ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

தசாவதார திருத்தலங்கள்!

உன்னைச் சரணடைந்தோம்!தி.தெய்வநாயகம்

##~##

ரணடைதல் என்பது உயர்வான விஷயம். விட்டுக்கொடுத்தலில் துவங்கி, பிறகு தன்னையே ஒப்புக்கொடுத்து அர்ப்பணிப்பதில் பூரணத்துவமாகும் உன்னதம் அது!

 அப்படி சுக்ரீவன் சரண் அடைந்ததால்தான், விதி மாற்றி எழுதப்பட்டது; வாலி வதம் நிகழ்ந்து சுக்ரீவனின் வாழ்க்கையே வரமானது. இங்கே ஓர் எதிர்பார்ப்பு இருந்தது என்றால், அனுமனின் சரணாகதியிலோ எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை. அவர், பிரதிபலன் எதுவும் பாராமல் தன்னையே தத்தம் கொடுத்ததால் ஸ்ரீராமனையே தனதாக்கிக் கொண்டார்.

அதனால் அல்லவோ... சமுத்திரம் தாண்டியதும், பலத்தில் வல்ல அசுரர்களை வதம் செய்ததும், நெருங்கமுடியாத லங்கா நகருக்குள் புகுந்து ராவணனையே எச்சரித்ததும், பின்னர் அந்த நகரையே எரித்ததுமாகிய அரும்பெரும் சாதனைகளை அவரால் நிகழ்த்த முடிந்தது!

விபீஷண சரணாகதி எப்படி இருந்தது தெரியுமா?

'ஸ்ரீராமனுக்கு அனுகூலமாக இருக்கவேண்டும் எனும் சங்கல்பம், அவருக்கு விரோதமானவற்றை விலக்கிக்கொள்ளுதல், தன்னைக் காப்பாற்றுவார் எனும் நம்பிக்கை, தன்னை ரட்சிக்கத் தகுந்தவனையே அடைய வேண்டும் எனும் பக்தி, தன்னை அப்படியே ஒப்படைத்தல், தனது தீனத் தன்மையை ஸ்ரீராமனிடம் சமர்ப்பிப்பது- எனும் ஆறு அம்சங்களுடன் அமைந்திருந்தது விபீஷணாழ்வாரின் சரணாகதி’ என்கிறது வால்மீகி ராமாயணம்.

தசாவதார திருத்தலங்கள்!

நாமும், 'இறைவா... அபயம்’ என்று அவனுடைய திருவடி பணியுமுன், இப்படித்தான் சங்கல்பித்துக்கொள்ள வேண்டும். அதனால் உண்டாகும் பலன்கள் உசத்தியானவை.

உன்னதமான நற்கதியை அடைய உதவும் வழிகளாக ஞானநூல்கள் சொல்லும் யாக-வேள்விகள், தானம், தவம் போன்ற விஷயங்கள் எல்லாம்... அவற்றை பலமுறை அனுஷ்டித்தால் மட்டுமே பயன் கிட்டும். ஆனால், சரணாகதி அப்படியல்ல!

'எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை ஒருமுறை சரண்புகுந்தால் போதும்... வாயால் சொல்லியோ, தேகத்தால் தண்டனிட்டோ செய்யவேண்டும் என்று அவசியம் இல்லை; மனதால் ஸங்கல்பித்தால் போதும். 'என் இறைவா, நான் உன்னைச் சேர்ந்தவன். என்னை உன்னிடத்தில் ஒப்படைக் கிறேன்...’ என்று மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டால், நமக்கான அனைத்தையும் தெய்வம் கவனித்துக் கொள்ளும்; தெய்வத்தின் திருவருள் நம்மைச் சூழ்ந்துகொள்ள... நடப்பதெல்லாம் நன்மையாகவே முடியும்!

இங்கும் ஒரு சரணாகதி நிகழ்ந்தது.

அது, மிக மிக விசேஷமானது!

ஆமாம்... அண்டபகிரண்டத்துக்கும் அபயம் அளிக்கும் சர்வ சரண்யனான ஸ்ரீராமப் பரம்பொருள், சமுத்திர ராஜனுக்கு சரணம் செய்தது. இந்தக் காட்சியை மிக அருமையாக விவரிக்கிறது வால்மீகி ராமாயணம்:

'புனிதம் வாய்ந்த தர்ப்பைப் புற்களை சமுத்திரக் கரையில் பரப்பி... சகல பூதங்களுக்கும் அபயம் அளிக்கும் குலத்தில் பிறந்தவராக இருந்தாலும், கிழக்குமுகமாய் சமுத்திரத்தை நோக்கி சமுத்திர ராஜனை கைகூப்பி வணங்கினார் ஸ்ரீராமன். பிறகு, தர்ப்பைப் புற்களின் மீது சயனம் கொண்டார்.

தங்க ஆபரணங்களாலும், சிவந்த குங்குமத் தாலும், பலமுறை சீதாதேவியின் சிரசாலும் அலங்கரிக்கப்பட்டதும், அடியவர்கள் எல்லோருக்கும் அபயம் அளிப்பதுமான தமது வலது புஜத்தையே தலையணையாகக் கொண்டு தர்ப்பத்தில் சயனித்த ஸ்ரீராமன்... மனம், வாக்கு, தேகத்தை அடக்கிப் பிடித்து சமுத்திரராஜனை உபாஸித்தார்.  

சரணாகதியின் மகத்துவத்தை, அந்த தத்துவத்தில் தமக்குள்ள விருப்பத்தை உலகுக்குச் சுட்டிக் காட்டவே... பரம்பொருள், தாமே இப்படி வழிபட்டு வழிகாட்டியது போலும்!

ஆனாலும், இது மனித அவதாரம் அல்லவா? எனவே, வேறொரு காரணமும் சொல்லப்பட்டிருக்கிறது! அது...

இலங்கையில், சீதாதேவியைக் கண்டு திரும்பிய அனுமன் அங்குள்ள சூழலையும், கோட்டைக் காவலையும், ராவணனின் படை பலத்தையும் குறித்து விவரித்ததுடன், பரந்து விரிந்து கிடக்கும் இந்த மகா சமுத்திரத்தைக் கடந்தால்தான் இலங்கையை அடைய முடியும் என்ற தகவலையும் சொன்னான்.

ஆர்ப்பரிக்கும் பேரலைகளையும், பெரிது பெரிதான மகர மீன்களையும் கொண்ட இந்த சமுத்திரத்தைக் கடப்பது எப்படி? அதுவும், ஒட்டுமொத்த வானர சேனையும் கடந்தாக வேண்டும். அது சாத்தியமா? இந்த நிலையில் விபீஷணன் அற்புதமாய் ஓர் யோசனை சொன்னார்.

''ரகுராமன் சமுத்திர ராஜனை வழிபடட்டும். மிகப் பெரிதான இந்தக் கடல், இக்ஷ்வாகு வம்சத்தில் வந்த ஸகர சக்கரவர்த்தியின் மைந்தர்களால் வெட்டப்பட்டது. அவரின் உறவினர் நம் ஸ்வாமி. எனவே, இந்தக் கடலரசனை நம் ஸ்வாமி வழிபட்டால், அதைக் கடக்க வழி கிடைக்கும்'' என்றார் விபீஷணன். அதை ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி யும் தர்ப்பத்தில் சயனித்து கடலரசனை வழிபட்டார்.

ஆனால், மூன்று தினங்கள் கழிந்தும் சமுத்திர ராஜன் தோன்றவில்லை. அஞ்ஞான மிகுதியா? அல்லது, ராட்சஸர்கள் பலரது இருப்பிடமாகத் திகழும் கடலரசனுக்கு, அவர்களின் நட்பால் புத்தி கெட்டுப் போனதா?

ஸ்ரீராமன் பொறுமை இழந்தார். விளைவு- கோதண்டம் எழுந்தது; நாணேற்றி இடியாய் முழங்கியது. ஸ்ரீராம பாணம் சமுத்திர ராஜனைத் தாக்குவதற்குக் குறிபார்த்தது. சமுத்திரத்தையே வற்றச் செய்துவிடும் ஆக்ரோஷம் அதனிடம்!

மறுகணம்... பெரிதாய் கொந்தளித்தது சமுத்திரம். பேரலைகள் ஆர்ப்பரிக்க, கைகூப்பியபடி தோன்றினான் கடலரசன். விரைந்து வந்து ஸ்ரீராமனைப் பணிந்தான். ''ஸ்வாமி, தாமதத்துக்கு மன்னித்தருள வேண்டும். தங்களுக்கு ஓர் உதவி செய்கிறேன். என் பரப்பில் போடப்படும் கற்கள் மூழ்காமல் பார்த்துக் கொள்கிறேன். வானர சேனைகள் பலமான பாலம் அமைத்து என்னைக் கடக்கட்டும். மறுகரையை அடையும்வரை, என்னை வசிப்பிடமாகக் கொண்ட பிராணிகள் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்கிறேன்'' என்று வேண்டினார். ஸ்ரீராமனும் இசைந்து அருள் செய்தார்.

ஆனால் ஸ்ரீராம பாணம் வீணாகாதே?! ஆகவே, சமுத்திர ராஜன் வேண்டிக் கொண்டபடி, த்ருமகுல்யம் எனும் தீவை நோக்கி அஸ்திரத்தை செலுத்தினார் ஸ்ரீராமன். அங்கிருந்த தீயோர்களை அழித்துத் திரும்பியது அந்தக் கணை.

பிறகென்ன... விரைவில் சேதுபந்தன வேலைகள் துவங்கின.

எல்லாம் இருக்கட்டும்... விபீஷணருக்கும், ஆஞ்சநேயர், சுக்ரீவன் முதலான வானர வீரர்கள் எல்லோருக்கும் கிடைத்த பாக்கியம் நமக்கும் கிடைக்க வேண்டாமா?

பல்வேறு திருத்தலங்களில், சயன திருக் கோலத்தில் அருளும் பெருமாளைத் தரிசித்து வழிபட்டிருப்போம். ஆனால், அவரின் அவதார மான ஸ்ரீராமன், தர்ப்பை சயனத்தில் அருளும் கோலத்தை நாம் தரிசிக்க வேண்டாமா?

தருண மங்கையை மீட்பது
ஓர் நெறி தருக என்னும்
பொருள் நயந்து நல்
நூல்நெறி அடுக்கிய புல்லில்
கருணை அம் கடல் கிடந்தது
கருங்கடல் நோக்கி
வருண மந்திரம் எண்ணினன்
விதிமுறை வணங்கி

- என்ற கம்பரின் வாக்குக்கு ஏற்ப, புல்லணை மேல் கிடந்த ஸ்ரீராமனின் சயனக் கோலத்தைக் காண திருப்புல்லாணி எனும் தலத்துக்கு நாம் செல்லவேண்டும்.

ஆதிசேது எனப் போற்றப்படும் அந்த க்ஷேத்திரத்துக்கு... திருமங்கை ஆழ்வார், 20 பாசுரங்களால் பாடிப்பரவிய அந்தத் திருத்தலத்துக்கு எண்ணற்ற மகத்துவங்கள் உண்டு!

- அவதாரம் தொடரும்...