சபரிமலை நாயகனே சரணம்!

##~## |
கேரள மாநிலம் பாலக்காடுதான் பூர்வீகம் என்றாலும், பலகாலமாக திருச்சி மேலசிந்தாமணியில் வசித்து வருகிறார். வெங்கடாசலபதியின் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி, தம்பி சுப்ரமணியன் என மூன்று பேருமே குருசாமிகள்தான்!
வருடந்தோறும் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள், இவர்களிடம் மாலையணிந்து இருமுடி கட்டிச் செல்கிறார்களாம்.
பிள்ளையார்சுழி போட்டுவிட்டு எழுதத் துவங்குவது போல, சகோதரர்கள் மூன்று பேரும் ஸ்ரீஸ்வாமி ஐயப்பன் சரணம் என்று எழுதிவிட்டுத்தான் எதுவாக இருந்தாலும் எழுதுகின்றனர். தவிர, ஸ்ரீராமஜெயம் போல, ஸ்ரீஸ்வாமி ஐயப்பன் சரணம் என்று நோட்டு நோட்டாக எழுதி வைத்திருக்கின்றனர்.
''எங்க குடும்பத்தை வாழ வைச்சிருக்கறதே ஸ்ரீஐயப்ப ஸ்வாமிதான். வார்த்தைக்கு வார்த்தை அவரோட திருநாமத்தைச் சொல்லிக்கிட்டே இருக்கிறது மகா புண்ணியம். ஐயப்பனுக்குக் கோயில் கட்டணும்னு ஆசைப்பட்டோம். அதனால அழகா விக்கிரகம் செஞ்சு, வீட்லயே வைச்சு தினமும் அபிஷேக ஆராதனைகள் பண்ணிக்கிட்டிருக்கோம். இதைவிட கொடுப்பினை வேற என்ன வேணும் எங்களுக்கு!'' என, கண்ணில் நீர் மல்கப் பரவசத்துடன் தெரிவிக்கும் கிருஷ்ணமூர்த்தி குருசாமிக்கு 71 வயது.
மார்கழி மாதம் துவங்கியதும், ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு லட்சார்ச்சனையும் அருகிலேயே அன்னதான வைபவமும் சிறப்புற நடைபெறுமாம். ஆரம்பத்தில் அன்னதான சேவையை இவர்களே செய்து வந்தனர். பிறகு, அன்பர்களும் இந்தச் சேவையில் பங்கெடுக்கத் துவங்கினராம்.

''எங்க வீட்ல மத்த அறைகளைவிட பூஜையறைதான் ரொம்பப் பெருசு. தவிர, பூஜையறையில மட்டும் இல்லாம, எங்கே திரும்பினாலும் சபரிகிரிவாசனோட திருமுகத்தைப் பார்க்கலாம். இதுவரைக்கும் ஒண்ணா முடிகட்டிட்டுப் போறதை வழக்கமா வைச்சிருக்கோம். எங்களுக்குக் கண்கண்ட தெய்வம், குலதெய்வம், இஷ்டதெய்வம் எல்லாமே ஹரிஹரசுதன்... ஐயப்ப ஸ்வாமிதான்!'' என்று சொல்லும் கிருஷ்ணமூர்த்தி, 48 வருடங்களாகச் சபரிமலைக்குச் சென்றிருக்கிறார். வெங்கடாசலபதி 44 வருடங்களாகவும், தம்பி சுப்ரமணியன் 41 வருடங்களாகவும் மலைக்குச் சென்று வருகின்றனர்.
''எங்க குடும்பத்துல ஒரு சாபம் இருக்குன்னு சொல்லுவாங்க. அதாவது, எங்க வீட்ல பிறக்கற முதல் குழந்தை, கொஞ்ச நாள்ல இறந்துடும். எங்க அப்பாவுக்கும், எங்க அண்ணனுக்கும், எனக்கும் மூத்தக் குழந்தை பிறந்து இறந்துடுச்சு. இதையெல்லாம் பார்த்த என் தம்பி சுப்ரமணியன், கல்யாணமே செஞ்சுக்கலை. ஆனா, யார் கொடுத்த சாபமோ... அதையெல்லாம் போக்கி, எங்களையும் எங்க வம்சத்தையும் வாழ வெச்சுக் காபந்து பண்ணிட்டிருக்கறது சாட்ஷாத் அந்த ஐயப்ப ஸ்வாமிதான்!'' என்று சொல்லிவிட்டுக் கலங்குகிற சகோதரரை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டனர் சகோதரர்கள்.
''வருஷத்துல 280 நாட்கள், ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு விரதம் இருக்கறவங்க நாங்க! சித்திரை, ஆடி, கார்த்திகைன்னு அந்தந்த மாதங்கள்ல சபரிமலைக்குப் போய், ஸ்ரீமணிகண்ட ஸ்வாமியைத் தரிசனம் பண்ணிடுவோம். எப்படியும் இதுவரை 200 தடவைக்கும் மேலே சபரிமலைக்குப் போய், ஐயனைக் கண்ணாரத் தரிசனம் பண்ணியிருப்போம். இடையே, அம்மா இறந்த வருடத்தில் மட்டும் செல்லவில்லை.
இன்னிக்கி மாதிரி வெளிச்சமோ, பக்தர்கள் கூட்டமோ அந்தக் காலத்துல கிடையாது. பெரிய பாதை வழியா போகும்போது விலங்குகளின் நடமாட்டமெல்லாம் இருக்கும். ஆனாலும், ஒவ்வொரு தருணத்திலும் பக்கத் துணையாக இருந்து காத்தருளியது ஸ்ரீஐயப்பன்தான்!
எங்களுக்கு ஒரேயரு ஆசைதான்... மூச்சு இருக்கிற வரைக்கும், இந்த உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் ஐயன் குடியிருக்கும் சபரிமலைக்குப் போய் தரிசனம் பண்ணிக்கிட்டே இருக்கணும். அவ்வளவுதான்... வேற எதுவும் வேணாம் எங்களுக்கு! நம்பிக்கையோட அவனின் திருப்பாதத்தைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டாப் போதும்... நம்மை குறையற வாழ வைப்பான் மணிகண்டன்!'' - கண்கள் மூடி, நெஞ்சில் கைவைத்துச் சொல்கிறார் கிருஷ்ணமூர்த்தி குருசாமி.
- பு.விவேக் ஆனந்த்
படங்கள்: தே.தீட்ஷித்