Published:Updated:

வரம் தரும் வரதருக்கு கும்பாபிஷேகம் எப்போது?

செய்யாறு - கொரக்கை ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்வி.ராம்ஜி

வரம் தரும் வரதருக்கு கும்பாபிஷேகம் எப்போது?

செய்யாறு - கொரக்கை ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்வி.ராம்ஜி

Published:Updated:
##~##

சைவத்தையும் வைணவத்தையும் செழிக்கவும் சிறக்கவும் செய்ததில், பல்லவ தேசத்துக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. காஞ்சியம்பதியைத் தலைநகரமாகக் கொண்டு இயங்கிய பல்லவ மன்னர்கள், ஒருபக்கம் சைவ ஆலயங்களையும், இன்னொரு பக்கம் வைஷ்ணக் கோயில்களையும் எழுப்பினார்கள். அந்த ஆலயங்களில், சிற்ப சாஸ்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

 கோயில் என்பதை வெறுமனே வழிபாட்டுத் தலமாக  மட்டுமின்றி, கலைகளை வளர்க்கும் கூடமாகவும் உருவாக்கினார்கள், பல்லவ மன்னர்கள். ஒருபக்கம் சமயத்தை வளர்த்துக்கொண்டே, கலையார்வம் மிக்கவர்களை ஊக்கப்படுத்தினார்கள். சடங்கு- சாங்கியங்களுக்கும் முன்னுரிமை அளித்தார்கள். அந்தணர்களுக்கென நிறைய வசதிகளைச் செய்து கொடுத்தார்கள். கோயிலுக்கு அருகிலேயே அவர்களுக்குக் குடியிருப்புகளும், குடியிருப்பை ஒட்டியே வேதபாடசாலைகளும் அமைத்துத் தந்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதனால்தான் தமிழகத்தில் இன்றைக்கும், எந்த ஊருக்கும் இல்லாத சிறப்பு காஞ்சியம்பதி எனப் போற்றப்படும் காஞ்சிபுரத்துக்கு உண்டு. ஊருக்குள் நுழைந்து, எங்கு திரும்பினாலும் கோபுரத்தையும் கோயிலையும் தரிசிக்கலாம். 'கோயில் நகரம்’ என்று சொல்லப்படுகிற காஞ்சியம்பதியை, சிவகாஞ்சி என்றும் விஷ்ணு காஞ்சி என்றும் போற்றுகின்றனர், பக்தர்கள்.

வரம் தரும் வரதருக்கு கும்பாபிஷேகம் எப்போது?

காஞ்சியம்பதியில் மட்டுமின்றி, அதற்கு உட்பட்ட சுற்றுவட்டார ஊர்களில்கூட ஆலயங்கள் பல உள்ளன. அமைச்சர் பெருமக்கள், ஒவ்வொரு ஊராகச் சென்று ஊரையும் மக்களையும் பார்த்து ஆய்வில் ஈடுபட்ட வேளையில்... 'நாங்களும் எங்கள் வம்சமும் செழிக்க ஒரு கோயில்- குளம் கட்டித் தரக் கூடாதா?’ என்று மக்கள் விடுத்த வேண்டுகோளை, மன்னரிடம் சென்று தெரிவித்தார்கள்.

'அடடா... பொன் கொடுங்கள், பொருள் கொடுங்கள் என என் மக்கள் யாசகம் கேட்கவில்லையே! மாறாக, அறம் சிறந்து விளங்கவும், ஆன்மிகம் செழித்து வளரவும் ஆலயமல்லவா கேட்கிறார்கள்! அப்படிக் கேட்கிற மக்கள் மட்டும் அல்ல... இந்தப் பல்லவ தேசமே இதனால் சிறக்கப்போகிறது. உடனே, கோயில் கட்டும் திருப்பணியில் இறங்குங்கள்’ என்று புளகாங்கிதப்பட்டு உத்தரவிட்டார்கள் மன்னர்கள்.

அந்த வகையில் எழுந்த ஏராளமான ஆலயங்களை காஞ்சிபுரம், திருவள்ளூர், அரக்கோணம், வந்தவாசி, செய்யாறு எனத் தொண்ட நாட்டின் முக்கிய ஊர்களிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் இன்றைக்குத் தரிசிக்கலாம். சைவ- வைணவ பேதமின்றி அவை அமைந்துள்ளன.

தற்போது திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் உள்ள கொரக்கை என்கிற கிராமம், ஒருகாலத்தில் வில்வ வனமாகத்தான் இருந்தது. கொரக்கை, கொருக்கை, கொற்கை என்றெல்லாம் பேச்சு வழக்கில் சொல்லப்படுகிற இந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தில், ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் பிராகாரத்தில், ஏராளமான வில்வ மரங்கள் இருந்தனவாம். இதற்கு அத்தாட்சியாக, இன்றைக்கு இரண்டே இரண்டு வில்வ மரங்கள் இருக்கின்றன.

வில்வம், சிவனாருக்கு உகந்தது. ஆனால் இங்கே, இந்தத் தலத்தில் ஸ்ரீவரதராஜ பெருமாள் குடியிருந்தபடி அனைவருக்கும் அருள்மழை பொழிகிறார். பிரமாண்ட மதிலும், அழகிய பிராகாரமும் கொண்டு, சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் இருந்ததாம் திருக்கோயில். ஏராளமான சந்நிதிகளும் மண்டபங்களுமாக நீண்டிருந்த ஆலயத்தில், உத்ஸவ விழாக்களும் வைபவங்களும் வெகு விமரிசையாக நடைபெறுமாம். ஆனால், கோயிலின் இன்றைய நிலையைப் பார்த்தால், ரத்தக்கண்ணீர்தான் வடிகிறது.

ஊருக்கு நடுவே பிரமாண்டமாக இருந்த கோயில் இன்றைக்கு ஒரேயரு சந்நிதியுடன் இருப்பதைப் பார்த்தால், யாரால்தான் சகித்துக் கொள்ளமுடியும்? எல்லா ஸ்வாமி விக்கிரகங்களுக்கும் தனித்தனிச் சந்நிதி இருந்ததெல்லாம் போய், இன்றைக்கு மூலவர் ஸ்ரீபூமிதேவி, ஸ்ரீநீளாதேவி சமேதராக ஸ்ரீவரதராஜபெருமாளும், அருகிலேயே ஸ்ரீலட்சுமிதேவியை மடியில் அமர்த்தியபடி ஸ்ரீநாராயணரும் காட்சி தருவதை, என்னவென்று சொல்வது?

எல்லாவற்றுக்கும் மேலாக, வரப்பிரசாதியாக இருந்து சேவை சாதிக்கிறார் ஸ்ரீவரதராஜ பெருமாள். இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்வாமியின் சந்நிதிக்கு எதிரில் நின்று, மனதாரத் தங்களின் குறையை எடுத்து ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டால் போதும்... விரைவில் நினைத்த காரியத்தை இனிதே நடத்தித் தந்துவிடுவாராம் வரமருளும் பெருமாள்.

வரம் தரும் வரதருக்கு கும்பாபிஷேகம் எப்போது?

கொடிமரம் ஆரம்பம் முதலே இல்லை எனத் தோன்றுகிறது. தீப ஸ்தம்பம் இருக்கிறது. எனவே, இந்த ஆலயத்தில் விஷ்ணு கார்த்திகை தீபத் திருவிழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடியிருக்கின்றனர், ஊர்மக்கள். அதேபோல, ஆவணியில் உறியடி உத்ஸவமும், புரட்டாசியில் ஸ்ரீவரதராஜர் வீதிபுறப்பாடும் என அமர்க்களப்பட்ட ஆலயம்தான் இது. ஆனால், நூறு வருடங்களுக்கும் மேலாக, திருப்பணி செய்யாமல் சிதிலமுற்றுப் போயிருந்ததாம் ஆலயம்.

'ஊர் கூடினால்தான் தேர் இழுக்க முடியும். ஊர்க்காரர்களாகிய நாம் எல்லோரும் சேர்ந்தால் தான் திருப்பணி நடத்த முடியும்’ என்று கூடிப்பேசி, ஸ்ரீவரதராஜ ஸ்வாமி கைங்கர்ய டிரஸ்ட் எனும் அமைப்பை நிறுவி, திருப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

''ஒருகாலத்துல, கொருக்கை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்து, தரிசனம் பண்ணிட்டுதான் சுத்துப்பட்டு கிராமத்துக்காரங்க எல்லாம் விவசாய வேலையை ஆரம்பிப்பாங்க. காதுகுத்து, கல்யாணம் மாதிரியான வீட்டு விசேஷங்களைச் செய்வாங்க. யாருக்காவது, ஏதாவது நோய் நொடின்னா, இங்கே வந்து வெண்பொங்கலோ புளியோதரையோ தயிர்சாதமோ நைவேத்தியம் செஞ்சு, பெருமாளுக்கு வஸ்திரம் சார்த்தி வேண்டிக்குவாங்க. உடனே, அவங்க பூரணமா குணமாயிடுவாங்க.

ஆனா, இன்னிக்கி நைவேத்தியம் இல்லாம, புது வஸ்திரம் அணியாம, மின்விளக்குகூட இல்லாம ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் இருக்கிறதைப் பார்க்க... தாங்கவே இல்லீங்க நெஞ்சு!'' என்று ஊர்ப்பெரியவர் வேதனையுடன் தெரிவிக்கிறார்.

பிறகு, இந்த ஊரைப் பூர்வீகமாகக் கொண்டு, தற்போது சென்னையில் பணிபுரியும் அன்பர் ஒருவர் மின் வசதி செய்து கொடுக்க, பார்த்தசாரதி பட்டாச்சார்யரும் ரமேஷ் பட்டாச்சார்யரும் நித்தியப்படி பூஜை மற்றும் நைவேத்திய காரியங்களைச் செயலாற்றி வருகின்றனர்.

வருவோர்க்கும் தன்னை நினைப்போர்க்கும் வரங்களை வாரி வழங்கும் வள்ளலான ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலுக்கு ஒரு சந்நிதியை கட்டித் தாருங்கள். உங்கள் சந்ததி சிறக்க நீங்கள் வாழ்வீர்கள். அர்த்த மண்டபம் அல்லது மகா மண்டபத்தைக் கட்டிக் கொடுங்கள். ஸ்ரீவரதராஜரின் பேரருளுடன் பித்ருக்கள் எனப்படும் உங்கள் முன்னோரின் ஆசீர்வாதமும் கிடைக்கப் பெறுவீர்கள்.

கொரக்கை, கொருக்கை, கொற்கை என்றெல்லாம் அழைக்கப்படுகிற கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலுக்கு, ஒரு கல்லோ கைப்பிடி மண்ணோ கொடுத்து, அந்தத் திருப்பணியில் நீங்களும் பங்கெடுத்தால்... மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வீர்கள் என்பது உறுதி!

கொரக்கை தலத்தை விட்டு வரும்போது, 'சக்தி மிக்க வாசகர்கள் மனம் வைப்பீர்கள்; கொரக்கை ஸ்ரீவரதராஜர் கோயிலுக்கு சீக்கிரமே ஸ்ம்ப்ரோக்ஷணம் நடைபெறும்’ என வழியெல்லாம் நம்பிக்கைச் சொல் ஓடிக்கொண்டே இருந்தது, மனத்துள்!

படங்கள்: ரா.மூகாம்பிகை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism