விபூதி மத்ஸத்வம...) என்ற ஸ்ரீமந் நாராயணனின் வாக்கு அவரைப் பல அவதாரமாக சித்திரிக்க வழிவகுத்தது. எமதருமனின் அவதாரமாக தருமரையும், இந்திரனின் அவதாரமாக அர்ஜுனனையும், வாயுவின் அவதாரமாக பீமனையும், அச்வினி தேவர்களின் அவதாரமாக நகுல-சகாதேவர்களையும் குறிப்பிடுவது உண்டு. வாயுமைந்தன் ஆஞ்சநேயரை ஈசனின் அம்சமாகக் குறிப்பிடுவதும் உண்டு.

நம் காலத்தில் வாழ்ந்த மகான்களையும் கடவுள் அவதாரமாகச் சித்திரிப்பவர்கள் உண்டு. புகழ்ச்சி எல்லையை மீறும்போது அவதாரத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டியிருக்கும். தனி நபர் ஆராதனை தலைதூக்கிவிட்ட இந்நாளில், விருப்பத்துக்கு ஏற்றபடி பல மகான்களை கடவுளுக்கு ஒப்பாக அல்லது அவதாரமாக பாவித்து சிலை அமைத்து, பூஜை-புனஸ்காரங்களை நடைமுறைப்படுத்தும் தெம்பு தென்படுகிறது. தோன்றியவர் யாருடைய அவதாரமாக இருந்தாலும், அவரின் குணாதிசயங்கள் மற்றவர்களை நல்வழிப்படுத்துவதை அறிந்து போற்றுவதை நாம் ஆதரிக்க வேண்டும்.

கேள்வி-பதில்

'வியாசர்’ என்பது ஓர் அதிகாரப் பெயர். ஒவ்வொரு சதுர் யுகத்திலும் ஒரு வியாசர் தோன்றுவார். நிகழும் சதுர்யுகத்தில் ஸ்ரீமகாவிஷ்ணுவே வியாசராகத் தோன்றி புராண- இதிகாசங்களைப் படைத்தார். அடுத்து வரும் சதுர்யுகத்தின் வியாசர்- அஸ்வத்தாமா... என்பதாக சில தகவல்களை சொற்பொழிவாளர் ஒருவர் கூறினார்.

அற்புதமான ஞானப் பொக்கிஷங்களை தந்த மகரிஷி வியாசர் குறித்து தங்களின் மூலம் விரிவான விளக்கம் அறிய ஆவல்.

- கோபால கிருஷ்ணன், திருநெல்வேலி-2

வியாசர் என்பது அதிகாரப் பெயர் அல்ல; தகுதியின் வெளிப்பாடு. ஒருங்கிணைந்து நான்கு வேதங்களும் செழித்தோங்க, அதன் பிரிவுகளை வரையறுத்து, பொறுப்பானவர்களிடம் ஒப்படைத்துக் காப்பாற்ற விளைந்தார். அந்த செயல்திறன் அவரிடம் இருந்ததால், 'வியாசர்’ என்று பெருமை பெற்றார்.

தற்காலச் சூழலை ஒட்டிய சிந்தனையின் கோணத்தில், ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் அதிகாரி அல்ல அவர். நேர்காணலில் தேர்வு செய்யப்படும் அதிகாரியும் அல்ல. அவரை, 'மங்காத பெருமை

பெற்ற மகாவிஷ்ணுவின் அவதாரம்’ என்கிறது விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தின் ஆரம்பப் பகுதி (வ்யாஸ விஷ்ணுரூபாய வ்யாஸரூபாய விஷ்ணவே...). அரசுரிமையும் அதிகாரப் பதவியல்ல. காக்கும் கடவுளின் பங்கின்றி, அரசனாக முடியாது. அதுவும் தகுதியின் வெளிப்பாடு என்கிறது புராணம் (நாவிஷ்ணு: ப்ருதிவீபதி:). 'ஒரு சதுர்யுகம் முடிந்ததும் ஆரம்பமாகும் அடுத்த படைப்பும், முதல் படைப்பின் மறு பதிப்பாகவே இருக்கும்’ என்கிறது வேதம் (சூரியா சந்திரமஸெள தாதா யமாபூர்வமகல்பயத்). சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பஞ்ச பூதங்கள், வேதம், சாஸ்திரம், புராணங்கள் ஆகிய அத்தனையும் யுக முடிவில் மறைந்து, மற்றொரு யுக ஆரம்பத்தில் அப்படியே தோன்றிவிடும். அதில் மாறுதல் இருக்காது.

வியாசரிலும் மாறுதல் தென்படாது. பரம்பொருளின் அவதாரங்கள் யுகம் மாறினாலும் மாறாது. யுகம் முடிவடையும் தறுவாயில், நாம் கல்கி அவதாரத்தைச் சந்திக்கப் போகிறோம். இது, எத்தனையாவது கல்கி அவதாரம் என்று யாருக்கும் தெரியாது. 28-வது கல்கி அவதாரம் என்று குறிப்பிடுவதெல்லாம், நாம் ஏற்படுத்திய முதல் யுகத்தை வைத்து எழுந்தது. அனாதியான காலத்தை அளக்க இயலாது; நம் காலத்தை வைத்தே கணக்கைத் துவக்குவோம்!

புராணங்களின் விரிவுரைகள் அந்தந்த காலங்களில் தென்படும் சூழலையட்டி, சிறு சிறு மாறுதலுடன் இருக்கும். இலக்கை விளக்க அந்த மாறுதல் ஒத்துழைக்கும். பாமரர்களின் தகுதிக்கு உகந்தவாறு மாறுபட்ட விளக்கங்கள், அதன் குறையல்ல; நிறை.

அடுத்த யுக வியாசர் - அச்வத்தாமா என்று சொற்பொழிவாளர் குறிப்பிட்டதாகச் சொல்கிறீர்கள். எந்தப் பெயரைச் சொல்லிக் குறிப்பிட்டாலும் பரம்பொருளின் அம்சமான வேத வியாசர் அவர். அச்வத்தாமாவுக்கு  இந்த யுகத்தில் பதவி உயர்வு கிடைத்து, வியாசராக அதிகாரத்தில் அமரவில்லை. இயக்கும் சக்தி அனைத்தும் இறைவனின் பங்கு. அது வியாசருக்கு அடையாளம். அறத்தின் அடித்தளமான வேதத்தை அப்படியே நிறைவோடு நிலைத்திருக்க வைக்க... அறம் காக்கும் கடவுள், வியாசர் என்ற புனைபெயரில் தோன்றி செயல்படுகிறார் என்பது பொருந்தும் 'ஒரே பரம்பொருள், மும்மூர்த்தியாக உருவெடுத்து முத்தொழிலை முழுமையாக்குகிறது’ என்கிறான் காளிதாசன் (ஏகைவ மூர்த்தி பிபிதே த்ரிதாஸா...). புராணத் தகவல்களை அறிந்துகொள்ள தனி அணுகுமுறை உண்டு. சொற்பொழிவாளரின் கூற்றை, அப்படியே நம்பவேண்டாம். வியாசர் எப்போதும் இருப்பவர்; அவர் சிரஞ்ஜீவி. அவருக்கு அழிவில்லை; தகுதியும் குறையாது.

தங்களின் சிந்தனைக்கு ஒரு வார்த்தை... இரு கணேசர்கள் இருந்தார்கள். அவர்கள் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என்று மாறினார்கள். காலப்போக்கில் உண்மையான கணேசன் என்ற பெயர் மறைந்து சிவாஜி, ஜெமினி என்று சுருங்கிவிட்டது. நாமே பெயருக்கு பெருமை அளிக்காதபோது, அச்வத்தாமாவுக்கு வியாசர் பெயரை அளித்து, அவரது பெயரை ஏன் அழிக்க வேண்டும்? யுகம் முடிந்து, புதுப்படைப்பில் அச்வத்தாமா என்ற பெயரில் அதே அச்வத்தாமா தோன்றமாட்டார். வியாசர் என்ற பெயரில் பழைய வியாசர் தோன்றுவார். அச்வத்தமா என்பது அப்பா இட்ட பெயர். வியாசர் என்பது விஷ்ணுவின் பெயர். வியாசரின் தகுதியிருந்தால் வியாசர் ஆவார்.

கேள்வி-பதில்

கோயில் கும்பாபிஷேகத்தையட்டி மண்டல பூஜை நடத்துகிறோம். ஒரு மண்டல காலத்துக்கு எத்தனை நாட்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்? இந்த வருடம் நவராத்திரி 8 நாட்களுடன் முடிந்துவிட்டது. நட்சத்திரங்கள், திதிகளின் பொருட்டு ஒன்பது நாட்களுக்கு பதில் எட்டு நாட்களாகக் கொண்டாடப்பட்டதா?

- ஆர்.ஜகதீசன், திருச்சி-6

ஒரு மண்டலத்துக்கு 41 நாட்கள் என்பது ஒரு கணக்கு. கிருத்திகா மண்டல வாரம் என்பது, 44 நாட்கள் இருக்கும். கிருஷ்ண யஜூர் வேதக்ரம பாராயணம் 44 பகுதிகளை உள்ளடக்கியதால், அது ஒரு சுற்று நிறைவு பெற 44 நாட்கள் தேவைப்படும். ஆகவே, மண்டல காலம் 44 என்பது மற்றொரு கணக்கு.

தர்மசாஸ்திரம் ஒரு கணக்கை வெளியிடும்போது, ஆகமம் அதற்கு மாறாக ஒரு கணக்கை வெளியிடும். சிவராத்திரியை தர்மசாஸ்திரம் வெளியிட்டது. அதற்கு மாறாக, ஆகமத்தின் தன்மையை உயர்த்திக் காட்டும் பொருட்டு மாறுபட்ட நாளை சுட்டிக்காட்டுவதுடன், ஆகமத்தைப் பின்பற்றாதவர்களையும் தமது விருப்பத்துக்கு இணங்க வைத்து சிவராத்திரி இரண்டாக்கப்பட்டது. அதேபோன்று ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், ஜன்மாஷ்டமி, உபாகர்மா, ஆருத்ரா தரிசனம், கார்த்திகை தீபம்... இப்படி அத்தனை பண்டிகைகளையும் இரண்டாக வெளியிட்டு, ஆகம வல்லுநர்களும் ஸ்மிருதி வல்லுநர்களும் பாமரர்களை குழப்புகின்றனர்.

ஆகமமானது கோயில் பூஜை நடைமுறைகளை வரையறுக்கும். தர்மசாஸ்திரம் வானியல் அடிப்படையில் விரதங்களை வெளியிடும். இரண்டும் வெவ்வேறு. ஆகமமானது தர்மசாஸ்திரத்தை தனக்கு சாதகமாக மாற்ற எண்ணுவது பெருமைக்கு உரியது

அல்ல. கிழமைகள், ஆங்கில மாதம் மற்றும் தேதியை அவர்களால் மாற்ற இயலவில்லை. மண்டல காலமும் அதற்கு விதிவிலக்கல்ல. திருமணத்தை இரண்டாக மாற்றும் துணிவு வந்துவிட்டது. இந்த நிலையில் மற்ற வைபவங்களும் இரண்டாக மாறுவதில் நம் மனம் நெருடலைச் சந்திப்பதில்லை.

மதியம் செய்யவேண்டிய தர்ப்பணத்தை காலையில் எழுந்ததும் செய்வதும், இரவில் கட்டிக்கொள்ளவேண்டிய நோன்புச் சரடை சந்தியா காலத்தில் கட்டிக்கொள்வதும், இரவில் ஆரம்பிக்க வேண்டிய ஒளபாசனத்தை காலை 10 மணிக்கு நடைமுறைப்படுத்துவதும்... விருப்பத்துக்கு இணங்க விதியை மாற்றும் எண்ணம் வந்துவிட்டதன் அடையாளம்! ஆகவே, சர்ச்சையில் சிக்காமல் ஏதாவதொரு கணக்கை ஏற்று மண்டல கால பூஜையை நிறைவேற்றுங்கள்.

''காலைக் கடனை அதற்கு உரிய காலத்தில் செய்தால் தேவர்களுக்குப் ப்ரீதி; காலம் கடந்து செய்தால் அசுரர்களுக்குப் ப்ரீதி'' என்று விளக்கினார் தர்மசாஸ்திர வல்லுநர். உடனே, ''தேவர்கள்- அசுரர்கள் இவர்களில் ஒருவருக்கு மனக்கசப்பை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. ஆகவே, நான் காலைக்கடனை நிறைவேற்றாமலேயே விட்டுவிடுகிறேன். இதனால் இரண்டு தரப்புக்கும் கசப்பு இருக்காது'' என்று பதில் வந்தது. அந்த அளவுக்கு நமது சிந்தனை தரம் தாழ்ந்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.

காலத்தில்தானே சர்ச்சை எழுந்தது; காரியத்தில் இல்லையே? ஆகையால், ஏதாவது ஒன்றைப் பின்பற்றி காரியத்தை நிறைவேற்றுவதற்கு  முனையுங்கள். அது நல்ல பலனை அளிக்கும். சர்ச்சையில் பொழுதைப் போக்கி, கடமைகளைத் தவறவிடுவது சிறப்பல்ல. கடமையைப் புறக்கணிக்க சர்ச்சையை மிகப்படுத்துவதும் சரியல்ல. 'நரிக்கு விளையாட்டு; நண்டுக்குப் பிராணாவஸ்தை’ என்ற சொல்வழக்கைப் புதுப்பிக்காதீர்கள்!

உங்களின் அடுத்த கேள்விக்கு வருவோம்...

திதியை வைத்து நவராத்திரி எழுந்தது. பிரதமை முதல் நவமி வரை 9 நாட்கள் இருக்கும். சிலநேரம் 8 நாட்களில் அடங்கிவிடும். திதிவிருத்தி- க்ஷயம் என்கிற அளவில், அந்த நாட்குறைவு நிகழும். வானியலும் ஸ்ம்ருதியும் உகந்த வேளையை நிர்ணயிக்கும். நாட்கள் 8 ஆனாலும் 9 திதிகள் அடங்குவதால், அதுவும் நவராத்திரிதான். விருத்தி இருக்கும் தறுவாயில் 9 நாட்கள் இருப்பதால், நவராத்திரி என்று பெயர் வந்தது. ஒரு சூரியோதயத்தில் இருந்து அடுத்த

சூரியோதயம் வரை ஒருநாள் என்ற ஸாவனமானம் இங்கு கடைப்பிடிக்கப்படுவதில்லை. க்ஷயம் இருக்கும் வேளையில் நவமியும் தசமியும் முன்னரே தென்பட்டால், கணக்கில் 8 குறைவது என்பது குறையே அல்ல; நிறைதான்.

இது தேதியை வைத்து எழுந்தது அல்ல; திதியை வைத்து எழுந்தது. ஆக, ஒருநாள் கொண்டாட்டத்தைக் குறைக்கவில்லை. எட்டு நாட்களில் ஒன்பது திதிகள் வந்துவிட்டது என்று பொருள். திதிதான் தியதி அல்லது தேதியாக மாறியது என்பது ஆராய்ச்சியாளர்களில் சிலரது கருத்து. அதையட்டி பார்த்தால், 9 திதி 8 நாட்களில் இருப்பதால் நவராத்திரி முழுமை பெற்றதாக எண்ணலாம்.

கேள்வி-பதில்

எனக்கு 88 வயது. சிராத்த காரியங்களை கீழே உட்கார்ந்து செய்ய முடியாத நிலையில் உள்ளேன். சென்னை அடையாரில் உள்ள ஒரு தலத்தில்தான் சிராத்தம் செய்யக் கொடுத்துள்ளேன். இது சரிதானா?

- பி.ஆர். தியாகராஜன், கோவை

  தினமும் வேதம் ஓத வேண்டும் என்று ஸனாதனம் சொல்லும். எனக்கு சப்பணம் போட்டு உட்கார இயலாது, நான் எப்படி வேதம் ஓதுவேன் என்றான் ஒருவன். எனக்கு அறுவை சிகிச்சை நடந்தபடியால் உட்கார இயலாது; நிற்கவே முடியும் என்றான் ஒருவன். எனக்கு நிற்கவும் முடியாது, உட்காரவும் முடியாது; படுக்கத்தான் முடியும் என்றான் மற்றொருவன்.  யாருக்கு எது முடியுமோ அந்த நிலையில் இருந்து வேதம் ஓதலாம் என்று பரிந்துரைத்தது ஸனாதனம் (உததிஷ்டன், உதாஸீனை, உதசயான...)

தங்களுக்கு உட்கார முடியவில்லை என்றால் தர்ம சாஸ்திரத்தை அணுக வேண்டும். அது தங்களுக்கு உதவும். அதை விட்டுவிட்டு தன்னிச்சையாக ஒரு முடிவெடுத்து செயல்பட்ட பிறகு, அதை தர்மசாஸ்திரத்தில் நுழைக்க விரும்புவது, சாஸ்திரத்தில் இருக்கும் பற்றின்மையை மட்டுமே வெளிப்படுத்தும்.பழைய நடைமுறையில் பிடிப்பு இருக்கும் தாங்கள், தன்னிச்சையாக முடிவெடுத்தது தவறு. சிராத்தத்துக்கு மாற்று வழியை சாஸ்திரம் சொல்லாது. இயலாமைக்கு உகந்தபடி ஹிரண்ய சிராத்தம், ஸங்கல்ப சிராத்தம் போன்றவற்றைப் பரிந்துரைக் கும். தனது கடமையை பிறரிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருப்பவனுக்கு சிராத்த பலன் கிடைக்காது. மனநெருடலுக்கு மறைமுகச் சமாதானமாக வேண்டுமானால் எண்ணி நிம்மதி பெறலாம்.

வாய் பேசாதவர்கள், காது கேட்காதவர்கள், பார்வையற்ற வர்கள்... இப்படியான மாற்றுத் திறனாளிகளுக்கும்  அவர்களது நிலையை கண்ணுற்று, பூணூல் கல்யாணம், திருமணம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வழி வகுத்திருக்கிறது தர்மசாஸ்திரம். ஆக, தர்ம சாஸ்திரத்தை அணுகினால் வழிபிறக்கும். தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகள் சிராத்தம் ஆகாது; அதனால் பலனும் இருக்காது.

தங்களின் சிந்தனைக்கு ஒரு வார்த்தை... இயலாமை என்பது நமது தவறு அல்ல என்பதை புரிந்துகொண்டு, தாயாரைப் போன்று நமக்கு சேவை செய்ய தர்மசாஸ்திரம் விழித்துக் கொண்டிருக்கும் போது, அதை அலட்சியப்படுத்திவிட்டு, சுய விருப்பப்படி செயல்பட்டு அதை சாஸ்திர சம்மதமாக ஏற்கவைக்கும் மன இயல்பு ஏற்படக் கூடாது. அது துரதிர்ஷ்டவசமானது. கடவுள்தான் நல்வழி காட்டி அருள வேண்டும்.

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில்