மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சித்தம்.. சிவம்... சாகசம்! - 7

இந்திரா செளந்தர்ராஜன்

##~##

'சித்திக்கு லட்சணந்தான் பிரண்டைமுந்தி
செய்த பின்பு என் மக்காள் கேளுகேளு...
மத்திக்கு பாஷாண மெல்லாந்தின்னு
மலஜலமெலாம் பொன்னாகும் வயிரம் தேகம்
மொத்திக்கு மூன்றுடம்பில் தேகம் தங்கம்
உத்தமனே செம்பாகு மோடுந்தூரம்
சுத்திக்கு சூதமொடு கந்தகத்தை உண்ணு
அம்மம்மா தேகமெல்லாங் களங்குமாச்சே!’

- சித்தர் பாடல்

ன்னன் இரணியவர்மனிடம் ரசவாதம் குறித்துப் பேசத் தொடங்கிய போகர், 'செம்பையும் இரும்பையும் தங்கமாக்கும் ரசவாதம் ஓர் அற்புதம்! அதைவிட மேலானது நவபாஷாணமே!’ என்று கூறத் தொடங்க, இரணியவர்மன் அதிசயித்துப் போனான்.

'பொன் பெரிதல்ல, விஷம் பெரிது என்கிறாரே, எப்படி?’ என்ற கேள்வியும் அவனுக்குள் எழும்பியது. அவனுக்குள்தான் எழும்புமா என்ன? நமக்குள்ளும்தான்..!

அதுமட்டுமா? நவபாஷாணம் என்றதும், பழநி முருகனின் திருஉருவச்சிலை நம் மனக்கண்களில் முந்தும். முருகன் என்றால் அழகன் என்றே பொருள். அந்த அழகன் இங்கே விஷமாக இருப்பது எத்தனை முரண்பாடு?

முரண்பாடு என்று நமக்குத் தோன்றும் இந்த முருகனின் பின்னாலே, நம் சிறு மூளை கொண்டு உணரப்படமுடியாத சூட்சுமாதி சூட்சுமங்கள் பல உள்ளன. அவற்றில் இதுவரை தெரியவந்திருப்பது கொஞ்சம்தான்; தெரியாமல் ஒளிந்திருப்பது அநேகம்!

இந்த முருகனையும், அவரது திருமேனிக் குள் கலந்துகிடக்கும் நவ பாஷாணங்களைப் பற்றியெல்லாம் அறிந்துகொள்வதற்கு முன், இதற்கெல்லாம் கர்த்தாவான போக முனிவர் பற்றித் தெரிந்துகொள்வது மிக அவசியம்.

சித்தம்.. சிவம்... சாகசம்! - 7

போகர்!

போகங்களை எல்லாம் அறுத்து எறிந்தவர் எனும் பொருளினை இவரது பெயர்மூலம் நாம் கொள்ள நேர்ந்தாலும், அவர் ஒரு சீன தேசத்தவர் என்ற கருத்தும் நிலவுகிறது. அதற்கு ஆதாரமாக, அகத்தியர் பன்னிரண் டாயிரம் எனும் நூலில், ஒரு பாடலும் காணக் கிடைக்கிறது.

'சித்தான சித்துமுனி போகநாதன்
சிறந்த பதினெண் பேரில் உயர்ந்த சீலன்
கத்தனென்னும் காலாங்கி நாதர் சீடன்
கனமான சீனபதிக்குகந்த பாலன்’

- எனும் அந்தப் பாடல் வரிகள், அந்தக் கருத்தை நம்பச் சொல்கின்றன. கூடவே, அநேக சிந்தனைகளும் எழுகின்றன. அந்த நாளிலேயே பாரத தேசம் போலவே சீன தேசமும் 'சீனா’ என்று, இன்று நாம் அழைக்கும் பெயரிலேயே இருந்து, அங்கே நாம் போய் வரவும் இடம் இருந்திருக்கிறது என்பது ஒரு சிந்தனை.

சீன தேசத்தில் இவர் பெயர் 'போ-ஹீ-யங்’ என்பதாகத் தெரியவருகிறது. கூடவே, பாரத மண்ணில் ஒரு சித்தனாய் அலைந்து திரிந்த போகர், தன்முனைப்பால் பல அரிய வித்தை களைக் கற்றார். அதில் ஒன்றான, ஆகாய மார்க்கமாகப் பறவைபோல் பறந்து செல்லும் வித்தை மூலம் சீனா சென்று, அங்கு 'போ-ஹீ-யங்’ எனப்படும் ஒரு ஞானியின் உடம்புக்குள் பரகாயப் பிரவேசமாகக் கூடு விட்டுக் கூடு புகுந்து, அந்த மண்ணின் மூலிகை ரகசியங்களை எல்லாம் அறிந்து வந்தார் என்றும் ஒரு கதை நிலவுகிறது.

இதில் எது உண்மை, எது பொய் என்ற கேள்விக்கே போகாமல், போகரின் சாகசங் களை நாம் வியக்க முற்படுவதே உத்தமம். ஆதாரமற்ற கட்டுக் கதைகளில் வியக்க என்ன இருக்க முடியும் என்ற கேள்விக்குள் புகுந்தால், நூற்றுக்குத் தொண்ணூறு சித்தர் பெருமக்களுமே பொய்யாகிப் போவர். அதேநேரம், அவர்களின் பாடல்கள் மட்டும் எப்படி வந்தன என்கிற கேள்வி மிஞ்சி நிற்கும். இதனால்தான் 'நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காதே!’ என்றனர். அது நம்மைத் திசை திருப்பி, நமக்குக் கிடைக்க வேண்டியதைக் கிடைக்கவிடாமல் செய்துவிடும்.

பொதுவாக, எந்த ஒரு சித்தருடைய பெயரும் அவரது இயற்பெயராகவே முதலில் இல்லை. கருவூரார், பாம்பாட்டி, கொங்கணர், தேரையர், பட்டினத்தார், புலிப்பாணி, மச்சமுனி, ரோமரிஷி, பிண்ணாக்கீசர், பிராந்தர், சிவவாக்கியர், சட்டை முனி, திருமூலர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அவ்வளவு பெயர்களும் காரணப் பெயர்களே! அடுத்து, அவர்களின் தாய்- தந்தையர் பற்றியோ, குலம்- கோத்திரம் பற்றியோ, மனைவி- மக்கள் பற்றியோ சரித்திரச் சான்றுகள்போல கல்வெட்டு, பட்டயம் என்று எதுவும் இல்லை. ஒரு சிலரது பின்புலம் தெரிகிறது; அதில்கூட ஒரு தெளிவற்ற தன்மையே காணப்படுகிறது.

ஆனால், இவர்களது பாடல்கள் கால வெள்ளத் தால் அடித்துச் செல்லப்படாமல், ஓரளவு நம் வசப்பட்டுள்ளன. அதுவும் ஓரளவுக்குத்தான். அந்தப் பாடல்களைக்கூட இவர்களே எழுதினார் களா அல்லது இவர்கள் சொல்லச்சொல்ல இவர் களின் சீடர்கள் எழுதினார் களா என்று ஆராய வேண்டி உள்ளது.

மக்கள் சமுதாயத்துக்குச் சேதி சொல்ல வேண்டும், அவர்களுக்கு நல்வழி காட்டவேண்டும் என்றெல் லாம் எண்ணி அவர்கள் செயல்பட்டது போலவே தெரியவில்லை. ஒரு சித்த புருஷன் அப்படிச் செயல்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஒரு சித்தன் எப்படி உருவாகிறான் என்று சிந்தித் தால், இந்த விடையே நமக்குப் புலனாகும்.

சித்தம்.. சிவம்... சாகசம்! - 7

மண்ணில் பிறந்துவிட்டோம்; உடம்பு என்று ஒன்று இருந்து பசிக்கிறது; அதற்காக உண்ண வேண்டியுள்ளது; அந்த உணவுக்காக உழைக்க வேண்டியுள்ளது; கூடவே துணிமணி, வீடு- வாசல் எனப் பல தேவைகள்; மனைவி- மக்கள் என உறவுகள்; இவை அனைத்துக்குமாகவும், இவர்கள் அனைவருக்குமாகவும் உழைக்க வேண்டியுள்ளது; இந்த வினைப்பாடுகளுக்குள் நிறையவே ஏற்றத் தாழ்வுகள். பெரியவன்- சிறியவன், ஏழை- பணக் காரன், வீரன்- கோழை, நல்லவன்- கெட்டவன் எனப் பலப்பல நிலைப்பாடுகள்.

'இதெல்லாம் எதற்கு? இவ்வளவு பெரிய உலகில் நான் வந்து பிறக்க எது காரணம்? நான் யார்? எனக்கு என் பெற்றோர் இட்ட பெயர்தான் நானா? இல்லை, இந்த உடல்தான் நானா? இதனுள் மனம் எங்கே இருக்கிறது? அது ஏன் அச்சத்திலும் மிச்சத்திலும் அவ்வப்போது சிக்குகிறது? சாப்பிட்டால் பசி அடங்குகிறது; திரும்பப் பசித்திடாமல் இருப்பதில்லையே! பசியாது இருக்க வழியே இல்லையா? நான் விரும்பும் விதமாக வாழ இயலாதபடி எதிரே எவ்வளவோ விஷயங்கள்... இவற்றை வெற்றி கொள்வது எப்படி?’

- இப்படிப் பல கேள்விகள் எழும்பிய நிலையில், அவற்றுக்காக ஓர் உறுதியோடு விடை தேடி, அப்படித் தேடியதால், தானறிந்த விடையால் தன்னை அறிந்தவனே- அதனால் சித்தம் தெளிந்தவனே சித்தன்.

இந்தத் தெளிவுக்குள் எவ்வளவோ அடக்கம். அதில் ஒன்று, 'யாரும் யாருக்கும் எதையும் கொடுத்துவிட முடியாது’ என்பதும் ஆகும். ஒருவன் ஏழையாக, ஒருவன் பணக்காரனாக... அறிவாளியாக, அறிஞனாக, அழகாக, ஊனமாக என்று இருப்பதன் பின்னாலே, அநேக கர்ம காரணங்கள் இருக்கின்றன. வினைப்பாடுகளே வழி நடத்துகின்றன. அந்த வினைப்பாட்டுக்குள் இடம் இருந்தால் மட்டுமே, ஒரு சித்தனோ முனிவனோ ஒருவருக்கு உதவ முடியும். உதவ நேருகிறது என்றாலே, கடன்பட்டிருக்கிறோம் என்றாகிவிடுகிறது. யாருக்கு அப்படிக் கடன் பட்டிருக்கிறோமோ, அவரை காலமும் உரிய நேரத்தில் கண்ணில் காட்டும். அவரும் கேட்பார். அவருக்குக் கொடுத்துவிட வேண்டியதுதான். அது, தான் கொடுத்ததாக ஆகாது; அவருடையதை அவர் எடுத்துக்கொண்டதாகவே பொருள்!

இந்தத் தெளிவுதான் சித்தர்களை மனித சமுதாயத்தை விட்டு ஒதுங்க வைத்தது. காடு, மலை, குகை என்று போகச் செய்து வாழ்வைக் கழிக்க வைத்தது. அடுத்து... இது மாயா வாழ்வு; எச்சிலும் மலமும் எப்போதும் இருக்கும் வாழ்வு; காமமும் குரோதமும் உடம்போடு பசைபோட்டு ஒட்டிக்கொண்ட வாழ்வு.

ஒரு குருட்டுப் பறவையோ, குருட்டு ஆடோ, மாடோ இரை தேட வக்கற்றுப் போய் இறந்து போகும். ஆனால், மனிதன் குருடாகப் பிறந்தா லும், பேச்சு மொழி எனும் சத்தத்தால் வாழ்ந்து விட முடியும். ஒலி மனிதனுக்குக் கிடைத்த பரிசு. அதையும் மேம்படுத்தி, அதில் ஏழு சுரங்களை இனம் பிரித்து, எழுத்து எனும் மொழியின் உறைவிடத்தைக் கண்டறிந்து, மனிதன் மேலா னவனாக இருக்கிறான். இதெல்லாம் இவனுக்கு அளிக்கப்பட்ட நோக்கம்... இவன் தன்னையறிந்து, இந்த மாயா உலகில் இருந்து விடுபட்டு, முக்தி அடையவேண்டும் என்பதற்காகவே!

ஆனால், அதற்கு முயலாமல் சிற்றின்பங் களை அனுபவித்து வாழ்வதே வாழ்க்கை என்று, அவன் உலகின் நிலையற்ற இன் பங்களில் ஆழ்ந்துவிடுகிறான். அப்படி அமிழ்வதாலேயே அவனது கர்ம வினைப் பாடும் மிகுதியாகி, பிறப்பதும்- இறப்பதும், பின்பு திரும்பப் பிறப்பதும் என்றே அவன் வாழ்நாள் செல்கிறது.

இதில் எவராலும் எப்போதும் இன்பத்தி லேயே இருக்க முடிவதில்லை. இளமையை கைக்கொள்ள முடிவதில்லை. நோய் நொடியை வெல்லவும் வழிவகை தெரிய வில்லை. உரிமையாக 'என் உடம்பு’ என்கி றோம். ஆனால், நம் உடம்பில் ஒரு முடி எப்போது நரைக்கும் என்று நமக்குத் தெரியவில்லை. அதை நரைக்கவிடாமல் செய்யவும் தெரியவில்லை. மொத்தத்தில், நாமே நம் வசமில்லை. எதன் வசம் இருக் கிறோம் என்பதும் தெரியவில்லை. இதுவே மனித வாழ்வு! இதில் உடம்பையும் மனத்தையும், பின்பு காலத்தையும் வென்று வாழ எவனால் முடிகிறதோ, அவனே சித்தன். போகரும் அவர்களில் ஒருவர்.

ஆனால், எடுத்த எடுப்பிலேயே அவர் முழுமையான சித்தனாக ஆகிவிடவில்லை. சித்தத்தின் ஆரம்ப நிலையைச் சுலபமாக அடைந்திட, அவரது கர்மத்தில் இடம் இருந்தது. பின், அடுத்தடுத்த நிலைப்பாடுகள் அவருக்கும் பெரும் அனுபவத்தாலேயே சாத்தியமாயிற்று. அவரது அனுபவங்கள் அலாதியானவை. சித்த புருஷர்களிலேயே ரசமான அனுபவங்களுக்குச் சொந்தக்காரர் என்று போகரைக் கூறலாம்.

சித்தத்தின் ஆரம்ப நிலையில், இவருக்கு அஷ்டமா சித்து வசமாகிவிட்டது. அதாவது, அணிமா (அணு போன்று சிறுத்தல்), மஹிமா (மலை போல் பெருத்தல்), கரிமா (கனத்தல்), இலஹிமா (லேசாதல்), வசித்வம் (ஈர்த்தல்), பரகாயம் (கூடு மாறல்), காரிய ஸித்தி (விரும்பியதை அடைதல்), ஈசத்வம் (இறைநிலை எட்டல்) ஆகியவையே அஷ்டமா ஸித்தியாகும்.

மானுட வாழ்வில், ஒளி- ஒலியிலான வாழ்க்கைப் போக்கில் கர்ம வினைப்பாட்டுக்கு நடுவில், இந்தச் ஸித்துகள் மிகப் பெரியவை! இதனால், மாயா வாழ்வை நம் விருப்பம்போல் அனுபவிக்கலாம். ஆனால், இதை அறிந்து, இதைக் கடந்துவிட வேண்டும். இதிலேயே லயித்துவிடக் கூடாது. இதில் லயித்தால், ஒருகட்டத்தில் இது கைவிட்டுப் போய், இதை அறிந்திருந்த சித்தனும் பெரும் சாபத்துக்கும் பாபத்துக்கும் ஆளாகும்படி ஆகிவிடும். இந்தத் தவறு பல சித்தர்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அஷ்டமா ஸித்திகளை தன் பொருட்டுத் துளியும் பயன்படுத்திக்கொள்ளாதவனே அசலான சித்தன்.

உதாரணமாக, பஞ்சணையில் படுத்து உறங்க வேண்டும் என்றால், காரிய ஸித்தியால் நொடியில் இதை அடைந்துவிடலாம். எதிரி தாக்க வந்தால், அணிமா ஸித்தியால் அணுபோல் சிறிதாகி, எதிரியின் கண்களிலேயே படாமல் தப்பித்து விடலாம். நம்மைத் தூக்கிக் கடலில் போட்டால், இலஹிமா ஸித்தியால் மூழ்கிவிடாமல் மிதக்கலாம். இப்படி மிதந்துதான் கரை சேர்ந்தார் திருநாவுக்கரசர். மஹிமாவால் விசுவரூபம் எடுத்தார் அனுமான்.

போகரும் தொடக்க காலத்தில் இந்தச் ஸித்திகளைப் பெரிதாகக் கருதி, இதை அறிந்துள்ள தன்னையும் பெரிதாகக் கருதிக்கொண்டு, இந்த உலகைக் காக்க வேண்டியது தன் கடமை என்று எண்ணி, தானறிந்த யோகக் கலைகளை எல்லோருக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கத் தொடங்கிவிட்டார். குறிப்பாக, மருத்துவக் கலைக்குள் புகுந்து, இறவாமைக்கு என்ன வழி என்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

இவரது சீடர்களில் ஒருவன், வனத்தில் மூலிகை சேகரிக்கும்போது, பாம்பு கடித்து இறந்துபோனான். நீலம் பாரித்த அவன் உடம்பைக் கண்ட போகருக்கு, அவனை எப்படியாவது உயிர்ப்பித்துவிட வேண்டும் என்கிற எண்ணம் ஒரு வெறியாகவே ஏற்பட்டது.

'அவன் கர்மம், அவன் போனான்’ என்று எண்ணாமல், 'என் சீடனுக்கு எப்படி மரணம் நேரிடலாம்?’ என்ற ஆங்காரம், இப்படி ஒரு வெறியை அவருக்குள் உருவாக்கியது. அதாவது, சித்த நிலையை எட்டியவனையே உலக மாயை விடவில்லை. அந்தச் சீடனை உயிர்ப்பிக்க விரும்பிய அவர், ஆகாய மார்க்கமாக, தானறிந்த பறக்கும் வித்தையால் இமயமலை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி விட்டார். அங்கே...?!

- சிலிர்ப்போம்...