Published:Updated:

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் தரிசனம் !

படங்கள்: ரா.ராம்குமார்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் தரிசனம் !

படங்கள்: ரா.ராம்குமார்

Published:Updated:
##~##

என் நெஞ்சத்து உள்இருந்துஇங்கு இருந்தமிழ்நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வஇடந்த வாட்டாற்றான்
மன்அஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான்
நன்னெஞ்சே! நம்பெருமான் நமக்கு அருள்தான் செய்வானே!
நம்மாழ்வார் (பத்தாம் பத்து \ஆறாம் திருவாய்மொழி)

பொருள் : நல்ல மனமே! திருவாட்டாற்றில் எழுந்தருளியுள்ள எம்பெருமான், கொடிய உள்ளம் கொண்ட இரணியனை... அவனது மார்பைப் பிளந்து கொன்றான். அரசர்கள் அஞ்சும்படியாகப் பாரதப் போர் நடத்தி, பாண்டவர்கள் ஐவருக்கும் அருள் செய்வதற்காக 'படைக்கலம் எடுக்க மாட்டேன்’ என்றவன், படை தொட்டான். நம்முடைய பெருமானாகிய ஸ்வாமி, என் நெஞ்சத்துள் எழுந்தருளியிருந்து, இங்கே பெருமையுடைய தமிழ் பிரபந்தமாகிய இந்தத் திருவாய்மொழியை நான் வெளியிடுமாறு, தானே வாய்திறந்து அருளியுள்ளான். இவ்வாறு நமக்கு மேலும் மேலும் அருள் செய்வதற்குத் தானே விருப்பம் கொண்டுள்ளான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேரள திவ்ய தேசங்களில் மிகப் பழைமையான ஸ்தலம் திருவட்டாறு. நாகர்கோவில்- திருவனந்தபுரம் செல்லும் வழியில், நாகர்கோவிலில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்தில் பறளி ஆற்றின் (பஃறுளி  என்றும் கூறப்படுகிறது) கரையில் அமைந்துள்ளது. இங்கே பெருமாளின் திருநாமம்- ஸ்ரீஆதிகேசவப் பெருமாள். தாயாரின் திருநாமம்- மரகதவல்லி நாச்சியார்.  

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் தரிசனம் !

மகேந்திர மலையில் உற்பத்தியாகும் பறளியாறு இந்த ஊரைச் சுற்றி வட்டமாக ஓடுவதால், இந்த ஊருக்கு 'வட்டாறு’ என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே, 'திரு’ அடைமொழியுடன் சேர்த்து திருவட்டாறு என்று அழைக்கப்படுகிறது. நம்மாழ்வார் இத்தலத்து பெருமாளை 'வாட்டாற்றான்’ என்கிறார். ஆலயத் தல விருட்சம்-செண்பகம்.

ஆலயத்தின் முக்கிய மான நுழைவாயில் மேற் கில் உள்ளது. மேற்கு பிராகாரத்தில் கொடி மரப் பீடம், ஸ்ரீபலிக்கல் மண்டபம் ஆகியவை உள்ளன. அவற்றைக் கடந்து, நாலம்பலத்தை அடைந்து அதனுள்ளே சென்றால்... எதிரே நமஸ் கார மண்டபம். இதை அடுத்து ஒற்றைக் கல் மண்டபம். 18 அடி அகலம், 25 அடி நீளம், 3 அடி கனம் கொண்டது இது. இந்த மண்டபத்தில் மகாராஜாவைத் தவிர, பக்தர்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய அனுமதியில்லை.

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் தரிசனம் !

ஓர் ஆலய ஊழியர் இதனருகில் நின்று, 'யாரும் இங்கே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யக்கூடாது'' என்று உரத்த குரலில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

மூலவர் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் மேற்கு நோக்கிய சயனத் திருக்கோலத்தில் அருள்கிறார். இவரின் வலது கரம் சிம்ம கர்ண யோக முத்திரை காட்டுகிறது. இடது கை, கிடையாக நீட்டி தொங்க விட்ட நிலையில் உள்ளது. புஜங்க சயனத்தில் மேற்கு நோக்கித் திருமுகம் கொண் டிருக்கிறார். நாபியில் வழக்கமாக இருக்கும் பிரம்மா இங்கு கிடையாது. இந்தப் பெருமாள் 22 அடி நீளத்தில் காட்சியளிப்பது சிறப்பு (திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப ஸ்வாமியின் நீளம் 18 அடி. ஸ்ரீரங்கம் பெருமாளின் நீளம் 16 அடி). இங்குள்ள பெருமாளின் சயனக் கோலத்தைப் பாதம், உடல், தலை என்று தனித்தனியாகப் பார்க்கும் வகையில் கருவறைக்கு 3 வாசல்கள் அமைந்துள்ளன. பாதத்தின் கீழ் சிவலிங்கம் இருக்கிறது. பாம்பணை அருகே ஸ்ரீதேவி, பூதேவி படிமங்கள் உள்ளன.

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் தரிசனம் !

ஸ்ரீஆதிகேசவப்பெருமாளின் திருமேனி 16,008 சாளக்ராமங்களால் அமைக்கப்பட்டு, மேலே கடுசர்க்கரா என்ற அஷ்ட பந்தனக் கலவையால் பூசப்பட்டுள்ளது. மூலவருக்குத் திருமஞ்சனம் கிடையாது; தைலக்காப்புதான். திருமஞ்சனம், உத்ஸவ மூர்த்திக்கு மட்டுமே!

மூலவரின் சிரசுக்கு அருகே ஹாதலேய மகரிஷி காணப்படுகிறார். துவாபர யுகத்தில் மனைவியுடன் இங்கு வசித்த சோமயாசி என்ற முனிவர்,  குழந்தைப்பேறு வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். யாக குண்டத்தில் இருந்து ஒளி மயமான ஒரு குழந்தை தோன்றி வெளி வந்தது. அதற்கு ஹாதலேயன் என்று பெயரிட்டனர். அந்தக் குழந்தை சப்த ரிஷிகளால் வளர்க்கப்பட்டான்.

ஹாதலேயனின் சிறப்பினைக் கண்ட கசிவ்ருதன் என்ற தேவகுமாரன் அவன் மீது பொறாமை கொண்டான். ஒருநாள் அவன் ஹாதலேயனைப் பார்த்து, 'உன் தாய்- தந்தை யார்?'' என்று கேட்டான். ஹாதலேயன், தனக்கு அருகில் இருந்த வாழைமரத்தைக் காட்டி, 'இதுதான் என் தாய்- தந்தை'' என்று கூற, தேவகுமாரன் கசிவ்ருதன் அவனை எள்ளி நகையாடினான். 'நீ கூறுவது எப்படிச் சாத்தியம்?'' என்று கேட்டான்.

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் தரிசனம் !

உடனே ஹாதலேயன், எம்பெருமானை மனமுருகி துதித்தான். அதன் விளைவாக, வாழை மரம் பிளந்து அதிலிருந்து பரமன் வெளிப்பட்டுக் காட்சி கொடுத்தாராம். அத்துடன், ஹாதலேயனை அருகில் அழைத்து, அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்து, அவனைத் தன் சிரசுக்கு அருகிலேயே அமர்த்திக் கொண்டாராம்.

கருவறையின் வடக்கு, கிழக்கு சுவர்களில் மதுகைடபர், சூரிய- சந்திரர் உள்ளிட்ட மிகப் பழைமையான புராண, இதிகாசக் காட்சிகளைக் கொண்ட ஓவியங்கள் காணப்படுகின்றன. கருவறை விமானம் மரத்தால் செய்யப்பட்டு, அதன் மேலே செப்புத் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன.

திரேதா யுகத்தில் ஸ்ரீபரசுராமர் திருவட்டாறு தலத்தில் உள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை வழிபட்டதாக புராணக் குறிப்பு உள்ளது. இதே யுகத்தில் பிரம்மா தவம் செய்தபோது மகாவிஷ்ணுவை மதிக்காமல் இருந்தாராம். விளைவு... மந்திரங்கள் பிறழ ஆரம்பித்தன. இந்த விபரீதத்தால், கேசன் என்ற அரக்கனும் கேசி என்ற அரக்கியும் பிறந்தனர். இவர்கள் பிரம்மாவிடம் பெற்ற வரத்தால், தேவர்களைப் பெரிதும் துன்புறுத்தி வந்தார்கள்.

கேசி ஒருமுறை நாகலோகம் செல்ல நேர்ந்தது. அங்கே இந்திரனைப் பார்த்து மதி மயங்கி, அவனை மணக்க விருப்பம் தெரிவித்தாள்.  இந்திரன் மறுத் தான். உடனே கேசி, தன் அண்ணன் கேசனிடம் போய், இந்திரன் தன்னைப் பலவந்தப்படுத்தியதாக முறையிட்டாள். கோபம் கொண்ட கேசன் இந்திரனைத் துரத்தினான். அவன் ஓடி ஒளிந்து, பின் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டான். மகாவிஷ்ணு கேசனுடன் போரிட்டு அழிக்க அழிக்க, அவன் மீண்டும் மீண்டும் உயிர் பெற்றுப் போர் தொடுக்கலானான்.

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் தரிசனம் !

பிரம்மாவின் வரம் கேசனைக் காத்தது. அப்போது பராசக்தி பிரசன்னமானாள். ''ஐந்து தலை நாகமான ஆதிசேஷன், கேசனைச் சுற்றி வளைத்து அரண் கட்டட்டும். அதன் மேல் மகாவிஷ்ணு சயனிக்கட்டும்'' என்று யோசனை சொன்னாள். அதன்படி, அரக்கனை வீழ்த்தி, ஆதிசேஷ படுக்கையில் அடக்கி, அதன் மேல் பெருமாள் பள்ளிகொண்டார்.

சிவபெருமான் நேரில் வந்து, 12 இடங்களில் நிலைகொண்டு திருமாலுக்கும்- அசுரன் கேசனுக்கும் நடந்த போரைக் கண்டார் என்கின்றன ஞானநூல்கள். பின்னர், அந்த இடங்களில்  தாமாகவே சிவாலயங்கள் உருவாகின. முஞ்சிறை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்

கோடு, திருவிதாங்கோடு, திருப் பன்றிக்கோடு, நட்டாலம் ஆகிய அந்த 12 சிவாலயங்களிலும் மகா சிவராத்திரியின்போது (இப்போதும்) நடைபெறும் 'சிவாலய ஓட்டம்’

புகழ்பெற்றது. அப்போது, பக்தர்கள் ''கோபாலா... கோவிந்தா...'' என்று கோஷமிட்டபடி சிவாலய ஓட்டம் ஓடி, இறுதியில் திருவட்டாறு ஸ்ரீஆதி கேசவப்பெருமாளைத் தரிசிப்பது காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆலயத்தின் கருவறை நோக்கிச் செல்லும் வழியில் ஒருபக்கம் தூணில் கரும்பு, வில்லுடன் மன்மதனும்... எதிர்ப்புறம், ரதிதேவியும் அழகுச் சிற்பங்களாக காட்சி தருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்

உள்ளது போலவே வீரபத்திரர், அகோர பத்திரர் சிற்பங்கள் இங்கும் உள்ளன. பிராகாரத் தூண்கள் புகழ்பெற்ற ராமேஸ்வர ஆலயத்தை நினைவூட்டுகின்றன. நான்கு பிராகாரங்களிலும் மொத்தம் 224 தூண்கள்! ஒவ்வொரு தூணிலும் கையில் தீபம் ஏந்திய பாவையான தீப லட்சுமியின் சிற்பத்தைக்

காணமுடிகிறது. ஸ்ரீதர்மசாஸ்தா, திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணன் ஆகியோருக்கும் இங்கே தனிச் சந்நிதி உள்ளது. உயரமான திருமதில், இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு! 5 மீட்டர் உயரத்துக்கு படிக்கட்டுகளில் ஏறிச் சென்றுதான் ஆலயத்தை அடைய முடியும்.

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் தரிசனம் !

வங்காள மறுமலர்ச்சிக்குக் காரணமானவர் என்று கூறப்படும் ஸ்ரீசைதன்ய மகா பிரபு (1485\1533) திருவட்டாறு ஆலயத்துக்கு 1510\ல் வருகை புரிந்தார். இங்கு பெருமாளின் அனுக்கிரகம் கிடைத்து, பிரம்ம ஸம்ஹிதைக்கு உரை எழுதினார் என்பது வரலாறு.

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் தரிசனம் !

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஒவ்வொரு  சனிக்கிழமையும் இந்தக் கோயிலுக்கு தவறாது வருகை தரும் ஸ்ரீகுமார் என்பவரைச் சந்தித்தோம். ''இலங்கை யுத்தம் முடிந்ததும் ஸ்ரீராமன் இங்கு வந்து பெருமாளை வணங்கியதாக ஐதீகம். காலை 5 முதல் மதியம் 12 மணி வரையும், பிற்பகல் 5 முதல் இரவு 8 மணி வரையும்

கோயில் திறந்திருக்கும். தினமும் நான்கு பூஜைகள்.  ஏப்ரல்- மே மாதங்களில் மீன உத்ஸவம் 10 நாட்களும், அக்டோபர்- நவம்பரில் துலா உத்ஸவம் 10 நாட்களும் நடைபெறும்.

தவிர, கிருஷ்ண ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி வைபவங்களும்  சிறப்பாக நடக்கின்றன. நம்மாழ்வார் இத்தலத்துப் பெருமாளின் திருவடிகளைத் தொழுது எழுந்தார். அதனால் அவரின் முன் ஜென்ம பாவ வினைகள் முழுவதும் நொடியில் அகன்றதாம். ஆக, இந்தத் திருத்தலத்தில் உறையும் பெருமாளை பக்தர்கள் தேடிவந்து தொழுதால், பாவ வினைகள் முற்றிலும் கழுவப்பட்டு, பெருமாளின் திருவருள் கிடைக்கப்பெறலாம். அதோடு, நம் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்'' என்றார், நெகிழ்வோடு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism