கேரள திவ்ய தேசங்கள்! - 6

தந்தை தாய்மக்களே சுற்றமென்று உற்றவர் பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழி யெனக் கருதினாயேல்
அந்தமாய் ஆதியாய் ஆதிக்கு மாதியாய் ஆயனாய
மைந்தனார் வல்லவாழ் சொல்லு மாவல்லையாய்  மருவு நெஞ்சே!

- திருமங்கை ஆழ்வார் (ஏழாம் திருமொழி)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
பொருள்:
'மனமே! தந்தை என்றும், தாய் என்றும், பிள்ளைகள் என்றும், சுற்றங்கள் என்றும், உறவுமுறைகள் என்றும் பற்றிக்கொண்டிருக்கிற சம்சார பந்தம் வாய்த்த வாழ்வை நீ வெறுத்து, இந்த வாழ்வு பழியானது என்று நினைப்பாயாகில், பிரளயத்தில் முடிவுக்குக் காரணமானவனாகவும், உற்பத்திக்கு ஆதி முதல் காரணகர்த்தாவாகவும், ஆதிக்கும் ஆதியாக அனைத்து உயிர்களுக்கும் தலைவனாகவும், ஸ்ரீகோபாலகிருஷ்ணனாகவும் அவதரித்தவனாக உள்ள பெருமாளுடைய திருவல்லவாழ் என்னும் திருப்பதியின் நாமத்தை வாயால் சொல்வதுடன், மிகவும் வலிமையாக நெஞ்சாலும் தழுவுவாயாக!’

கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலும், செங்கணூரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும்... பந்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது திருவல்லா எனும் திருவல்லவாழ் திருத் தலம். இங்குதான் புகழ்பெற்ற ஸ்ரீவல்லபப் பெருமாள் கோயில்கொண்டுள்ளார். நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்கிறார். சைவ-வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாய் இந்தக் கோயில் திகழ்வது சிறப்பு.

சிவ கணங்களில் ஒருவனான கந்தகாரன், மனிதர்களைக் கொன்று சிவபெருமானுக்கு நரபலி கொடுத்து வந்தான். நரபலியை நிறுத்துமாறும், சாந்த சொரூபியான இந்தத் திருவல்லா தலத்து ஸ்ரீமந் நாராயணனைத் துதித்தால் அவன் செய்த பாவங்கள் நீங்கி முக்தி கிட்டும் என்றும் கந்தகாரனுக்கு அறிவுரை பகர்ந்தார் சிவபெருமான்.

கேரள திவ்ய தேசங்கள்! - 6

அவர் கூறியபடியே பெருமாளை வணங்க ஆரம்பித்த கந்தகாரன், எந்நேரமும் 'ஓம் நமோ நாராயணாய’ எனும் அஷ்டாட்சர மந்திரத்தை உச்சரித்து வழிபட்டு வந்தான்.  இப்போது பெருமாள் பக்தனாகிவிட்டவனுக்கு சிவ நாமத்தைக் கேட்பதில் விருப்பம் இல்லை; காதுகளில் மணிகளைக் கட்டித் தொங்கவிட்டுக்கொண்டான். எப்போதும் தலையை அசைத்து மணிகளை ஒலிக்கச் செய்தபடி, உள்ளத்தில் ஹரியை தியானித்து வந்தான்.(எட்டெழுத்து மந்திர உச்சாடனம் தவிர வேறு எதுவும் கேட்கக் கூடாது என்பதற்காக காதுகளில் மணிகளைக் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டான் என்றும் ஒரு தகவல் உண்டு). சிவ மந்திரத்தைக் கேட்க கந்தகாரன் விரும்பாவிட்டாலும், அவரை எந்த நேரமும் நினைத்துக்கொண்டே இருந்தான். ஆக சிவனாரையும்  நினைத்து, பெருமாளையும் வணங்கி வந்ததால் அவனுக்கு முக்தி கிடைத்து, பரமபதம் எய்தினான். கந்தகாரனுக்கு மோட்சம் கிட்டியதால், 'சிவனும் அரியும் ஒன்றே; இருவரில் பேதமில்லை’ என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

கேரள திவ்ய தேசங்கள்! - 6

இதே தலத்தில் வாழ்ந்த சங்கர மங்கலத்தேன்மை எனும் பெண்மணி, ஏகாதசி விரதத்தைத் தவறாது கடைப்பிடித்து வந்தாள். விரதம் முடிந்ததும், ஒரு பிரமச்சாரிக்கு உணவு அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். துகாலன் என்ற அசுரனுக்கு, அவள் இப்படிச் செய்வது பிடிக்கவில்லை. யாரேனும் தேன்மையிடம் உணவு பெறச் சென்றால், அடித்து விரட்டி விடுவான். இதே போன்று பக்கத்து கிராமத்தில் இருந்த ஒரு யக்ஷியும் தேன்மையின் வீட்டுக்கு வருகிற பிரமச்சாரிகளை விரட்டிக் கொண்டிருந்தாள்.

இதனால் மனம் நொந்துபோன தேன்மை, மகா விஷ்ணுவிடம் முறையிட்டுப் பிரார்த்தித்தாள். அவளுக்கு அனுக்கிரகம் புரியத் திருவுளம் கொண்டார் மகாவிஷ்ணு. ஒருநாள், பிரமச்சாரி உருவில் தேன்மையின் வீட்டுக்கு உணவு ஏற்க வந்தார். அவரைப் பார்த்ததும், விரட்டுவதற்காக ஓடிவந்தான் துகாலாசுரன். வந்திருப்பது பகவான் ஆயிற்றே... திரும்பிப் போக மறுத்தார். இருவருக்கும் போர் மூண்டது. இறுதியில் அசுரனை தன் சுதர்சன சக்கரத்தால் வதம் செய்தார் மகாவிஷ்ணு. அதே போல், அந்த யக்ஷியையும் மடக்கி ஒடுக்கி விட்டு, தேன்மையின் இல்லத்துக் குச் சென்றார். அந்தப் பக்தை தந்த உணவை ஏற்றார்.

வந்திருப்பவர் சாட்சாத் அந்தப் பெருமாள்தான் என்பது தேன்மைக்குப் புரிந்துவிட்டது. அந்தப் பரவசத்தில் நெக்குருகிப் போனாள். பெருமாளின் திருமார்பில் சுற்றியிருந்த வஸ்திரத்தை அகற்றுமாறு கோரி, அங்கே தகதகவென ஜோதிமயமாகத் திகழ்ந்த பெரியபிராட்டியைத் தரிசிக்கும் பெரும்பேறு பெற்றாள். இதனால் இங்குள்ள பெருமாளுக்கு 'திருவாழ்மார்பன்’ என்று ஒரு பெயர் விளங்குவதாக வும் கூறுவர். கூடவே, பிராட்டிக்கு 'செல்வத் திருக்கொழுந்து நாச்சியார்’ என்றும் திருநாமம் அமைந்தது. தவிர, தேடி வரும் பக்தர்களிடம் மிகவும் பரிவு காட்டுவதால் இந்தத் தாயாருக்கு 'வாத்ஸல்ய தேவி’ என்றொரு திருநாமமும் உண்டு.

திருமார்பில் செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியும், தனக்குப் பின்புறத்தில் சுதர்சன சக்கரமும் கொண்டு விளங்குவதால், இத்தலத்துப் பெருமாள் மிகவும் சக்தி வாய்ந்தவர். இவரை வணங்குவதால், வளமான செல்வ மும் மிகுந்த சக்தியும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

கேரள திவ்ய தேசங்கள்! - 6

இனி, கோயிலுக்குள் தரிசனம் செய்யச் செல்வோமா?

கருவறையில் 'சதுரங்க கோல விமானத்தின் கீழ்... சங்கு, சக்கரம், மற்றும் தாமரை புஷ்பத்துடன் காட்சியளிக்கிறார் ஸ்ரீவல்லபர். கோயிலின் உட்பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் விஷ்வக்சேனர் உபதேவதையாக உள்ளார். மேற்குப்புறத்தில், கருவறைக் கதவுக்கு அப்பால் ஸ்ரீசக்கரத்தாழ்வார் காணப்படுகிறார். ஸ்ரீகணபதி, ஸ்ரீசாஸ்தாவுக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன. ஸ்ரீவராகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, அயல் யக்ஷி, மாயா யக்ஷி ஆகியோரும் இங்கே அருள்கிறார்கள். கோயிலை ஒட்டி இலவந்தி தீர்த்தக்குளம் உள்ளது.

கருவறைக்குச் சற்றுத் தள்ளி 54 தூண்கள் கொண்ட மண்டபம் அமைந்துள்ளது. இங்குள்ள தூண்களில், விளக்குகளைத் தாங்கிப் பிடித்த கோலத்தில் அழகிய பெண்களின் திருவுருவங்கள் மண்டபத்துக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. மண்டபத்துக்கு மேற்கு புறத்தில் பாதாள அறைகள் பல உள்ளன. இவை எதற்காகக் கட்டப்பட்டன என்பது இன்றுவரை ரகசியமாகவே உள்ளது. பாதாள அறைகளின் பாதை எங்கு செல்கிறது என்பதைக் கண்டுபிடிக்க அதனுள் நுழைந்து சிறிது தூரம் சென்றவர்கள், அதற்கு மேலே செல்ல முடியாமல் முயற்சியைக் கைவிட்டுத் திரும்பியதுதான் மிச்சம்!

வடக்குத் திசையில் கூரையில்லா மல் ஒரு சந்நிதி காணப்படுகிறது. இங்கு ஸ்ரீகுறையப்ப ஸ்வாமி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். இவருக்குப் பூஜை கிடையாது. ஆனால், தினமும் அபிஷேகம் உண்டு. கடும் இருமல், ஜுரம் மற்றும் பலவித சரும நோய்களின் பாதிப்பு உள்ளவர்கள் இவரைப் பிரார்த்திக்க, நோய் பறந்தோடும் என்பது நம்பிக்கை.கிழக்கு நுழைவாயிலின் உள்ளே, மரத்தில் அழகாகச் செதுக்கப்பட்ட மகாவிஷ்ணுவின் அனந்தசயனத் திருக்கோலம் நம்மைப் பரவசப்படுத்துகிறது.  

கேரள திவ்ய தேசங்கள்! - 6

கோயில் தந்திரியான ஸ்ரீஆக்கிரமன் காளிதாஸ பட்டத்திரியிடம் பேசினோம். ''விஸ்வாமித்திரர் இந்த ஆலயத்துக்கு வருகை புரிந்திருப்ப தாகப் புராணக்குறிப்பு உண்டு. அவர் அளித்த பாத்திரங்களில்தான் கோயிலில் மதிய வேளை அன்ன தானம் நடத்தப்படுகிறது. தினமும் இரவு பூஜை முடிந்ததும் கதகளி நடனம் உண்டு. அப்போது, துரியோதன வதம் போன்ற மகாபாரதக் காட்சிகள் நடத்தப்படும்'' என்றார்.

ஆலய அட்வைஸரி கமிட்டி செயலர் ஸ்ரீகுமார் கூறுகையில், 'விடியற்காலை 4 மணிக்குக் கோயில் திறக்கப்பட்டு மகாவிஷ்ணுவுக்கு என்றே பிரத்யேகமாகச் செய்யப்படும் முக்கியமான பூஜைகள் செய்யப்படுகின்றன. காலை 5.30 மணிக்குத்தான் பக்தர்கள் ஆலயத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 7.30 மணிக்கு ஸ்ரீவல்லபரும் ஸ்ரீசுதர்சன மூர்த்தியும் கோயிலைச் சுற்றி மூன்று முறை ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுவார்கள். உச்சி பூஜை மற்றும் இரவு பூஜைகளுக்குப் பிறகு வாத்திய முழக்கங்களுடன் ஸ்வாமியும் சுதர்சன மூர்த்தியும் கோயிலை மூன்று முறை ஊர்வலமாக வருவார்கள். இரவு 8 மணிக்கு நடை சார்த்தப்படும்.

ஸ்ரீவல்லபபுரத்தைச் சுற்றியுள்ள மூன்று ஊர்களில் தேவிகளின் ஆலயம் உள்ளது. இவர்கள் மூவரும் சேர்ந்து ஆண்டுக்கு ஒருநாள் ஸ்ரீவல்லபர் ஆலய வடக்குக் கோபுர வாசல் வழியே உள்ளே வருவதை 'உத்திர ஸ்ரீபலி’ என்று கூறுகிறார்கள். அன்றைக்கும் அடுத்த நாளும் மட்டும்தான் வடக்குக் கோபுர வாசல் திறந்திருக்கும். தேவிகள் திரும்பியதும் மூடப்பட்டுவிடும். தெய்வங்களாக உள்ள தேவிகள் மகா விஷ்ணுவான ஸ்ரீவல்லபரைத் தேடி வந்து தரிசிக்கும் இந்தக் காட்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு பக்தியுடன் துதிப்பார்கள்.

இங்கே மூலவருக்குப் பின்னால் உள்ள சுதர்சன மூர்த்தி விசேஷமானவர். துகாலாசுரனை வதம் செய்த மூர்த்தி இவர். இவரை வழிபட, பயம் நீங்கும்; பகைவர் ஒழிவர்; நோய்கள் தீரும். மகாவிஷ்ணுவும் சுதர்சன மூர்த்தியும் ஒரே கருவறையில் இரு பெரும் சக்திகளாக வீற்றிருந்து பக்தர்களின் குறைகளைப் போக்குகிறார்கள்'' என்றார், பக்திப் பரவசத்தோடு.

நாமும் திருவல்லா சென்று, எல்லாம் வல்ல வல்லபப் பெருமாளை தரிசித்து வருவோமா?

- தரிசனம் தொடரும்...
படங்கள்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism