கலகலக் கடைசிப் பக்கம்!


##~## |
'இதோ நாம் நிற்கும் ஆரியங்காவு, இதையடுத்து அச்சன்கோவில், குளத்துப்புழா, பந்தளம், எரிமேலி, சபரிபீடம் எனும் ஆறு கோயில்களைத்தான் ஐயப்பனின் ஆறுபடை வீடுகள்னு சொல்லுவாங்க. இதேபோல அச்சங்கோவிலும், குளத்துப்புழாவும், எருமேலியும் ஆற்றங்கரைக்குப் பக்கத்துல இருக்கிற கோயில்களா இருக்கு!'' என்றதும் பரமசாமி விழிகள் விரியப் பார்த்தார்.
'முருகப்பெருமான், ஆறுபடை வீட்டில் ஒன்றான பழநியில் பாலதண்டாயுதபாணியா இருப்பதுபோல, குளத்துப்புழையில பாலசாஸ்தாவா இருக்கார் ஸ்ரீஐயப்ப ஸ்வாமி. அச்சங்கோவில்ல கல்யாண சாஸ்தாவா அருள்புரியறார்'' என்று சொல்லிவிட்டு, இரண்டு பேரும் ஆற்றில் இறங்கிக் குளித்தோம்.
''பரமு, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? சிலப்பதிகாரத்தில் ஒன்பதாவது காதையாகிய 'கனாத்திறம் உரைத்த காதை’யில் 'சாத்தன்’ என்கிற தேவகுமாரனின் கதை சொல்லப்பட்டிருக்கு. இந்த சாத்தன்தான் சாஸ்தா. சாஸ்தாதான் ஐயப்பன்! விவரமா சொல்றேன் கேளுங்க. சேர நாடாகிய கேரளத்தைச் சேர்ந்த இளங்கோவடிகளால் எழுதப்பட்டதுதான் சிலப்பதிகாரம். இது, தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. புகார், மதுரை, வஞ்சி எனும் 3 காண்டங்களையும், 30 காதைகளையும் உடையது. புகார் காண்டத்தில் கதைத்தலைவனாகிய கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவி வீட்டில் தங்கிவிட, கண்ணகிக்கு ஆறுதல் சொல்லவந்த ஆசிரியர், கண்ணகியின் தோழி தேவந்தியின் கதையை எடுத்துரைக்கிறார்.
அதில்... முன்பொரு காலத்தில் வாழ்ந்த ஒருவனுக்கு இரண்டு மனைவி. மூத்தவளுக்குக் குழந்தை இல்லை. ஒருநாள், இளையவள் தன் குழந்தையை மூத்தவளிடம் கொடுத்துவிட்டுக் கணவனுடன் கோயிலுக்குச் செல்ல, மூத்தவள் அந்தக் குழந்தைக்குப் பாலூட்டியபோது, பால் தொண்டையில் விக்கி குழந்தை இறந்துபோனது. அவள் பயந்து குழந்தையை எடுத்துக்கொண்டு எல்லாக் கோயில்களுக்கும் ஓடி வேண்ட, கடைசியில் இடாகினிப் பேய் ஒன்று குழந்தைக்கு உயிர் தருவதாகச் சொல்லி வாங்கி, தன் வாயில் போட்டு விழுங்கிவிட்டது. அதைக் கண்டு அலறியவளுக்கு இரங்கி, அவளின் துன்பத்தைப் போக்குவதற்காகப் பாசண்டச் சாத்தன், தானே அக்குழந்தையின் வடிவாய் மாறி மலர்ச்சோலையில் கிடந்தான். இதனை, 'மஞ்ஞை போல் ஏங்கி அழுதாளுக்கு, அச்சாத்தன் அஞ்ஞை நீ ஏங்கி அழல் என்று முன்னை உயிலீக் குழவி காணாய் என்று அக்குழவியாய் ஓலீ; குயில் பொதும்பா; நீழல் குறுக’ன்னு சொல்லுது சிலப்பதிகாரம்.
குழந்தையைப் பார்த்து பூரித்தவள், அப்படியே அள்ளியெடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். அந்தக் குழந்தைதான், சாத்தன் எனும் பெயரில் வளர்ந்தான். அவன்தான் 'சாத்தன்’ எனும் தெய்வம்!'' என்று சொல்லிமுடித்தேன்.
இதைக் கேட்ட பரமசாமி, 'ஆரியங்காவு ஐயாவே! அச்சன்கோவில் அரசே! குளத்துப்புழை பாலகனே! பந்தளத்து ராஜாவே! எரிமேலி சாஸ்தாவே! சபரிமலை வாசனே!’ என உரத்துக் குரல் எழுப்ப, அதைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் மெய்சிலிர்ப்போடு 'ஸ்வாமியே சரணம் ஐயப்பா’ என கோஷம் எழுப்பினார்கள்!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!