மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஞானப் பொக்கிஷம்: 19

ஞானப் பொக்கிஷம்: 19

ஞானப் பொக்கிஷம்: 19
ஞானப் பொக்கிஷம்: 19
##~##
யணம்! பயணம் செய்யாதவர்கள் யாருமே இல்லை. இரவு - பகலாகப் பயணம் நடந்து கொண்டிருக்கிறது.

''அதெல்லாம் இல்லை. கடந்த ஒரு வார காலமாக என் அறையை விட்டு, நான் வெளியே வரவே இல்லை. எங்கும் பயணம் போகவில்லை'' என்று சொன்னால் கூட... நம் உடம்பில் உள்ள ரத்தம் முதலானவை, பயணம் செய்து கொண்டேதான் இருக்கின்றன. நம் மனமோ, எங்கெல்லாமோ போய் வருகிறது. தூங்கும் போது, நம் ஸ்தூல உடம்பு தூங்கினால் கூட சூட்சும உடம்பு (கனவில்) எங்கெங்கோ போய் வருகிறது. ஆகையால் பயணம் என்பது எப்போதும் உண்டு; எல்லோருக்கும் உண்டு.

அப்படியான வாழ்க்கைப் பயணத்தில், நாம் எந்த விபத்திலும் அகப்பட்டுக் கொள்ளாமல் நல்லவிதமாக வாழ வேண்டும் என்பதற்காகவே ஆன்மிக வழிபாட்டு முறைகளை வகுத்துத் தந்தார்கள். அவை, ஆகமங்கள் என்ற பெயரில் உள்ளன. பெரிய அளவிலான அந்த ஆகமங்களைப் படித்துணர நமக்கு நேரம் இருக்காது என்பதை உணர்ந்த முன்னோர்கள், ஆகமங்களின் சாரத்தையும் சிறிய அளவில் கொடுத்திருக்கிறார்கள்.

ஆகமங்களின் சாரமான அந்த நூலின் பெயரை, வழக்கப்படி கட்டுரையின் முடிவில் பார்க்கலாம்.

முதலில் கோயில் உண்டியலில் இருந்து தொடங்கலாம். கோயில் உண்டியல்களில் பணம், வெள்ளி, தங்கம் எனப் பலவிதமாகவும் பக்தர்கள் போடுகிறார்கள். அதைத் தவிர நன்கொடையாகவும் பலர் கொடுக்கிறார்கள். இவற்றையெல்லாம் எப்படிச் செலவு செய்ய வேண்டும் என்கிறது ஆகமங்களின் சாரமான இந்நூல்.

பக்தர்கள் கொடுக்கும் செல்வத்தைப் பத்து பங்குகளாகப் பிரிக்க வேண்டும். அவற்றில்...

அபிஷேகத்துக்கு - ஒரு பங்கு
யாகத்துக்கு - ஒரு பங்கு
ஹோமத்திரவியங்களுக்கு - ஒரு பங்கு
ஆசார்யனுக்கு - ஒரு பங்கு
மூர்த்திக்கு (ஸ்வாமிக்கு) - இரண்டு பங்கு
வேதம், மந்திர ஜபம் ஆகியவற்றுக்கு... - ஒரு பங்கு
தானம், கொடை - ஒரு பங்கு
அடியார்களுக்கு அன்னமிட - ஒரு பங்கு
நைவேத்தியத்துக்கு - ஒரு பங்கு
-எனச் செலவு செய்ய வேண்டும்.

அற்புதமான இந்தப் பங்கீட்டு முறையைச் சொல்லும் பாடல்:

புண்ணியர்கள் நற்பொருள்சி வாற்பிதமி தென்றே
புகன்றுதவ அதனையாவின்
பொறையுடன் கைக்கொண்டு பங்குபத் தாக்கியப்
பொருளினொரு பங்கதனையே
நண்ணுமபி டேகந்த னக்குவேள் விக்கொன்று
நவிலோம திரவியத்தில்
நாடுபங் கொன்றுதே சிகர்தமக் கொருபங்கு
நல்ல மூர்த் திக்கிருமடங்
கெண்ணரிய மறைமந்தி ராதிய செபத்தினுக்
கியலுமொரு பங்குதானம்
ஈதலுக் கொருமடங் கன்பர்போ சனமதற்
கேற்றதொரு பங்கிவளவே
திண்ணியவர்கள் ஓதுநை வேத்தியத் திற்கொன்று
சிந்தியந் தனிலுரைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே

இவ்வாறு கோயிலின் வருமானத்தைச் செலவு செய்ய வேண்டிய முறைகளைப் பற்றிக்கூறும் இந்நூல், கருவறையில் ஸ்வாமியின் திருவுருவை நிலைநிறுத்துவதற்குத் தேவையான அஷ்ட பந்தன மருந்து தயாரிக்கும் முறையையும் கூறுகிறது.

கொம்பரக்கு - ஒரு பங்கு, கருங்குங்கிலியம் - 3 பங்கு, சுக்கான் - 3/4 (முக்கால்) பங்கு, காவிக்கல் - 3 பங்கு, வெண்மெழுகு - 3 பங்கு, வெண்ணெய் - 3 பங்கு, செம்பஞ்சு - 3 பங்கு, சாதிலிங்கம்  - 1/4 (கால்) பங்கு. இவற்றைச் சேர்த்து இடித்து இளமெழுகு பதத்தில் எடுத்துச் செய்வதே அஷ்ட பந்தன மருந்து தயாரிக்கும் முறையாகும்.

கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய முறையைப் பற்றிக் கூறும் இந்நூல், பூஜா காலங்களில் - எந்தந்த காலத்தில் தரிசனம் செய்தால் என்னென்ன பலன் எனவும் கூறுகிறது. காலசந்தி, உச்சிக்காலம், சாயர¬க்ஷ, அர்த்த ஜாமம் ஆகிய பூஜா காலங்களையும் வரையறை செய்கிறது இந்நூல்.

காலசந்தி செய்ய வேண்டிய காலம்: சூரிய உதயம் முதல் மூன்று நாழிகைக்குள் செய்வது உத்தமம்; ஐந்து நாழிகைக்குள் செய்வது மத்தியமம்; ஆறு நாழிகைக்குள் செய்வது அதமம் (ஒரு நாழிகை என்பது - 24 நிமிடங்கள்).

உச்சிக்கால பூஜை: சூரியன் உதித்து, பன்னிரண்டு நாழிகை அளவில் செய்ய வேண்டும்.

சாயர¬க்ஷ: பிரதோஷ காலத்தில், அதாவது சூரியன் மேற்கே அஸ்தமன மலை வாயிலில் இருக்கும்போது செய்ய வேண்டும்.

அர்த்த ஜாம பூஜை: சூரியன் மறைந்து, பத்து நாழிகை அளவில் செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறும் இந்நூல், ஒவ்வொரு கால பூஜையின் போதும் - அபிஷேகம் செய்ய வேண்டிய தீர்த்தத்தின் அளவு, உபயோகிக்க வேண்டிய வஸ்திரத்தின் நிறம், பூக்கள் முதலானவற்றைப் பற்றியும் விரிவாகவே கூறுகிறது. மேலும், என்னென்ன நட்சத்திரங்களில் எந்தெந்த மலர்களைக் கொண்டு பூஜிக்க வேண்டும் என்று விவரிப்பதுடன், ஷோடசோபசாரம் என்னும் 16 விதமான உபசாரப் பூஜைகளையும், அவை ஒவ்வொன்றையும் எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்ற காலக் கணக்கையும் இந்த நூல் கூறுகிறது.

வளர்த்திக் கொண்டு போவானேன்... கோயில் வழிபாட்டு முறைகளைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் இந்த நூல் கூறுகிறது. அபூர்வமான இந்த நூலின் பெயர் - நடராச சதகம். ஸ்ரீமத் சிதம்பர நாத முனிவர் என்பவர், 245 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய அற்புதமான நூல் இது. இவர், திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் பத்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகளிடத்தில் உபதேசம் பெற்றவர்.

தருமபுர ஆதீன வெளியீடாக வந்த இந்நூல், பக்தர்கள் அனைவரும் படித்துணர வேண்டிய ஞானப் பொக்கிஷம்!

- இன்னும் அள்ளுவோம்...