Published:Updated:

ஞானப் பொக்கிஷம்: 20

ஞானப் பொக்கிஷம்: 20

ஞானப் பொக்கிஷம்: 20

ஞானப் பொக்கிஷம்: 20

Published:Updated:
ஞானப் பொக்கிஷம்: 20
ஞானப் பொக்கிஷம்: 20
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ழந்தமிழ் நூல்களில் இயற்கை வர்ணனை என்பது ஓவியமாகவே தீட்டப்பட்டதைப் போன்றிருக்கும். ஆனால், பெரும்பாலோர் அந்த இயற்கை வர்ணனைகளைப் படிக்கமாட்டார்கள். தாவி, அடுத்த பத்திக்குப் போய்விடுவார்கள். பிறகு எதற்காக அந்த இயற்கை வர்ணனைகள்? வாருங்கள், பார்க்கலாம்.

'கல்லாடம்’ என்னும் நூல் காட்டும் இயற்கை வர்ணனை இது...

'அருவியானது முழங்கி ஒலித்துக் கொட்டிக்கொண்டிருக்கிறது. அப்போது சிதறி எழுகின்ற நீர்த்துளிகளும், துருத்தியின் வாயை அழுத்துவதால் குங்குமம் கலந்தாற்போலச் சிவந்திருக்கும் செம்மண் நீரும் கண்களில் படுகின்றன. குறமகளிர் வண்டலாட்டிக் கொழித்து எடுக்கும் மூங்கில் முத்துக்களும், நடனச்சாலையில் பெண்கள் ஆடும்போது அவர்களின் மாலைகளில் இருந்து அறுந்து சிதறுகின்ற முத்துக்களும் கிடக்கின்றன.

காடு அழியும்படி வெட்டி, வெட்டுப்பட்ட மரங்களை எரிக்கும்போது எழும் காரகில் புகையும், அந்தணர்களால் வளர்க்கப்பட்ட யாகத்தின் சிவந்த தீப்புகையும் தெரிகின்றன. வேங்கைப் பூக்களின் தாதுத் துகள்களை விரும்பிய பெண் வண்டுகளும், விரிந்த பாக்கு மரத்தில் படிந்த மெல்லிய சிறகுகளை உடைய ஆண் வண்டுகளும் இருக்கின்றன.

சந்தனச் சோலையில் சிறகை விரித்தாடுகின்ற மயில்களும், உயர்ந்த பனை மரத்தின் மேல் உள்ள கூட்டில் அன்றில் பறவைகளும் இருக்கின்றன.

இவையெல்லாம், சரவணப் பொய்கையில் உதித்த முருகப் பெருமானுடைய திருப்பரங்குன்றத்தில் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருக்கின்றன.’

நம் கண்களின் எதிரில் ஒரு வண்ணப்படம் போலத் திருப்பரங்குன்றத்தையும் அதன் தலைவனான முருகப் பெருமானையும் காட்டும் பாடல்...

'கறங்கிசை யருவியறைந்து நிமிர் திவலையும்
துருத்திவாயதுக்கிய குங்குமக் காண்டமும்
குறமகார் கொழிக்கும் கழை நித்திலமும்
நெடுநிலை யரங்கில் பரிபெறு தரளமும்
புனம் பட வெரிந்த காரெகிற்றூமமும்
அந்தணர் பெருக்கிய செந்தீப் புகையும்
வேங்கையின் தாதுடன் விரும்பிய அரும்பும்
கந்தி விரி படிந்த மென் சிறை வண்டும்
சந்தனப் பொங்கர்த் தழைச்சிறை மயிலும்
முன்றிலம் பெண்ணைக் குடம்பை கொளன்றிலும்
ஒன்றினோ டொன்று சென்று தலை மயங்கும்
குளவின் குன்றம்’

(கல்லாடம் 52-ஆம் பாடல்)

இந்தப் பாடலை, வெறும் இயற்கை வர்ணனைதானே எனத் தள்ளிவிட முடியாது. காரணம், இதில் ஒரு பெரிய தத்துவத்தையே பொதித்து வைத்திருக்கிறார் கல்லாடர். அதென்ன தத்துவம்?

'நீரின்றி அமையாது உலகு’ என்றார் திருவள்ளுவர். அதன்படியே அனைத்து ஜீவராசிகளும் வாழ்வதற்குக் காரணமான தண்ணீரை... அதுவும் ஒலியுடன் கொட்டக்கூடிய அருவி என்று நீர்வளத்தை முதலில் வைத்து வர்ணித்த இந்நூலாசிரியர், திருப்பரங்குன்றத்தின் வளப்பத்தை விரிவாக வர்ணிப்பதன் மூலம், ஒரு மாபெரும் தத்துவத்தை உணர்த்துகிறார்.

அந்தத் தத்துவம்... 'உன்னுடைய சுதர்மத்தை(விதிக்கப்பட்ட கடமையை)ச் செய்!’ என்பதே! கீதையில் கண்ணன் கூறுவதும் இதுவே.

அருவியினுடைய சுதர்மம், அதுபாட்டுக்குக் கொட்டிக்கொண்டேயிருப்பது. இதை முதலில் சொன்ன இந்நூலாசிரியர், எப்போதும் பிரியாத அன்றில் பறவைகள் கூட்டில் ஒன்றாகத் தங்கியிருப்பதைச் சொல்லிப் பாடலைத் தலைக்கட்டுகிறார் (அன்றில் பறவைகள் ஒன்றை ஒன்று பிரிந்தால் இறந்துவிடும்).

மறுபடியும், இந்தப் பாடலின் பொருளை ஒருமுறை ஆழ்ந்து படியுங்கள். 'அருவி முதல் அன்றில் பறவைகள் வரை அதனதன் சுதர்மத்தை ஒழுங்காகச் செய்துகொண்டு இருக்கின்றன. இப்படி சுதர்மம் ஒழுங்காகச் செய்யப்படும் இடத்தில் ஒற்றுமை தானாக வரும்; வேற்றுமைக்கு வழியில்லை. தெய்வம், தானே தேடி வந்து அமராதா?’ என அறிவுறுத்துகிறார் கல்லாடர்.

தமிழில் மிகப்பெரும் பெருமை வாய்ந்த நூல் இது. கல்லாடம் படித்தவனோடு சொல்லாடாதே, கல்லாடம் படித்தவனோடு மல்லாடாதே என்றெல்லாம் பழமொழிகள் உள்ளன.

நூறு பாடல்கள் அடங்கிய இந்த அருந்தமிழ் நூலை, மதுரையில் சிவபெருமான் திருமுன்னர் அரங்கேற்றினார் கல்லாடர். ஒவ்வொரு பாடலையும் சிவபெருமான் தலையசைத்து ஒப்புதல் அளித்தார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த அருந்தமிழ் நூலில், தமிழ் மொழியின் அருமை பெருமைகளைச் சொல்லிக் கல்லாடர் பாடியுள்ளதைப் போன்று வேறு எவரும் பாடவில்லை என ஆராய்ச்சியாளர்கள் பாராட்டுகிறார்கள்.

- இன்னும் அள்ளுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism