சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

மூன்றாவது சீவரம்... காஞ்சிபுரம்!

மூன்றாவது சீவரம்... காஞ்சிபுரம்!

மூன்றாவது சீவரம்... காஞ்சிபுரம்!
மூன்றாவது சீவரம்... காஞ்சிபுரம்!
##~##
ல தருணங்களில் மகான்கள் தரும் திருவாக்குகள் சூட்சுமங்கள் நிறைந்ததாக இருக்கும். அவற்றின் முடிச்சவிழ்ந்து- பொருள் புரியும்போது, மலை போன்ற பிரச்னைகளும் கடுகாகச் சிறுத்து, காணாமல் போகும்.

ஸ்ரீமடத்தில் பணிபுரிந்த முதியவர் ஒருவருக்கும் அப்படி யரு சூட்சுமம் நிறைந்த அருள்வாக்கு கிடைத்தது. அவரது மகன் விஷயமாக சில பிரச்னைகள். அதற்கு தீர்வு பெற வேண்டி, மகா பெரியவரை வந்து தரிசித்தார் அந்த முதியவர்.

நடமாடும் தெய்வம் அபயஹஸ்தம் காட்டிச் சொன்னது...

''மூன்று சீவரங்களுக்கும் சென்று அங்குள்ள இறை மூர்த்தங்களைத் தரிசித்து வா... பிரச்னைகளுக்குப் பரிகாரம் கிடைக்கும்!''

மூன்று சீவரங்கள் என்றால் மூன்று திருத்தலங்களா? அப்படியெனில் அந்தத் தலங்கள் எங்கிருக்கின்றன? ஏனோ... இதுகுறித்துப் பெரியவாளிடம் விளக்கம் கேட்கவில்லை முதியவர். பெரியவாளும் விளக்கிச் சொல்லவில்லை.

முதியவர் ஸ்ரீமடத்துக்கு வந்த அன்பர்களிடம் எல்லாம் மூன்று சீவரங்கள் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். ஆனால், எவரும் சரியான பதிலைச் சொல்லவில்லை.

இந்த நிலையில் மகாபெரியவாளைத் தரிசிக்க, அவர் முகாமிட்டிருந்த தேனம்பாக்கத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே பிரம்மன் வழிபட்ட ஸ்ரீபிரம்மபுரீஸ்வர் கோயில் இருக்கிறது. அந்த பகுதிக்கே பிரம்ம காஞ்சி என்றொரு பெயர் உண்டு. மகா பெரியவா பல காலம் அங்கு தங்கி யிருந்தார்.

தரிசனத்துக்குச் சென்றிருந்தபோது ஸ்ரீமடத்து முதியவரை யும் சந்தித்தேன். அதற்குள்ளாக அவர் மூன்று சீவரங்களில் இரண்டைத் தெரிந்துகொண்டிருந்தார். அவர் கூறிய தகவலின்படி, ஒன்று வாலாஜாபாத்; இந்தத் தலத்தை தண்டு சீவரம் என்பார்கள். அந்த ஊருக்கு அருகிலுள்ள பழைய சீவரம் என்ற ஊர் மற்றொரு திருத்தலம்.

மூன்றாவது சீவரம்... காஞ்சிபுரம்!

வாலாஜாபாத் அருகில் திருமுக்கூடல் எனும் வைணவத் தலம் உள்ளது. அங்கே கோயில் கொண்டிருப்பவர், ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி. பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய நதிகள் சங்கமிப்பதால், இந்தத் தலத்துக்கு திருமுக்கூடல் என்று திருப் பெயர் வந்ததாம். இந்த ஊருக்கு அருகில் உள்ள பழைய சீவரத்தில், மலை மீது ஸ்ரீலட்சுமி நரசிம்மன் கோயில் கொண்டுள்ளார்.

ஆக, இரண்டு சீவரங்கள் குறித்த விவரம் தெரிந்துவிட்டது!

''மூன்றாவது சீவரம் எங்கிருக்கிறது தெரியுமா?'' என்று முதியவர் கேட்டபோது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. எவ்வளவு யோசனை செய்து பார்த்தாலும், அதுபோன்று மற்றொரு தலம் இருப்ப தாக எனக்குப் புலப்படவில்லை. 'மன்னிக்கவும்; தெரியவில்லை’ என்று அவரிடம் கூறிவிட்டு, யோசனையுடன் திரும்பினேன்.

ஆண்டுகள் பல ஓடிவிட்டன. மாங்காடு திருத்தலத்தில் சில காலம் வசிக்கும் பாக்கியம் அடியேனுக்கு ஏற்பட்டது. அப்போது, தேவி புராணங் களைப் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. குறிப்பாக, காஞ்சி மகிமை, ஸ்ரீகாமாட்சி அம்மன் புராணம், தேவி மகாத்மியம் முதலான நூல்களைப் படித்தேன்.

அன்னை காமாட்சியின் திருவருளாலும், மகா பெரியவாளின் குருவருளாலும் எனக்கொரு விஷயம் புலப்பட்டது.

ஆமாம்... காஞ்சி காமாட்சி அம்பாள் மீது பக்திப் பாடல்கள் எழுதும் நான், 'அம்மா நீ இருப்பதோ ஸ்ரீபுரம்’ என்று ஒரு பாடலில் குறிப்பிட்டிருந்தேன். மகாபெரியவா சொன்ன மூன்று சீவரங்களில் மூன்றாவது தலம் காஞ்சி மாநகரமே என்று விளங்கியது.

காஞ்சிபுரம் ஸ்ரீசக்ர வடிவில் இருப்பதாகச் சொல்வர். காஞ்சியில் உள்ள மற்ற கோயில்கள் உத்ஸவங்களின் போது, திருப்பவனி வரும் அந்தக் கோயில்களின் மூர்த்திகள், காமாட்சியம்மை ஆலயத்தை வலமாகச் சுற்றிச் செல்வது வழக்கம் என்றும் கேள்விப்பட்டேன். அன்னையின் அருகில் நின்றுகொண்டு சரஸ்வதியும், லட்சுமியும், சாமரம் வீசுவதாகச் சொல்கின்றன புராணங்கள். 'வாணி, ரமா சேவிதாம்’ என்று ஒரு ஸ்லோகத்தில் குறிப்பிடப்படுகிறது. அம்பிகையின் நயனங்களில் சரஸ்வதியும், லட்சுமியும் இருப்பதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. காஞ்சி- ஸ்ரீகாமாட்சி ஆலயத்தில் உள்ள ஸ்ரீசக்கரத்தில் அஷ்ட லட்சுமியர் உருவங்களும் உள்ளன.

இத்தகு புராணப் பெருமைகள் வாய்ந்த காஞ்சிக்கு ஆதிநாளில் ஸ்ரீபுரம் என்ற பெயர் வழக்கத்தில் இருந்திருக்கிறது. கா ஸ்ரீ புரம் என்று பிரிக்கும்போது... கா- கலைமகளையும் ஸ்ரீ என்பது திருமகளையும் குறிக்கும்.

ஆக, காஞ்சிபுரத்தின் 'ஸ்ரீபுரம்’ என்ற திருப் பெயரே சீவரம் என்று மருவியிருக்கிறது என அறிந்தபோது, காஞ்சி மகான் என்னும் அந்த ஆன்மிகப் பெருங்கடலுக்குள், ஞானக் கடலும் ஐக்கியமாகியிருப்பதை உணர்ந்து சிலிர்த்தேன்!