##~##

கார்த்திகை மாதம் எப்போது வரும் என்று காத்திருக்கும் பக்தர்கள், தென்னிந்தியாவில், குறிப்பாக நம் தமிழகத்தில் மிக மிக அதிகம். கார்த்திகை துவங்குவதற்கு முன்னதாகவே அந்த வீடு மெள்ள மெள்ள விரதத்துக்குத் தயாராகும் அழகே அழகு! வீட்டில் இருந்து அப்பாவோ அண்ணாவோ, கணவரோ பிள்ளையோ விரதம் இருந்து பூஜைகளில் கவனம் செலுத்தினாலும், மொத்த வீடும் அந்த விரத நெறிகளைக் கடைப்பிடிப்பதும், பூஜை முதலான நியமங்களுக்குக் கட்டுப்படுவதும் பார்க்க தெய்வாம்சமாக இருக்கும். இவை அனைத்துக்கும் காரணம்... சபரிகிரிவாசன் ஐயன் ஸ்ரீஐயப்ப ஸ்வாமி!

 கார்த்திகையில் மாலையணிந்து விரதம் இருக்கத் துவங்கி, மார்கழியில் கடும் விரதம் மேற்கொண்டு, தை மாத மகரஜோதி தரிசனத்துடன் விரதத்தை நிறைவு செய்கிற பக்தர்கள், இங்கே ஏராளம்.

இன்றைக்கு வாகனங்கள் பெருகிவிட்டன. வசதி வாய்ப்புகள் அதிகரித்துவிட்டன. இருள் பரவியிருக்கிற இடங்களெல்லாம் வெளிச்சம் சூழ, நவீன விளக்குகள் பொருத்தப்பட்டுவிட்டன. ஆனால், அன்றைக்கு அப்படியில்லை. வாகன வசதி மட்டுமல்ல, வழியில் தங்குவதற்குக் கூரையும், சாப்பிடுவதற்கு உணவும்கூடக் கிடைக்காது. காட்டிலும் மேட்டிலுமாக நடந்து சென்று சபரிமலையை அடைவது என்பது அன்றைக்கு ஒரு பெரிய சாதனைப் பயணம்!

 புனலூர் தாத்தா!

ஆனால், அப்பேர்ப்பட்ட காலச் சூழலிலும், ஸ்ரீஐயப்ப ஸ்வாமியே கண்கண்ட தெய்வம்; அன்னதானப் பிரியனான ஸ்ரீஐயப்பனின் பக்தர்களுக்கு உணவளிப்பதே மிகச் சிறந்த புண்ணியம்; எங்கிருந்தோ சபரிகிரிவாசனின் தரிசனத்தைத் தேடி வரும் அடியவர்களுக்கு இளைப்பாற இடம் தருவதே தன் கடமை என உயரிய நோக்கங்களோடு ஒருவர் வாழ்ந்திருக்கிறார். சதாசர்வ காலமும் ஸ்ரீஐயப்பனின் திருநாமத்தையே சொல்லிக்கொண்டு, இறைத்தொண்டு செய்வதையே தனது லட்சியமாக, பிறவிப்பயனாக, பிறவிக்கடனாக நினைத்துச் செயல்பட்ட அவரின் பெயர் சுப்ரமணிய ஐயர். புனலூர் சுப்ரமணிய ஐயர் என்று ஆரம்பகாலத்தில் சொன்னாலும், லட்சக்கணக்கான பக்தர்கள் அவர் மேல் கொண்ட அன்பின் காரணமாக, 'புனலூர் தாத்தா’ என்றே அவரை அழைத்தனர்.

 புனலூர் தாத்தா!

இந்தத் தலைமுறை பக்தர்களில் பலர் புனலூர் தாத்தாவையும், அவர் ஆற்றிய தெய்வத் திருப்பணியையும் அறிந்திருக்கமாட்டார்கள். இறைவனைச் சரணடைந்து, ஏனைய உயிர்களையும் எவனொருவன் நேசிக்கிறானோ, அவனே ஆண்டவனின் பேரருள் கிடைக்கப் பெறுவான் என்பதை வாழ்க்கையாக, ஒரு தவமாகவே மேற்கொண்டு வாழ்ந்தவர் புனலூர் தாத்தா. இன்றைக்குப் புதிதாக மாலை போடும் கன்னிசாமிகள் துவங்கி, இருபது முப்பது வருடங்களாக தனக்குக் கீழ் பக்தர்கள் சிலரைக் குழுவாக அழைத்துச் செல்கிற குருசாமிகள் என அனைத்து ஐயப்ப பக்தர்களுக்குமான மிகச் சிறந்த வழிகாட்டி... புனலூர் தாத்தா.

''அப்பாவுக்குப் பூர்வீகம் புனலூர்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க சில பேர். நாகர்கோவில் பக்கம், சுசீந்திரத்துல ஆஸ்ரமம்னு ஒரு கிராமம். அதான் அப்பாவுக்குப் பூர்வீகம். வாலிபத்துல, வேலை நிமித்தமாவும் ஸ்ரீஐயப்ப ஸ்வாமி மேல கொண்ட பக்தியாலயும் அவர் புனலூருக்கு வந்து, இங்கேயே செட்டிலாயிட்டார். அதனாலேயே அவரை புனலூர் சுப்ரமணிய ஐயர்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்புறமா, அவரோட வயதான காலத்துல, 'புனலூர் தாத்தா’ன்னே கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க பக்தர்கள்'' என்று சொல்கிறார் ராமகிருஷ்ண ஐயர். புனலூர் தாத்தாவின் மகனான இவருக்கு வயது 83.

 புனலூர் தாத்தா!

சிறுவயதிலேயே கடவுள் மீது அதிக பக்தி கொண்டு வளர்ந்தவராம் புனலூர் சுப்ரமணிய ஐயர். படிக்கும்போதே ஆசார- அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்து வளர்ந்தவர், வாலிபத்தை அடையும்போது தெளிந்த பக்குவ நிலையில் இருந்துள்ளார். அப்போது அவர் மனதில் இருந்த ஒரே சிந்தனை... சந்நியாசம் வாங்கிக்கொண்டு, நித்யானுஷ்டானங்களைச் செய்யவேண்டும் என்பதுதான்!

''எங்க அம்மாவோட தாய்மாமாதான் புனலூர் சுப்ரமணிய ஐயர். எங்களுக்கெல்லாம் மாமாதாத்தாங்கற உறவு. அவரைப் பத்தி அம்மாவும், உறவுக்காரங்களும், ஊர்க்காரங்களும் சொல்லச் சொல்ல... 'இப்படியெல்லாம்கூட ஒருத்தரால வாழமுடியுமா? இவ்ளோ கடவுள் பக்தியோட ஒருத்தர் இருக்கமுடியுமா?’ன்னு மனசுக்குள் கேள்வி வந்துக்கிட்டே இருக்கும். 19-வது வயசுல சந்நியாசியாயிடணும்னு சிருங்கேரி மடத்துக்குப் போயிட்டாராம் அவர். முழு விவரத்தையும் கேட்ட அப்போதைய சிருங்கேரி சுவாமிகள், 'நீ இல்லறத்துல இருந்துண்டே கடவுளுக்குச் சேவை செய்யப் பிறந்தவன். உன்னோட வீடே ஒரு கோயில் மாதிரி, மடம் மாதிரி, சத்திரம் போல ஆகப்போறது. இப்படி சந்நியாசம்னு வாங்கிண்டு, மக்களோட மக்களா இல்லாமத் தனிச்சுப் போயிடாதே! உன் வேலை வேற!’ன்னு சொல்லித் திருப்பி அனுப்பிச்சிட்டதா சொல்வாங்க'' என்று அவரின் உறவினர் ஆனந்தவல்லியம்மாள் வியந்தபடி சொல்கிறார். ஆஸ்ரமம் கிராமத்தில் வாழ்ந்து வரும் இவர், அங்கே புனலூர் தாத்தா பிறந்த இல்லம் நினைவிடம் போல் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதையும் தெரிவித்தார்.

''குளத்துப்புழைல ஒரு ஐயப்பன் கோயில் இருக்கு. அங்கே, ஸ்ரீபால சாஸ்தாவா ஐயப்பன் காட்சி தர்றதை நாள் முழுக்கப் பார்த்துக்கிட்டே இருக்கலாம். இந்தக் கோயிலே கதின்னு கிடப்பாராம் அப்பா. சந்நியாசம் வேணாம்னு முடிவான பிறகு, இந்தக் கோயில்ல உக்கார்றது அதிகமாயிருச்சு. அவர் மனசுல ஸ்ரீஐயப்ப ஸ்வாமி முழுசுமா வியாபிக்க ஆரம்பிச்ச தருணமும் அதுதான்.

 புனலூர் தாத்தா!

அந்த நேரத்துல... குளத்துப்புழைக் கோயில்ல அன்னதானம் பண்றதுல கொஞ்சம் சிரமம் வர ஆரம்பிச்சுது. ஒருகட்டத்துல அன்னதானம் முழுசுமா நின்னு போயிடுச்சு. இதை அப்பாவால தாங்கிக்கவே முடியலை. எங்கிருந்தோ ஊர்லேருந்து, கடுமையா விரதம் இருந்து, இருமுடி சுமந்துட்டு வர்ற பக்தனுக்குச் சாப்பாடு போடலைன்னா எப்படின்னு துடிச்சுப் போயிட்டார். முதல்வேலையா, குளத்துப்புழைல வீடு கட்டினார். அங்கே ஸ்ரீபால சாஸ்தாவைத் தரிசனம் பண்ண வர்ற பக்தர்களுக்கு உணவும், தங்கறதுக்கு இடமும் பண்ணிக் கொடுத்தார். சித்திரை விஷ§ (பிறப்பு) நாள்ல பார்த்தா... விடிய விடிய அன்னதானம் நடக்கும். பக்தர்கள் ரொம்ப சந்தோஷமாச் சாப்பிட்டு, மனநிறைவோட சபரிமலை நோக்கிக் கிளம்பிப் போவாங்க.

அன்னிலேருந்து... அன்னதான விஷயத்தையும் ஸ்ரீஐயப்ப ஸ்வாமியையும் கெட்டியாப் பிடிச்சுண்டுட்டார் அப்பா. அதுக்குப் பிறகு அவர் செய்த அன்னதான சேவையால, லட்சக்கணக்கான பக்தர்கள் 'புனலூர் சாமி... புனலூர் சாமி’ன்னு அப்பாவைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டாங்க'' என்று பெருமையுடன் சொல்கிறார் ராமகிருஷ்ண ஐயர்.

தானம் செய்வதே சிறந்தது. அந்தத் தானங்களில் எல்லாம் சிறந்தது என்று அன்னதானத்தைச் சொல்வார்கள். பெறுபவர், 'போதும்’ என்று நிறைவு அடைவது அன்னதானத்தில்தான்! அதேபோல், ஸ்வாமி ஐயப்பனின் 108 போற்றிகளில்... 'அன்னதானப் பிரபு’ என்பதும் மிக முக்கியமானது.

குளத்துப்புழையில் ஆரம்பித்து ஆரியங்காவு, அச்சங்கோவில் என்று அன்னதானம் செய்யச் செய்ய... புனலூர் தாத்தாவுக்கு ஸ்ரீஹரிஹரபுத்திரனின் பேரருள் முழுவதுமாகக் கிடைத்தது.

அன்னதானப் பிரபுவே... சரணம் ஐயப்பா!

- சரண கோஷம் தொடரும்
படங்கள்: எல்.ராஜேந்திரன், ரா.ராம்குமார்

அடுத்த கட்டுரைக்கு