சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கோயிலுக்கு வெளியிலிருந்து வரும் நைவேத்தியங்களை ஸ்வாமிக்கு சமர்பிக்கலாமா?

கேள்வி - பதில்

கோயிலுக்கு வெளியிலிருந்து வரும் நைவேத்தியங்களை ஸ்வாமிக்கு சமர்பிக்கலாமா?

கோயில் மடப்பள்ளியில் தயாரிக்கப்படும் உணவு, அந்தக் கோயில் எந்த ஊரில் உள்ளதோ அந்த ஊரில் பூக்கும் மலர்கள் ஆகியவற்றையே ஸ்வாமிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்கிறார் அர்ச்சகர் ஒருவர். தற்போது பெரும்பாலான பக்தர்கள் வெளியூர் கோயில்களுக்குச் செல்லும்போது, தங்கள் ஊரில் இருந்தே மாலைகள், உதிரிப்பூக்கள் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறார்கள். இது சரியா?

- வி. அர்ஜுன், மதுரை

மடப்பள்ளி நிவேதனமும், அந்த ஊர் புஷ்பங்களும் பூஜை தடையின்றி நிகழ ஒத்துழைக்கும். மடப்பள்ளி இல்லாத கோயில்களும் இருக்கும். போதுமான அளவு புஷ்பங்கள் கிடைக்காத கிராமங்களும் இருக்கும். காவல் தெய்வங்கள், அரச மரத்தடிப் பிள்ளையார்களும் உண்டு. அங்கெல்லாம் மடப்பள்ளி இல்லாமலும் இருக்கும்.

காளஹஸ்தியில் வழிபட்ட வேடனுக்கு, நைவேத்தியம் வெளியில் இருந்து வரவேண்டியிருந்தது. கேரளத்தில் நாக வழிபாட்டில் பெயர் பெற்ற காவுகள் (கூரையில்லா சிறு கோயில்கள்), வெளியே இருந்து வரும் நிவேதனத்தையும் புஷ்பங்களையும் எதிர்பார்க்கும். மலைக்கோயில்கள் சிலவற்றில் மடப்பள்ளிக்கும், புஷ்ப தோட்டத்துக்கும் இடம் இல்லாத நிலையில், நிவேதனமும் புஷ்பமும் வெளியே இருந்து வருவதை வரவேற்பது உண்டு.

ஆகம முறைப்படி சட்டதிட்டத்துடன் ஆரம்பத்திலேயே மடப்பள்ளியும், உத்யானவனமும், குளமும், தீப ஸ்தம்பமும், கொடி மரமும் ஏற்படுத்தப்பட்ட கோயில்களில் மட்டுமே அர்ச்சகர் சொன்னபடி செய்ய இயலும்.

சபரிகிரீசனுக்கு ஆபரணமும், ஸ்ரீநிவாசனுக்கு ஆண்டாள் அணிந்த மாலையும் வெளியில் இருந்து வருபவையே! உத்ஸவ காலங்களில் வாத்ய கோஷமும், புஷ்ப அலங்காரங்களுக்கு ஆரங்களும் வெளியே இருந்து வந்துசேரும். அதேபோன்று, வெளியே இருந்து வரும் பழம்- தேங்காய்களையும், மாலைகளையும், உதிரிப் பூக்களையும் பக்தர்களிடம் இருந்து பெற்று அர்ப்பணம் செய்வது உண்டு.

பாரிஜாதம், செண்பகம், தாமரைப் பூ, நீலோத்பலம் போன்றவை வெளியே இருந்து வர வேண்டியிருக்கும். அம்மனுக்கு அளிக்கும் தாழம்பூ வெளியே இருந்து வரவேண்டியிருக்கும். சூட்டோடு ஆவி பறக்கும் நிவேதனம், அப்போது விரிந்த மலர்கள் ஆகியன எங்கு கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறதோ, அங்குதான் அர்ச்சகரின் கூற்று அரங்கேறும். சில கோயில்களில், வெகு தொலைவில் இருந்து

அபிஷேக தீர்த்தம் கொண்டு வரப்படுவது உண்டு. பல காத தூரத்திலிருந்து அர்ச்சனை- அலங்கார புஷ்பங்கள் எடுத்து வருவது உண்டு. ராமேஸ்வரத்தில் இருந்து மண் எடுத்துச் சென்று காசியில் சேர்ப்பதும், அங்கிருந்து கங்கை நீரை எடுத்து வந்து ராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்வதும் உண்டு. காராம்பசுவின் பால், கொம்புத் தேன் ஆகியவற்றையும் வெளியிலிருந்து வரச் செய்து ஏற்றுக்கொள்வது உண்டு.

குசேலன், தனது வீட்டிலிருந்து கொண்டு வந்த அவலை கண்ணனுக்கு அளித்தான். சபரி, தான் சேமித்த பழங்களை ஸ்ரீராமனுக்கு அளித்தாள். மனக்கோயிலில் இறைவனை இருத்தி வழிபடும் பூஜையும் உண்டு (தேஹோதேவாலய: ப்ரோக்தோ...). மானஸ பூஜைக்கு பெருமை சேர்த்தவர் ஆதிசங்கரர் (அந்தர் முகஸமாராத்யா...). அங்கெல்லாம் ஆகாசத்தை (இடைவெளி) புஷ்பமாகவும், ஜீவாத்மாவை அமுதாகவும் படைப்பது உண்டு.

மனம் விரும்பியபடி வழிபடும் சுதந் திரத்தை அளித்திருக்கிறது ஸனாதனம். கந்தம், ஜலம், தூபம், தீபம், நைவேத்தி யம், புஷ்பம் ஆகியனவாக... பஞ்ச பூதங் களையும் ஐந்து விரல்களால் சுட்டிக்காட்டி பஞ்சோபசாரம் செய்து, காமதேனு முத்திரையில் ஜீவாத்மாவை நிவேதனம் அளித்து பூஜையை முடிப்பவர்களும் உண்டு.

எங்கிருந்து வந்தாலும் அவை யெல்லாம் அவனது படைப்பு; அவன் ஏற்பான். நமது பங்கு பக்தி ஒன்று தான். 'நீ தந்த செல்வத்தை உனக்கே அளிக்கிறேன்’ என்று பக்தன் கூறுவான் (த்வதீயம் வஸ்து பூதேச துப்யம் ஏவஸமர்ப்பயே). பணிவிடைப் பொருள் களின் ஆராய்ச்சியில் மூழ்கி நேரத்தை வீணடிக்காமல், ஈசனிடம் ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டால், இது மடப்பள்ளி நிவேதனமா, வெளி நிவேதனமா... இது உள்ளூர் புஷ்பமா, வெளியூர் புஷ்பமா என்கிற சிந்தனை எழாது. பக்தி மனத்தை விட்டு அகலும்போது பொருளைப் பற்றிய ஆராய்ச்சியில் மனம் மாட்டிக்கொண்டு தவிக்கும்.

கோயிலுக்கு வெளியிலிருந்து வரும் நைவேத்தியங்களை ஸ்வாமிக்கு சமர்பிக்கலாமா?

இல்லறத்தில் உள்ளவர்கள் விரும்பினால் சந்நியாஸம் வாங்க முடியுமா? முடியும் எனில், அதற்கான வழிமுறைகள் என்ன? அப்படி சந்நியாஸம் பெறுபவர்கள், பெற்றோருக்கான சிராத்தக் கடமைகளைச் செய்யலாமா?

- ஜி.ஜெயராமன், கோவை-6

எதிலும் பற்றற்ற நிலையை மனம் எட்டினால், அதாவது வைராக்கியம் வந்து விட்டால், சந்நியாஸம் ஏற்கலாம். வைராக்கியம் வந்தவனுக்கு மற்ற ஆச்ரமங்கள் கசக்கும்; சந்நியாஸம் இனிக்கும்.

ஒட்டுமொத்த துயரங்களில் இருந்தும் விடுதலையை விரும்புபவனுக்கு சந்நியாஸம் துணை புரியும். இல்லற சட்டதிட்டங்கள் அவனுக்கு இருக்காது. ஆகையால், அதற்கு உதவும் பூணூலும் சிகையும் இருக்காது. அப்படியிருக்க, வலுக்கட்டாயமாக சிராத்தத்தைச் செய்யலாமா என்று கேட்பது வெகுளித்தனம். உலகத் தொடர்பை அறுத்துக்கொண்டவனுக்குத் தகப்பன் தொடர்பு, அவருக்குச் செய்யும் சிராத்தத்தின் தொடர்பு இருக்காது. மறு பிறப்புக்குக் காரணமான கர்மத்தைத் துறந்தவனுக்கு 'சிராத்தம்’ வாயிலாக ஒட்டவைப்பது அறியாமை. பற்றற்றவனை பற்றுடைய ஆச்ரமத்தில் இழுப்பது அவனுக்கும் நல்லதல்ல; ஆச்ரமத்துக்கும் நல்லதல்ல. பற்றற்றவன் சிராத்தத்தில் ஈடுபடும்போது, திரும்பவும் இல்லறத்தில் வந்துவிடுவான்; இல்லறத்தைக் கெடுப்பான். பற்று இருக்கும் வரை இல்லறம் இனிக்கும்; அற்றுப் போனால் கசக்கும்.

அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்கு புருஷார்த்தத்தைப் பரிந்துரைத்தனர். வேதம் சொல்லும் அறத்தைச் செயல்படுத்த வேண்டும். 'அறவழியில் பண சேமிப்பு இருக்க வேண்டும். அற வழியில் இன்பத்தைச் சுவைக்க வேண்டும். மனம் விவேகத்தை அடைந்து வைராக்கியத்தை எட்டியதும் சந்நியாஸத்தை ஏற்க வேண்டும்’ என்று படிப்படியாக ஏறச் சொல்லும் ஸனாதனம்.

உலக சுகங்கள் துயரத்தை எட்டுவதை அறிந்து, வைராக்கியமும் விடுதலையில் விருப்பமும் வளர்ந்தோங்கும்போது, சந்நியாஸம் கை கொடுக்கும். விருப்பப்படி நாம் ஏற்கும் ஒரு ஆச்ரமமல்ல சந்நியாஸம். அது பதவி உயர்வு அல்ல. வைராக்கியம் வந்தவன் சந்நியாஸம் ஏற்கலாம். ஸன்யாசாச்ரம ஸ்வீகாரம், யதிதர்ம ஸமுச்சயம் போன்ற நூல்கள் அதன் திட்டத்தை வரையறுக்கும். அவற்றைப் பின்பற்றி சந்நியாஸம் ஏற்கலாம்.

கோயிலுக்கு வெளியிலிருந்து வரும் நைவேத்தியங்களை ஸ்வாமிக்கு சமர்பிக்கலாமா?

பெருமாளும் பிரம்மனும் பரமேஸ்வரனின் அடி-முடி தேடிய திருக்கதையில்... தாழம்பூ பிரம்மனுக்காகப் பொய் சாட்சி கூறியது என்று படித்திருக்கிறோம். அதனால், சிவபூஜையில் தாழம்பூவுக்கு இடமில்லை என அது சாபம் பெற்றதாகவும் கூறுவர்.

ஆனால், தாழம்பூ கதையை ஏற்க முடியாது. சிவனாரின் உச்சியில் இருந்து தாழம்பூ விழுந்தது எனில், சிவப் பரம்பொருளுக்குத் திருமுடி என்ற எல்லை ஒன்று இருந்தது என்றல்லவா அர்த்தமாகிவிடும்!  இது குறித்து தங்களின் விளக்கத்தை வேண்டுகிறேன்.

- தி.சபாபதி, நெல்லை-2

அணுவிலும் அணுவான 'பரமாணு’ அளவு அவன் உருவம். கண்ணுக்குப் புலப்படாதது பரமாணு. ஈசன் கண்ணுக்குப் புலப்படாத அளவு சின்னதாகவும் இருப்பார்; பெரிய பொருளிலும் பெரிதானதும் அவர் வடிவமே!

'மிகப் பெரிய பொருள் ஆகாசம். அது அவரிடமிருந்து வந்ததால், ஆகாயத்தைவிட கொள்ளளவும் பரப்பளவும் உள்ளவர் (ஆத்மன ஆகாச: ஸம்பூத:)’ என்று ஈசனை வரையறுக்கும் வேதம் (அணோரணீயான் மஹதோ மஹீயான்). தென்படும் இடைவெளியில் (ஆகாசம்) எல்லாம் அவர் கண்கள் இருக்கும். அவருடைய முகம், கைகள், கால்கள் அத்தனையும் வியாபித்து இருக்கும். மேலுலகம், கீழுலகம் இரண்டையும் படைத்து, அதில் முழுமையாக நிறைந்து நிற்கிறார் என்கிறது வேதம் (விச்வத: சஷ§ உத விச்வதோமுகோ...).

அவரது எல்லையை அவரே வகுத்துக் கொண்டிருக்கிறார். மற்றவர்களால் எல்லையை வரையறுக்க இயலாது; காண இயலாது. 'எல்லையைக் காண இயலாது’ என்பதுதான் நிபந்தனை. எல்லை இல்லை என்றல்ல. சிந்தனையின் எல்லை அவர் (பிரம்மைவ வாச: பரம்ம வ்யோம). அவரை எட்டிவிட்டால், அதற்கு  மேலும் மனித சிந்தனை எழ வழியில்லை. சிந்தனை விஷயம் (ஸப்ஜெக்ட்) அவனன்றி வேறொன்றும் இல்லை. இப்போது எல்லை தெரிந்துவிட்டது. ஆகையால், அவருக்கும் அளவு உண்டு என்று சொல்லலாம். நாம் அவரது எல்லையைத் தெரிந்துகொள்ளவில்லை. அவரே தனது எல்லையைச் சுட்டிக்காட்டினார்; தனது சைதன்யத்தின் நிறைவால் என்றுதான் பொருள். அவரளவுக்கு எங்கும் பரவியிருக்கும் பொருள் வேறொன்று இல்லை. அவர் எல்லைதான் பிரபஞ்சத்தின் எல்லை. அதை நிலைநாட்ட பிரம்மனும் பெருமாளும் தேடினர். கிடைக்கவில்லை என்பதால், பரம்பொருளின் பெருமை விளக்கப்படுகிறது. அவருக்கு முடியிருக்கா, அடியிருக்கா என்பதல்ல விஷயம்; அவரது முடியும் அடியும் காணமுடியாது என்பதுதான் தத்துவம். அதை நிறைவு செய்ய தாழம்பூ கதையானது பாமரர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது.

கோயிலுக்கு வெளியிலிருந்து வரும் நைவேத்தியங்களை ஸ்வாமிக்கு சமர்பிக்கலாமா?

வானத்தின் எல்லை கண்ணுக்குப் புலப்படாது. நட்சத்திர மண்டலங்களில் இருந்து விண்மீனும் தூமகேதுவும் கீழே விழுவது உண்டு. ஆகாசத்தில் இருந்து ஒளிப் பிழம்பு பூமியை நோக்கி வருவதைப் பார்த்தவர்கள் உண்டு. உடனே, அது ஆகாசத்தின் எல்லையில் இருந்து வந்ததாகக் கூற இயலாது. நட்சத்திர மண்டலத்தையும் தாண்டி எவ்வளவு தொலைவு ஆகாசம் நீண்டு இருக்கும் என்று எவருக்கும் தெரியாது.

நமது கண்ணுக்குப் புலப்படும் நட்சத்திர மண்டலத்தை எல்லையாக நாம் நினைக்கலாம். ஆனால், உண்மை அதுவல்ல. முடியின் எல்லையில் இருந்து தாழம்பூ வந்ததாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும். சிரசின் அளவு நமக்குத் தெரியாது. நமது உடலைப் போன்று அவருடைய உடலையும் எண்ணி, நம் மனம் அதை வரையறுப்பது பொருந்தாது. உண்மையில், அவருக்கு உருவமே கிடையாது. எங்கும் நிறைந்து விளங்கும் பேராற்றல் பெற்ற பெரும் சக்தி. அதற்கு எப்படி அடி- முடி இருக்க முடியும்? லிங்க வடிவில் தோன்றியவனில் அங்க அடையாளங்கள் ஏது? பஞ்சாயதன பூஜையில் பாண லிங்க வடிவில் கைக்கு அடக்கமாக இருப்பார். அவரை அளக்கும் பொருட்டு அடி-முடி பார்க்க இருவரும் ஏன் செயல்பட வேண்டும்?

கதையில் விஷயம் இல்லை; அதன் கருத்துதான் விஷயம். பிரம்மனின் நாவில் கலைமகள், பெருமாளின் மார்பில் அலைமகள், ஈசனின் உடலில் பாதி மலைமகள் என்கிற விளக்கம் எப்படிப் பொருந்தும்? தங்களைப் போன்ற புது சிந்தனையாளர்களுக்கு இந்த மூன்றும் பொருந்தாதே? சரஸ்வதி எப்படி நாவில் இருக்க முடியும்? அதுபோன்று மார்பிலும் உடலிலும் இரு அம்மையார் இருப்பது இன்றைய சிந்தனைக்குப் பொருந்தாது. படைப்பிலும் இன்னொருவரை தனது அங்கத்தில் வைக்க இயலாது. அங்கெல்லாம் ஏன் கேள்வி எழவில்லை?!

நமது சிந்தனைக்கு உகந்தவாறு புராணக் கதைகளை எடை போடக்கூடாது. அதன் இலக்கை அறியாமல், நாம் நினைக்கும் இலக்கை புராணத்தின் இலக்காக எண்ணக் கூடாது. அவரது ஆற்றல் சிந்தனைக்கு எட்டாதது. புராணத்தின் அணுகுமுறை வேறு. அதை, நமது சிந்தனைப்படி விமர்சித்துக் கொச்சைப்படுத்தக் கூடாது. விஷயம் தெரியாமல் விமர்சனத்தில் இறங்கி, தனது பெருமையைப் பறைசாற்றக் கூடாது. முதலில், புராண வரலாற்றின் தரத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அவற்றை விமர்சிக்கும் திறமை, மனித சிந்தனைக்கு இல்லை. நல்ல குருவை அணுகி, புராணத் தகவல்களின் உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள்.

தங்களின் சிந்தனைக்கு ஒரு வார்த்தை. ஆதியும் அந்தமும் இல்லாதவர் அவர். அவருக்கு அடி- முடி இருக்காது. என்றென்றும் இருப்பவருக்கு ஏது ஆதி... ஏது அந்தம்?! ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை. இல்லாத அடி- முடியைப் பார்க்க இயலாது. அந்தக் கதையின் சாரம் இதுதான்.

- பதில்கள் தொடரும்...

கோயிலுக்கு வெளியிலிருந்து வரும் நைவேத்தியங்களை ஸ்வாமிக்கு சமர்பிக்கலாமா?