Published:Updated:

கேரள திவ்ய தேசங்கள்

கேரள திவ்ய தேசங்கள்

கேரள திவ்ய தேசங்கள்
கேரள திவ்ய தேசங்கள்

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்தஎன்
திருவாழ் மார்வற்கு என்திறம் சொல்லார் செய்வது என்?
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு
ஒருபாடு உழல்வான் ஓர்அடி யானும் உளன்என்றோ?

- நம்மாழ்வார் (திருவாய்மொழி)

##~##
பொருள்:
மக்கள் தத்தம் சொந்தக் காரியமாக ஆழ்வார் திருநகரியில் இருந்து திருவண்பரிசாரம் செல்கிறார்கள். அங்கிருந்து ஆழ்வார்திருநகரி செல்கிறார்கள். இப்படி இவ்விரு ஊர்களுக்கும் வருவோரும் போவோருமாய் இருக்க, என் விஷயத்தை அங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமானிடம் கூற ஒருவரும் இல்லையா? அங்கே உள்ள லட்சுமிநாதனான எம்பெருமானிடம், 'அழகுள்ள சங்கு, சக்கரம் ஆகியவற்றைத் தாங்கிக்கொண்டு நீர் உலகைக் காக்கத் திரிகிறபோது, உம்முடன்கூட பணிசெய்யும் அடியவன் ஒருவனும் உள்ளான்’ என்று என்னைப் பற்றிச் சொல்ல மாட்டார்களோ? நான் இனி என்ன செய்வேன்?

பண்டைய கேரளாவின் எம்பெருமானுடைய திவ்ய தேசங்களாகப் பட்டியலிடப்பட்டு, இப்போது தமிழகத்தில் இருக்கும் திருத்தலங்கள் திருவட்டாறு மற்றும் திருவெண்பரிசாரம். நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது திருவெண்பரிசாரம். 'திருப்பதிசாரம்’ என்றால்தான் எல்லோருக்கும் புரிகிறது. இங்கே மூலவரின் திருநாமம் ஸ்ரீதிருவாழ்மார்பன். மற்ற திவ்ய தேசங்களில் பெருமாளின் வலது மார்பில் திகழும் பெரியபிராட்டியார், இங்கே இடது மார்பில் குடிகொண்டிருக்கிறார்.

கேரள திவ்ய தேசங்கள்
கேரள திவ்ய தேசங்கள்

முன்னொரு காலத்தில் பெருமாளின் தரிசனத்தை நேரில் காணும்பொருட்டு சப்த ரிஷிகளும் தவம் இருந்தனர். முதலில் சிவனுடைய உருவத்திலும், பின்னர் மகாவிஷ்ணுவின் உருவத்திலும் பெருமாள் சேவை சாதிக்க... பெருமாளிடம் அதே திருக்கோலத்தில் பூமியில் இருந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுக்க வேண்டும் என்று சப்த ரிஷிகள் கோரிக்கை வைத்தனராம்.

அதை ஏற்ற பெருமாள், திருவெண்பரிசாரத்தில் சப்த ரிஷிகள் சூழ்ந்து நின்று சேவிக்க, அவர்கள் விருப்பப்படியே சேவை சாதித்து வருகிறார். பெருமாள் இங்கு நான்கு திருக்கரங்களுடன், சங்கு சக்ரதாரியாக அழகுத் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்த பிறகும் அவருடைய சீற்றம் அடங்கவில்லை. எல்லோரும் அஞ்சி நடுங்கி நிற்க, சிவனும் பிரம்மாவும் இரணியனின் மகன் பிரகலாதனை அணுகி, பெருமாளைச் சாந்தப்படுத்துமாறு வேண்டினார்கள். அதன்படி, தன் பக்தன் பிரகலாதன் வேண்டியதால், பெருமாளும் சாந்தம் அடைந்தார்.

அதேநேரம், நரசிம்ம அவதாரத்தின்போது தன்னை விட்டு நீங்கிய திருமகளைத் தேடி வருகையில்... இறுதியாக திருவெண்பரிசாரத்தில் அவளைக் கண்டு, இடது மார்பில் தாங்கிப் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார் பெருமாள் என்று இன்னொரு கதையும் இங்கே சொல்லப்படுகிறது.

இத்தலத்தில் பெருமாளையும் பிராட்டியையும் ஒருசேரப் பிரார்த்திப்பதால், திருமகளின் அருளால் அளவற்ற செல்வம் வந்துசேரும் என்று நம்புகிறார்கள் பக்தர்கள்.

கேரள திவ்ய தேசங்கள்
கேரள திவ்ய தேசங்கள்

வேதத்தின் பொருளை அழகு தமிழில் விவரித்துரைத்த நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கை பிறந்த ஊர் என்னும் பெருமையும் திருவெண்பரிசாரத்துக்கு உண்டு.  பிள்ளைப்பேறு கிடைக்க இத்தலத்துப் பெருமாளிடம் வேண்டி, 41 நாட்கள் கடும் விரதமிருந்து, பெருமாளுக்கு ஊஞ்சல் உத்ஸவம் நடத்தித் துதித்த பின்னர், வைகாசி மாதம், விசாக நட்சத்திரத்தில் உடையநங்கைக்கு மகனாக நம்மாழ்வார் அவதரித்தார் என்பது வரலாறு.

இத்தலத்து மூலவர், வாமன அவதாரத்தை நினைவுபடுத்தும் வகையில் 'திருக்குறளப்பன்’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலான ஸ்தலங்களில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் பெருமாள், இங்கே வீற்றிருந்த திருக்கோலத்தில் கிழக்கே திருமுகம் நோக்கிச் சேவை சாதிக்கிறார். வலதுகாலை மடித்து, இடது காலைத் தொங்கவிட்ட திருக்கோலம். தாயாரின் திருநாமம் ஸ்ரீகமலவல்லி நாச்சியார். தீர்த்தம் லக்ஷ்மி தீர்த்தம். கருவறைக்கு இந்திர கல்யாண விமானம் என்று பெயர். நம்மாழ்வார் ஒரு பாசுரத்தால் இப்பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார்.

இங்குள்ள பெருமாளின் திருமேனி 'கடு சர்க்கரா’ எனும் மூலிகைக் கலவைக் கொண்டு உருவாக்கப்பட்டு, சிறந்த மருத்துவ குணங்கள் கொண்டதாகத் திகழ்கிறது. மூலவருக்குத் திருமஞ்சனம் இல்லை.

ஸ்ரீமந் நாராயணன் பத்தாவது அவதாரமாக கல்கி அவதாரம் எடுத்து வெண் பரியில் (வெள்ளைக் குதிரையில்) வருவார் என்கிறது புராணக் குறிப்பு. மகாவிஷ்ணுவின் பத்தாவது அவதார சாரமாக இத்தலம் திகழ்வதால், திருவெண்பரிசாரம் என்று பெயர் பெற்றதாகக் கூறுகிறார்கள். ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழாவின் எட்டாம் நாளில் திருவாழ்மார்பன் வெண் குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார்.

கேரள திவ்ய தேசங்கள்

மற்ற திவ்ய தேசங்களில் மூலஸ்தானத்துக்கு நேர் எதிரில் தீர்த்தக்குளம் அமைந்திருக்கவில்லை. இங்கு மூலவர் சந்நிதிக்கு எதிரில் சோமலட்சுமி தீர்த்தம் எனும் பெரிய தெப்பக்குளம் உள்ளது. இந்தத் தீர்த்தக்கரையில் உள்ள அரச மரம் அற்புத சக்தி கொண்டது என்கிறார்கள்.

கேரள திவ்ய தேசங்கள்

பொதுவாக ஸ்ரீராமபிரான் சந்நிதிக்கு எதிரில் அனுமன் சந்நிதி இருக்கும். மாறாக, இங்கு கருடாழ்வார் சந்நிதி இருக்கிறது. ஸ்ரீராமபிரான் சந்நிதியில் ஸ்ரீராமர், சீதாப் பிராட்டி, லட்சுமணன் ஆகியோர் நின்றுகொண்டும், வீபீஷணன் அமர்ந்த நிலையிலும் இருப்பது, வேறு எங்கும் காண முடியாத காட்சி. ராமர் பட்டாபிஷேகம் முடிந்து வீபீஷணன் இலங்கை திரும்பியபோது இத்தலத்துக்கு வந்ததாகவும், அவர் கோரியபடி பெருமாள் ஸ்ரீராமர் திருக்கோலத்தில் அவருக்குக் காட்சி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

குலசேகர ஆழ்வார் இத்தலத்துக்கு வந்து பெருமாளின் அருள்பெற்றுச் சென்றதற்கு அடையாளமாக அவரின் திருவுருவச் சிலை இந்த ஆலயத்தில் உள்ளது. ஸ்ரீகணபதி, விஷ்வக்சேனர், ஸ்ரீசாஸ்தா, தம்பதி சமேதராக ஸ்ரீநடராஜர், நம்மாழ்வார் ஆகியோரின் சந்நிதிகளும் இந்த ஆலயத்தில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. ஆலய அலங்கார மண்டபத்தில் ஒரே தூணில் செதுக்கப்பட்ட தசாவதாரக் காட்சிகள், ஸ்ரீகணபதி, ஸ்ரீமுருகன் விக்கிரகங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

திருப்பதி ஸ்தலத்தில் செலுத்த வேண்டிய நேர்த்திக்கடனை இங்கு செலுத்தினாலும் அதே பலன் கிடைப்பதாக ஐதீகம். அதனால் இத்தலம் 'திருப்பதிசாரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தக் கோயிலுக்கு அடிக்கடி வருகை தரும் பக்தர் சிவசுப்ரமணியத்திடம் பேசினோம்.

''வாமன அவதாரத்தை நினைவூட்டுவதால் மட்டுமல்ல, திருவள்ளுவருக்குத் திருக்குறள் இயற்றுவதற்கு மூலகாரணராக அமைந்ததாலுமே இத்தலத்து இறைவனுக்கு 'திருக்குறளப்பன்’ என்று பெயர் வந்ததாகப் பெரியோர்கள் கூறுவர். மூலவரைச் சுற்றித் திருவள்ளுவரின் சீடர்களும், மூலவரின் வலது பக்கம் திருவள்ளுவரும், இடது பக்கம் வாசுகி அம்மையும் சிலையுருவாகக் காணப்படுகிறார்கள். எனவே, இந்த மூவரையும் வணங்கிட, உயரிய கல்விச் செல்வம் வந்துசேரும். மூலவர் மார்பில் குடிகொண்ட 'திரு’வான ஸ்ரீகமலவல்லி நாச்சியாரான லட்சுமிதேவியை வழிபட்டால், பக்தர்களுக்குக் குறைவற்ற செல்வம் கிடைக்கும். நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம்செய்த பெருமாள், கோபம் தணிந்து இங்கே வீற்றிருக்கிறார். நரசிம்மர்- வீரத்துக்கும், அதீத பலத்துக்கும், அக்கிரமத்தை அழிப்பதற்கும் ஆதாரமானவர். இவரை வழிபடுவதால் வீரமும் சக்தியும் நமக்குக் கிடைக்கும்'' என்று பக்திப் பரவசம் பொங்கச் சொன்னார் அவர்.

ஆலய மேல்சாந்தி நாகராஜ போற்றி கூறுகையில், ''இங்கே ஸ்வாமிக்கு தினமும் 6 கால பூஜை. அதிகாலை 430 மணிக்கு ஆலயம் திறக்கப்பட்டு, காலை 1030 மணிக்கு சாத்தப்படுகிறது. பிற்பகல் 530 மணிக்கு மீண்டும் திறந்து இரவு 730 மணிக்கு சாத்துகிறோம். ஸ்ரீதிருவாழ்மார்பப் பெருமாளுக்கு மாவிளக்குப் போட்டுப் பிரார்த்தித்தால், தீராத நோய்கள், குறிப்பாக நாள்பட்ட வயிற்றுவலி நீங்கும். வருடந்தோறும் சித்திரை மாதம் 10 நாள் நடைபெறும் திருவிழா, புரட்டாசி மாத சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராமநவமி, திருவோணம், கோகுலாஷ்டமி, சித்திரை வருடப்பிறப்பு ஆகியவை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. புரட்டாசி மாதக் கடைசி சனிக்கிழமை ஸ்ரீராமர் சந்நிதியில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகக் காட்சியும் இரவு கருட சேவையும் அற்புதமாக இருக்கும்'' என்றார் அவர்.

செல்வம் தந்து கேட்ட வரமும் அருளும் திருவாழ்மார்பனை நாமும் வழிபட்டு வருவோமே!

படங்கள்: ரா.ராம்குமார்