Published:Updated:

தசாவதார திருத்தலங்கள்!

தசாவதார திருத்தலங்கள்!

தசாவதார திருத்தலங்கள்!

தசாவதார திருத்தலங்கள்!

Published:Updated:
தசாவதார திருத்தலங்கள்!
தசாவதார திருத்தலங்கள்!

திருப்புல்லாணி! ராமநாதபுரத்துக்குத் தெற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஊர்.  ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று, அங்கு கோயில் கொண்டிருக்கும் பெருமாளை உள்ளம் உருக வழிபட்டு வாருங்கள். பிறகு உங்கள் வாழ்க்கையிலும் சர்வ மங்கலங்களும் ஸித்திக்கும். இது சத்தியம்!

பின்னே... பெருமாளும், அவர்தம் தேவியாரும், அவர் குடியிருக்கும் கோயிலின் விமானமும்கூட... திருப்பெயரில் 'கல்யாணம்’ எனும் மங்கலத்தைத் தாங்கியிருக்கும் அற்புத க்ஷேத்திரம் அல்லவா இது! ஆமாம்... இவ்வூர் பெருமாளுக்கு ஸ்ரீகல்யாண ஜகந்நாதன் என்று பெயர். திருக்கோயிலின் விமானமோ கல்யாண விமானம். தாயாரின் திருப்பெயரோ ஸ்ரீகல்யாணவல்லி! பிறகென்ன... சர்வ மங்கலங்களும் நமக்கு ஸித்திக்க, இங்கே தடையேது?!

##~##
இலங்கையை அடைய சமுத்திரத்தைக் கடந்தாக வேண்டும்.   அதன்பொருட்டு கடலரசனை வேண்டிக்கொள்ள ஸ்ரீராமன் தர்ப்ப சயனம் செய்தார் என்று (கடந்த இதழில்) பார்த்தோம் அல்லவா? அவரின் திவ்ய திருமேனியை தர்ப்பை புற்களால் தாங்கி, பெரும் புண்ணியம் கட்டிக்கொண்ட ஊர் இது. ஆகவே, திருப்புல்லாணி என்று பெயர் வந்தது.

'வில்லால் அடித்து சமுத்திரத்தை வற்றச் செய்ய வேண்டாம். கடற்பரப்பில் கல் போட்டாலும் மிதக்கும்படி செய்கிறேன்; பாலம் அமையுங்கள்’ என்று கடலரசன் ஸ்ரீராமனை சரண் புகுந்ததும், வேண்டிக்கொண்டதும் இங்குதானே?! ஆக, சேது பந்தனத்துக்கு அடிகோலியதால், 'ஆதிசேது’ என்ற சிறப்பும் சேர்ந்து கொண்டது இந்தத் தலத்துக்கு!

இந்த ஆதிசேதுவுக்கு வேறொரு சிறப்பும் உண்டு. அது இங்கிருக்கும் அரச மரம். மிகப் பழைமையான இந்த அரச மரத்தை, 'போதி’ என்று பக்தியோடு அழைத்து வழிபடுகிறார்கள் பக்தர்கள். இதன் அருகில் இருக்கும் மேடையில் நாகப் பிரதிஷ்டை செய்து, மனதார வேண்டிக் கொண்டால் பிள்ளை இல்லாதவர்களுக்கு விரைவில் அந்தப் பாக்கியம் கிடைக்கும் என்பது இங்கே ஐதீகம்.

தலபுராணம் என்ன சொல்கிறது தெரியுமா?

ஆதியில் படைப்புத் தொழிலை தாமே செய்து வந்த பரம்பொருள், பிறகு அதற்கென்று ஒரு கர்த்தாவாக பிரம்மனைப் படைத்தது. தொடர்ந்து நவ பிரஜாபதிகளையும், இந்திரனையும் தோற்றுவித்தது. பிறகு பிரம்மனிடம் சிருஷ்டி தொழிலை ஒப்படைத்தது. சிருஷ்டியைத் துவங்க தெற்கு நோக்கிப் புறப்பட்டார் பிரம்மா. அப்போது ஆயிரம்கோடி சூரியப் பிரகாசத்துடன் ஜோதி ஒன்று தோன்றி மறைவதைக் கண்டார். அந்த ஜோதியின் ரகசியம் என்ன என்று விசாரித்தபோது, 'அதுவே போத ஸ்வரூபமான போதி மரம். அந்த மரத்தடியில்தான் ஜகந்நாதன் தங்குகிறான்’ என்று அசரீரியாய் பதில் கிடைத்ததாம்.

ஆக, இந்த விருட்சத்துக்கு இந்தத் தலத்தில் மகத்துவம் அதிகம். 'மரங்களில் நான் அரச மரம்’ என்று கீதையில் கண்ண பரமாத்மா அருளிய வாக்கு, இங்கே மெய்பிக்கப்பட்டிருக்கிறது’ எனச் சிலாகிக்கிறார்கள் பக்தர்கள்!

இப்படியான இந்தத் தலத்தின் மகத்துவங்களை எல்லாம் பெரியோர்கள் கதைகதையாய்ச் சொல்லக் கேட்டும், அடியார்கள் பலரும் பாடல்களாய் பாடி வைத்ததைப் படித்தும்... ஜகந்நாதன் மீதும், அவர் குடியிருக்கும் கோயில் குறித்தும் இந்தப் பகுதியை அரசாண்ட அரசர்களுக்கு அன்பும் ஆழ்ந்த பிடிமானமும் ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் நிவந்தங்களைக் கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள் இந்த ஆலயத்துக்கு.

தசாவதார திருத்தலங்கள்!

சரித்திரக் கூற்றுப்படி, இந்த ஆலயத்தை நிர்மாணித்ததாகக் கருதப்படும் பரராஜசேகர ராஜா முதற்கொண்டு, பிற்காலத்தில் கிழவன் சேதுபதி வரையிலும் இந்த ஆலயத்துக்கு திருப்பணி செய்திருக்கிறார்கள். கிழவன் சேதுபதி பல கிராமங்களை இந்தக் கோயிலுக்கு ஈந்ததை, செப்பு சாஸனங்கள் மூலம் அறிய முடிகிறது. அழகிய பிராகாரங்களுடனும் கோபுரத்துடனும் மிளிரும்படி அற்புதமான அமைத்திருக்கிறார்கள் இந்த ஆலயத்தை. அதுசரி... இது, பாண்டிநாட்டு திவ்யதேசங்களில் ஒன்றாயிற்றே? எனில், இந்தத் தலத்தை பாடிவைத்த ஆழ்வார் யார்?

இதோ... கீழ்க்காணும் பாடலைப் பாடியபடி கருவறைக்கு வாருங்கள். மூலவர் சந்நிதானத்தில் அவர் யாரென்பது தெரிந்து போகும்.

வில்லால் இலங்கை மலங்க சரந்துரந்த
வல்லாளன் பின்போன நெஞ்சம் வரும் அளவும்
எல்லாரும் என்தன்னை ஏசிடினும் பேசிடினும்
புல்லாணி எம்பெருமான் பொய்கேட்டிருந்தேனே

அடடா எவ்வளவு பொருள் பொதிந்த பாசுரம்? பெருமாளை நாயகனாய் வைத்து, தன்னையே பரகாலநாயகியாக்கி காதலித்து பக்தி செய்வது வேறு யாராக இருக்கமுடியும்? நம் திருமங்கை மன்னன்தான் 20 பாசுரங்களால் (பெரிய திருமொழி) பாடிப் பரவியிருக்கிறார்.

தேவியரோடு... சதுர்புஜமும், பஞ்சாயுதங்களும், மார்பில் ஸ்ரீவத்ஸமும், கௌஸ்துபமும் துலங்க... சர்வாலங்கார நாயகராய் திகழும் ஜகந்நாதரைத் தரிசிக்கும்போது, நமக்கும் காதல் பிறக்கிறது அவர் மீது!

புல்லர் என்றொரு முனிவர் கடும் தவம் இருந்தாராம் இங்கே. அதனால் மகிழ்ந்து,  தேவியர் மூவருடனும் அவருக்கு அருட் காட்சி தந்தாராம் திருமால். அப்போது அந்த முனிவர் பெருந்தகை வேண்டிக்கொண்டபடி, அதேகோலத்தில் நமக்கும் இங்கே அருட்காட்சி தருகிறார் பெருமாள். புல்லர் மட்டுமல்ல காலவர், கண்ணுவர் ஆகிய மகரிஷிகளும் இங்கே தவம் இருந்து அருள் பெற்றிருக்கிறார்கள்.ஒருமுறை இங்கிருக்கும் திருக்குளத்தில் சப்தகன்னியர் நீராட, அதனால் ஏற்பட்ட ஓசை தேவலர் என்ற ரிஷியின் தவத்தைக் கலைத்தது. கோபம் கொண்ட முனிவர், சப்தகன்னியரைச் சபித்தார். அவர்கள் எழுவரும் இந்தப் புல்லாரண்யத்துப் பெருமாளை வழிபட்டு சாபம் தீரப் பெற்றனராம்.

மூலவருக்கு ஸ்ரீஆதி ஜகந்நாதன், தெய்வச் சிலையார் ஆகிய திருநாமங்களும் உண்டு. கோயிலில் ஸ்ரீகல்யாணவல்லி, ஸ்ரீபத்மாஸநி என்று இரண்டு தாயார்கள். மட்டுமின்றி, ஸ்ரீசந்தானகிருஷ்ணனையும் இங்கே தரிசிக்கலாம்.

அதுசரி... இந்தக் கோயிலில் ஸ்ரீராமனைத் தரிசிப்பது எங்கே? பிராகாரத்திலேயேதான். ஸ்ரீதர்ப்ப சயன ராமனாகவும், பட்டாபிஷேக ராமனாகவும் இருவேறு சந்நிதிகளில் அருளோச்சுகிறார் காகுத்தன். ஸ்ரீதர்ப்பசயன ராமன் சந்நிதியில், லட்சுமணன் ஆதிசேஷனாக இருந்து கைங்கரியம் செய்வதாக ஐதீகம்.

மூர்த்தி, தலபுராணம், விருட்சம் மட்டுமின்றி தீர்த்தத்தாலும் சிறப்பு பெற்ற தலம் இது. ஹேம தீர்த்தம், சக்கர தீர்த்தம் முதலாக இங்குள்ள தீர்த்தங்களும் அருகிலுள்ள ஆதிசேது தீர்த்தக் கட்டமும், புனிதம் வாய்ந்தவை.

இந்தத் தலத்தின் நைவேத்தியமான திருக்கண்ணமுது பாயஸத்துக்கு அதீத விசேஷம் உண்டு.

என்ன காரணம் தெரியுமா?!

- அவதாரம் தொடரும்...