Published:Updated:

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

அட்சய பாத்திரத்தில் மிஞ்சிய அன்னம்!டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

அட்சய பாத்திரத்தில் மிஞ்சிய அன்னம்!டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

Published:Updated:
##~##

ள்ள அள்ள குறையாமல் அன்னம் சுரக்கும் அட்சயப் பாத்திரம் உங்களுக்குத் தெரியும். பஞ்ச பாண்டவர்களிடம் அந்த அட்சயப் பாத்திரம் இருந்தும், துர்வாசருக்காக அன்னம் வரவழைக்க முடியாமல் அவர்கள் திணறிய கதை உங்களுக்குத் தெரியுமா?

 மாயச் சூதில் வெற்றிபெற்ற கௌரவர்கள் விதித்த நிபந்தனையின்படி நாடு, நகரம் முழுவதையும் துறந்து, பாண்டவர்களும், திரௌபதியும் வனவாசம் மேற்கொண்டனர். தர்மம் முன்னே செல்ல, தர்மத்தை நிலைநாட்ட அவதாரம் எடுத்த அவதார புருஷன் ஸ்ரீகிருஷ்ணன் பின்னே சென்றான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாட்டின் எல்லையைக் கடந்து கானகத்தை அடைந்த பாண்டவர்கள், முதன்முதலில் தங்கள் வயிற்றுப்பசியை உணர்ந்த போது, அவர்கள் எதிரே உணவுடன் நின்றான் பகவான் கிருஷ்ணன். அவன், நடுக்காட்டிலும் தங்கள் காலடிகளைத் தொடர்ந்து வந்து காப்பாற்றுகிறான் என்பதை உணர்ந்த யுதிஷ்டிரன் நன்றிப் பெருக்குடன் கண்ணீர் மல்கினான். வன வாழ்க்கையில் அவர்கள் வயிற்றுப்பசி போக்கும் மார்க்கத்தை எடுத்துச் சொன்னான் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். அள்ள அள்ள குறையாத அட்சயப் பாத்திரத்தை எப்படி பெறுவது என்பது கண்ணனுக்கு தெரியும். அதனால், சூரியபகவானை உபாசனை செய்து, தட்டாமல் அமுதளிக்கும் அட்சயப் பாத்திரத்தை அவரிடமிருந்து பெறும் ஓர் அரிய மந்திரத்தை திரௌபதிக்கும், பாண்டவர்களுக்கும்

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

உபதேசித்தான்.

ராமாயணத்தில், யுத்தத்துக்கு முன்பு பகவான் ஸ்ரீராமனுக்கு சூரிய உபாசனை செய்யும் ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை உபதேசித்தார் அகத்திய முனிவர். கிருஷ்ணாவதாரத்தில் சூரிய பகவானின் பெருமையை எடுத்துச்சொல்லி சூரிய மந்திரத்தை பாண்டவர்களுக்கு உபதேசித்தார் ஸ்ரீகிருஷ்ணன்.

பாண்டவர்கள் தீவிரமான சூரிய உபாசனை செய்தார்கள். அதன் பலனாக சூரியதேவன் தோன்றி அட்சயப் பாத்திரத்தை அளித்தான். அட்சயப் பாத்திரத்தை அன்னத்தாலோ, வேறு உணவு பதார்த்தங்களாலோ நிரப்பினால், அள்ள அள்ளக் குறையாமல் அனைவருக்கும் அது அமுது தரும். ஆனால், ஒருவேளை உணவருந்தியபின் எஞ்சியதை சூர்யார்ப்பணம் செய்து, அட்சயப் பாத்திரத்தைக் கழுவிவைத்துவிட்டால், மறுநாள் சூரியோதயத்துக்கு பிறகுதான் அது மீண்டும் அமுதம் தரும். இந்த நியதிகளை விளக்கிவிட்டு மறைந்தான் சூரிய பகவான்.

சூரியனின் புத்திரன் கர்ணன். அவனோ கௌரவர்கள் பக்கம். சூரியனோ தன் புதல்வனுக்கு எதிரிகளான பாண்டவர்களுக்கு பசி போக்க அருள்புரிந்தான். அதற்கு காரணம்... உயர்வு- தாழ்வு பாராமல், நல்லவர்- கெட்டவர் என்ற பாகுபாடின்றி, தன் ஒளியால் இருளைப் போக்கி இரட்சிக்கும் தர்மச்சுடர் அவன் என்பதே!

அட்சயப் பாத்திரம், பாண்டவர்களின் வனவாசத்தில் அவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். இதனை அறியாத துரியோதனன், பாண்டவர்கள் வனத்தில் உணவின்றி உயிர்நீத்து விடுவார்கள் என்று கனவு கண்டான்.

ஒருமுறை துர்வாச மகரிஷி துரியோதனன் அவைக்கு வந்தார். அவருக்கு அறுசுவை உணவளித்து, மாலை மரியாதைகள் செய்து, அவர் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமானான் துரியோதனன். அப்போது துர்வாசர், துரியோதனனிடம் 'என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார்.

சந்தர்ப்பத்தை செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்ட துரியோதனன், 'தாங்கள் என் இல்லம் வந்து அதிதியாக இருந்து ஆசீர்வதித்தைப் போல, காட்டிலுள்ள எனது சகோதரர்களான பாண்டவர்கள் குடிலுக்கும் தங்கள் சீடர்களுடன் அதிதியாகச் சென்று ஆசீர்வதிக்க வேண்டும்'' என்று வரம் கேட்டான். வனத்தில் தங்கள் சாப்பாட்டுக்கே திண்டாடிக் கொண்டிருக்கும் பாண்டவர்கள் துர்வாசரை திருப்திப்படுத்த முடியாமல், அவரது சாபத்துக்கு ஆளாகி அவதியுற நேரும் என்று நினைத்தே அவன் அப்படியரு வரம் கேட்டான்.

துரியோதனனின் வரத்தை தொடர்ந்து, தன் மிகப் பெரிய சீடர்களின் பரிவாரத் துடன் பாண்டவர்கள் இருக்கும் வனத்தை நோக்கிப் புறப்பட்டார் துர்வாசர். அவர்கள் அங்கே போய்ச் சேரும்போது உச்சிவேளை நெருங்கிவிட்டது. பாண்டவர்கள் பகல் பொழுது உணவை முடித்து விட்டிருந்தனர். திரௌபதி அட்சயப் பாத்திரத்தைக் கழுவும் முன்பு சூர்யார்ப்பண மந்திரம் சொன்னாள். அதே விநாடி பகவான் ஸ்ரீகிருஷ்ணன், அந்தப் பாத்திரத்தில் உள்ள அன்னத்தைக் காலி செய்ய சூரியன் விரித்த கிரணக் கைகளைத் தடுத்தான். 'சூரியதேவா... இந்த அன்னப் பருக்கும், கீரை இலையும் அட்சயப் பாத்திரத்தில் ஒட்டி இருக்கட்டும். இவை நான் உண்ண வேண்டியவை' என்று கூறி சூரியனின் கைகளை தன் சாதுர்யத்தால் கட்டிப்போட்டான் ஸ்ரீகிருஷ்ணன்.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

அதன்படி, அன்னப்பருக்கையும், கீரை இலையும் அட்சயப் பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டன. திரௌபதி பாத்திரத்தைக் கழுவி பூஜையில் வைத்து வணங்கினாள். அதில், இன்னமும் அன்னப்பருக்கையும் கீரை இலையும் ஒட்டிக் கொண்டிருப்பதை அவள் கவனிக்கவில்லை.

வனம் வந்த துர்வாசர், வழியில் தர்மனைச் சந்தித்துத் தானும், தன் சீடர்களும் மதிய உணவுக்காக அவர்கள் குடிலுக்கு வருவதாகவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படியும் கூறினார். தர்மர் அதை பெரும் பாக்கியமாகக் கருதி, அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டார்.

துர்வாசரும், அவரின் சீடர்களும் நதியில் குளித்து, ஜபம் செய்துவிட்டு வருவதாகக் கூறி நதிக்கரைக்குச் சென்றனர். அவர்களுக்குத் தேவையான உணவுக்கு ஏற்பாடு செய்ய தர்மர் தன் குடிலுக்கு ஓடினார். விவரம் அறிந்த திரௌபதி அதிர்ச்சி  அடைந்தாள். சற்றுநேரத்துக்கு முன்புதான் அட்சயப் பாத்திரத்தைக் கழுவி வைத்ததாகச் சொன்னாள்.தர்மர் திகைத்தார் (தர்மருக்கு ஏற்பட்ட இச்சங்கடம்தானோ என்னவோ 'தர்ம சங்கடம்’ என்று நாம் கூறுவது?). உடனே, காட்டில் ஏதாவது கனிகள் கிடைக்கிறதா என்று பார்க்கச் சென்றார்.

அப்போது ஸ்ரீகிருஷ்ணன் ஆஸ்ரமத்துக்குள் நுழைந்து, 'திரௌபதி... எனக்கு மிகவும் பசிக்கிறது. சாப்பிட ஏதாவது இருந்தால் கொஞ்சம் கொடு' என்று கேட்டான். திரௌபதி திடுக்கிட்டு கண் கலங்கினாள். 'மதுசூதனா... இதென்ன சோதனை? துர்வாசர் போதாதென்று நீயுமா சோதிக்கிறாய்? அட்சயப் பாத்திரத்தை இப்போதுதான் கழுவி வைத்தேன். 'வேறு உணவுக்கு நான் எங்கே போவேன்? நீதான் இதற்கு நல்ல வழிகாட்ட வேண்டும்'' என்று வணங்கி நின்றாள் திரௌபதி.

'அப்படியானால், கழுவி வைத்த அட்சயப் பாத்திரத்தையாவது எடுத்து வா. ஒரு பருக்கையாவது இருக்கிறதா என்று பார்க்கிறேன்' என்று விடாமல் கேட்டான் அந்த ஆபத்பாந்தவன். ஒன்றும் புரியாமல் அட்சயப் பாத்திரத்தை எடுக்கச் சென்றாள் அவள். அட்சயப் பாத்திரத்தைப் பார்த்த அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அட்சயப் பாத்திரத்தில் ஓர் அன்னப்பருக்கையும், கீரை இலையும் ஒட்டிக்கொண்டிருந்தது. அது, பரந்தாமன் தனக்காகவே சேர்த்து வைத்த அன்னம் அல்லவா? கிருஷ்ணன் அந்த அன்னப் பருக்கையையும், கீரை இலையையும் நாக்கில் வைத்து விழுங்கினான். 'திருப்தி’ என்றும் கூறினான்.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தே விநாடி நதியில் நீராடிக் கொண்டிருந்த துர்வாசருக்கும், அவரின் சீடர்களுக்கும் பத்து நாள் உணவை ஒரே நாளில் சாப்பிட்டது போல் வயிறு கனத்தது.பசி உணர்வு முழுமையாக நின்று போனதால், துர்வாசருக்கும் ஒன்றும் ஓடவில்லை. 'நமக்காக உணவு சமைத்து வைத்திருக்கும் தர்மருக்கு என்ன பதில் கூறுவது’ என்று பயந்தார். உடனே, வனத்தில் பழங்களைத் தேடித் திரிந்து கொண்டிருந்த தர்மரிடம் ஓடி வந்தார்.

'யுதிஷ்டிரா... என்னை மன்னிக்க வேண்டும். நான் உன் குடிலில் இன்று விருந்து சாப்பிட இயலாத நிலையில் இருக்கிறேன்' என்றார். அதைக் கேட்ட தர்மருக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை.

''மகனே... தினமும் நான் உணவருந்திவிட்டு 'கிருஷ்ணார்ப்பணம்’ என்று சொல்லி நீரருந்திவிடுவேன். ஆனால், என்னைவிட மேலான எவனோ உணவு சாப்பிட்டுவிட்டு 'துர்வாசார்ப்பணம்’ என்று நீரருந்திவிட்டான் போலும்! அதனால், இப்போது என் வயிறு கனக்கிறது. என் சீடர்களும் அப்படியே உணர்ந்து கூறினார்கள். எங்களை மன்னித்துவிடு. உனக்கு சர்வ மங்கலமும் உண்டாகட்டும்'' என்று வாழ்த்தி, தமது சீடர்களுடன் கானகம் விட்டு வெளியேறினார்.

குடிலுக்கு வந்த தர்மனுக்கும், பாண்டவ சகோதரர்களுக்கும் கண்ணனின் கருணை தெரிந்தது. அட்சயப் பாத்திரத்தில் இருந்த அன்னப்பருக்கையில் அன்று துர்வாசர் பெயரை எழுதினான் அந்தத் தாமோதரன்.

இந்தியில் ஒரு பொன்மொழி உண்டு. அதாவது,

'தான்ய தான்ய பர் லிகா ஹை
கானே வாலா கா நாம்’

'ஒவ்வொரு தானியமணியிலும் அதைச் சாப்பிடுகிறவனின் பெயரைக் கடவுள் எழுதி விடுகிறான்’ என்பது இதன் பொருள்.

அட்சயப் பாத்திரமே இருந்தாலும், கண்ணன் அருள் இல்லையென்றால், அதன் முழுப் பலனும் இல்லை என்பதே இதன் தத்துவம்.

- இன்னும் சொல்வேன்