Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

Published:Updated:
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'கோ
யில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது மூத்தோர் மொழி. அதை வேதவாக்காக எடுத்துக்கொண்ட மன்னர் பெருமக்கள், ஊருக்கு ஊர் கோயிலை எழுப்பினார்கள். கும்பாபிஷேகம் நடத்தினார்கள். சோழ தேசத்தில் இப்படி வளர்ந்து வரம் தருகிற ஆலயங்கள் ஏராளம்.

அதேபோல், முனிவர்களும் ஞானிகளும் தவமிருந்த வனத்தில்- அவர்கள் வழிபட்ட இடத்தில், ஆலயங்களைக் கட்டி வழிபட்டார்கள் மன்னர்கள். யோகிகள் தவமிருந்த இடத்தில் நல்ல அதிர்வுகள் இருக்கும். எனவே, அங்கே கடவுளின் சாந்நித்தியம் நிரம்பியிருக்கும் என்பதை சோழ தேசத்து அந்தணர்கள், ஞானத்தால் புரிந்து உணர்ந்து மன்னரிடம் சொல்ல... அங்கே சென்று வனத்திலேயே சிலகாலம் தங்கி, அந்த இடத்தில் மிகப்பெரிய யாகங்களும் ஹோமங்களும் நடத்திய மன்னர்களும் உண்டு.

பிறகு, தேசத்தின் வளர்ச்சிக்காகவும் மக்களின் நிம்மதிக்காகவும் அங்கே கோயில்களைக் கட்டினார்கள். குளங்களை வெட்டினார்கள். அருகில் உள்ள கிராமத்தில் இருந்து காட்டுக்குள் வந்து, கோயிலைப் பராமரிப்பதற்கும் கருவறையில் குடிகொண்டிருக்கும் இறைவனுக்கு நித்தியப்படி பூஜைகளை மேற்கொள்ளவும் ஆச்சார்யர்களை நியமித்தனர்.

ஒருகால கட்டத்தில், கிராமத்தில் இருந்து தனியே வந்து பூஜைகளைச் செய்வதில் சிரமங்கள் இருப்பதையும் தாமதமாவதையும் புரிந்துகொண்ட மன்னர் ஒருவர், அந்தக் காட்டுப்பகுதியை குடியிருப்புப் பகுதியாக்க முடிவு செய்தார். குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்திருந்த மரங்களை வெட்டி, நேர்க்கோட்டில் வளர்ந்திருந்த மரங்களை மட்டும் அப்படியே விட்டுவிட்டு, அதனருகில் சாலைகள் உருவாக்கும்படி உத்தரவிட்டார்.

ஆலயம் தேடுவோம்!

கோயிலைச் சுற்றி மதில் கட்டப்பட்டிருந்தது. மதிலைச் சுற்றி வீதிகள் அமைக்கப்பட்டன. அதையடுத்து மரங்களும் விளைநிலங்களும் என பிரிக்கப்பட்டன. இன்னொரு வீதியில், ஆடு- மாடுகளை மேய்ப்பதற்கு வசதியாக, புல்வெளிகளும் அவற்றை வளர்ப்பவர்களுக்கான வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டன.

அடுத்தகட்டமாக, சோழ தேசத்தில் ஆரூர் எனப்படும் திருவாரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் உள்ள ஆலயங்களில், விளக்கு எரிவதற்கும் இறைத் திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்வதற்கும் ஆடு-மாடுகளை அந்த ஊரில் தானமாக அளித்து, அவற்றைச் செவ்வனே வளர்ப்பதற்காக வீடுகளும் வழங்கப்பட்டன.

சோழ தேசத்தில், திருவாரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் ஏராளமான கோயில்கள் இன்றைக்கும் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு அபிஷேகமும் நித்தியப்படி பூஜைகளும் குறையற நடப்பதற்காக ஒரு கிராமமே உருவாக்கப்பட்டது. அந்தக் கிராமத்தின் பெயர்... ஆய்க்குடி. அங்கே அழகிய சிவாலயம் ஒன்று உள்ளது. அங்கே குடிகொண்டிருக்கிற இறைவனின் திருநாமம் - ஸ்ரீகயிலாசநாதர்.

திருவாரூரில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது ஆய்க்குடி. கொரடாச்சேரியில் இருந்தும் லட்சுமாங்குடியில் இருந்தும் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தக் கிராமம்.  ஒருகாலத்தில் வன்னி மரங்களும் மகிழ மரங்களும் வில்வ மரங்களும் சூழ்ந்திருந்த வனப்பகுதி, மன்னர்கள் காலத்திலேயே அற்புதமான கிராமமாக, அழகான கோயில் கொண்ட ஊராகத் திகழ்ந்தது. இன்றைக்கும் அந்தக் கிராமம் இருக்கிறது. ஆனால் ஆலயம்?

ஆலயம் தேடுவோம்!

பிரமாண்டமான மதிலுடன் மதிலைச் சுற்றி நான்கு அகண்ட தெருக்களைக் கொண்ட மிக அழகான கோயில், இன்றைக்கு மதிலை இழந்து, அழகைத் தொலைத்து, சிறிய சந்நிதியாக இடிந்து, சுருங்கிக் கிடக்கிறது என்பதுதான் மிகப்பெரிய கொடுமை.

ஆலயம் தேடுவோம்!

அம்பாளின் திருநாமம் - ஸ்ரீவிசாலாட்சி. அழகும் கனிவுமாகக் காட்சி தருகிறாள். தனிச்சந்நிதியில் இருந்தபடி அருளாட்சி செய்தவள், இன்றைக்கு சந்நிதியின்றி, ஓலைக்குடிசைக்குள் ஸ்ரீகயிலாச நாதருடன் இருப்பதைப் பார்க்க... நெஞ்சே வெடித்துவிடுவது போல், துக்கம் அழுத்துகிறது!

ஆரூர் மற்றும் அதைச் சுற்றி உள்ள ஊர்களின் கோயில்களுக்கு விளக்கெரிப்பதற்கு எண்ணெயும் இறைத்திருமேனிக்கு அபிஷேகம் செய்ய பாலும்  இங்கிருந்துதான் அனுப்பப்படுமாம். எனவே பல ஊர்களில் இருந்தும் வண்டி கட்டிக் கொண்டு, ஆய்க்குடிக்கு வருபவர்கள் அருகில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு, ஸ்ரீகயிலாசநாதரையும் ஸ்ரீவிசாலாட்சி அம்மையையும் கண்ணாரத் தரிசிப்பார்கள். பிறகு ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் நைவேத்தியம் செய்த பிரசாதத்தையே உணவாகச் சாப்பிட்டு, இளைப்பாறிவிட்டு, எண்ணெய்யையும் பாலையும் எடுத்துச் செல்வார்களாம்!

ஆனால், இன்றைக்கு ஸ்ரீவிசாலாட்சி அம்பாளுக்கு புது வஸ்திரம் அணிவித்து பல வருடங்களாகிவிட்டன. ஸ்ரீகயிலாசநாதருக்கு வெண்பொங்கலும் தயிர்சாதமும் நைவேத்தியம் செய்து எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டன. பாலபிஷேகம் செய்தே பல மாமாங்கங்கள் கடந்துவிட்ட நிலையில்... இப்போதுதான் ஊர்க்காரர்கள் பெருமுயற்சி மேற்கொண்டு, கோயிலில் பாலாலயம் செய்து, ஓலைக்குடிசையில் வைத்திருக்கிறார்கள்.

''கும்பாபிஷேகமும் திருப்பணிகளும் நடந்து இருநூறு வருஷத்துக்கும் மேல ஆயிருச்சுங்க. ஒருகாலத்துல, ஐப்பசி அன்னாபிஷேகம் என்ன... திருக்கார்த்திகை தீபத் திருவிழா என்னன்னு சொல்ற அளவுக்கு ஓஹோன்னு நடக்குமாம். ஆனா, ஊர்லநாட்ல இருக்கறவங்களே கோயிலுக்குள்ளே போக முடியாதபடி, முள்ளும் புதருமா இருந்துச்சு. இப்பத்தான் ஆளும்பேருமா சேர்ந்து, திருப்பணி வேலையை துவக்கியிருக்கோம். அந்த ஸ்ரீகயிலாசநாதர் கருணையால, எங்க கிராமத்துல பன்னெடுங்காலமா இருக்கிற இந்தக் கோயிலுக்கு, கும்பாபிஷேகம் நடக்கணுங் கறதுதான் எங்க பிரார்த்தனை'' என்கின்றனர் கிராம மக்கள்.

குடம் குடமாகப் பாலபிஷேகம் செய்வதற்கு, இந்த ஊரில் இருந்துதான் பால்... அண்டா அண்டாவாக எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அப்பேர்ப்பட்ட ஊரில் நடுநாயக மாகத் திகழும் ஸ்ரீகயிலாசநாதர் கோயில், திரும்பவும் தன் மொத்தக் களையையும் பெற்றுவிட வேண்டாமா?

வெளியூர் அன்பர்களின் பசியைப் போக்கிய திருத்தலம் இது. இங்கே தரும் நைவேத்தியத்தை, பிரசாதத்தை... உணவாகச் சாப்பிட்டுப் பசியாறிய அன்பர்கள் வந்து வணங்கித் தொழுத அற்புதமான பூமி இது. இன்றைக்கு நைவேத்தியம் இல்லாமல் இறைவனும் இறைவியும் ஏக்கத்துடன் இருப்பது தகுமா?

ஆலயம் தேடுவோம்!

கோயில் இல்லாத ஊரில் குடியிருப்பதில்லை நாம். இருக்கிற இடத்துக்கு அருகில் அற்புதமாகக் கோயிலைக் கட்டிக்கொண்டு வழிபடுவதில் அக்கறையும் ஆர்வமும் காட்டத்தான் செய்கிறோம். ஆனால், புராண - புராதனப் பெருமைகள் கொண்ட ஆலயம், சிதைந்தும் புதைந்துமாகக் கிடப்பதைக் கண்டு சும்மா இருந்துவிடாதீர்கள் என்று காஞ்சி மகாபெரியவா அருளியிருக்கிறார். புதிதாகக் கோயில் கட்டவேண்டாம்; பழைய கோயிலைப் புனரமைப்பு செய்வது மகா புண்ணியம் என்று நமக்குத் தெளிவுற எடுத்துரைத்திருக்கிறார்.

ஆய்க்குடி ஸ்ரீகயிலாசநாதருக்கு, ஒரு சொம்பு பால் கொண்டு அபிஷேகிப்போம். ஒரு கைப்பிடி சாதமேனும் வைத்து  நைவேத்தியம் செய்வோம். எளிமையாக ஒரு வஸ்திரத்தை அணிவித்து ஸ்ரீகயிலாசநாதரையும் ஸ்ரீவிசாலாட்சி அம்மையையும் அழகு பார்ப்போம்.

முக்கியமாக, ஆய்க்குடி சிவாலயம் மீண்டும் அழகு பெற... நம்மாலான கைங்கர்யத்தைச் செய்வோம். நாம் தருகிற ஒவ்வொரு கல்லும் சேர்ந்து, அங்கே அழகிய கோயிலாக உருப்பெறும் போது, தென்னாடுடைய சிவனாரும் நமக்கு அருள்வார்; ஆய்க்குடி மக்களும் நம்மை மனதார வாழ்த்துவார்கள்!

அடுத்தவரின் வாழ்த்தும் ஆண்டவனின் அருளும் இருந்தால் நாமும் நம் சந்ததியின் குறையற வாழலாம்!

படங்கள்: ஜெ.ராம்குமார்