சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை...

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை...

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை...
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை...
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை...

கோதையின் நினைவும், பகவானைப் போற்றும் அவளது பாசுரங்களும் இல்லாமல் மார்கழித் திங்கள் கழியுமா என்ன? இதோ... தேவர்களின் பிரம்ம முகூர்த்தம் எனப் புராணங்கள் போற்றும் மார்கழி மாதம் துவங்கப் போகிறது.

இந்தப் புண்ணிய காலத்தில்... 'பாதகங்கள் தீர்க்கும், பரமன் அடிகாட்டும், வேதம் அனைத்துக்கும் வித்தாகும்’ கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் பொருளுணர்ந்து பாடி, பெருமாளைத் தொழுவது மிக விசேஷம். அதிலே ஒரு பாசுரத்தின் பெருமையை நமக்குச் சொல்லி வழிகாட்டுகிறார் முக்கூர் ஸ்வாமிகள்.

அந்தப் பாசுரம்...

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றுமணிவிளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்புஏல்ஓர் எம்பாவாய்

கிருஷ்ணாவதாரத்தைச் சொல்லும் இந்த பாசுரம், பல அரிய பெரிய சாஸ்திர அர்த்தங்களைக் கொண்ட உயர்ந்த பாசுரம். ஓர் இடத்தில் பிறந்து மற்றோர் இடத்துக்குப் பரமாத்மா போகும்படியான விஷயத்தை விவரிக்கிறாள் ஆண்டாள்.

'மாயனை’ என்று ஆரம்பம். அவனுடைய அவதாரம் மொத்தமும் ஒரே மாயை.

அதிமாநுஷ ஸீலவ்ருத்த வேஷை:
அதிவ்ருத்தாமரவிக்ரம ப்ரதாபை:
அதிலங்கித ஸர்வலோக ஸாம்யம்
வரயே வைஷ்ணவ வைபவாவதாரம்

- என்று கூரத்தாழ்வான் அதிமாநுஷ ஸ்தவம் என்ற திவ்யமான ஸ்லோகத்தை ஆரம்பிக்கும்போதே, 'அதிமாநுஷ ஸீல வ்ருத்த வேஷம்’ என்கிறார்.

பகவானின் குணம் என்ன? நடத்தை என்ன? வேஷம் என்ன? மனித வடிவில் பரமாத்மா வந்திருந்தாலும், மனிதன் என்று அவரைச் சொல்ல முடியாது. அவர் பரமாத்மா என்பதை சம்பவம் ஒவ்வொன்றும் சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறது. கிருஷ்ணாவதாரத்தில் மனித வடிவில் பல காரியங்களை அதிமாநுஷமாகப் பண்ணினார். அதனால் அவர் 'மாயன்’.

வைகுண்டத்தில் அற்புதமான ஒரு விஷயம் நிகழ்ந்தது. என்ன தெரியுமா?

சூட்டுநன் மாலைகள் தூயன
வேந்தி, விண் ணோர்கள்நன்னீர்
ஆட்டியந் தூபம் தராநிற்க
வேயங்கு, ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப்
போந்திமி லேற்றுவன்கூன்
கோட்டிடை யாடினை கூத்துஅட
லாயர்தம் கொம்பினுக்கே 

(திவ்ய ப்ரபந்தம் 2498, திருவிருத்தம் 21)

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை...

எம்பெருமானை உட்கார வைத்து விண்ணோர்கள் நன்னீர் ஆட்டித் திருமஞ்சனம் பண்ணுகிறார்கள். திருமஞ்சனம் முடிந்த பிறகு தூபம் காட்டப்பட்டது. அப்போது, ஒரே புகைமண்டலமாக ஆகிவிட்டது. எதுவும் புலப்படாத நிலை. பகவானின் திருமுக மண்டலத்தைப் பார்க்க முடியவில்லை. அந்த ஒரு க்ஷண காலத்தில் பரமாத்மா என்ன செய்தார் தெரியுமா?

அங்கிருந்து ஆயர்பாடிக்கு வந்து கிருஷ்ணனாகப் பிறந்து, வெண்ணெய் திருடி, பல அரிய பெரிய காரியங்களை எல்லாம் முடித்துவிட்டாராம். இது மொத்தமும் ஒரு க்ஷணத்தில்- தூபம் சமர்ப்பிப்பதற்குள் முடிந்து போய்விட்டது என¢றால், அவருடைய மாயா வேஷத்தை என்னவென்பது!

'மாயமாய மாக்கினாயுன் மாயமுற்று மாயமே’ (திவ்ய ப்ரபந்தம் 792, திருச்சந்த விருத்தம் 41) என்கிறார் திருமழிசை ஆழ்வார். எங்கே பார்த்தாலும் மாயம். அதனால் அவருக்கு 'மாயன்’ என்று பெயர். மாயன் என்றால் மாயை உடையவன்; மாயையை தன் வசத்தில் உடையவன் என்று ஆசார்யர்கள் விளக்குவர்.

'மாயாம் து ப்ரக்ருதிம் வித்யாந்மாயிநஞ் ச மஹேஸ்வரம்' என்று ஸ்வேதாச்வதரோ பநிஷத் அழகாகச் சொல்கிறது. மாயா என்றால் ப்ரக்ருதி. சிருஷ்டிக்குக் காரணமாக, எதை மூலமாக வைத்துக் கொண்டிருக்கிறாரோ, அந்த ப்ரக்ருதி தத்துவமே மாயை என்பது. அதை உடையவர் மாயன். மாயையினால் அவரை ஒன்றும் செய்ய முடியாது.பகவத் கீதையில்

''தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா |
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே''

(பகவத் கீதை 7.14) என்கிறார் பரமாத்மா.

##~##
'என் மாயையை யாராலும் தாண்ட முடியாது. எவன் எனது திருவடியைப் பற்றுகிறானோ, அவனால் மட்டுமே இதிலிருந்து விடுபட முடியும்’ என்கிறார்.

ஆக, இந்த மாயையிலிருந்து, ப்ரக்ருதியிலிருந்து நாம் விடுபட, அவரது திருவடியைப் பற்ற வேண்டும். ப்ரக்ருதி பகவானுக்கும் நமக்கும் நடுவே திரை போன்று இருந்து, அவரை மறைக்கிறது. திரையை நீக்கினால் பகவான் நமக்கு விசேஷமாகத் தெரிவார்.

ப்ரக்ருதி தத்துவத்தில் இருபத்து நான்கு தத்துவங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை, தன் நிலையிலிருந்து மாறி மாறி நிற்கும். பகவானோ மாறாமல் இருக்கக்கூடியவர். அதனால், அவரே மாயையைத் தன் வசத்தில் உடையவர் ஆவார்.

'மாயையை விசாரித்தால் போய்விடும்’ என்பதை பெரியோர்கள் அழகாக எடுத்துச் சொல்வார்கள்.

தலை தீபாவளிக்காக மாமனார் வீட்டுக்குச் செல்கிறார் மாப்பிள்ளை. ஊர் எல்லையில் வண்டியுடன் ஒருவர் வந்தார். இருவருமாக வண்டியில் ஏறிக்கொண்டு மாமனார் வீட்டுக்குச் சென்றார்கள். மாமனார் இருவரையும் வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்றார். கூட வந்திருப்பவர் மாப்பிள்ளையின் தோழன் என்று

நினைத்துக்கொண்டார் மாமனார். மாப்பிள்ளையோ, மாமனார் வீட்டு பந்துக்களை முன்பின் தெரியாததால், தன்னை வண்டியில் அழைத்து வந்த நபர் மாமனாரின் வீட்டைச் சேர்ந்த உறவினர் என்று நினைத்துக் கொண்டார்.

மாமனாரின் உறவு என்று மாப்பிள்ளை நினைக்க, மாப்பிள்ளையின் தோழன் என்று மாமனார் நினைக்க, இருவருக்குமே கூட வந்தவர் யார் என்று தெரியவில்லை. வஸ்திரத்தைக் கொடுத்தால், அவர் எடுத்து உடுத்திக் கொள்கிறார்; சாப்பிடக் கொடுத்தால், அவர் எடுத்துச் சாப்பிடுகிறார். எதிலேயும் முன்னே அவர் நிற்கிறார். நிஜமான மாப்பிள்ளைக்கே சந்தேகம்... 'இவர் மாப்பிள்ளையா, நான் மாப்பிள்ளையா?’ என்று!

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை...

ஏதாவது சொன்னால் மாப்பிள்ளைக்குக் கோபம் வந்துவிடப் போகிறதே என்று மாமனாருக்கு பயம். மாமனார் ஏதாவது நினைத்துக்கொண்டுவிடுவாரோ என்ற தயக்கத்தால், மாப்பிள்ளையாலும் எதுவும் சொல்ல முடியவில்லை. இப்படியே இரண்டு நாட்கள் கழிந்தன. மூன்றாவது நாள், இலையில் பிரசாதம் பரிமாறிக் கொண்டிருக்கும்போது, மாப்பிள்ளையின் பக்கத்தில் அவரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மாமனாரால் தாளமுடியவில்லை. 'இவர் யார்?'' என்று மாப்பிள்ளையிடம் கேட்டேவிட்டார்.

'எனக்குத் தெரியாது. இவர் என்னுடன் வரவில்லையே! இவர் பற்றி உங்களிடம் கேட்கவேண்டும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்' என்றார் மாப்பிள்ளை.

இருவரும் திகைப்புடன் ஒருவரையருவர் பார்த்துக்கொண்டு பக்கத்தில் பார்த்தால், இலையையும் காணோம்; ஆளையும் காணோம். போனவர் இன்றுவரை வரவில்லை. யார் என்று விசாரித் ததும், ஆளைக் காணோம். மாயையும் அப்படித்தான். அது, நம் கூடவே நிற்கிறது.

தத்துவார்த்தத்தை உட்கார்ந்து பேசுகிற தருணத்தில் மிகவும் நன்றாகப் பேசுவோம். அப்போது நமக்கு சர்வக்ஞத்வம் வந்து விடுகிறது. 'ஸர்வே வ்யாச பராசர:’ என்ற நிலை ஏற்பட்டு விடுகிறது. கீழே இறங்கியதும்... அதாவது பேசி முடித்ததும், மறுபடியும் அகங்கார மமகாரம்தான்!

திருப்பாவை கேட்கிறபோது வரும் வைராக்யம் வாழ்நாள் பூராவும் வந்துவிட்டது என்றால், சொல்கிறவர்களும் கேட்கிறவர்களும் நன்றாக இருக்கலாம். உபன்யாசம் கேட்கும் தருணத்தில், 'நாளையி லிருந்து ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என்ற எண்ணம் இருக்கும். உபன்யாசம் கேட்டுவிட்டு வீட்டுக்குப் போன பின்பு நாம் செய்யும் காரியம் என்ன? தூக்கம்! அந்தத் தூக்கத்தோடு வைராக்கியமும் சேர்ந்து போய்விடும். காலையில் எழுந்தபிறகு, கேட்டதற்கும் சொன்னதற்கும் சம்பந்தம் இல்லாமல், 'இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவே’ என்று யோசிக்காமல் வாழ்க்கை ஓடுகிறது. மயான வைராக்கியம் என்பார்களே... 'இந்த மகானுக்கே இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டுவிட்டதே! நாமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!’ என்ற எண்ணம் ஸ்மசானத்தில் (மயானத்தில்) இருக்கும்போது தோன்றும்.

ஸ்மஸானத்திலிருந்து நேரே வீட்டுக்கு வரக்கூடாது. நட்சத்திர மண்டலத்தைப் பார்க்க வேண்டும். கோதூளி காலத்தில் வீட்டுக்கு வருவதற்கு முன்பு ஓடுகிற ஜலத்தில் குளிக்க வேண்டும். அகமர்ஷண சூக்தாதிகள் சொல்ல வேண்டும். அப்போதுதான் ஸ்மஸானத்துக்குப் போய்விட்டு வந்த தோஷம் நீங்குகிறது என்கிறது விஷ்ணு புராணம். அப்படி ஸ்நானம் பண்ணும்போது, நமக்குள் ஏற்பட்ட வைராக்கியத்துக்கும் சேர்ந்த முழுக்காகப் போய்விடுகிறது; இந்த வைராக்கியம் எல்லாம் நிலைத்து நிற்பதில்லை!

எனவே, மாயையை விசாரிக்க வேண்டும். விசாரிக்கும்போது கிட்டே வராது. விசாரிக்காமல் விட்டால் இந்த உலக சம்பந்தம் நம்மைக் கெடுத்துவிடும். ஆனால், அப்படிப்பட்ட மாயை, பகவானிடத்தில் விலை போகாது. மாயைக்கு அதிபதி அவன். அவன் ஆட்டிப் படைக்கிறான். அப்படிப்பட்ட மாயை அவனுக்கு அடங்கி நிற்பதால் 'மாயனை’ என்கிறாள் ஆண்டாள். அவித்யா என்கிற அஞ்ஞானமும் அவனிடத்தில் கிடையாது. அவனிடம் இருப்பது, எப்போதும் பிரகாசித்து இருக்கும்படியான ஞானம். அசங்குசித ஞானத்துடன் சர்வத்தையும் ஒடுக்கும் பரமாத்மா 'மாயன்’.

அவனது திருவடியைப் பற்றிக்கொண்டால், மாயை நம்மை விட்டு அகலும்; மாயனான கிருஷ்ணனின் அனுக்கிரகம் விடாமல் நம்மைப் பின்தொடரும்.

தொகுப்பு:

மாலா ஸ்ரீநிவாஸன்