மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஞானப் பொக்கிஷம் - 18

ஞானப் பொக்கிஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஞானப் பொக்கிஷம் ( பி.என்.பரசுராமன் )

அகத்தியர் குணபாடம்!பி.என்.பரசுராமன்

ணவு முதல் வீட்டு வாயிற்படி வரை, பல இடங்களிலும் உபயோகப்படுவது, மஞ்சள். ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்வதிலும் மஞ்சள் முக்கிய இடம் வகிக்கிறது. உடல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியமானது மஞ்சள்.

 கடந்த தலைமுறை- இன்றைய தலைமுறையில் சிலரிடம், மஞ்சளை அரைத்துக் குழைத்து, அந்தக் குழைசலை வீட்டு வாயிற்படியில் பூசும் பழக்கம் உள்ளது. அதன் மூலம் அவர்கள் ஆரோக்கியத்தை அறுவடை செய்தார்கள்.

வெளியில் போய்விட்டு வீட்டுக்குள் நுழையும்போது, கை, கால்களை நன்றாகச் சுத்தம் செய்துகொண்டு வீட்டுக்குள் நுழையவேண்டும். ஆனால், என்னதான் சுத்தம் செய்தாலும், கண்ட கண்ட இடங்களில் அலைவதால், பற்பல கிருமிகள் காலில் தொற்றிக்கொண்டு இருக்கும். அந்தக் கிருமிகளுடன் வீட்டுக்குள் நுழைந்தால், வீடு முழுவதும் கிருமிகள் பரவி, வீடே வியாதிகளின் வரவேற்பறையாகிவிடும்.

ஞானப் பொக்கிஷம் - 18

மஞ்சள் பூசிய வாயிற்படியின் வழியாக வீட்டின் உள்ளே நுழையும்போது, மஞ்சளின் ஆற்றலால், கிருமிகள் நாசமடைகின்றன. நோயைப் பரப்பும் கிருமிகள் தடுக்கப்பட்டு, வீட்டில் ஆரோக்கியம் வளர்கிறது.

மஞ்சள் தலைசிறந்த கிருமிநாசினி என்பதை உணர்ந்த முன்னோர்கள், அதன் காரணமாகத்தான் மஞ்சளை அரைத்துக் குழைத்து, வீட்டு வாயிற்படியில் பூசினார்கள். ஆரோக்கியமாக இருந்தார்கள்.

இன்றோ, நிறமே முக்கியம் என வாயிற்படிகளுக்கு மஞ்சள் பெயின்ட் அடித்துவிட்டு, மருத்துவர்களுக்குக் கப்பம் கட்டிக்கொண்டு வருகிறோம். ஆரோக்கியத்தைத் தொலைத்துவிட்டோம்.

மஞ்சளின் மகிமையை- மருத்துவ குணங்களை நமது முன்னோர்கள் மட்டுமல்ல; முன்னோர்களுக்கெல்லாம் முன்னோர்களில் ஒருவரான அகத்தியர் விரிவாகவே சொல்லி இருக்கிறார்.

மஞ்சளை உடலில் பூசிக் குளிப்பதன் மூலம் உடல் பொன்னிறம் பெறும்; கெட்ட வாடை நீங்கும்; வசீகரமான தோற்றம் உண்டாகும்; வாந்தி, வாய்வு, சூடு, திருஷ்டி தோஷம், தலைவலி, நீர் கோத்தல், மூக்கில் நீர்பாய்தல், வீக்கம், வண்டுகடி, புண் ஆகியவை நீங்கும்.

பொன்னிறமாம் மேனி புலானாற்றமும் போகும்
மன்னு புருட வசியமாம் - பின்னியெழும்
வாந்தி பித்த தோடமையம் வாதம் போந் தீபனமாங்
கூர்ந்த மஞ்சளின் கிழங்குக்கு!
(அகத்தியர் குண பாடம்)

தலைவலிநீ ரேற்றஞ் சளையாத மேகம்
உலைவு தரு பீநசத்தினூடே - வலி சுரப்பு
விஞ்சு கடி விடமும் வீனுவிரணங்களும் போம்
மஞ்சள் கிழங்குக்கு மால்!
(அகத்தியர் குண பாடம்)

மஞ்சட் குளிதனக்கு மாறாத்துர்க் கந்தமொடு
விஞ்சு முக சாட்டியமும் விட்டகலுந்- தொஞ்சலுறும்
ஐய மொழியு மடர் வியர்வுங் காணாது
வைய மதனில் வழுத்து!
(அகத்தியர் குண பாடம்)

மஞ்சளைப் பொடித்துப் புண்கள் மீது தூவினால், புண்கள் ஆறும்.

ஞானப் பொக்கிஷம் - 18

மஞ்சளைச் சாதத்துடன் சேர்த்து அரைத்து, கட்டிகளின் மீது வைத்துக் கட்டினால், கட்டிகள் விரைவாகப் பழுத்து உடையும்.

மஞ்சளைச் சுட்டு, அதன் புகையை முகர்ந்தால் நீர் கோத்தல் பிரச்னை நீங்கும்.

மஞ்சளையும் வேப்பிலையையும் சேர்த்து அரைத்து, அம்மைக் கொப்புளங்களின் மேல் பூசினால், கொப்புளங்கள் பழுத்து உடைந்து, விரைவில் ஆறிப்போகும்.

மஞ்சளுடன் ஆடாதோடை இலையைச் சேர்த்து, பசுவின் நீரை விட்டு அரைத்துப் பூசினால், சொறி சிரங்கு- நமைச்சல் ஆகியவை நீங்கும்.

மஞ்சள் விழுதுடன் சிறிதளவு சுண்ணாம்பு, கல்உப்பு ஆகியவற்றைச் சேர்த்து இளஞ்சூடாகச் சுடவைத்து, சுளுக்கு, அடிபட்ட புண் ஆகியவற்றின்மீது பூசினால் அவை நீங்கும்.

மஞ்சள் சாற்றைத் தடவினால், அட்டை முதலான விஷப் பூச்சிகளின் கடி, புதிய காயப் புண், புண்ணால் உண்டான வீக்கம் ஆகியவை நீங்கும்.

மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி ஆகியவை நீங்குவதோடு, குடலும் பலப்படும்.

மஞ்சளை அரைத்து நீரில் கலக்கி, அதில் வெள்ளைத் துணியை நனைத்துச் சாயமேற்ற வேண்டும். அவ்வாறு சாயமேற்றப்பட்ட ஆடையை அணிந்துகொள்வதால் வாத நீர்ச்சுருக்கு, மாறாத நமைச்சல், மலக்கட்டு, விஷக்காய்ச்சல், விடாத இருமல் ஆகியவை நீங்கும்.

வழிபாடு- விரத காலங்களில் மஞ்சள் ஆடை அணிவதற்கு இதுவே காரணம். இத்தகவலைக் கூறும் அகத்தியர் பாடல்...

நீர்க் கடுப்பு காசமொடு நீடு விடசுரமுந்
தீர்க்க நமைச்சல் வெப்புஞ் சேர்மலமும்
பார்க்குண் மிக
அஞ்சியே யேகு மஞ்சளாம் வத்திரம் புனைந்தால்
வஞ்சியே நன்றாய் வழுத்து!
(அகத்தியர் குண பாடம்)

மஞ்சள் நீரில், ஒரு சிறிய வெள்ளைத் துணியை நனைத்து, நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு, கண் நோயுள்ளவர்கள் அந்தத் துணியால் அவ்வப்போது கண்களைத் துடைத்து வந்தால், கண்சிவப்பு, கண் உறுத்தல், கண்ணில் நீர் கோத்தல், கண் வலி ஆகியவை நீங்கும்.

இவற்றையெல்லாம் உணர்ந்தே ஆன்மிகத்திலும் அன்றாட வாழ்வியலிலும் நமது முன்னோர்கள் மஞ்சளைச் சேர்த்தார்கள்.

- இன்னும் அள்ளுவோம்...