Published:Updated:

முன்னோர் வழிபாடு அவர்களுக்குப் பலன் தருமா?

முன்னோர் வழிபாடு அவர்களுக்குப் பலன் தருமா?

முன்னோர் வழிபாடு அவர்களுக்குப் பலன் தருமா?

முன்னோர் வழிபாடு அவர்களுக்குப் பலன் தருமா?

Published:Updated:
முன்னோர் வழிபாடு அவர்களுக்குப் பலன் தருமா?
முன்னோர் வழிபாடு அவர்களுக்குப் பலன் தருமா?

டி.வி நிகழ்ச்சி ஒன்றில் ஆன்மிகச் சொற்பொழிவாளர் ஒருவர், 'அமாவாசை மற்றும் திதி நாட்களில் முன்னோருக்கு நாம் செய்யும் கிரியைகளால், அவர்களின் தாகம் தீரும்; அவர்கள் சாந்தி அடைவர் என்ற நம்பிக்கையில் செய்கிறோம். அதனால் அவர்களுக்கு எந்தவித பலனும் ஏற்படப்போவது இல்லை. வாழ்ந்த காலத்திலேயே அவர்கள் செய்த பாவ- புண்ணியத்துக்கு ஏற்ப பலன்களை அனுபவித்திருப்பார்கள்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆக, நாம் செய்யும் சிராத்தக் கடமைகள் நாம் நல்ல நிலைக்கு போக வேண்டும் என்பதற்காகத்தான்...’ எனும் பொருள்பட பேசினார். இது சரியா?

- எஸ். நாகராஜன், சென்னை-35

'இறந்தவர்களுக்கு எந்த விதத்திலும் பயன்படாது’ என்ற கூற்று, சொற்பொழிவாளரின் சொந்த அபிப்ராயம். அது, சாஸ்திரத்தின் விளக்கம் அல்ல. 'அவர்களுக்கு எந்த பலனும் ஏற்படப்போவது இல்லை’ என்பதும் அறியாமையின் வெளிப்பாடு.

அவர் சொல்வதை ஏற்றால்...

இறையுருவங்களுக்கு பலவித நிவேதனம் உண்டு. ஆடை- அணிகலன்கள் அணிவிப்போம். பல பொருட்களால் அபிஷேகம் செய்து, பணிவிடையில் ஊன்றி புஷ்பங்களால் அர்ச்சனை செய்வோம். அவர், அதை ஏற்று மகிழும் காட்சியை நாம் பார்த்ததில்லை. அத்தனைப் பொருளையும் நாம் திரும்பப் பெற்றுவிடுவோம். கடவுள் எதையும் ஏற்பது இல்லை. இந்தப் பணிவிடைகளால் கடவுளுக்கு எந்தப் பலனும் இல்லை; எனவே, நமக்கு எந்த நன்மையும் வராது என்றும் சொல்லலாம்!

தினமும் நீராடி, ஆடை- ஆபரணங்களை அணிந்தாலும், ஆடையிலும் உடலிலும் அழுக்கு ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. அதுவும் வீண் என்று சொல்லலாம்! குழந்தை பருவத்தில் கைகளில் மோதிரமும், காதில் காதணியும், அரையில் தங்க அரைஞாணும், காலில் தண்டையும், கொலுசும் அணிவது உண்டு. அந்தக் குழந்தை அதில் மகிழ்ச்சி அடைவதில்லை. எனவே, அதுவும் வீண்! தலையிலும் தாடியிலும் ரோமம் வளர்கிறது. கைகளிலும் கால்களிலும் நகம் வளர்கிறது. அவற்றை வெட்டிவிடுவோம். மீண்டும் வளரும்; திரும்பவும் வெட்டுவோம். அதில் சுகமும் இருக்காது; துக்கமும் இருக்காது. அதுவும் வீணான வேலை! தினமும் கோயிலுக்குச் செல்வோம். வலம் வருவோம். அதை இறைவன் ஏற்றுக்கொண்டதற்கு அறிகுறியே இல்லை. ஆக, அதுவும் வீண்!

'நாம் நல்ல நிலைக்குப் போகவேண்டும் என்பதற்காகத்தானே தவிர...’ என்ற தகவலும் அவரது அபிப்ராயம் மட்டுமே. நாம் நல்ல நிலைக்கு உயர்வோம் என்பதற்கு என்ன சான்று? அதை அவர் சொல்லவில்லை. அது, சான்று இல்லாத நம்பிக்கைதானே தவிர, நேரடியாக உணர்ந்தவர்கள் இல்லை.

'அவர்களுக்கு... அதாவது முன்னோருக்கு நாம் செய்யும் சடங்குகள் ஒன்றும் அவர்களை அணுகாது. அதுபோல், அத்தனை சடங்குகளும் நமக்கு நன்மையை ஈட்டித் தராது’ என்பதுதான் அவர் தரும் விளக்கத்தின் சாரம். ஆக, நாம் பலனில்லாத செயலைச் செய்துகொண்டிருக்கிறோம்; நமது நேரமும், முயற்சியும் வீணாகிறது என்று சொல்லாமல் சொல்கிறார்.

பிறந்தவன் மூன்று கடனோடு பிறக்கிறான். ரிஷிகள், தேவர்கள், பித்ருக்கள் ஆகியோருக்கு அவன் கடன் பட்டவன். ரிஷிகள்- கல்வியறிவைத் தந்து கண் திறந்தவர்கள். தேவர்கள்- காலாகாலத்தில் மழை பொழியவைத்து, பயிர் வளம் பெருக்கி, நமது உணவுக்கு உதவுபவர்கள். பித்ருக்கள்- நமது வம்ச பரம்பரையை வளர்த்து, சங்கிலித் தொடர் போல் அறத்தைக் காப்பாற்ற- வாரிசு பரம்பரையை நிலைநாட்ட அருள்பவர்கள். இவர்களுக்குப் பணிவிடை செய்வது கடமை.

கடமை என்றால் பலனை எதிர்பாராமல் செய்யவேண்டிய சடங்கு. இந்த மூவருக்கான பணிவிடைகள் கடனிலிருந்து வெளிவர உதவுகிறது. தன்னைத் துய்மைப்படுத்தி, செயல்பாட்டில் சித்த சுத்தியை அளித்து, பிறப்பின் இலக்கைத் தடையின்றி எட்டவைத்து மகிழ வைக்கிறது. அன்றாட அலுவல்களில் ஒத்துழைக்கும் நபர்களின் வரிசையில் அவர்களைச் சேர்க்கக்கூடாது. அவர்கள் வியாபார நோக்கில் பார்க்கப்பட வேண்டியவர்கள் அல்ல.

படைப்பில் முதல் படைப்பு பித்ருக்கள். அதன் பிறகு தேவர்களும் மனிதர்களும் தோன்றினர். இறந்த மனிதர்களை பித்ருக்கள் வரிசையில் சேர்த்து உயர்த்தச் சொல்கிறது வேதம்.

அவர்களுக்கு நேரடியாக எதையும் அளிக்க இயலாது. நித்ய பித்ருக்களான வஸுருத்ர ஆதித்யர்களில் இணைந்துவிடுவர். நாம் அளிக்கும் பணிவிடைகள், நித்ய பித்ருக்களான வஸுருத்ர ஆதித்யர்களைச் சென்றடைந்து, அவர்கள் மூலம் நம் பித்ருக்களை அடையும். பித்ருக்கள் திருப்தி அடைவர்.

இறையுருவத்தில் உறைந்திருக்கும் இறைவனுக்குப் பணிவிடைகள் நடைபெறும். அறுசுவை உணவும் அளிப்போம். தீபாராதனையால் இறைவனை மகிழ்விப் போம்.  கோடிக்கணக்கான கோயில்களில் நித்ய பூஜைகள் நடைபெறும். அவை அத்தனையும் இறைவனை அடைந்து, அவர் வழி உயிரினங்கள் அருள் பெற்று மகிழ்ச்சி அடைகிறார்கள்.

சிராத்தத்தில் வேதம் ஓதுபவனிடம் இணைந்த நம் பித்ருக்கள், நாம் அளிக்கும் உணவை ஏற்று திருப்தி அடைந்து அருள்வார்கள். நம் பார்வைக்கு, வேதம் ஓதுபவன் உணவருந்துவதாகத் தோன்றினாலும், சூட்சும வடிவில் அவரில் இணைந்து நமது பித்ருக்களே உணவருந்துகின்றனர். அவர்களை வழியனுப்பும் வேளையில், நமது கேள்விக்குப் பதில் அளிப்பதும் அவர்களில் ஒன்றிய நம் பித்ருக்களே என்று சாஸ்திரம் சொல்லும். நமது கேள்விக்குப் பதில் அளிக்கும் தகுதி பித்ருக்களுக்குத்தான் உண்டு. உணவு உண்ணும் வேதம் ஓதுபவனுக்கு இருக்க முடியாது.

மஹாளயபட்சத்தில் நம் பித்ருக்கள் பூமிக்கு இறங்கி, 15 நாட்கள் நாம் அளிக்கும் பணிவிடையை ஏற்க வருவார்கள்; அலட்சியப் படுத்தினால், தண்டனை அளிப்பார்கள் என்று சாஸ்திரம் சொல்லும்.

பீஷ்மர் பிண்ட ப்ரதானம் செய்யும்போது, அவரின் தகப்பன் கையை நீட்டி, 'கையில் அளித்துவிடு; பெற்றுக் கொள்கிறேன்’ என்று சொன்னார்.

'தங்களுக்கு நேரடியாகத் தர இயலாது. இது, நித்ய பித்ருக்கள் வாயிலாக தங்களை வந்தடைய வேண்டும் என்பது நியதி!’ என்று கூறி, பிண்டத்தை அவரிடம் அளிக்காமல் தரையில் வைத்து, தர்மசாஸ்திர நடைமுறையை வெளிப்படுத்தினார் பீஷ்மர்.

நாந்தீசிராத்தத்தில் நேரடியாக உணவு அளித்து, அவர்களின் திருப்தியைக் கேட்டு மகிழ்வது உண்டு. அவர்கள் தெய்வமாக மாறியவர்கள். இறையுருவங்களுக்கு அளிப்பது போல் அளிக்கவேண்டும்.

தேவர்கள் பணிவிடையில் பூணூல் வலமாகவும், ரிஷிகளுக்கு மாலையாகவும், பித்ருக்களுக்கு பூணூல் இடமாகவும் இருக்க வேண்டும் என்கிறது வேதம் (நிவீதம் மனுஷ்யாணாம் ப்ராசீனா வீதம் பித்ருணாம்....).

பித்ருக்கள் ஆராதனை நித்யம் நடைபெறும். பிரம்ம யக்ஞத்தில் பித்ருக்களுக்கு (திவ்ய) தர்ப்பணம் தினமும் உண்டு.

ஆக, சொற்பொழிவாளர் சொல்வது சாஸ்திரத்துக்குப் புறம்பானது. தினமும் நீராடியவுடன் தேவர்களுடன் சேர்த்துப் பித்ருக்களுக்கும் தர்ப்பணம் உண்டு.

'தர்ப்பணம்’ என்றால், திருப்திப்படுத்துதல் என்று பொருள். பித்ருக்களின் 'செல்’களில் இருந்து உருப்பெற்றவர்கள் அவர்களின் வாரிசுகள். மூன்று தலைமுறை வரையிலும், செல்களின் தொடர்பு ஆராதனைக்குப் போதுமான நெருக்கத்துடன் விளங்கும்.

அதன்பிறகே அதன் தரம் குறைந்துகொண்டு வரும். அவர்கள் நேரடியாக  அன்னம் ஏற்பதால், பிண்டப்ரதானம் முக்கியமாயிற்று. பிண்டத்ரேதாகரணம் மற்றும் பிண்ட ஸம்யோஜனத்தை சிறப்பு நிகழ்வாக சாஸ்திரம் சொல்லும்.

கடவுள் ஆராதனையைப் போன்று, பித்ருக்கள் ஆராதனையிலும் பித்ருக்கள் திருப்தி அடைவார்கள். அவர்கள் படைத்ததைப் பார்த்துத் திருப்தி அடைவார்கள் (த்ருஷ்டவாத்ருப்யந்தி).

பித்ருக்களுக்கான பணிவிடை பயனற்றது என்கிற வாதம் உண்மைக்குப் புறம்பானது. நீதிபதியின் தீர்ப்பு, ஜனாதிபதியின் உரை, பிரதம மந்திரியின் வாக்குறுதி அத்தனையும் அந்தப் பதவியில் இருக்கும் தனிமனிதனின் உரையல்ல; அந்தப் பதவிக்கு உரிய பொறுப்பில் விளைந்த உரை. தனி மனிதனுக்கு அங்கு செல்வாக்கு இல்லை.

வேதம் ஓதுபவனில் இணைந்த வார்த்தைகள், பித்ருக்களின் அருள். அங்கு, வேதம் ஓதுபவனுக்கு செல்வாக்கு இல்லை. பதவியில் இருப்பவன் பதவிக்கு உடைய செயலில் தென்படுவான்.

முன்னோர் வழிபாடு அவர்களுக்குப் பலன் தருமா?

முன்னோர் சொன்ன நியதிகளையும், தத்துவ விஷயங்களையும் ஒவ்வொருவரும் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப வளைத்துச் செயல்படுவதால், இன்றைய தலைமுறைக்கு சரியான வழிகாட்டல் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். இதுகுறித்து, தங்களின் அறிவுரை என்ன?

- கே.சதாசிவம், மதுரை-2

கர்மம், உபாசனை, ஞானம் ஆகிய மூன்றும் இணைந்து செயல்பட்டால் இலக்கை எட்டலாம் என்கிறது ஸனாதனம்.

இறைவனிடம் பக்தியும், கர்மத்தில் சிரத்தையும் உண்மையைத் தேடும் விஷயத்தில் ஒத்துழைக்கும். பிற்பாடு வந்த தர்சனங்கள், மாறுபட்ட விளக்கங்களை அளித்து தங்களது தர்சனத்துக்கு உயர்வை உறுதி செய்தார்கள்.

சூன்யம், கர்மம், ஞானம், அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம், பக்தி - இப்படி மாறுதலோடு விளக்கவுரை அளித்தனர். இந்த விளக்கங்கள் அனைத்தும் உயர்ந்த சிந்தனையாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் விளங்குகின்றன. அவை, சிந்தனை வளத்தைப் பெருக்கி, உண்மையை உணர ஒத்துழைக்கின்றன.

இது குறை அல்ல; நிறை. படைப்பின் விசித்திரம் பல சிந்தனைகள் தோன்ற ஏதுவாயிற்று. அலசி ஆராய்வதற்கு மாறுபட்ட சிந்தனைகள் துணை புரியும்.

புராணங்களும் இதிகாசங்களும் பாமரர்களை நல்வழிப்படுத்த உதவின. உண்மைக்குப் புறம்பான சில விளக்கங்கள் பாமரர்களை திசை திருப்புவது உண்டு. சூழலுக்கு ஏற்ப விளக்கவுரை அளிக்கும் ஆர்வமானது, உண்மையை அறியவிடாமல் தடுத்துவிடும்.

யுகதர்மம் என்ற பெயரில் நாம சங்கீர்த்தனத்தை உயர்த்தி, மற்றவற்றை செல்லாக்காசாகச் சித்திரிக்கும் சிந்தனை ஏற்புடையது அல்ல. மனித சிந்தனையை படிப்படியாக உயர்த்தி, உள்ளதை உள்ளபடி தெரியவைக்கும் முயற்சியை விட்டுவிட்டு, பாமரர்களை ஈர்க்கும் விதத்தில், தத்துவ விளக்கத்தைத் தரம் தாழ்த்தும் எண்ணம் மேலோங்கியிருப்பது நமது துரதிர்ஷ்டம்.

சுய சிந்தனையில் வளம் பெற்று தத்துவ விளக்கத்தை உணர வைப்பதில் ஆர்வம் காட்டும் ஸனாதனம். பிறர் வழிகாட்டுதலில் செயல்பட்டு சுதந்திரத்தை இழந்து, பரதந்திரமாக வாழ்வதை அது விரும்பாது.

பிறர் தூண்டுதலில் செயல்படும் பொம்மை போன்று... வாழ்வை சுரத்தில்லாமல் செய்வதில் அதற்கு உடன்பாடு கிடையாது.  ஆறாவது அறிவின் மேன்மையை உணர்ந்து, எதையும் அலசி ஆராய்ந்து உணர்வது பொருத்தமாகும்.

கிருத யுகத்தில் தியானத்தில் ஆழ்ந்து தத்துவத்தை உணர்ந்தனர். திரேதா யுகத்தில் வேள்வியைக் கையாண்டனர். துவாபர யுகத்தில் பூஜை- புனஸ்காரங்களை ஏற்றனர். கலியில் நாம சங்கீர்த்தனத்தைப் பின்பற்றினார்கள். கலியில் கடைத்தேற நாம சங்கீர்த்தனம் சிறந்தது என்றனர்.

மனித சிந்தனையின் தராதரத்துக்கு ஏற்ப மாறுபாடு விளக்கப்பட்டிருக்கிறது. மற்ற யுகங்களில் சிரமப்பட்டு உணர்ந்த தத்துவம், இந்த யுகத்தில் சிரமமில்லாமல் கிடைத்துவிடும் என்ற விளக்கம் ஏற்புடையது அல்ல. இங்கு யுகப் பெருமை பேசப்படுகிறதா அல்லது தத்துவத்தின் பெருமையா என்று விளங்கவில்லை.

கலியுகம் அதர்மம் மேலோங்கிய காலம் என்று விளக்கம் உண்டு. ஆனால், தத்துவ உணர்வு எளிமையான வழியில் கிடைத்துவிடும் காலம் என்று பெருமைப்படுத்தப்படுகிறது. இப்படி எதிரிடையான விளக்கங்கள் பாமரர்களுக்கு எட்டாததால், திசை திருப்பிவிடப்பட்டு, உண்மையைத் தெரிந்துகொள்ள இயலாமல் பாமரர்களாகவே இருந்துவிடுகிறார்கள்.

- பதில்கள் தொடரும்...

முன்னோர் வழிபாடு அவர்களுக்குப் பலன் தருமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism