Published:Updated:

ரிஷப ராசிக்காரர்களுக்கு... வாழ்வில் முன்னேற்றம் அருளும் மூவர் வழிபாடு!

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ரிஷப ராசிக்காரர்களுக்கு... வாழ்வில் முன்னேற்றம் அருளும் மூவர் வழிபாடு!

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
##~##

ராசிச் சக்கரத்தின் 360 ஆரங்களில் (நாட்களில்) 30 முதல் 60 வரை இருக்கும் பகுதி, ரிஷப ராசி. புல்வெளியும் பயிர் விளையும் நிலங்களும் அடங்கிய பகுதியாகக் காட்சியளிக்கும். காளைமாட்டின் வடிவம். பசுக்கள் பெரும்பாலும் வாழ்ந்து வளரும் இடம் அது.

 ரிஷபத்தை அறத்தின் உருவமாகப் பார்க்கும் ஸனாதனம் (தர்மஸ்த்வம் விருஷரூபேண). பிறருக்காகவே தன்னை அர்ப்பணம் செய்யும் இனம். சுயநலம் தொடாத பிறவி. உழவுக்கு ஆதாரமாக செயல்பட்டு, உயிரினங்களுக்கு உணவளிக்கும். விஞ்ஞானம் மாற்று வழியை அறிமுகம் செய்து அதை உதாசீனப்படுத்தியது. ஆனாலும், ரிஷபம் தனது உழைப்பில் தன்னிறைவு பெறுவதையும், அதன் உழைப்பால் கிட்டும் பலனைப் பெற்று நாம் நிறைவைச் சந்திப்பதையும் இல்லாமல் செய்ததுதான் விஞ்ஞானத்தின் சாதனை ஆகும். உயிரினங்கள் ஒன்றுடன் ஒன்று பகிர்ந்து, வாழ்க்கை வளத்தைப் பெருக்கி இன்புறும் இனிமையான சூழல் என்பது பகல் கனவாக மாறியதில், விஞ்ஞானத்தின் பங்கு உண்டு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரிஷப ராசிக்காரர்களுக்கு... வாழ்வில் முன்னேற்றம் அருளும் மூவர் வழிபாடு!

எதிலும் திருப்தி இல்லாமல், மாற்றுப் பொருளை தேர்ந்தெடுத்து, அதை ஊக்குவிப்பதுடன் இயற்பொருளை மறக்கச் செய்து, மாற்றுப் பொருட்களில் அடிமையாகி வாழும் நிலையைச் சந்திக்கிறோம். நஞ்சை அகற்றி தூய்மையை ஏற்படுத்தும் காளை மாட்டின் சாணத்தைத் துறந்து, மாற்றுப் பொருளுக்காக ஏங்கும் நிலையும் தென்படுகிறது. நெல்மணிகளை நாம் பெற்றுக்கொள்ள, கழிவு என வீசியெறியப்படும் வைக்கோலை உண்டு மகிழும் இனம் அது. அதுமட்டுமின்றி, நமக்கான தூய்மையையும் சுற்றுச்சூழலின் தரத்தையும் பாதுகாக்க, தான் உண்ட வைக்கோலின் சக்கையை சாணமாகத் திருப்பித் தரும். இந்த சாணத்துக்கு ஈடான ஒரு பொருளை செயற்கையாக உருவாக்குவது கடினம். கிராமப்புறங்களுக்குச் செல்லும் போது, பாதுகாப்பான கட்டை வண்டி பயணத்தை அவை நிறைவு செய்யும். 'ஒரு பக்கம் பல்வரிசையைப் பெற்ற இனம், மற்ற விலங்கினங்களில் இருந்து மாறுபட்டது’ என்கிறது வேதம் (யதன்யதோதந்தத் கவாம்).

ரிஷப ராசியில் தோன்றியவனிடம் ரிஷபத்தின் இயல்புகள் வெளிப்படும் என்கிறது ஜோதிடம். க்ஷேத்ரம், ஹோரா,  த்ரேக்காணம், சதுர்த்தாம்சம், ஸப்தமாம்சம், நவாம்சம், தசாம்சம், த்வாதசாம்சம், ஷோடசாம்சம், விம்சாம்சம், த்ரிம்சாம்சம், நக்ஷத்திராம்சம், சித்தாம்சம், கவேதாம்சம், அஷவேதாம்சம், ஷஷ்ட்யம்சம் ஆகிய 16 பிரிவுகளில் 9 கிரகங்கள், நட்சத்திரங்கள் பங்கு பெறுகின்றன. இவை அத்தனையும் ராசியில் அடக்கம்.

ராசியின் அதிபதி சுக்கிரன். சந்திரனுக்கு உச்ச வீடு. உலகவியல் போகங்களை அளிப்பவன் சுக்கிரன். அத்துடன், அவற்றுக்கு அடிப்படையான செல்வத்தையும் சேர்த்து அளிப்பவன். தண்ணீர் ராசிக்கு அதிபதியான சந்திரன், இங்கு உச்சம் பெற்று வலுவோடு இருப்பதால், அவனது பங்கும் செழிப்புக்கு ஊக்கம் அளிக்கும். மனதுக்குக் காரகன் என்ற நோக்கில்... தளராத மனத்துடன் செயலில் நிலைக்கச் செய்து, வெற்றியைச் சந்திக்க உறுதுணையாக செயல்படும். ஸ்திர ராசியில் சந்திரனின் உச்ச பலமானது, கிடைத்த செல்வத்தைத் தக்கவைக்கவும், இன்பத்தின் தொடர்ச்சியை உறுதி செய்யவும் பயன்படும். மனமானது கொந்தளிப்பு குறைந்து நிலைபெறும். தேய்ந்தும் வளர்ந்தும் செயல்படும் இயல்பானது, சுக-துக்கங்களின் தாக்கம் மாறி மாறி வருவதைச் சுட்டிக் காட்டும், ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் முக்கோண ராசிகள். ரிஷப ராசிக்கு சந்திரன், சுக்கிரன், புதன், சனி ஆகியோர் நல்ல பலன்களை அளிப்பதில் முன்னிலையில் இருப்பர். இவர்களது ஒத்துழைப்பானது, மற்ற கிரகங்களின் தாக்கத்தால் விளையும் விபரீதங்களைத் தாங்கும் திறமையை ஏற்படுத்தும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு... வாழ்வில் முன்னேற்றம் அருளும் மூவர் வழிபாடு!

சுக்கிரன், ரிஷபத்தைத் தவிர துலாத்துக்கும் அதிபதி. ராசி புருஷனின் 7-க்கும் அவன் அதிபதியாக இருக்கிறான். 7- மாரக ஸ்தானம் ஆகையால், எதிரிடையான பலன்களை வெளியிடும். ராசிக்கு அதிபதியாக இருக்கும் சுக்கிரன், எதிரிடையான 6-க்குடைய பலனைச் சந்திக்கும்போது துவண்டு போகாமல் காப்பான். ராசிநாதனான சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெறுவதால்... செயல்பாடுகளில் வெற்றி- தோல்விகளை மாறி மாறி சந்தித்தாலும், இறுதியில் இழப்பின் பாதிப்பு தெரியாத வண்ணம் நிம்மதி அளிப்பான். கன்னியில்- புதன் வீட்டில் நீசம் பெறுவதால், பூர்வ புண்ணிய கர்மவினையின் தாக்கம், பிறக்கும்போதே தலைதூக்க ஆரம்பிக்கும். அதாவது, சுக்கிரனின் எதிரிடையான பலன்கள் சிறுவயதிலேயே தென்பட்டுவிடும். இளமையும் முதுமையும் மகிழ்ச்சியில் திளைப்பதற்கு, சுக்கிரன் மறைமுகமாக ஒத்துழைப்பான்.

ஆற அமர யோசனையில் ஆழ்ந்து, பதற்றம் இல்லாமல் செயல்படும் ஸ்வபாவம் இருக்கும். வேலைப்பளுவும் மனதைத் தளரவிடாது. பொறுப்பை தட்டிக்கழிக்கும் மனம் இருக்காது. சிலநேரம் காளையின் மெத்தனம் பளிச்சிடும். தோல்வி தளர விடாது. தாக்குப்பிடிக்க முடியாத எதிர்ப்பைச் சந்திக்கத் துணியமாட்டான். சிலநேரம் தோல்வியை ஒப்புக்கொண்டு மன சமாதானத்தை ஏற்பான்.

கிராமச்சூழலில் இருந்தாலும் அது அவனது வாழ்க்கையை சூன்யமாக்காது. உணவை இருமுறை அசைபோடும் இயல்பு, சிலநேரம் ரிஷபத்தில் பிறந்தவனிடம் தென்படலாம். நிறைவேறிய செயல் பாடுகளில் திரும்பிப் பார்க்கும் எண்ணம் இருக்கும். தினவெடுத்து, கொம்பு குத்தி விளையாடும் இயல்பு பளிச்சிடும். பொருளாதாரத்திலும் பெருமையிலும் தன்னிறைவு பெற்றவனிடம் விளையாட்டாக செயல்பட்டு, வினையைச் சம்பாதிப்பான். வெற்றி பெறவேண்டும் என்ற ஆர்வத்தில், ஏற்படப்போகும் தடைகளை எண்ணிப் பார்க்காமல் செயல்பட்டு, தோல்வியைத் தழுவுவதும் உண்டு.

சுக்கிரன், கன்னிக்கு அதிபதியான புதனும், மகரத்துக்கு உடைய சனியும் பெரும்பாலும் அனுகூலமான பலனை எட்ட உதவுவர். பூர்வபுண்ணியம், பாக்கியம் ஆகியவற்றுக்கு உடைய புதன், சனி ஆகியோர் வேறு இரு ராசிகளுக்கு உடையவர்களாக இருந்தாலும், அவர்களுடைய எதிர்ப்பு தாக்கினாலும், கடைசியில் நல்ல முடிவை எட்டவைக்கும். கர்மம், பாக்கியம், தனம், பூர்வபுண்யம் - இப்படி அனுகூல பாவத்தில் அமைந்திருப்பதால், நல்ல கல்வியும், உடலுழைப்பும் அவர்களது முன்னேற்றத்துக்குக் காரணமாக அமைந்துவிடும்.

சனி உழைப்பாளியை ஊக்குவிப்பதால், தலைவனாக மாறினாலும் உழைப்பை கைவிட மாட்டான். போதுமான செல்வம் சேர்ந்தாலும் அறிவுப்பூர்வமான செயல்பாடு அவனிடம் இருந்து விலகாது. தக்க தருணத்தில் தகுந்த முறையில் செயல்பட்டு, ஆபத்தில் சிக்கிக்கொள்ளாமல் வெளிவரும் திறமை இருக்கும். நீரை உறிஞ்சி உட்கொள்ளும் இயல்பு ரிஷபத்துக்கு உண்டு. ஆர்வமிகுதியில் சேமிப்பில் இறங்கி, மற்ற அலுவல்களில் தொய்வை ஏற்படுத்துவர். நட்பும் பகையும் சீக்கிரமாகவே பற்றிக்கொண்டு விடும். நட்பை ஆராயாமல், நம்பி ஏமாறுவதும் உண்டு. நட்பானது பகையில் முடிந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு, துயரத்தை பொறுத்துக் கொள்வார்.

பிறருக்காக தனது தரத்தை தாழ்த்திக்கொள்ள மாட்டார்கள்.  தனது திறமையிலும் செயல்பாட்டிலும் திடமான நம்பிக்கை இருக்கும். மாறுபட்ட விளக்கங்களால், தன்னை மாற்றிக்கொள்ள இவர்களுக்கு மனம் இருக்காது. இவர்களின் மனம் ஒன்றில் ஊன்றியிருந்தால், அதை மாற்றும் முயற்சி பலனளிக்காது. தவறான சிந்தனையில் மனம் தீர்மானம் எடுத்துவிட்டால், அதிலிருந்து விடுபட முடியாமல் துயரத்தில் ஆழ்ந்துவிடுவார்கள்.

செயல்பாட்டில் இயல்பாகவே சுணக்கம் இருக்கும். இவர்கள் பிறரது தூண்டுதலை எதிர்பார்ப்பார்கள். பொறுமை, திடம், பயமின்மை, தன்னம்பிக்கை ஆகியவை இவர்களது முன்னேற்றத்துக்கு துணைபுரியும். சிறு சிறு தோல்விகள் எல்லாம் இவர்களை மனம் தளரவிடாது. தோல்வியால் சுணக்கமோ, வெட்கமோ தோன்றாது.

சுக்கிரன் வீட்டில் அதாவது துலாத்தில் சனி உச்சம் பெறுவதால்... சனி பலவானாக இருந்தால் சமுதாயத்தில் அங்கீகாரம் பெற்று புகழுடன் விளங்குவான். சுக்கிரன், புதன் வீட்டில் நீசம் பெறுவதால், தேவையான வேளையில் புதனின் ஒத்துழைப்பு கழன்றுவிடும். புதனின் ஒத்துழைப்பு எதிர்ப்பார்த்தபடி இருக்காது. ரிஷப ராசிக்கு ஒத்துழைப்பு கொடுப்பவர்கள் சுக்கிரனும் சனியும். அவர்கள் நம்பிக்கைக்கு உகந்தவர்கள்.

சூரியன், சந்திரன், செவ்வாய்- இந்த மூவரின் தசையை ரிஷப ராசிக்காரர்கள் (அதாவது கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம் நட்சத்திரம்) முதலில் சந்திப்பார்கள். இந்த வரிசைகள் கன்னி, மகர ராசியில் பிறந்தவர்களுக்கும் பொருந்தும். ஆன்ம காரகன், மனஸ் காரகன், சகோதர காரகன் - இவர்களின் பங்கில் ஆயுள், மனோதிடம், ஆர்வம் மேலோங்கி இருக்கும். சுக்கிரன், சந்திரன்- இவர்களது சம்பந்தம் சிற்றின்பத்தில் அளவுகடந்த ஈடுபாட்டை ஏற்படுத்தும்; சட்டத்துக்குப் புறம்பாக அதை எட்ட விரும்பும். அவப்பெயர் வந்தாலும் அதையும் தாங்கிக்கொண்டு செயல்படுவர். குடும்ப வாழ்வில் தன்னிறைவு இருக்காது. பிடிவாதத்தால் பல நன்மைகள் இழக்கப்படும். ரிஷபம் ஆறாம் அறிவு இல்லாத பிராணி. இந்த ராசிக்காரர்கள், சிலநேரம் சிந்தனைவளம் குன்றி, மனிதத்தன்மை மறந்து விலங்குகளைப் போல் செயல்படுவதும் உண்டு.  

ராசி புருஷனின் இரண்டாவது அவயவம் ரிஷபம். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கில், இவர்கள் பொருளில் தன்னிறைவு பெற்று விளங்குவர். சுக்கிரனை வழிபட வேண்டும். 'சும் சுக்ராய நம:’ என்று சொல்லி வழிபடலாம். 'விரும் விருஷபாய நம:’ என்று சொல்லி ராசியை வழிபட வேண்டும்.

மாறுபட்ட தகுதியில் அத்தனை கிரகங்களும் ராசியில் அடங்குவதால், த்ரிகோணாதிபதிகளான சுக்கிரன், புதன், சனி ஆகியோரை வணங்குவது சிறப்பு. எது எப்படி இருந்தாலும் ரிஷப ராசியில் பிறந்தவர்கள் ஏதாவதொரு வழியில் சமுதாய அந்தஸ்தைப் பெறுவார்கள்.

- வழிபடுவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism