



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கார்த்திகை தீபத்தின் நோக்கம் பாவம் போக்குதல் என்பதுதான். திருவண்ணாமலை, பழநி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல தலங்களில் மலை உச்சியில் தீபம் ஏற்றுகிறார் கள். மற்ற தலங்களில் சொக்கப்பனை கொளுத்துகின்றனர்.
தீபத் திருவிழா நாட்களில் தேரோட்டம் நடைபெறும். உண்ணாமுலை அம்மன் தேரை, பெண்கள் மட்டுமே இழுத்து செல்வர். தீபத்திருநாளன்று அதிகாலையில் அண்ணாமலையார் சந்நிதியில் பரணி தீபமும், மாலையில் மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். மகாதீபம் ஏற்றுவதற்கான வெண்கல கொப்பரை கி.பி.1745-ல் மைசூர் சமஸ்தான அமைச்சர் வெங்கடபதிராயால் வழங்கப்பட்டது.
##~## |
திருவண்ணாமலை பகுதியை ஆட்சிசெய்த வல்லாள மகராஜாவுக்கு மகப்பேறு வாய்க்க வில்லை. சிவபக்தியில் சிறந்த இவனுக்கு, அந்திமகாலம் வந்தது. ஈமக்கடன் செய்யப் பிள்ளை இல்லையே என்று வருந்தினான். 'வருத்தம் வேண்டாம். நானே உனக்கு உத்தரக் கிரியை புரிவேன்' என்று அண்ணாமலையாரின் அசரீரி ஒலித்தது. அதன்படி, மாசிமகத்தன்று இந்த மன்னனுக்கு சிவபெருமானே ஈமக்கடன் செய்யும் ஐதீக விழா இப்போதும் நடக்கிறது.
திருவண்ணாமலையில் (மாட்டுப் பொங்கல் அன்று) நடைபெறும் திருவூடல் உத்ஸவத்தின்போது இறைவனும் இறைவியும் கிரிவலம் வருவர். இதனால் 'மலையை சுற்றும் மகாதேவன்’ என்ற சிறப்பு பெயர் பெற்றார் சிவபெருமான். அதன்படி, கிரிவலம் வந்த இறைவனும் இறைவியும் கோயிலுக்குள் நுழையும்போது சந்திரன் வெள்ளைக் குடை பிடித்தும், சூரியன் கையில் விளக்கேற்றியும் வரவேற்க, இந்திரனும் அஷ்டவசுக்களும் மலர் தூவி வரவேற்பார்கள் என்பது ஐதீகம்.
தொகுப்பு: எஸ்.ஆர்.எஸ்.ரெங்கராஜன், புதுக்கோட்டை