Published:Updated:

விராலிமலை அதிசயம்!

சரவணபவனே சரணம்... சரணம்!

விராலிமலை அதிசயம்!

சரவணபவனே சரணம்... சரணம்!

Published:Updated:
விராலிமலை அதிசயம்!

திருச்சியில் இருந்து மதுரை செல்லும் வழியில் ஆங்காங்கே மயில்களின் நடமாட்டத்தைக் காணலாம். அப்படி மயில்களை ரசிக்கிறபோதே பிரமாண்ட மலை கண்ணுக்குத் தெரிந்துவிடும். அது... விராலிமலை. ஊரின் மையப்பகுதியில், பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே மிகப் பிரமாண்டமான மலையின் மேல் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார், முருகக் கடவுள்.

சுமார் 2,000 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம். ஆறுமுகங்களுடன் அசுர மயிலில் அமர்ந்தபடி, அற்புதமாகக் காட்சி தருகிறார் மயில்வாகனன். எப்படியும் இங்கே ஆயிரத்து ஐந்நூறு மயில்களுக்கும் அதிகமாக இருக்கின்றன என்று பெருமிதத்துடன் சொல்கின்றனர், பக்தர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒருகாலத்தில் குரா எனும் வகை மரங்கள் அடர்ந்த வனமாக, மலை சூழ்ந்த இடமாகத் திகழ்ந்தது இந்தப் பகுதி. வேடன் ஒருவன் ஒருநாள் வேட்டையாட வந்தபோது, வேங்கை ஒன்று அவனுக்குப் போக்குக் காட்டியபடி ஓடியது. அந்த வேங்கையை எப்படியும் பிடித்துவிடுவது என வேடனும் பின்னாலேயே ஓடிவந்தான். அப்போது குரா மரத்துக்கு அருகில் வந்ததும் வேங்கை சட்டென்று காணாமல் போகவே... திடுக்கிட்டுப் போனான் வேடன். அங்கே திடீரென்று தோன்றிய மயிலும் விபூதி வாசனை யும் அங்கே முருகப்பெருமான் சூட்சுமமாக இருப்பதை அறிவிக்க, பூரித்துப் போனான். பிறகு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, முருகப்பெருமானின் விக்கிரகத் தைப் பிரதிஷ்டை செய்து, வழிபடத் துவங்கினர் என்கிறது ஸ்தல புராணம்.

விராலிமலை அதிசயம்!

திருச்சியில் உள்ள வயலூர் தலத்துக்கு வந்த அருணகிரி நாதரிடம்... 'விராலிமலைக்கு வா’ என்று முருகப்பெருமான் அழைக்க... அந்த மலையைத் தேடிச் சென்றாராம் அருணகிரிநாதர். வழி தெரியாமல் தவித்தவருக்கு, வேடனாக வந்து தலத்தை அடையாளம் காட்டி அருளினார் கந்தவேள் என்கிறது ஸ்தல புராணம். அதுமட்டுமின்றி, அருணகிரிநாதருக்கு அஷ்டமா ஸித்திகளையும் தந்தருளிய தலம் என்றும் போற்றப்படுகிறது விராலிமலை. இந்தத் தலத்து முருகக்கடவுளை மனமுருகிப் பாடியுள்ளார் அருணகிரியார் என்பது குறிப்பிடத்தக்கது!

சொர்ண விராலியங்கிரி என்று புராணங்கள் குறிப்பிடும் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீசுப்ரமணியரை வணங்கினால், சகல ஐஸ்வரியங் களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம். தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என வருடம் முழுவதும் நிறைய விழாக்கள் உண்டு என்றாலும் ஐப்பசியில் வரும் கந்தசஷ்டி விழா, பிரமாண்டமாக நடைபெறுகிறது. ஆறு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பங்கேற்று வழிபட்டால், மனதில் அமைதி நிலவும்; வீடு மனை வாங்கும் யோகம் கிட்டும். பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் எனப் பூரிப்புடன் தெரிவிக் கின்றனர், பக்தர்கள்.

விராலிமலை அதிசயம்!

குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் ஆயுள்விருத்திக்காக, இங்கே முருகப் பெருமானுக்கு குழந்தையைத் தத்துக் கொடுப்பதும், தவிட்டுக்கு குழந்தையை தாய்மாமன் பெற்றுக் கொள்வதும் இன்றைக்கும் நடைமுறையில் உள்ளன. விராலிமலை நாயகனை வேண்டிக் கொண்டால், ஆயுள் பலம், கல்வி ஞானம், பூமி யோகம் என சகலமும் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.  

விராலிமலை அதிசயம்!

ஒருகாலத்தில், இந்தக் கோயிலின் திருப்பணியில் கருப்புமுத்து எனும் பக்தர் ஈடுபட்டிருந்தார். ஒருநாள், பலத்த காற்றும் பெருவெள்ளமுமாக புயல் நிலைகொண்டிருக்க... கருப்புமுத்துவால் ஆற்றைக் கடந்து கோயிலுக்கு வரமுடியவில்லை. குளிரில் நடுங்கியபடி, கந்தபிரானை தரிசிக்க முடியவில்லையே என்று கலங்கியபடி இருந்தவர்... குளிருக்கு இதமாக சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தார். அப்போது அங்கே வந்த ஒருவர், 'எனக்கு ஒரு சுருட்டு கொடு. ஆற்றைக் கடந்து செல்ல நான் உதவுகிறேன்’ என்று சொல்ல... கருப்புமுத்துவும் சுருட்டைக் கொடுத்தார். பிறகு ஆற்றைக் கடப்பதற்கு அவரும் உதவி செய்தார்.

விராலிமலை அதிசயம்!

நிம்மதியும் சந்தோஷமும் ஒருசேர, கோயிலுக்குச் சென்று பார்த்தால்... அங்கே முருகப்பெருமானின் சந்நிதியில் பாதி சுருட்டு இருந்தது கண்டு திகைத்துப் போனார் கருப்புமுத்து. ஊர்மக்களிடம் ஓடிச்சென்று விவரம் சொல்லி, பூரிப்பில் திக்குமுக்காடினார். அதையடுத்து, முருகப்பெருமானுக்கு இந்தத் தலத்தில் மட்டும் சுருட்டு நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

'பிறருக்கு முடிந்த உதவியைச் செய்ய வேண்டும்; இருப்பதை அடுத்தவருக்குக் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே சுருட்டைப் பெற்றுக் கொண்டேன். எனவே, சுருட்டு நைவேத்தியத்தைத் தடை செய்யாதே!’ என அப்போது அதற்கு தடை விதிப்பதாக இருந்த புதுக்கோட்டை மகாராஜாவின் கனவில் வந்து முருகப்பெருமானே சொன்னதாக ஐதீகம்.

விராலிமலை நாயகனைத் தரிசியுங்கள்; சுபிட்சம் நிலவும்!

- பு.விவேக்ஆனந்த்
படங்கள்: தே.தீட்ஷித்