Published:Updated:

கல்யாண வரம் தரும் கழுகாசல மூர்த்தி !

Vikatan Correspondent

ச.காளிராஜ் படங்கள்: ஏ.சிதம்பரம்

##~##

கழுகுமலை- தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தலத்துக்கு புராணப் பெருமைகளும், சரித்திரச் சிறப்புகளும் ஏராளம்!

தென்பழநி, உவணகிரி, கஜமுக பர்வதம் என்றெல்லாம் இந்த ஊரைப் புகழ்கின்றன புராணங்கள். மேலும் கழுகாசலம், சம்பாதி க்ஷேத்திரம் ஆகிய பெயர்களும் இந்தத் தலத்துக்கு உண்டு. காரணம்?

திரேதா யுகம். சீதாதேவியை கடத்திச் சென்ற ராவணனிடம் இருந்து அவளைக் காப்பாற்ற முயற்சித்து, மரணத்தைத் தழுவினார் ஜடாயு. அவருக்கு ஸ்ரீராமனே ஈமக்கிரியைகள் செய்து மோட்சகதி அளித்தார். இந்தத் தகவல்களை எல்லாம் அறிந்த ஜடாயுவின் சகோதரன் சம்பாதி, 'என் உயிருக்குயிரான சகோதரருக்கு ஈமக்கிரியைகள் செய்ய இயலாத சண்டாளனாகிவிட்டேனே’ என்று வருந்தினார்; தனது சண்டாளத் தன்மை நீங்க வழி தெரியாமல் கலங்கினார். பிறகு ஸ்ரீராமனைத் தரிசித்து, அவரிடமே பாவம் நீங்குவதற்கான பிராயச்சித்தத்தை கூறும்படி வேண்டினார்.

கல்யாண வரம் தரும் கழுகாசல மூர்த்தி !

சம்பாதிக்கு ஆறுதல் அளித்த ஸ்ரீராமன், ''நீ கஜமுக பர்வதத்தில் (யானை முகம் கொண்ட மலையில்) மயில் மீது அமர்ந்திருக்கும் அழகனான முருகப்பெருமானைத் தரிசித்து, அந்தத் தலத்தில் உள்ள ஆம்பல் நதிக்கரையில் நீராடி, அவரை பூஜித்து வா. ஆறுமுகனின் திருவருளால் உனது பாவம் நீங்கும்; நீ மோட்சகதி அடைவாய்'' என்று அருள்புரிந்தார். ஸ்ரீராமனின் அறிவுரைப்படியே கஜமுக பர்வதத்தை அடைந்து ஆம்பல் நதியில் நீராடி, முருகக் கடவுளை மனதார துதித்து வழிபட்டார். அதன்பலனாக ஆறுமுகனின் அனுக்கிரகமும், மோட்ச கதியும் கிடைத்தது சம்பாதிக்கு.

இப்படி, கழுகாகிய சம்பாதி கந்தக்கடவுளை வழிபட்ட தலம் ஆதலால் இந்த ஊருக்கு கழுகாசலம், சம்பாதி க்ஷேத்திரம் என்றெல்லாம் பெயர் வந்ததாக விவரிக்கிறது தலபுராணம். தற்போது கழுகுமலை என்று திருப்பெயர். இங்கே மலையடிவாரத்தில் அழகுற கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானுக்கு ஸ்ரீகழுகாசலமூர்த்தி என்று பெயர்.

கல்யாண வரம் தரும் கழுகாசல மூர்த்தி !

அருணகிரிநாதரால் பாடல்பெற்ற ஒப்பற்ற ஸ்தலம் இது. கோயிலின் கருவறையும், அர்த்த மண்டபமும் குடைவரையாய் திகழ்கின்றன. வெளியே ருத்ராட்ச மண்டபமும், நவகோள் மண்டபமும் உள்ளன. கருவறையில்... இடப்புறம் நோக்கி நிற்கும் மயூர வாகனத்தின் (மயிலின்) மீது அமர்ந்து, இடது காலை மயூரத்தின் மீது பதித்து, வலது காலை தொங்கவிட்டபடி, ஒரு முகமும் ஆறு திருக்கரங்களுமாக... வெற்றிவேலுடன் அற்புதத் திருக்கோலம் காட்டுகிறார் முருகப்பெருமான்.

முதல வரிவிலோ டெதிர்த்த சூருடல்
மடிய அயிலையே விடுத்த வாகரு
முகிலை யனையதா நிறத்த மால்திரு மருகோனே
கதலி கமுகுசூழ் வயற்கு ளேயளி
யிசையை முரலமா அறத்தில் மீறிய
கழுகு மலைமகா நகர்க்குள் மேவிய பெருமாளே

கல்யாண வரம் தரும் கழுகாசல மூர்த்தி !

- என்று தமது திருப்புகழில் அருணகிரிநாதர் பாடிப் பரவுவது இவரைத்தான்! முருகனின் அருகிலேயே வள்ளி-தெய்வானை தேவியர் முறையே தெற்கு- வடக்கு நோக்கி ஒருவரையருவர் பார்த்தபடி அருள்புரிகிறார்கள். உத்ஸவர் ஸ்ரீஆறுமுகநயினாரும் வெகு அழகு!

ஸ்ரீஜம்புலிங்கேஸ்வரர், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். முருகனுக்கு ஒன்றும், சிவசக்தியருக்கு ஒன்றுமாக இரண்டு பள்ளியறைகள் இந்தக் கோயிலில்! சுமார் 7 அடி உயரத்தில் வடுக மூர்த்தியாகக் காட்சி தரும் ஸ்ரீபைரவரும் ஸ்ரீநடராஜ மூர்த்தத்தின் திருவடியில் இடப்புறம் தலைவைத்துப் படுத்திருக்கும் முயலகனும் இந்தத் தலத்தின் சிறப்பம்சங்கள்!

ஸ்ரீகழுகாசல மூர்த்தி ஆயுதபாணியாய் அருள்வதால், கந்த சஷ்டியின்போது விரதம் இருந்து இவரை வழிபடுவது விசேஷம் என்கிறார்கள். சஷ்டி விழாவின் ஆறு நாட்களும் கோயிலின் ஓதுவார் கழுகாசல மூர்த்தியின் தூதராக சூரபதுமனிடம் தூது செல்வது, வேறெங்கும் காண்பதற்கரிய வைபவம்!

கல்யாண வரம் தரும் கழுகாசல மூர்த்தி !

செவ்வாய் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது கழுகுமலை. செவ்வாய் தோஷ ஜாதகக்காரர்கள் ஐந்து பௌர்ணமி தினங்கள் இந்தத் தலத்தில் கிரிவலம் வந்து, முருகனுக்கு நெய் தீபமேற்றி வழிபட, விரைவில் வரன் தகையும்; வீட்டில் கெட்டி மேளம் கொட்டும் என்கிறார்கள். சஷ்டி தினங்களில் இங்கு வந்து குமார திருக்குளத் தில் நீராடி, 'வெற்றிவேல்... வீரவேல்’ என்று முழங்கியவாறு 108 முறை கிரிவலம் வந்து, கழுகாசல மூர்த்தியை வழிபட, நினைத்தது நிறைவேறுமாம். முருகனுக்கு தேய்பிறை நாட்களில் ஈச்சம்பழமும் (பேரீச்சை) தேனும் நைவேத்தியம் செய்து வழிபட, பில்லி- சூன்யம் போன்ற தீவினைகளும், தொழில் முடக்கம், கடன் போன்ற பிரச்னைகளும் நிவர்த்தியாகும் எனச் சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள்.

கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால், கார்த்திகை நட்சத்திரமும் முருகனுக்கு உகந்தது அல்லவா?! இதோ... புண்ணியம் மிகுந்த இந்த கார்த்திகை மாதத்தில் உங்கள் கவலைகள் யாவும் பறந்தோட, கழுகுமலைக்குச் சென்று கார்த்திகேயனாம் ஸ்ரீகழுகாசல

மூர்த்தியின் வரம் பெற்று வாருங்கள். கழுகுமலைக்கு வரும் பக்தர்கள்... முருகன் கோயிலுக்கு அருகிலேயே உள்ள வெட்டுவான்கோயில், மலையுச்சியில் ஸ்ரீஉச்சிப் பிள்ளையார் கோயில், அந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே உள்ள சமணப் படுக்கைகள், அய்யனார் சுனை ஆகியவற்றையும் தரிசித்து வரலாம்.