Published:Updated:

ஆலயம் தேடுவோம்

ஆலயம் தேடுவோம்

ஆலயம் தேடுவோம்
ஆலயம் தேடுவோம்
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சோ
ழ தேசத்தின் தலைநகரமாக தஞ்சாவூர் இருந்ததை அறிவோம். தஞ்சாவூருக்கு இணையாக, அகலமான தெருக்களும் அதிகமான மக்கள் குடியிருப்புகளும் கொண்ட பகுதிகளாக கும்பகோணமும், திருவாரூரும், மயிலாடுதுறை என்று சொல்லப்படுகிற மாயவரமும் இருந்தன.

மெள்ள மெள்ள ஊரும் மக்கள் தொகையும் வளர்ந்துகொண்டே இருக்க... அக்கம்பக்கத்து ஊர்களில் ஏராளமான மக்கள் குடியேறினர். வெட்டவெளியாக, பொட்டல்காடாக இருந்த பகுதிகளில்கூட, காற்றுக்காகவும் விவசாயத்தைப் பாதுகாக்கவும் என மக்கள் சந்தோஷத்துடனும் உற்சாகத்துடனும் குடியேறினார்கள்.

ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது இப்படியாகத்தான் அமைகிறது. நகரத்தில் தங்க இடமின்றி, நகரத்தையட்டிய ஊர்களையும் அல்லது ஒரு ஊருக்கும் அடுத்த ஊருக்கும் உள்ள இடைவெளியில் உள்ள வனத்தைத் தேர்ந்தெடுத்து, மக்கள் குடியேறினார்கள்.

ஆலயம் தேடுவோம்

இதைக் கண்ட மன்னன், 'அடடா... நம் தேசத்தின் நகரங்கள், பெரு நகரங்களாகவும் கிராமங்கள் நகரங்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன’ என்று குதூகலித்தான். இன்னும் பல ஊர்களையும் வனங்களையும் தேர்வு செய்து, அங்கே தெருக்களையும் குடியிருக்க வீடுகளையும் அமைத்துக் கொடுத்தால் என்ன என்று யோசித்தான்.

அதன்படி ஒருநாள்... ஆரூர் என்று அழைக்கப் படும் திருவாரூருக்குச் சென்று கொண்டிருந்த போது, வழியில் வனம் ஒன்றில் தன் படையின ருடன் இளைப்பாறினான் மன்னன். அது, புன்னை மரங்கள் நிறைந்த வனப்பகுதி. அடர்ந்து பரந்திருந்த புன்னை மரங்கள் அருமையாக நிழல் தந்துகொண்டிருந்தன. அந்த மர நிழலில், ஆங்காங்கே முனிவர்கள் தவமிருந்து கொண்டிருந்தார்கள். அந்தத் தவத்தின் மகிமையாலும் புன்னை மரங்களில் இருந்து வந்த நறுமணத்தாலும் அந்த இடத்தில் நல்ல அதிர்வுகள் உருவாகி இருந்தன.

மர நிழலில் கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மன்னரின் கனவில், 'இந்த புன்னை மரங்கள் சூழ்ந்த வனத்தில் ஒரு கிராமத்தை உருவாக்கு. அங்கே ஒவ்வொரு வீதியிலும் கோயில்கள் கட்டு' என அசரீரியாக உத்தரவு வர... திடுக்கிட்டு எழுந்தான் மன்னன். கண்ணீர் வழிய, வானம் பார்த்தபடி கைகூப்பி வணங்கினான்.

ஆலயம் தேடுவோம்

அங்கே, சிவபூஜையில் ஈடுபட்டிருந்த முனிவர்களை நோக்கி விறுவிறுவென ஓடினான். அசரீரியாக வந்த உத்தரவைச் சொல்லி விளக்கினான். ''ஆமாம்... மன்னனின் கோயில் கட்டும் பணிக்குப் பக்கபலமாக இருந்து உதவுங்கள்; அவர்களை வழிநடத்துங்கள் என்று எங்களுக்கும் உத்தரவு வந்திருக்கிறது'' என முனிவர்கள் தெரிவித்தார்கள். அவர்களின் திருப்பாதங்களில் விழுந்து நமஸ்கரித்த மன்னனிடம், ''ஒரு சுபமுகூர்த்த நாளில், ஒரு பிரதோஷ நாளாகப் பார்த்து கோயில் கட்டும் பணியைத் துவக்குங்கள். நம் சோழ தேசம் இன்னும் சிறந்து விளங்கும்'' என முனிவர்கள் ஆசீர்வதித்தார்கள்.

அதன்படி, புன்னை மரங்களால் நிறைந்திருந்த அந்த வனப்பகுதி உடனே சீர் செய்யப்பட்டது. அமைச்சர் பெருமக்களைக் கொண்டும் நில அளவையாளர்களைக் கொண்டும் அங்கே தெருக்கள் எப்படி இருக்கவேண்டும், வீடுகளை எவ்வாறு அமைக்க வேண்டும் என விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு தெருவின் முனையிலும் அழகான, பிரமாண்டமான கோயில்களைக் கட்டுவது என மன்னன் சொல்ல... மொத்தக் கூட்டமும் கைதட்டி ஆமோதித்தது. அதன்படி, அங்கே, பத்துத் தெருக்கள் கொண்ட ஒரு கிராமம் உருவாக்கப்பட்டது. அந்தணர்களுக்கும் வேளாளர்களுக்கும் என ஒவ்வொருவருக்குமாக தெருக்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டு, வீடுகள் வழங்கப்பட்டன. தெரு முனையில், சிவாலயங்கள் எழுப்பப்பட்டன. பத்து தெருக்களில், பத்து கோயில்கள் கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அந்த ஊர், புதுப்பத்தூர் என்றே அழைக்கப்பட்டடது.

ஆலயம் தேடுவோம்

திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புதுப்பத்தூர். ஊரின் பெயருக்கேற்ப அன்றைக்கு இருந்தது போல் பத்துத் தெருக்கள் இப்போது இல்லை. பல மடங்காகப் பெருகிவிட்டன. அப்படியெனில்... பத்துக் கோயில்கள்?

காலச் சுழற்சியில், பல நூறு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்கள் ஒவ்வொன்றும் தன் மொத்த முகத்தையும் இழந்துவிட்ட நிலை. இப்போது மிச்ச சொச்சமாக இருப்பது ஒரேயரு ஆலயம்தான்! அதுவும் மிகவும் சிதிலமுற்று, களையிழந்து காட்சி அளிக்கிறது.

இந்த ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனின் திருநாமம் - ஸ்ரீபுன்னைவன நாதர். புன்னை மரங்கள் சூழ்ந்த பகுதியில் கோயில் கொண்டிருப்பதால் இவர் புன்னைவன நாதர் எனத் திருநாமம் கொண்டார். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீசாந்தநாயகி அம்பாள். பெயருக்கு ஏற்றாற் போலவே, கருணையும் சாந்தமும் கண்களில் கொண்டு, நாடி வருவோருக்கெல்லாம் தாயுள்ளத்துடன் அருள் புரியும் வள்ளல் இவள்!

இங்கே... ஸ்வாமி மேற்குப் பார்த்தபடி காட்சி தருகிறார். அம்பாள் கிழக்கு நோக்கியபடி தரிசனம் தருகிறாள். திருக்கடையூரில் உள்ளது போலவே திருமணக் கோலத்தில் காட்சி தரும் தலங்களில் இதுவும் ஒன்று என்பதால் கல்யாண வரம் தரும் தலமாகவே இந்தக் கோயிலைப் போற்றி, வணங்கியுள்ளனர் பக்தர்கள்!

ஆலயம் தேடுவோம்

அதேபோல், திருக்கல்யாண உத்ஸவ விழாவும் இங்கே அமர்க்களமாக நடந்தேறி இருக்கிறது. சர்வ அலங்காரத்துடன், ஸ்வாமியும் அம்பாளும் திருவீதியுலா வருவதைத் தரிசித்து, ஆலயத்தை 11 முறை பிராகார வலம் வந்தால்... விரைவில் திருமணத் தடைகள் அகலும்; மாங்கல்ய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம் என்கின்றனர் ஊர்ப்பெரியவர்கள்.

ஆனால் இன்றைக்கு... ஸ்வாமியும் அம்பாளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு பூக்களாலும் ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து அழகு பார்க்கத்தான் வசதியில்லை. திருவீதியுலா வருவதற்கு வாகனங்கள் வேண்டாமா? ரிஷபம் முதலான அனைத்து வாகனங்களும் உடைந்தும் சிதைந்தும் கிடப்பதால், நூறு வருடங்களுக்கும் மேலாக, வீதியுலா வந்து தரிசனம் தருவதே இல்லை ஸ்ரீசாந்தநாயகியும் ஸ்ரீபுன்னைவன நாதரும்!

பத்து கோயில்களில் தலையாய ஆலயமாகத் திகழ்ந்த ஸ்ரீபுன்னைவன நாதர் ஆலயம், மீண்டும் பொலிவுடன் காட்சி தரவேண்டாமா? தன் கணவருடன் ஸ்ரீசாந்த நாயகி, சந்தோஷமாக வீதியுலா வந்தால்தானே அந்த வீதியில் உள்ள, ஊரில் உள்ள, உலகில் உள்ள மக்கள் அனைவரும் நலமுடன் வாழ்வார்கள்?

ஸ்ரீசாந்தநாயகி சமேத ஸ்ரீபுன்னைவன நாதருக்கு, நித்தியப்படி பூஜையும் நைவேத் தியமும் கிடைப்பதற்கு வழி செய்யுங்கள். வாழ்வில் எத்தனை பெரிய எதிர்ப்பையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். அர்த்த மண்டபம், மகா மண்டபம், திருச்சந்நிதி என திருப்பணிகளுக்கு உதவுங்கள். உங்கள் சந்ததியினர், சிறப்புடனும் செழிப்புடனும் வாழ்வார்கள்.

புன்னைவன நாதர் கோயிலுக்குச் செய்யும் சிறிய திருப்பணி கூட, பன்மடங்கு புண்ணியமாக உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும் என்பது உறுதி!

படங்கள்: ஜெ.ராம்குமார்