தொடர்கள்
Published:Updated:

எலுமிச்சை பிரசாதம்!

சரவணபவனே சரணம்... சரணம்!

எலுமிச்சை பிரசாதம்!
##~##
லைகளிலும் வனங்களிலும் தவம் இருந்து இறைவனை வழிபட்டு வரம் பெற்றார்கள், முனிவர் பெருமக்கள். சப்தரிஷிகள் எனப்படும் ஏழு ரிஷிகள் கடும் தவமிருந்து வழிபட்ட அந்தத் தலம், இன்றைக்கு 'தபசுமலை’ என்று அழைக்கப்படுகிறது.

புதுக்கோட்டை- திருமயம் சாலையில், லேனாவிலக்கு எனும் பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்கிருந்து விராச்சிலை செல்லும் சாலையில், சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது தபசுமலை. இந்தச் சிறிய மலையில்தான், முருகப்பெருமான் கோயில்கொண்டிருக்கிறார்.

ஒருகாலத்தில், முனிவர்கள் வேல் வைத்து வழிபட்டுள்ளனர். அந்த வேலைக் கண்டு சிலிர்த்த மக்கள், அந்த இடத்தில் முருகப்பெருமானுக்கு விக்கிரம் அமைத்துப் பிரதிஷ்டை செய்து, கோயில் எழுப்பி வழிபடத் துவங்கினார்கள் என்கிறது ஸ்தல வரலாறு. இங்கே, மூலவரின் திருநாமம்- ஸ்ரீபாலதண்டாயுதபாணி.

இந்த ஆலயத்தின் முக்கியமான விசேஷம்... மூலிகை கலந்த பிரசாதம். இந்தப் பிரசாதத்தை உட்கொண்டால், சர்க்கரை நோய் குணமாகும்; குடல் புண்ணில் இருந்து விடுபடலாம்; வலிப்பு போன்ற நரம்புத் தளர்ச்சி நோயையும் இது கட்டுப்படுத்துகிறது எனச் சொல்லிச் சிலிர்க்கின்றனர் பக்தர்கள்.

எலுமிச்சை பிரசாதம்!

கிரக தோஷம் மற்றும் நாக தோஷம் உள்ளவர்களுக்கு இங்கே முருகப்பெருமானின் சந்நிதியில் சிறப்பு யாகம் செய்யப்படுகிறது. இதில் கலந்துகொண்டு தரிசித்தால், விரைவில் தோஷங்கள் யாவும் விலகும். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், நாகர் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

இங்கேயுள்ள ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ரொம்பவே சக்தி வாய்ந்தவர். பக்தர்கள் தங்களின் பிரார்த்தனைகளை ஒரு சீட்டில் எழுதி வைத்தால், அந்தக் கஷ்டங்களை உடனே தீர்த்துவைத்துவிடுவாராம் ஸ்ரீபைரவர். இவரிடம் வேண்டிக்கொண்டு, கடன் தொல்லையில் இருந்து மீண்டு வந்தவர்கள் ஏராளம் என்கின்றனர், பக்தர்கள்.

கந்த சஷ்டி நாளின்போது விரதம் மேற்கொண்ட பெண்கள், ஒரேயரு முறை தபசுமலைக்கு வந்து ஸ்ரீமுருகப்பெருமானைத் தரிசித்து விளக்கேற்றிப் பிரார்த்தித்தால், விரைவில் கல்யாண வரம் கைகூடும் என்பது ஐதீகம்! பிள்ளை வரம் வேண்டுவோர், முருகக் கடவுளின் திருப்பாதத்தில் வைத்து பிரசாதமாகத் தரப்படும் எலுமிச்சைப் பழத்தைச் சாறாக்கிச் சாப்பிட... குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மலையடிவாரத்தில் சப்தரிஷிகள் வழிபட்ட இடத்தில், குடைவரைக் கோயிலும் உள்ளது. இந்த இடத்தில் ஐந்து நிமிடம் தியானித்து கந்தக் கடவுளை வணங்கினால், ஞானமும் யோகமும் கைகூடும் என்பது உறுதி.

- கே.அபிநயா
படங்கள்: செ.சிவபாலன்