Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 8

சித்தம்... சிவம்... சாகசம்! - 8

சித்தம்... சிவம்... சாகசம்! - 8

சித்தம்... சிவம்... சாகசம்! - 8

Published:Updated:
சித்தம்... சிவம்... சாகசம்! - 8
சித்தம்... சிவம்... சாகசம்! - 8

'விட்டகுறை வந்ததென்றால் தானே யெய்தும்
விதியில்லார்க் கெத்தனைதான் வருந்தினாலும்
பட்டுமன மாய்தலல்லால் வேறொன்றில்லை
பக்தியில்லார்க் குரைத்து மனம் பாழ்போக்காதே
திட்டமதாய்ப் பாணம் வைத்துத் தேவி பூசை
சீர்பெற்றார் பதினெட்டுச் சித்தர் தாமே...’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- கருவூர் சித்தர்

சித்தம்... சிவம்... சாகசம்! - 8

மேகமணிக் குளிகையின் தயவாலும், அட்டமாஸித்தியில் ஒரு ஸித்தியான இலஹிமாவின் திறத்தாலும் பஞ்சு போலாகி வானவீதியில் பறந்து, இமயமலைக்கு நேர்மேலே நின்று, அந்த வெள்ளிப்பனி மலையை நோக்கிய போகர், அதையே கயிலாயமாகக் கருதி 'ஓம் நமசிவாய’ என்று நெக்குருகத் துதித்தபடியே, அந்த மலையின் ஒரு பகுதியின் மேல் இறங்கினார்.

இமயம் ஓர் அற்புதம். அது ஒரு புதிரும்கூட! அங்கே எதுவும் வளர்வதும் இல்லை; எதுவும் அழிவதுமில்லை. அங்கே மாசுமருவுக்கோ, தூசு தும்புக்கோ இடமில்லை.

தூய்மையின் நிறம் வெண்மை; அமைதியின் நிறமும் வெண்மை தான். எனவே, அங்கே எங்கு பார்த்தாலும் இருப்பது அமைதி யும், தூய்மையும் மட்டும்தான்.

எப்பேர்ப்பட்ட காமேந்திரியன்கூட அங்கு செல்லும்பட்சத்தில் உடற்சூட்டை இழந்து, அதன் பிடியில் இருந்து விடுபட்டவனாகிவிடுவான்.

உலகில் அளவில் மட்டும் இது உயர்ந்தது அல்ல; அனைத்திலும் இதுவே உயர்ந்தது. உயரே செல்லச்செல்ல, ஒரு ஆத்மாவுக்கு எது ஸித்திக்கும் என்பதைச் சொல்லும் ஒரு தோற்றமாய் இமயம் விளங்கிக்கொண்டிருக்கிறது. 'மயம்’ என்றால் எல்லாமாயிருப்பது, வியாபித்திருப்பது என்று பொருள். இமயம் என்றால், 'இதுவே எல்லாம்’ எனப்படுவதாகும்.

##~##
இது மட்டுமல்ல, உலகின் மையம்- உயிர்களின் மையம் என்றும் இதைக் கூறலாம். நமது இமைகள் இரண்டின் மையத்தில்தான் ஆக்ஞா சக்கரம் சுழன்றபடி உள்ளது. இங்கேதான் நாம் விபூதி, குங்குமம், திருமண் என்று தரிக்கிறோம். இதனால், இதனுள் துர்நீர் சேராதவாறு தடுக்கப்படுகிறது. துர்நீர் சேர்ந்தால், நாம் குழைத்துப் பூசும் விபூதியும், திருமண்ணும் தன் ஈரம் காயும்போது, இதையும் உறிஞ்சி காயச்செய்து விடுகிறது. அதனால், நம் முகப்பொலிவு தேஜசாய் வெளிப் படுகிறது. இந்தப் புருவ மையம்தான் லலாடக்கோயில். மகாபீடம், மூன்றாவது கண், திரிவேணி, திரிமூர்த்தி, குருபீடம், ஞானவாசல் என்றெல்லாம் சித்தர் பெருமக்களால் குறிப்பிடப்படுகிறது.

இந்தப் புருவ மையம்தான் ஒரு மனிதனை ஞானியாக்குகிறது. இந்த மையத்தில் மனத்தைக் குவித்து தியானிக்கும்போது, பேராற்றல் உருவாகிறது. இந்த ஆற்றலால் நேற்று நடந்ததை, இன்று நடக்க இருப்பதை, நாளை நடக்கப்போவதை அறியலாம். உச்சபட்சமாக, இந்த மையத்தில் அந்தப் பரமனையே நாம் காண முடியும்.

இந்த மையம் ஒருவருக்கு எப்படி இருக்கிறது என்பதை வைத்தே, அவரது அறிவும் ஞானமும் தெரியவரும். இந்த மையத்தில் மனத்தை ஒடுக்குவதற்குப் பெயர்தான் தவம். மனிதனுக்கு இரு இமை நடுவே மையம் என்றால், உலகுக்கு மேல்- கீழ் எனும் இரு புறத்துக்கு நடுவேயான மையம் இமயம்!

தவிர, பூமியின் சமதளத்தில் இருந்து ஆகாயம் நோக்கி அதிகபட்சத்துக்கு எழும்பி நிற்பது இது ஒன்றே! இதன் உச்சியே இந்த உலகின் உச்சி. இப்படி ஓர் உச்சிக்கு மனிதனும் சென்று இம்மையாகிய இமயத்தில் நின்று, தன் மையமாகிய லலாடக்கோயிலில் மனத்தை அடக்கி தவம் செய்வது பேராற்றல் மிக்க செயலாகும்.

அடுத்து, சத்தமற்ற ஒரு நிலையை இந்த உலகில் வாழும் ஒரு மனிதர்கூட உணர்ந்திருக்க முடியாது. ஏனென்றால், அதற்கு வாய்ப்பே கிடையாது. மிக அதிகபட்சமாக, ஊரே தூங்கும் நள்ளிரவில், வீட்டுக் கடிகார விநாடிமுள் நகரும் சத்தம்கூடக் கேட்கும் ஓர் அமைதியைத்தான் நாம் அனுபவித் திருப்போம். இந்த அமைதியைப்போல நூறு மடங்கு அதிகமானது இமயத்தின் உச்சியில் நிலவும் அமைதி. இப்படி இமயம் பற்றிச் சிந்திப்பதற்கு நூறு நூறு விஷயங்கள் உள்ளன.

அப்படி ஒரு இடத்துக்கு போகர் வரவும், அவரிடமும் ஒரு புத்துணர்வு. மேனி எங்கும் ஒரு பரமானந்தச் சிலிர்ப்பு! ஏற்கெனவே தவப் பரிச்சயமும், அதற்கான கர்ம பலமும் உடையவராக இருந்தபடியால், அப்படியே ஒரு குகையாகப் பார்த்து அமர்ந்து, தன்னையும் உலகையும் மறந்துவிடத்தான் முதலில் விரும்பினார்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 8

ஆனால், சீடனின் நினைவும், அவனுக்கு உயிர் தரும் விருப்பமும் அவரது தவநோக்கத்தை மாற்றி, இந்த வெண்பனிக் கோட்டத்தில் எங்கே சஞ்சீவி மூலிகை கிடைக்கும் என்று தேட வைத்தது. கூடவே, அந்த மலையில் தவமிருக்கும் சித்தர் பெருமக்கள் நினைவும் வந்திட, அவர்கள் எங்கே என்று தேடத் தொடங்கினார். அதற்கு தோதாக, கயிலாய ஏரி எனப்படும் மானசரோவர் கரைக்குச் சென்றார். அங்கே நீராட வரும் சித்தர் பெருமக்களிடம் தன் விருப்பத்தைக் கூறினால், அவர்கள் சஞ்சீவி பர்வதம் உள்ள இடத்தை காட்டக்கூடும் என்று கருதினார்.

அவர் எண்ணியது வீண்போகவில்லை. பல சித்தர் பெருமக்கள் கோவணதாரிகளாக மானசரோவர் கரையில் நீராட வந்திருந்தனர். அப்பியெடுக்கும் குளிரால் உடம்பானது பாதிக்கப்படாதவாறு இருக்க, அவர்கள் தங்கள் உடம்பில் உள்ள அக்னியை நிலைநிறுத்தி இருந்தனர்.

நம் உடம்பின் மேல் நாம் ஆதிக்கம் செலுத்துவது என்பது ஒரு பெரும் ஆற்றல். பசியாதிருப்பது, உறங்காதிருப்பது, அசையாதிருப்பது, நின்றவாறே இருப்பது என்று அதில் பலவிதங்கள் உண்டு. காயகல்பங் களால் உடம்பைப் பேணுபவர்களுக்கே இதெல்லாம் சாத்தியமாகும். போகரோ துவராடையால் மேனி மூடி, குளிருக்கு ஆளாகியிருந்தார். இருப்பினும், அந்த ஏரிக்கரை வரை வரமுடிந்த அவரின் தீரச்செயலை அந்தச் சித்தர்கள் புரிந்துகொண்டு, அவரைப் பார்த்து சிரித்தனர். போகர் அவர்களை எல்லாம் வணங்கினார்.

''யாரப்பா நீ?''

''மதங்கொண்ட யானையை அடக்குபவன் பாகன் என்றால், அதனினும் பலம் கொண்ட காமம், குரோதம், மாச்சரியங்களை அடக்கமுடிந்த காரணத்தால் போகன் என்றானவன்!''

''பாகன்- போகன்... பலே!'

''இங்கு வந்த காரணம்?''

''உங்களை எல்லாம் தரிசனம் செய்யவும், மேலான சஞ்ஜீவி மூலிகையை அடையவுமே..!''

''அது எதற்கு உனக்கு?''

''எனக்கல்ல... என் சீடனுக்கு...''

''அப்படியென்றால், உன் சீடன் இப்போது...?''

''ஆம். அரவம் தீண்டி, உதிரம் சுண்டி, உயிரை இழந்து கிடக் கிறான்.''

''ஓ... அவன் பிழைத்தெழ  வேண்டுமா?''

''ஆம்... மிகுந்த இளம் வயது. அவன் இறந்தது பெரும் கொடுமை.''

''அட, அரைச் சித்தா! கர்மம் குறித்த சிந்தனையே உன்னிடம் இல்லையே..?''

''கர்மமா?''

''என்ன கேள்வி இது? கர்மமாகிய வினைப்பாடு குறித்து நீ சிந்தித்ததில்லையா?''

''நிறையவே சிந்தித்திருக்கிறேன். அதற்கென்ன?''

''அதற்கென்ன என்றா கேட்கிறாய்? அரவம் தீண்டி அவன் உயிர்பிரிய வேண்டும் என்பது அவன் கர்மம் என்பதை நீ உணரவில்லையா?''

''அந்தக் கர்மத்தை வெல்ல வேண்டும் என்பதே என் நோக்கம்...''

''வென்று..?''

''இது என்ன கேள்வி? சித்தன் நினைத்தால் படைத்தல், காத்தல், அழித்தல் என சகலமும் சாதிக்க முடியும் என்று நான் நிரூபிக்க விரும்புகிறேன்...''

''நிரூபித்து..?''

''நிரூபிப்பதன் மூலம், சித்தத்தை உயர்த்திப் பிடிக்க விரும்புகிறேன்...''

''ஆமாம், நீ எப்படி சித்தனானாய்..?''

அந்தக் கோவணச் சித்தர்களில் ஒருவர் இப்படிக் கேட்கவும், போகருக்கு நெஞ்சில் முள் தைத்ததுபோல் இருந்தது.

''சித்தர் பெருமக்களே... என் கேள்விக்கு நேரடியாக பதில் கூறாமல், எதற்காக என்னை இப்படிச் சீண்டுகிறீர்கள்? இதில் தங்களுக்குக் கிடைப்பதுதான் என்ன?'' - போகரிடம் இருந்து கோபமாய் கேள்வி வெடித்தது.

சித்தம்... சிவம்... சாகசம்! - 8

''போகனே... சினம் கொள்ளாதே! சினம் தவத்துக்கு நேர் எதிரானது. நீ சேமித்து வைத்திருக்கும் உன் தவப் பயன்களை எல்லாம் அது அழித்து விடும். மாறாக... அந்த தவப் பயன்கள், நீ கோபிக்கும் எங்களை அடைந்துவிடும். எங்களுக்கு எவரிடம் இருந்தும் எதுவும் வேண்டாம். உனது தவப்பயன்கள் எங்களை அடைந்தால், அதை அனுபவிக்க நாங்கள் மேலும் சில காலம் வாழும்படி இருக்கும்...''

''உங்கள் பதில் எனக்கு ஆச்சரியம் தருகிறது. என் சினம், அருளாசி உங்களை அடைந்துவிடும் என்பதும், அந்த அருளை தாங்கள் வேண்டாம் என்பதும் மேலும் ஆச்சரியப்படுத்துகிறது.''

''நாங்கள் வேண்டுவதெல்லாம் ஒன்றே! அது மீண்டும் பிறவாமை! சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம், ஆகாமிய கர்மம், நிஷ்காமிய கர்மம் என்னும் எல்லா கர்மங்களில் இருந்தும் தெளிந்து விடுபடத்தான் மானுடப் பிறப்பு. எனவே, எதன்பாலும் விருப்பம் கொள்ளாமல், இறைவன்பால் மட்டும் விருப்பம்கொண்டு இந்த உடம்புச் செல்களின் முற்றான அழிவுக்காக காத்திருக்கிறோம். கடைசி செல் இயங்கும்வரை ஜீவித்திருப்போம். அதுவும் அடங்கவும் எங்கள் விடுதலை நிகழும்...''

''ஒருநாள், உடல் அழிந்து உயிர் விடுபெறத்தானே போகிறது? அதுவரை உலக மக்கள் நன்மைக்காகப் பாடுபட்டு, அவர்களின் இன்ப வாழ்வுக்காக வழிகாட்டி வாழலாமே..?''

''உன் எண்ணம் மேலான எண்ணமே! ஆனால், அதில் மாயை மிகுந்திருப்பதை நீ உணரவேண்டும். எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுத்துவிட முடியாது. கொடுத்தாலும் எல்லோராலும் பெற முடியாது.''

''அவரவருக்கு எது தேவையோ அதைத் தரலாமே..?''

''உன் தேவைக்கே இறைவன்தான் தருகிறான். இதில் நீ எதை பிறருக்குத் தந்துவிட முடியும்?''

''என்னிடம் இருப்பதை..!''

''அப்படி நீ தருவதன் மூலம் நீ அடைய விரும்புவது...?''

''நிறைவை..!''

''அது உனக்கு ஏற்படாவிட்டால்?''

''அது எப்படி ஏற்படாமல் போகும்? இப்போதுகூட என் சீடனுக்கு நான் உயிரைத் தந்துவிட்டால் அது எத்தனை பெரிய நிறைவு?''

''இந்தச் சீடன் நாளையே ஒரு பாவச்செயல் புரிந்தால், அது இவனுக்கு உயிரை அளித்த உன்னையும் சார்ந்திடும். பரவாயில்லையா?''

இந்தக் கேள்வி முன் போகர் ஒரு விநாடி தேங்கினார். அதுவரை பளிச் பளிச்சென்று பதில்களை கூறியதுபோல அவரால் கூற முடியவில்லை.

''என்ன சிந்தனை..? பதில் கூறு!''

''பாதகமில்லை. அந்தப் பாவம் என்னையும் சேரட்டும். நான் இதற்காக அஞ்சத் தயாரில்லை!''

''போகா... அரைச் சித்தன்தான் நீ என்பதை இந்த பதில் மூலம் நிரூபித்துவிட்டாய். அரை வைத்தியனும், அரைச் சித்தனும் ஆபத்தானவர்கள். உனக்கு உன்னை உணர்த்தவே நாங்கள் இவ்வளவு கேள்விகளையும் கேட்டோம். உன்னிடம் 'நான்’ என்னும் செருக்கும், புகழ் மீது மோகமும் நிறையவே உள்ளது. இந்தச் செருக்கும் மோகமும் ஒரு யோகிக்கு துளியும் ஆகாதவை. நீ அறிய வேண்டியதும் புரிய வேண்டியதும் நிறையவே உள்ளன. அவற்றை நீ அடைந்த நிலையில், இப்போது நாங்கள் பேசிய அளவுக்குக்கூடப் பேச மாட்டாய்.

நாங்களும் உன்னால் இன்று பல நூறு வருடங்களுக்கு பிறகு பேசியுள்ளோம். இந்தத் தூயவெளியும், இதனால் அதிர்வுக்கு ஆளாகியிருக்கும். இங்கே இன்னும் பல நூறு யோகியர் தவம் செய்தபடி உள்ளனர். தொடர்ந்து உன்னோடு பேசுவதால், அவர்கள் தவத்துக்கு ஊறு நேரலாம். பேசியது போதும்; வந்த வழியே புறப்படு!’

அவர்கள் கட்டளை இடும் குரலில் கூறிவிட்டு, நீருக்குள் இறங்கினர். போகருக்கு ஏமாற்றமாக இருந்தது. அந்தச் சித்தர்கள் அவருக்கு சுயநலவாதிகளாகத்தான் தெரிந்தனர்.

அப்படியே நடக்கத் தொடங்கினார். கயிலாய மலையை வலம் வந்து முடித்தவர், ஓரிடத்தில் இருந்து வந்த சிவநாம ஒலியை செவிமடுத்தார்.

அந்த ஒலி அவரை ஒரு பெரும் முனிவர் முன் கொண்டுவந்து நிறுத்தியது. அவரது கால்களும், மூச்சுக்காற்றும் அங்கு வியாபிக்கவும், அந்த முனிவரின் தவமும் கலைந்துபோனது.

கண் திறந்தவர் எதிரில், போகர்! போகரும் அவரை பயபக்தியோடு வணங்கினார். அவரிடம் பதிலுக்கு எந்த ஓர் உணர்வும் வெளிப்படவில்லை. மாறாக, அமர்ந்திருந்தவர் எழ முற்பட்டார். ஆனால், அது சுலபத்தில் சாத்தியமாகவில்லை. போகர் அவருக்கு உதவி செய்தார். அவரும் நன்றியோடு பார்த்தார். இருந்தும், அவரால் எழுந்து நிற்க முடியவில்லை.

''அப்பனே... இன்றைய கால கதியை அடையாளப்படுத்துவாயா?'' என்று கேட்டார் அவர்.

''இப்போது கலியுகத்தில் பல நூறு ஆண்டுகள் கழிந்து, அதில் விபவமும், அதனுள் வசந்த ஹேமருதுவும் நடப்பில் உள்ளது. கிழமையில் இன்று குருவுக்கான வியாழக்கிழமை'' என்றார் போகர்.

''அடேயப்பா... கலி பிறந்து, அதில் பல நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டனவா? நான் முந்தைய துவாபர யுகத்தில் தவத்தில் ஆழ்ந்தேன். அது இங்கு நீ வரவும், முடிவுக்கு வந்துள்ளது. அதனால்தான் சட்டென்று எழுந்து நிற்க முடியவில்லை!'' என்றார். அதைக் கேட்ட போகரிடம் பெரிதும் அதிர்ச்சி.

''முனிவர்பிரானே... தாங்கள் யுகக்கணக்கிலா தவத்தில் இருந்தீர்கள்?''

''ஏனப்பா... நம்ப முடியவில்லையா?''

''ஆம்... இன்னுமா உங்களுக்கு இறைவனிடம் வரம் ஸித்திக்கவில்லை?''

''நான் வரம் குறித்து சிந்திக்கவேயில்லையே...?''

''அப்படியென்றால் தங்கள் தவத்தின் நோக்கம்...?''

''நோக்கம் இல்லாததே என் நோக்கம்...''

''நோக்கம் இல்லாததா..? என்ன சொல்லுகிறீர்கள்?''

''பின், நீ வேறு என்ன எதிர்பார்க்கிறாய்?''

''ஒரு நோக்கமும் இன்றி எப்படி தவமியற்ற முடியும்?''

''நான் இயற்றியிருக்கிறேனே... என்னைப் பார்த்துமா கேட்கிறாய்?''

''சரி, இதில் தாங்கள் அடைந்தது எதை?''

''இத்தனை காலம் நான் அழியாமல் அப்படியே இருந்திருக் கிறேனே... அது போதாதா?''

''இதில் என்ன பெரிதாக இருக்கிறது?''

''பெரிதாகவா..? அப்படியென்றால், சிறிதாக என்கிற ஒரு எண்ணமும் உன்னிடம் உள்ளது. ஒன்றை பெரிதென்றும் சிறிதென்றும் கருதுவது மானுட அறிவின் தொடக்க நிலை. உண்மையில் பெரிதென்று ஒன்றில்லை; சிறிதென்று ஒன்றில்லை. பெரிதும் சிறிதும் அடையாளங்களே!

இந்த ஊனுடம்பு அழியாமல் யுகம் கடந்து அப்படியே இருந்திருப்பதே தவத்தால்தான். இனியும் இதைத் தொடர்ந்து இருந்தும் இல்லாமல் போவது என்பதுதான் உத்தம நிலை. இதை ஈசத்வம் என்பார்கள். உன் அறிவுக்குப் புரிகிறாற்போல் கூறவேண்டும் என்றால், நானே கடவுளாகிவிடுகிற நிலை - நித்ய இன்ப நிலை! நான் மீண்டும் அதைத் தொடர விரும்புகிறேன். நீ புறப்படு!''

போகரைப் பார்த்து இப்படிச் சொன்னவர், திரும்பவும் தவத்தில் ஆழ்ந்தார். அவர் பேசிய பேச்சுகளுக்குள் மிக ஆழ்ந்த பொருள். போகருக்குள்ளும் அவற்றின் தாக்கங்கள்..!

- சிலிர்ப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism