Published:Updated:

கலகல கடைசிப் பக்கம்

கம்பன் கண்ட தோகை மயில்!பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன்

கலகல கடைசிப் பக்கம்

கம்பன் கண்ட தோகை மயில்!பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன்

Published:Updated:
##~##

' 'யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை
’ என்று, நம் மகாகவி பாரதி, ராமாயணம் பாடிய கவிச்சக்கரவர்த்தி கம்பரைப் புகழ்ந்து பாடியதற்குக் குறிப்பாக ஒரு காரணம் உண்டு. அது என்ன தெரியுமா?' என்று ஒருநாள் மாணவர்களைப் பார்த்துக் கேட்டேன்.

'பாரதியார் எதார்த்த உலகையும் எதிர்கால அறிவியலையும் பாடும் வல்லமை உடையவர். அதனால், தனக்கு முன்னோடியாக இப்படிச் சிந்தித்த கம்பரை புகழ்ந்து பாடியிருக்கலாம்' என்றார் ஒரு மாணவி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'உண்மைதான். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பாரதி அறிவியலால் பல விந்தைகள் வரும் என்பதைத் தன் எதிர்நோக்கும் அறிவால் உணர்ந்திருந்தான். அதனால்தான், 'காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான், காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ என்றார்' என்று நான் சொல்ல, 'ஐயா! அப்படிக் கம்பர் என்னதான் சொல்லிட்டாரு? வால்மீகி வடமொழியில சொன்ன கதையைத் தமிழ் மொழியில படைத்துத் தந்திருக்கிறார். என்னதான் இருந்தாலும் மூலக்கதையை மாற்ற முடியுமா?' என்றொரு மாணவர் கேட்டார்.

கலகல கடைசிப் பக்கம்

'மாற்ற முடியாதுதான். ஆனால், தமிழ்ப் பண்பாட்டுக்கும் மரபுக்கும் ஏற்றபடியாக மாயவித்தை செய்து நம் மனங்கவர்ந்தவர் கம்பர். உதாரணமாக, தமிழர் வாழ்வில் காதலுக்கான முக்கியத்துவத்தை உணர்ந்த கம்பர், மிதிலை மாநகரத்தில் வில்லை முறித்து, சீதையை ராமன் திருமணம் செய்வதற்கு முன்பாகவே இருவரும் ஒருவரையருவர் சந்தித்துக்கொண்டதாக வால்மீகி சொல்லாத ஒரு காட்சியைக் காட்டுவாரே... அது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?' என்று நான் கேட்டேன்.

'அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்' என்று கோரஸாகப் பலர் சொன்னார்கள். 'சபாஷ்' என்று பாராட்டிய நான், 'சரி... இனி மரபு குறித்துக் கம்பர் சொல்வதைச் சற்றே யோசியுங்கள். ராமனுடைய பட்டாபிஷேகத்தை அவனது சிற்றன்னை கைகேயி தடுக்கக் காரணம், தன் மகன் பரதனுக்குப் பட்டம் சூட்டத்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், முதலில் பிறந்தவன் என்பதனால் மட்டும் ராமன் தகுதி உடையவன் ஆவானா எனக் கேள்வி கேட்டு, ஒரு புதிய செய்தியைக் கம்பர் நமக்கு விளக்குகிறார். அது என்ன தெரியுமா?' என்று நான் கேட்டேன். வகுப்பே மௌனமாய் இருந்தது.

'தோகை விரித்து ஆடுகின்ற மயில் இனத்தின் வாழ்க்கையில் முட்டையிலிருந்து வெளிவருகின்ற மயில் குஞ்சுகளில் மூத்தது எது, இளையது எது என உடனே கூற இயலாதாம். ஐந்து முட்டைகளில் முதலில் வெளிவந்த குஞ்சாக இருந்தாலும்,

கடைசியில் வெளிவந்த குஞ்சாக இருந்தாலும் ஒரே வயதுடையதாகத்தான் எண்ணப்படுமாம். ஆனால், அந்தக் குஞ்சுகளில் ஆண் குஞ்சாக இருந்து எது தோகை விரித்து முதலில் ஆடுகிறதோ, அதுதான் மூத்ததாகக் கருதப்படுமாம். அதனால் முதலில் பிறந்திருந்தாலும் ராமன் மூத்தவனாக, பட்டத்திற்குரியவனாக ஆகமாட்டான் என்பதை நாசூக்காகச் சுட்டிக்காட்டுகிறாள் மயில்முறை குலத்தில் வந்த கைகேயி என்பதுதான் அந்தச் செய்தி' என்று நான் சொல்ல... வகுப்பறையே ஆச்சரியத்தால் வியந்துபோனது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism