சபரிமலை நாயகனே சரணம்!

##~## |
''1960-ஆம் வருஷம். நவாப் ராஜமாணிக்கம் நடத்திய ஸ்ரீஐயப்ப சுவாமி நாடகம் பார்த்தேன். அதன் தாக்கம், சபரிமலைக்குச் செல்லும் ஆசை மனசுல உண்டாயிடுச்சு. ஆனாலும் வேலைகளை எல்லாம் விட்டுட்டு எப்படி போவது? நானொரு நெசவாளி. நெசவு செய்யலைன்னா காசு கிடைக்காது. இப்படியே இரண்டு வருஷம் ஓடிடுச்சு. பிறகு அப்படி இப்படின்னு என்னோட பத்தொன்பதாவது வயசுல முதன்முதலா சபரிக்கு கிளம்பினேன். இந்த வருஷம் 51-வது யாத்திரை'' - பெருமிதம் பொங்க விவரிக்கும் ஜெயராமன் குருசாமிக்கு ஐயன் ஐயப்பன் தந்த அருளனுபவம் அற்புதமானது.

''நான் ஐயனிடம் அதைக்கொடு இதைக்கொடு என்று எதுவும் கேட்டதில்லை. ஒவ்வொரு முறையும் சுவாமி ஐயப்பன்கிட்ட இந்த விஷயத்தை வேண்டிக்கிடணும்னு நினைச்சுக்கிட்டு போவேன். ஆனால், சந்நிதானத்தில் சுவாமியைத் தரிசிக்கும்போது, உலகமே மறந்துபோயிடும். எதையும் கேட்கத் தோணாது. முதலில் சில வருஷங்கள்தான் இப்படி. அதன்பிறகு ஸ்வாமி நமக்குன்னு எதைத் தர்றாரோ அதுவே போதும்னு முடிவு பண்ணிட்டேன்.
சரி... ஸ்வாமிகிட்ட நாம எதையும் கேட்க வேணாம். ஆனால், அவருக்கு ஏதாவது செஞ்சாகணும்னு தோணுச்சு. என்ன செய்யலாம்னு யோசிச்சோம். பந்தளத்திலிருந்து சபரிமலைக்கு வரும் சுவாமி ஐயப்பனோட திருஆபரணப் பெட்டி, சுமார் 110 கிலோமீட்டர் தூரத்துக்கு வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தபடியும் வந்துசேரும். நானொரு நெசவாளிங்கறதால, திருஆபரணப் பெட்டிக்கு நல்ல பொன்னாடை செய்து போர்த்திக் கொண்டு வரலாமேன்னு ஆசை. இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் பேசினேன். அவர்களும் சம்மதித்தார்கள்.

பிறகென்ன... அன்னிலேர்ந்து இப்பவரைக்கும் மூணு திரு ஆபரணப் பெட்டிக்கும் அற்புதமா பொன்னாடை நெய்து சாத்திட்டு வர்றோம். ஐம்பதாயிரம், அறுபதாயிரம் ரூபாய் வரை செலவாகும். பொன்னாடையின் ஓரங்களில் 112 வெள்ளி மணிகளையும் தொங்கவிடுவோம். இதில், பக்தர்களின் பங்களிப்பும் உண்டு. ஸ்ரீஐயப்பனை வேண்டிக்கிட்டு பலன் அடைந்த பக்தர்கள், பொன்னாடை- வெள்ளி மணிகளுக்குக் காணிக்கை தந்து, தங்களோட நேர்த்திக்கடனை செலுத்துறாங்க. அதனால, எங்களுக்கும் பொன்னாடை சாத்தறது சுலபமாயிடுச்சு. அதுமட்டுமில்லீங்க... ஆபரணப் பெட்டியை சுமக்கும் பாக்கியமும் இரண்டு முறை எனக்குக் கிடைத்தது. எல்லாத்துக்கும் ஐயப்பனோட திருவருளே காரணம்.''- பரவசத்துடன் விவரிக்கிறார் ஜெயராமன் குருசாமி.
பந்தளம் துவங்கி சபரி வரைக்கும் ஆபரணபெட்டியுடன் எப்போதும் ஒரு நாய் கூடவே வருமாம். பிறகு சபரியிலிருந்து பந்தளம் செல்லும்போதும் காவலாய் பின்தொடருமாம். அப்படி ஒரு வருடம் ஆபரணப் பெட்டியுடன் வந்த நாய் ஒன்று, இவர்களின் குழுவோடு சேர்ந்து வந்துவிட்டதாம். இப்போது இவரது வீட்டில் செல்லமாய் வளர்ந்து வருகிறது அந்த பைரவ வாகனம்!
சிலிர்ப்பு மாறாமல் நாம் விடைபெற யத்தனிக்க, இந்த வருடத்துக்கான பொன்னாடையை காண்பித்தார் ஜெயராமன் குருசாமி. பொன்னாய் மணியாய் ஜொலித்தது அந்தப் பட்டாடை. ஐயன் ஐயப்பனையே நேரில் தரிசித்த பரவசம் நமக்குள்!
- மு.சா.கௌதமன்
படங்கள்: செ.சிவபாலன்