Published:Updated:

கேள்வி - பதில்

மந்திர தந்திரத்தால் தெய்வ சக்தியைக் கட்டிப்போட முடியுமா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

மந்திர தந்திரத்தால் தெய்வ சக்தியைக் கட்டிப்போட முடியுமா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
##~##

எங்கள் வீட்டு வளாகத்திலேயே சாஸ்தா சந்நிதி உள்ளது. அவர் எங்களின் குலதெய்வமும்கூட! ஆனால், அந்த தெய்வத்தின் சாந்நித்தியத்தை எவரோ கட்டிப்போட்டுவிட்டதாகச் சொல்கின்றனர். இது சாத்தியமா? சாத்தியம் எனில், கட்டவிழ்ப்பதற்கு மார்க்கம் என்ன?

 - எம்.எஸ்.பிரபு, கேரளா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெய்வ சாந்நித்தியத்தை முடக்கும் முயற்சியில் மனிதன் வெற்றி பெறுவது என்பது ஏற்புடையது அல்ல. நீர், நெருப்பு, காற்று ஆகியன கட்டுக்கடங்காமல் சீறி எழும்போது, நமது செயல்பாடு முடங்கிவிடுகிறது. இறைவனின் தொடர்பில் கிடைத்த அவற்றின் சீற்றத்தை நம்மால் தடுக்க இயலவில்லை!

குருவின் ஆணைக்கு சீடன் கட்டுப்படுவான். பிரம்மாஸ்திரத்துக்கு அனுமன் கட்டுப்பட்டார். பக்தனின் விருப்பத்துக்கு கடவுள் கட்டுப்படுவார். வாக்குறுதியைக் காப்பாற்ற தன்னையே கட்டுப்படுத்திக் கொள்வதும் உண்டு.

தொல்லையில் இருந்து சமுதாயத்தைக் காப்பாற்ற, அரக்கனைத் தனது பாதத்தால் அழுத்திக் கட்டுப்படுத்தினார் ஸ்ரீநடராஜர். ஸ்ரீராமன், தந்தையின் வாக்குக்குக் கட்டுப்பட்டார். அறம் வாட்டமுற்று அதர்மம் தலை தூக்கும்போது, தானாகவே தோன்றி அதர்மத்தைக் கட்டுப்படுத்துவார் பெருமாள்.

இப்படி, தீய சக்திகளைக் கட்டுப்படுத்தும் பெருமை புராணங்களில் விளக்கப்பட்டிருக்கும். ஆனால், நல்ல சக்திகளைக் கட்டுப் படுத்தி சமுதாயத்துக்குத் தீங்கிழைக்கும் செயலில் ஈடுபடுவது, ஈனமான செயல். அது வெற்றியை அளிக்காது.

தெய்வ சாந்நித்தியத்தை தவறான எண்ணத்தில் கட்டுப்படுத்த இயலாது. அப்படிக் கூறுவது, நம்மைத் திசை திருப்பும் செயல். கஸ்தூரியின் வாசனையைக் கட்டுப்படுத்த இயலாது (நஹி கஸ்தூரிகாமோத: சபதேனலிபாவ்யதே).

கேள்வி - பதில்

மந்திர சாஸ்திரமும் தந்திர சாஸ்திரமும் மன ரீதியான பிணியை அகற்றப் பயன்பட்டன. பண்டைய நாட்களில், மருந்து செயல்பட முடியாத அளவுக்கு முற்றிப்போன மனப்பிணிக்கு மாற்று வைத்திய முறையாக மந்திரமும் தந்திரமும் பயன்பட்டன. அலைபாயும் மனத்தைக் கட்டிப்போடும் முயற்சியில் வெற்றி பெற்றவர்களும் உண்டு. இங்கெல்லாம் நல்ல காரியங்களுக்காக கட்டுப்பாடு பயன்பட்டது.

சாந்நித்தியத்தை முடக்கி, வழிபடத் துடிக்கும் மக்களுக்கு இடையூறு செய்வதைக் குற்றமாகப் பார்க்கும் தர்மசாஸ்திரம். மட்டுமின்றி, இறை சக்தியை மனித சக்தியால் கட்டுப்படுத்த முடியாது. முள்ளை முள்ளால் எடுப்பதுபோல், சூட்டை சூட்டால் தணிப்பதுபோல் (உஷ்ணம் உஷ்ணேனசாம்யதி)... தீய சக்தியில் கட்டுண்ட மனத்தை இறை சக்தியால் கட்டிப்போட்டு, தீய சக்தியின் கட்டைத் தளர வைத்து, பிணியில் இருந்து ஒருவரை விடுவிப்பது உண்டு. மந்திரமும் தந்திரமும் இந்த வகையில்தான் மக்களுக்கு உதவியிருந்தன.

மந்திர- தந்திரத்தில் போதுமான அறிவு மக்களுக்கு இல்லாததால், நீங்கள் சொல்வது போன்ற விஷயங்களை நம்பவேண்டிய கட்டாயம் வந்துவிடுகிறது.

மரத்திலோ, மண்ணிலோ, சிலையிலோ தெய்வ சாந்நித்தியம் இல்லை; அது, நமது எண்ணத்தில் இருக்கிறது. அந்த சாந்நித்தியத்தை இறைவனின் பணிவிடைக்குப் பாங்காக, திருவுருவங்களில் மந்திரத்தால் வரவழைக்கிறோம். பணிவிடை முடிந்ததும் நமது எண்ணத்தில் திரும்பப் பெற்று விடுகிறோம். இப்போது, மனத்தில் பதிந்திருக்கும் தெய்வ சாந்நித்தியத்தை அவன் கட்டுப்படுத்தவில்லை.

இறையுருவ சாந்நித்தியத்தைக் கட்டுப்படுத்திய தாகச் சொல்கிறீர்கள். ஆனால், மீண்டும் நம் மனம் இறையுருவில் சாந்நித்தியம் இருப்பதாக நினைத் தால், திருவுருவத்தில் சாந்நித்தியம் வந்து விடும்; கட்டுப்படுத்தும் முயற்சி பயனற்றுவிடும்.

தனக்குப் புலப்படாததை, 'இல்லை’ என்று வரையறுக்கும் மனித சிந்தனையும் உண்டு. கிணற்றுத் தவளைக்கு உலகம் மிகச் சிறியது. சிந்தனை வளம் குன்றியவர்கள் வேறு வழியின்றிப் பிறர் சொன்னதை ஏற்றுவிடுவார்கள். பிறர் சொன்னதை ஏற்று, செயலில் சுணக்கமுற்று தவிப்பவர்கள் ஏராளம். தெய்வ சாந்நித்தியத்தை எவராலும் கட்டுப்படுத்த இயலாது. அதற்குப் பரிகாரம் தேடுவது, பிறக்காத குழந்தைக்குப் பெயர் சூட்டுவதுபோல் ஆகிவிடும். மனோதிடத்துடன் செயலில் இறங்குங்கள். மனத்தில் குடியேறிய தெய்வ சாந்நித்தியம் தங்களுக்குத் துணை புரியும்.

கேள்வி - பதில்

கோயில்களில் பவித்ரோத்ஸவம் எதற்காக? வருடம் முழுவதும் ஆலய வழிபாட்டு நடைமுறைகளில் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படும் குறைகள் பவித்ரோத்ஸவத்தில் நீங்கும் என்கிறார்களே... இதுகுறித்து விளக்குங்களேன்.

- த.சாந்தி, திருவாரூர்

பவித்ரோத்ஸவத்தை குறை தீர்க்கும் பரிகாரமாகப் பார்க்கக் கூடாது. குறை இல்லை என்பது உறுதியானால், பவித்ரோத்ஸவம் மறைந்துவிடும்.

ரதோத்ஸவம் நடந்தேறிய பிறகு, குறைகளை அகற்ற 'ஸம்ப்ரோக்ஷணம்’ நடைபெறும். ஆலயத்தில் அசுத்தி ஏற்பட்டதாக மனம் எண்ணினால், புண்யாஹவாசனம் நடைபெறும். ஒவ்வொரு பூஜையிலும் வேள்வியிலும் குறை தீர்க்க உடனுக்குடன் பரிகாரம் அரங்கேறும்.

'எவருடைய நினைவுடன் அல்லது அவரது பெயரை உச்சரிப்பதன் மூலம் கொடை, ஜபம், வேள்வி முதலான செயல்பாடுகளில் தென்படும் குறைகள் அறவே அகன்றுவிடுமோ, அந்த அழிவற்றவனை வணங்குகிறேன்’ என்று குறைகளை நிறைவு செய்வது உண்டு (யஸ்ய ஸ்ம்ருத்யாச நாமோக்த்யா...)

சடங்கு குறையோடு முற்றுப்பெற எந்த சாஸ்திரமும் இடம் தராது. உடனுக்குடன் குறைதீர்க்கும் பரிகாரமானது பூஜையிலும், வேள்வியிலும் சேர்ந்து இருக்கும். அதுவும் பூஜையின்- வேள்வியின் ஓர் அங்கமாக மாறிவிடும். ஆக, குறை தீர்ப்பதற்கென்று தனியே ஒரு சடங்கை அரங்கேற்றும் சூழலை உருவாக்காமல் செய்துவிடும் ஸனாதனம்.

அதைப் பின்பற்றி உருவெடுத்த ஆகமமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆகமம் எந்த முறையை பரிந்துரைத்தாலும், அதன் உயிரோட்டத்தை உறுதி செய்வதற்கு, ஸனாதனத்தின் இணைப்பு அவசியம். இறையுருவத்தில் பரம்பொருளைக் குடியிருத்துவதற்கு, வேதத்துடன் கலந்த ஆகம முறைதான் இருக்கும். அதுபோன்று, குறைதீர்க்கும் படலத்திலும் வேதம் இணைந்து செயல்படும்.

செய்யும் சடங்கில் மந்திர லோபம், தந்திர லோபம், த்ரவ்ய லோபம், ஊனம், தேவை இல்லாத விரிவாக்கம், விபரீத செயல்பாடு, மறதி, விதிமீறல் போன்றவை அகல, வேள்வியில் பரிகாரமாக வ்யாஹ்ருதி ஹோமம் செய்வதுண்டு. ஆகையால், பரிகாரமாக மட்டும் பார்க்காமல், உத்ஸவமாகப் பார்க்க வேண்டும்.  

பவித்ரம் என்ற சொல்லுக்குத் தூய்மை என்று பொருள். இருந்தாலும், தூய்மையை மட்டுமே செயல் படுத்தும்போது, அது உத்ஸவம் ஆகாது. உத்ஸவம் பரம்பொருளுக்காக அல்ல; அது நமக்காகவே உருப் பெற்றது. குறை பரம்பொருளுக்கு இல்லை; நமக்குத் தான். குறை தீர்ப்பதும் நமக்காகவே!

இறையுருவ சாந்நித்தியம் வளர்ந்தோங்கி, நம் மனத்தில் முழுமையாகப் பரவி, பிறப்பின் இலக்கை எட்டுவதற்கு உத்ஸவம் உதவும். இறைவனின் சிந்தனை அகலாமல் இருக்க, இறையுருவத்துக்கு பணிவிடை செய்வதன் வாயிலாக இறை சைதன்யத்தை வளர்க்கிறோம். அது, நம் மனத்தில் குடியேறி, நம்மைக் கரையேற்றும். அத்தகைய உத்ஸவங்களில் பவித்ரோத்ஸவமும் ஒன்று. ஒட்டிக்கொண்டிருக்கும் இறை சாந்நித்தியம் விடுபடாமல் இருக்க,

பவித்ரோத்ஸவம் உதவி செய்யும். ஆண்டவனின் நினைவு அறுபடாமல் இருக்க இந்த மாதிரியான உத்ஸவங்கள் தேவைப்படும். பக்தி வழிகளில் அர்ச்சனமும் வந்தனமும் அடங்கும். அர்ச்சகரை அர்ச்சனை செய்யச் சொல்லி, நாம் வணங்குவது உண்டு. அதுதான் உத்ஸவத்தின் பெருமை. அன்றாடம் பக்தகோடிகள் ஆலய வலம் வந்து அர்ச்சனை செய்து வணங்க, உத்ஸவங்கள் வழிவகுக்கின்றன. அதில் ஒன்று பவித்ரோத்ஸவம்.

திருமணம் செய்துகொள்ளாதவர்கள், 60-வது வயதில் சாந்தி செய்துகொள்ளலாமா?

- ஆர்.நாகராஜன், சென்னை-61

60 வயது நிரம்பிய நாளில் செய்ய வேண்டியதுதான் சாந்தி. திருமணம் நடந்திருந்தா லும் நடக்காமல் இருந்தாலும் 60 வயது நிரம்பும். திருமணம் செய்து கொள்ளாதவனும் சுகாதாரத் துடன் வாழ வேண்டும். 60 வயது வரை கால தேவதைகளின் ஒத்துழைப்பில் வளர்ந்து ஓங்கிச் செழிப்புற்றான். 60-க்குப் பிறகு உடலுறுப்புகள் தகுதி இழக்கும்போது, அந்த இழப்பை ஈடுகட்டும் அளவுக்கு அருள்பாலிக்க, சிறப்பு வழிபாட்டால் கால தேவதைகளை மகிழ்விப்பதே சாந்தி.

கேள்வி - பதில்

திருமணம் ஆனவர்களிடமும் அவனுக்கு  மட்டும் தான் 60 வயது நிரம்பியிருக்கும்; மனைவிக்கு அநேகமாக பூர்த்தியாகி இருக்காது. ஆக, அப்போதும் தனியாகத்தான் சாந்தி செயல்படுத்தப் படுகிறது. முதுமை எட்டிப்பார்க்கும் வேளையில், பலவித பிணிகளைச் சந்திக்கிறது இன்றைய சமுதாயம். மருத்துவம் ஒத்துழைத்தா லும் பலருக்குப் போதுமான நிம்மதி கிடைப்பதில்லை. வைத்திய முறையில் தெய்வத்திடம் முறையிடுவதும் உண்டு. அதற்கு, தெய்வ வ்யபாச்ரய சிகிச்சை என்று பெயர் வைத்திருக்கின்றனர். நமது காலத்தைப் பறிப்பவனிடம் மண்டியிட்டு வேண்டினால், காலத்தை நீட்டித் தருவான். உயிர் இருந்தால், உடலை ரிப்பேர் செய்து செயல்பட வைக்கவே மருத்துவர்களால் இயலும். அவர்களால், ஒருவருக்கு உயிர் அளிக்க இயலாது என்று ஆயுர்வேதம் எச்சரிக்கும் (நவைத்ய: ப்ரபுராயுஷ:).

காலதேவனின் வழிபாட்டைக் கொண்டாட்டமாக எண்ணி வழிபடும் எண்ணம் சிலரிடம் உண்டு. அவசியமான சாந்தியை அலட்சியப்படுத்தும் போக்கு துரதிர்ஷ்டமானது. 'என்னை அணுகினால், காலத்தை நீட்டித் தருவேன்’ என்ற எண்ணத்தோடு தேவதைகள் இருக்கும்போது, அதை அலட்சியப்படுத்துவது நமக்கு இழப்பு. பூஜை, வழிபாடுகளால் மனத்தை திசை திருப்பி, நல்ல சிந்தனையில் ஆரோக்கியத்தை தக்கவைக்கும் தருணத்தை, மக்கள் மனம் ஏனோ அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தவறான தகவல்கள்- மனத்தை ஈர்க்கும் விளக்கங்களால் அலைக்கழிக்கப்படுகிறார்கள். கடவுள்தான் நல்லெண்ணத்தை வரவழைத்து அருள்புரிய வேண்டும்.

பஞ்சாங்கத்தில், சில நாட்களில் அதிதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று எந்த திதி- சிராத்தமும் கிடையாது என்கிறார்கள். பஞ்சாங்கத்தில் 'இஷ்டி’ என்ற குறிப்பும் உண்டு. அதிதி, இஷ்டி ஆகியவை குறித்து விளக்குங்களேன்.

- வி.கணேசன், கோவை-4

இன்று பிற்பகல் 1:00 மணி வரை பஞ்சமி திதி; நாளை காலை 1:00 மணி வரை சஷ்டி இருக்கிறது; நாளை மறுநாள் 4:00 மணி வரை சப்தமி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

பிற்பகலில் திதி இருக்கும்போது, அன்று சிராத்த திதி வரும். 'பிற்பகலில் சஷ்டி’ முதல் நாள் இருப்பதால், அன்று சஷ்டி. அடுத்த நாள் சப்தமி இருந்தாலும், அதற்கும் அடுத்த நாள் சப்தமி பிற்பகலில் அதிகமாக இருந்தால், அன்றைய தினம்தான் சப்தமி. ஆக, சஷ்டிக்கு அடுத்த நாள் சப்தமி வராமல் மூன்றாம் நாள் சப்தமி வரும்போது, இடையில் ஒருநாள் எந்த திதியும் இல்லாமல் இருக்கும். அதற்கு அதிதி என்று போடுவார்கள்.

'பிற்பகலில் அதிக நேரம் எந்தத் திதி இருக்குமோ, அதுவே அன்றைய திதி’ என்ற நியதி, இடைப்பட்ட நாளில் திதி இல்லாமல் செய்துவிடும்.

வேதம் நேரடியாக வேள்விகளைப் பரிந்துரைக்கும். அந்தப் பகுதிக்கு 'ச்ரௌதம்’ என்ற சிறப்புப் பெயர் உண்டு. இஷ்டி என்றால் வேள்வி. அதுவும் சிறப்புப் பெயரில் அடங்கும். பிரதமை அன்று இஷ்டி வரும். பிரதமை இஷ்டிக்குப் போதுமான அளவு இருந்தால், அன்று இஷ்டி இருக்கும்.

பண்டைய நாட்களில் வேள்விகள் நடைமுறைப் படுத்தப்பட்டன. காலப்போக்கில் அவை மறைந்துவிட்டன. தற்போது அவை மக்களின் சிந்தனையை விட்டும் அகன்றுவிட்டன. அதிதி, இஷ்டி - ஆகியவற்றை பற்றிய விளக்கங்களை அறிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். அவற்றை நடைமுறைப்படுத்தும் சிந்தனை வராது. அருங்காட்சி யகத்தில் பல பொருள்களைக் கண்டுகளிப்போம். அதன் தகவலை அறிந்து மகிழ்வோம். அந்த வரிசையில் நமது கடமைகளின் தகவலையும் சேர்ப்பது வேதனையளிக்கிறது.

- பதில்கள் தொடரும்...

கேள்வி - பதில்