மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 9

சித்தம்... சிவம்... சாகசம்! - 9

சித்தம்... சிவம்... சாகசம்! - 9
சித்தம்... சிவம்... சாகசம்! - 9

வினவையிலே சமாதியதுதான் திறந்து
வேகமுடன் அசரீரி வாக்குண்டாச்சு
தினகரன்றன் ஒளிபோல வடிவம் கண்டேன்
திகழான சட்டை முனி தனைக் கண்டேன்
மனமுருகி என் மீதில் கிருபை வைத்து
மாட்சியுடன் ஞானோபதேசம் சொன்னார்
அனல் கண்ட மெழுகது போல் நெஞ்சம்தானும்
அப்பனே மனமுருகி அழுதிட்டேனே...

- போகர் ஏழாயிரம்

##~##
போ
கரைப் புறந்தள்ளி நெடிய தவத்தை மீண்டும் தொடர ஆரம்பித்துவிட்ட அந்த முனிவர், போகரை மிகவே பாதித்துவிட்டார். ஏற்கெனவே அவரது தவம் யுகங்களைக் கடந்துவிட்டது. திரும்பவும் தவத்தைத் தொடர்கிறார் என்றால், அப்படி தவத்தில் தொடர்வது என்பதும், தவத்தோடு தவமாய் கிடப்பதும்தான் ஞானியர் செயலா?

தவத்தில், இருந்தும் இல்லாது போகிறோம். குறிப்பாக, 'மனோ நாசம்’ எனும் எண்ணங்களற்ற நிலை உருவாகி, உயிரானது உடம்புக்குள் சிறைப்பட்டது போலாகி, விடுபெற்று வேறு மாற்றங்களுக்கு ஆளாகாமல், ஒரு பெட்டகத்து நகைபோல அப்படியே இருந்துவிடுகிறது. அது மாறுவதும் இல்லை; இயங்குவதும் இல்லை. இப்படி ஒரு நிலையை, இவர் ஈசத்வம் என்று எதை வைத்துச் சொன்னார்?

ஈசத்வம் என்பது, நாமே அந்தப் பரம்பொருளாகிய ஈசனாக மாறிவிடுவதைக் குறிக்கிறது என்றால், அந்த ஈசன் என்ன இப்படியா தவத்தில் தவமாய் இருக்கிறான்? உலகின் ஒட்டு மொத்த இயக்க கதிக்கே சொந்தக்காரன் அவன். அவனது நடனம் ஒன்று போதும். உண்மையில்...இயக்ககதியில் உலக நலனை உத்தேசித்து ஈசனைப் போன்று இயங்கிக்கொண்டிருப்பது நான்தான். இந்த முனிவர், தனது தவத்தை மேன்மைப்படுத்துவதற்காக ஈசத்வத்துடன் அதை ஒப்பிட்டுள்ளார் என்று, அந்த முனிவரிடம் ஏற்பட்ட  தாக்கத்தால், தன் வரையிலும் ஒரு புது அர்த்தத்தைக் கொடுத்துக்கொண்ட போகர், தொடர்ந்து சஞ்ஜீவி மூலிகையைத் தேடுவதைக் கைவிடவில்லை.

ஆனால், அவருக்கு அதைத் தவிர, எல்லாமே கிடைத்தது. குறிப்பாக, தாவர ரகசியங்கள் போகர் வரையில் நிர்வாணமாகின. புல்- பூண்டில் இருந்து விண்ணளாவும் விருட்சம் வரை ஒவ்வொன்றின் குணப்பாடும், வினைப்பாடும் போகருக்குத் தெரியவந்தன. இமயத்து யோகிகள், அவருக்கு அவ்வளவையும் உபதேசித்தனர். அப்படியே, 'இறந்தவனைப் பிழைக்கச் செய்கிறேன் என்று எமனோடு மல்லுக்கட்டாமல், இருப்பவர்களை... அதாவது பிறவி எடுத்துவிட்டவர்களை எமன் கொண்டு போக முடியாதபடி, முடிந்தவரை யிலும் மானிடர்களை கல்ப யோகிகள் ஆக்கு’ என்றனர். அந்தக் கருத்து போகருக்கு மிகப் பிடித்துப்போனது.ஆனால், ஒருவனுக்குக் கல்ப தேகம் உண்டாவது என்பது அத்தனை சாதாரணமானது அல்ல. அதற்குத் தவம் செய்திருக்க வேண்டும். கோள்களின் குறுக்கீடும் இருக்கக் கூடாது. அதிலும், கலியுகத்தில் ஒரு மனிதன் பிறப்பதே கர்மத்தால்தான். மாணிக்கவாசகர், தமது சிவபுராணத்தில் உயிர்களின் பல்வேறு பிறப்பு நிலை பற்றிப் புலம்பும் விதமாய் பாடியிருப்பார்.

'புல்லாகிப் பூடாய்ப்
புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப்
பறவையாப் பாம்பாகி
கல்லாய் மனிதராய்ப்
பேயாய் கணங்களாய்
வல்லசு ரராகி
முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்
தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும்
பிறந்திளைத்தேன்; எம்பெருமான்
மெய்யே, உன் பொன்அடிகள்
கண்டு இன்று வீடு உற்றேன்...’

- எனும் அவரது பாடலில், ஓர் உயிரின் யாத்திரை எப்படிப் பட்டது என்பதை ஓரளவு புரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பிறப்பிலும், அந்தப் பிறப்பில் நாம் புரிகின்ற பாவ- புண்ணிய செயலுக்கேற்ப, நமக்கான அடுத்த பிறப்பு தீர்மானம் ஆகிறது. அதனூடே பிறவி எனும் அந்தத் தளையில் இருந்து விடுபெற நாம் என்ன செய்கிறோம் என்பதில்தான் நமக்கான முக்தி உள்ளது. இந்தக் கருத்தின்படி, நம் அனைவரின் தேகமுமே கர்ம தேகமாகும். இந்தத் தேகத்தால் படவேண்டிய பாடுகளைப் பட்ட பின்பே, நமக்கான விடுதலையும் நமக்கு ஏற்படும். இந்தத் தேகத்தால், ஒருவனை எப்போதும் இன்ப ரசத்துக்கு உள்ளேயே மூழ்க வைத்திருப்பது என்பது சாத்தியமே இல்லை; துன்பத் திலேயே ஒருவர் இருக்கவும் வாய்ப்பு இல்லை. இரண்டும் கலந்து கிடப்பதே வாழ்வு!

எப்போது எது அதிகமாய் உள்ளது என்பது அவருடைய பிறந்த கால நேரத்தைப் பொறுத்தது. ஏனென்றால், பிறந்த நேரப் பள்ளிக்குள், நமக்கான ஜாதகம் என்பது, நமது மொத்த வாழ்நாளுக்கான ஒட்டுமொத்த செய்திகளுடன் அச்சிட்டு முடிக்கப்பட்ட ஒரு புத்தகம் போல உள்ளது. அதை படித்துக் கூறுபவரே ஜோதிடர். அவர் கூறினாலும் கூறாவிட்டாலும், அந்தப் புத்தகத்தில் உள்ளபடிதான் ஒவ்வொருவரது வாழ்வும் செயலும்! அதில் ஓர் அணுத் துகள் மாற்றத்தையும் ஏவராலும் ஏற்படுத்த இயலாது.

இப்படி ஒரு கருத்தைக் கேட்கும்போது, கிளைக் கேள்வி களாகப் பல கேள்விகள் தோன்றும். அதில் பிரதானமானது... விதித்தபடிதான் எல்லாம் என்றால், ஒரு கொடுமைக்காரன் கொடுமை புரிவதற்குக் காரணமும் அவன் விதிப்பாடே என்றாகிறது. அப்படியிருக்க, அவனைத் தண்டிக்க நீதிமன்றம் எதற்கு? நடப்பதுதான் நடக்கும் என்றால், பேசாமல் சிவனே என்று இருந்துவிடலாமே? எதற்கு எல்லோருக்கும் உழைப்பு எனும் கடப்பாடு?’

சித்தம்... சிவம்... சாகசம்! - 9

இப்படியான கேள்விகள் மிக மாயை சார்ந்தவை. இவற்றுக்கெல்லாம் மிகச் சரியான விடைகளும் உள்ளன. சும்மா இருந்துவிடலாமே என்று சொல்வது மிகச் சுலபம். ஆனால், அரை நாளில் இருந்து ஒருநாள் வரையிலும் நாம் சும்மா இருந்துவிட்டால், அதுவே மிக அதிகம். எதையாவது செய்து, திரும்பவும் வினை வழி செல்லத் தொடங்கிவிடுவோம். வினைக்கு அப்படி ஓர் ஆற்றல். அந்த ஆற்றலைக் கசடறப் புரிந்துகொள்ளும்போதுதான் மனத்துக்குள் ஒரு தெளிவு பிறக்கும். அந்தத் தெளிவுதான் வினையை வெற்றிகொள்ள எது சரியான வழி என்பதைக் காணவைக்கும்.

அந்த வழியில்கூட, எடுத்த எடுப்பிலேயே மிக வேகமாகச் சென்றுவிட முடியாது. மெள்ள மெள்ளவே செல்ல முடியும். ஓர் எண்ணெய்க் கிண்ணத்தைக் கையில் சுமந்துகொண்டு, அது சிந்தாதபடி உலகைச் சுற்றிவருவதைப் போன்ற செயல் அது. பழைய வினைகளை அனுபவித்தபடியே புதிய நல்வினைச்செயல்கள் புரிந்து, மெள்ள மெள்ள விடுபெற வேண்டும். அப்படி விடுபெறுவதற்குள் புல், பூண்டு, புழு, பூச்சி, பறவை, மிருகம் எனப் பல பிறப்புக்குள் நமது கர்மங்களாலேயே சிக்கிக்கொள்கிறோம்.

இப்படி, நமது பிறப்புக்குப் பின்னால் ஒரு நீண்ட கதி உள்ளது. எனவே, உலகத்து மாந்தர்களைக் கல்ப யோகிகளாக மாற்றுவது என்பது சாதாரணமான ஒன்றல்ல. போகர் போன்ற சித்தர் ஒருவர் திட்டமிட்டு முயற்சித்தாலும், ஒருவனைக் கல்ப யோகியாக ஆக்கமுடியாது. ஒரு கல்ப யோகிக்குப் புலனடக்கமும், வைராக்கியமும்  மிக முக்கியம். இந்த இரண்டும் ஒரு துறவிக்கு வசப்படுவதே பெரும்பாடு!

இதற்கு உதாரணமாக விஸ்வா மித்திரரின் கதையைச் சொல்வர். கௌசிகன் எனும் பெயர் கொண்ட பேரரசன்தான் பின்னாளில் விஸ்வாமித்திரர் ஆனார். அதற்கு ஒரே ஒரு காரணம்தான். 'ஒருவரால் கோடானகோடி பேர் கொண்ட நாட்டைக்கூட ஆண்டுவிட முடியும். ஆனால், தனது கூட்டை (உடம்பை) கட்டுப்படுத்தி ஆள முடியாது’ என்று கூறப்படவும், 'நான் ஆண்டு காட்டுகிறேன், பார்’ என்று தவம் செய்யப் புறப்பட்டவரே கௌசிகன். புலன்களை அடக்கி விஸ்வாமித்திரர் ஆகி, பின்னர் வசிஷ்டர் வாயாலேயே பிரம்மரிஷி பட்டமும் பெற்றார். ஆனாலும், ஒரு மேனகை அந்த பிரம்மரிஷியையே வீழ்த்திவிட்டாள்.

விஸ்வாமித்திரர் வீழ்ந்ததும் சரி, எழுந்ததும் சரி... பெரும் உதாரணங்கள். புலனடக்கம் அவ்வளவு கடினமானது. எனவே, போகர் தனது வாழ்நாளில் தனக்கு இணையாக தன் சீடர்களான புலிப்பாணி, கோரக்கர் என்று சிலருக்கே கல்ப தேகத்தைத் தர முடிந்தது. மற்றவர்களுக்கு அவரால் எளிய வைத்திய முறைகளையே அளிக்க முடிந்தது.

சரி, கல்ப தேகம் என்றால் என்ன?

இதை விளங்கிக்கொள்ள நமக்குத் துளியாவது நம் தேகம் பற்றிய தெளிவும் புரிதலும் வேண்டும். இன்றைய விஞ்ஞானத்தின் புண்ணியத்தால், பள்ளி இறுதி நிலை முடிவதற்குள்ளாகவே, ஓரளவுக்கு நம் உடலின் உள்ளுறுப்புகளின் பெயர்களைத் தெரிந்துவைத்துள்ளோம். நமது மருத்துவ விஞ்ஞானம், நுட்பமான  உள்ளுறுப்புகள் எல்லாவற்றுக்கும் ஒரு பெயரை வைத்திருப்பதால், அந்த உறுப்புகளால் நிரம்பியதுதான் நம் தேகம் என்று நாமறிவோம். இதில், ஒரு வியப்புக்கு உரிய விசித்திரமான சங்கதியும் ஒளிந்துள்ளது. நாம் உயிர் வாழக் காரணமான இந்த உள்ளுறுப்புகள் எதையும், நாம் நமது வாழ்நாளில் பார்க்கப்போவதே இல்லை என்பதுதான் அந்த விசித்திரம். கூடவே இருக்கின்றன; இயங்கிக்கொண்டும் இருக்கின்றன. ஆனால், உணரத்தான் முடிகிறது; பார்க்கவே முடிவதில்லை. ஒரு கருவியின் துணை கொண்டு சில இயக்கங்களைக் காண முடிகிறது. ஆனால், அங்கும் நேராகக் காணும் வாய்ப்பு கிடையாது.

இந்த விசித்திரம்தான் சித்தர் பெருமக்கள் சிலரை, இந்த உடம்பின்பால் கோபமும் வெறுப்பும் கொள்ள வைத்தது. 'காயமே இது பொய்யடா... வெறும் காற்றடைத்த பையடா’ என்று பாடவும் வைத்தது.

சரி.. எது கல்ப தேகம் என்று அறிவோம்.

முன்னதாக இந்த உடம்புக்குள் பஞ்ச பூதங்களும் இருப்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

நீர், நிலம், காற்று, நெருப்பு, வெளி எனும் ஐந்து பூதங்களின் சேர்க்கையே நமது உடம்பு. இதில் நிலத்தின் கூறு ஒன்றரை பங்கு. நீரின் கூறு ஒரு பாகம். காற்று முக்கால் பாகம். ஆகாயம் முக்கால் பாகம். நெருப்பு ஒரு பாகம். கூட்டினால் ஐந்து பாகம் வரும்.

இந்த ஐந்தின் அளவு கூடுவதும் குறைவதும் நிகழும்போதுதான் நமக்கு உடல்நிலை பாதிக்கப் படுவதும், நாம் முதுமை அடைவதும் நிகழ்கின்றன. நிலத்தின் பங்கு, சதைப் பாகத்தில் சுருக்கம் மற்றும் மடிப்பாக எதிரொலிக்கும். நீரின் பங்கு, ரோமத்தின் மாற்றத்தில் எதிரொலிக்கும். நெருப்பின் பங்கு, பசி- தாகத்தில் எதிரொலிக்கும். வாயுவின் பங்கு, தள்ளாமையில் எதிரொலிக்கும். ஆகாயத்தின் பங்கு குறையும்போது, நாம் மீள முடியாத உறக்கத்துக்குச் சென்று விடுவோம்.

- சிலிர்ப்போம்...