

##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''ஓ... மும்பையைச் சுத்திப் பாத்தீங்களா? ஜுஹு பீச்ல பாவ்பாஜி, வடபாவ்லாம் சாப்பிட்டீங்களா?'' என்று, அங்கே பலகாலம் வசித்து வந்த மூத்த வக்கீல் ஒருவர் ஆர்வத்துடன் கேட்டார்.
''சார் நம்மள மாதிரி சாப்பிட அலையறவர் இல்லை. கடற்கரை மகாலட்சுமி கோயில், பிரபாவதி ஸ்ரீஸித்தி விநாயகர் கோயில்னு ஒரு ரவுண்டு போயிட்டு வந்திருப்பார்'' என்று இன்னொருவர் சொன்னார்.
உடனே நான், ''நீங்க சொன்ன இடங்களையெல்லாம் எப்பவோ பார்த்துட்டேன். அங்கே கிடைக்கிற ஸ்பெஷல் உணவை வெளுத்துக் கட்டியிருக்கேன். இந்த முறை, கடலுக்கு நடுவே உள்ள, அபூர்வச் சிற்பங்கள் கொண்ட எலிஃபென்டா குகைக் கோயிலுக்குப் போனேன். அடடடாடா..!'' என்றேன்.
தொடர்ந்து... ''மும்பை போனா, மறக்காம பார்க்கவேண்டிய இடம்... எலிஃபென்டா குகை. மும்பை கேட் கடல் பகுதியிலேருந்து படகுல போகணும். முக்கால் மணி நேரப் பயணம். தீவு மாதிரி இருக்கு, அந்த இடம்! அங்கே நம்ம ஊட்டி ரயில் மாதிரி சின்ன ரயிலும் உண்டு. ட்ரெயின்ல ஏறி, மலையடிவாரத்துல இறங்கி, சுமார் 200 படிகள் ஏறினா, குகைக் கோயிலை அடையலாம்!'' என்று விவரிக்க... ''வழியில கடைகள் ஏதாவது இருக்கா? பசிக்க ஆரம்பிச்சிருமே... அதான் கேட்டேன்! ஹி... ஹி...'' என்று அசடு வழிந்தார் நண்பர்.
இன்னொருவர், ''குகையா... அப்படீன்னா அலிபாபா குகை மாதிரியா? எதுனா மந்திரம் சொல்லணுமா?'' என்று கேட்டார்.
''மந்திரமும் சொல்ல வேணாம்; தந்திரமும் செய்ய வேணாம். ராஷ்டிரகூடத்து மன்னர்கள் மலையைக் குடைஞ்சு உருவாக்கிய அற்புதமான கோயில் இது. ஆனா பிற்காலத்துல, போர்ச்சுகீசியர்கள்தான் இப்படியரு தீவு இருப்பதையே கண்டுபிடிச்சாங்களாம்! இதுல என்ன சோகம்னா, அங்கே இருக்கிற சிற்ப நுட்பங்கள் எதையும் தெரிஞ்சுக்காம, துப்பாக்கிப் பயிற்சி செய்றேன் பேர்வழின்னு அங்கேயுள்ள சிற்பங்களையெல்லாம் சிதைச்சதுதான் மிச்சம்! சிவா, பிரம்மா, விஷ்ணு என மூணு பேரோட முகங்கள் இணைந்திருக்கிற சிற்பம் கொள்ளை அழகு! அதுதான் ராஷ்டிரகூட அரசின் சின்னமா இருந்திருக்கு. திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளாகிய நடராசர் மற்றும் சதாசிவன் சிற்பமும் ராஷ்டிரகூட கலைச்சிற்பங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு! ஒருநாள் முழுக்கச் சுற்றிப் பார்க்கவும் ரசிக்கவும் இடம் உண்டு. கண்டிப்பாப் போயிட்டு வாங்க. அப்புறம்.. வேற என்ன விஷயம்?'' என்று சொல்லி முடிக்க...
'அடடா... என்ன ஒற்றுமை என்ன ஒற்றுமை’ என்று பரவசத்துடன் சொன்னார் நண்பர். எல்லோரும் அவரையே பார்த்தோம்.
''நீங்க மேட்டரை சொல்லி முடிக்கறதுக்கும் இங்கே தட்டுல முந்திரி பகோடா காலியாகறதுக்கும் சரியா இருக்கு பாருங்க'' என்று அவர் சொல்ல... கலகலவென சிரித்துவிட்டு, நடையைக் கட்டினோம்.