சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

ஸ்ரீசபரி துர்கைக்கு மாங்கல்ய காணிக்கை!

ஸ்ரீஐயப்ப தரிசனம்!

ஸ்ரீசபரி துர்கைக்கு மாங்கல்ய காணிக்கை!
##~##
பு
துக்கோட்டை சின்னப்பா நகரில் அமைந்துள்ள ஸ்ரீஐயப்பன் கோயிலுக்கு வந்தாலே, மனம் அமைதியாகி, தெளிந்த நீரோடையாக மாறிவிடும் வாழ்க்கை எனப் பூரிக்கின்றனர், மக்கள்!  

ஸ்ரீபூர்ண மற்றும் ஸ்ரீபுஷ்கலை தேவியுடன் தர்மசாஸ்தாவாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி காட்சி தரும் அழகே அழகு! ஆலய அமைப்பும் பிராகாரமும் கொள்ளை அழகு. இதுபோன்று வேப்பமரமும் அரசமரமும் இணைந்திருக்கும் ஆலயங்களைக் காண்பது அரிது என்பர்.

சுமார் அறுபது வருடங்கள் சபரிமலைக்கு விரதமிருந்து ஸ்ரீஐயப்பனைத் தரிசித்து வந்த கேசவ பணிக்கர் என்பவர், தள்ளாமையால் மலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட... மனம் நொந்து போனார் அவர். ஒருகட்டத்தில் ஐயப்பனுக்கு புதுக்கோட்டையில் ஓர் ஆலயம் கட்டினால் என்ன எனும் முடிவுக்கு வந்தார். தன்னைப் போலவே ஸ்ரீஐயப்பனின் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்த டாக்டர் சண்முகசுந்தரத்திடம் இதைத் தெரிவிக்க... அவரும் மனநிறைவுடன் சம்மதித்தார். புதுக்கோட்டை நகரில் அற்புதமாக உருவானது ஸ்ரீஐயப்பன் கோயில்.

ஆரம்பத்தில், ஸ்ரீஐயப்பனின் விக்கிரகம் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டார்களாம். பிறகு சந்நியாசி ஒருவர் இங்கே வந்து, 'இந்தத் தலத்தில் தம்பதி சமேதராக சாஸ்தா குடியிருந்தால், இன்னும் சுபிட்சம் பெருகும்’ என்று சொல்லிச் செல்ல... அதன்படி ஸ்ரீபூர்ணை ஸ்ரீபுஷ்கலை சமேதராக ஸ்ரீதர்மசாஸ்தாவின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்கு குடும்பத்துடன் வந்து வேண்டிக்கொண்டால், குடும்பத்தில் உள்ள சகல பிரச்னைகளும் சங்கடங்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஸ்ரீசபரி துர்கைக்கு மாங்கல்ய காணிக்கை!
ஸ்ரீசபரி துர்கைக்கு மாங்கல்ய காணிக்கை!

ஸ்ரீகன்னிமூலை கணபதி, ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீநாகர், மகா மேருவுடன் காட்சி தரும் ஸ்ரீசபரி துர்கை ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. கார்த்திகை துவங்கியதும் இங்கு வந்து விரதத்தைத் துவக்கி, தினமும் ஸ்ரீஐயன் ஐயப்ப ஸ்வாமியை வணங்குகின்றனர், பக்தர்கள்.

ஸ்ரீசபரி துர்கைக்கு மாங்கல்யம் காணிக்கை செலுத்திப் பிரார்த்தித்தால், மாங்கல்ய பலம் பெருகும்; குடும்பத்தில் கணவன் - மனைவிக்கு இடையேயான பிரச்னைகள் தீரும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவர் என்கின்றனர் பெண்கள்.

ஸ்ரீஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்து பிரார்த்தித்துக் கொண்டால், விரைவில் பிள்ளை வரம் கிடைக்கப்பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

கார்த்திகை முதல் தை மாதம் வரை இங்கே நடைபெறும் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில் கலந்து கொள்வதற்காக, புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்தெல்லாம் வந்து, தவறாமல் கலந்துகொண்டு, ஸ்ரீஐயப்ப பஜனை மற்றும் பூஜையில் கலந்துகொள்வார்களாம்.

புதுக்கோட்டை ஸ்ரீதர்மசாஸ்தாவைத் தரிசியுங்கள்; வாழ்வில் புதுவசந்தம் மலருவது நிச்சயம்.  

       - க.அபிநயா
படங்கள்: தே.தீட்ஷித்