கேரள திவ்ய தேசங்கள்
கேரள திவ்ய தேசங்கள்

கெடும்இட ராய எல்லாம் 'கேசவா!’ என்ன; நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்;
விடமுடை அரவில் பள்ளி விரும்பினான் கரும்பு அலற்றும்
தடம்உடை வயல்அ னந்த புறநகர்ப் புகுதும் இன்றே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- நம்மாழ்வார் (பத்தாம் பத்து; 2- ஆம் திருவாய்மொழி)

##~##
பொருள்:
'கேசவா!’ என்று ஒருமுறை சொல்ல, எல்லாத் துன்பங்களும் அழியும். எப்போதும் கொடிய செயல்களையே செய்கிற எம தூதர் களும் அணுக மாட்டார்கள். ஆதலால், நஞ்சு பொருந்திய ஆதிசேட சயனத்தினில் அரிதுயில் கொண்டுள்ள எம்பெருமானுடைய வண்டுகள் ஒலிக்கும் தடாகங்களை உடைய, வயல்கள் சூழ்ந்த திருவனந்தபுரம் எனும் நகரத்தை இன்றே அடைவோம்!

லகிலேயே அதிக செல்வத்துக்கு அதிபதியான திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மசாமி, கிழக்கு நோக்கி சயனத் திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார். இந்தப் பெருமாள் திருமுகப் பக்கம், திருநாபி பக்கம், திருவடிப் பக்கம் என மூன்று வழிகளை அமைத்துக் கொண்டு, பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். தாயாரின் திருநாமம் ஸ்ரீஹரிலட்சுமி. கருவறைக்கு ஏமகூட விமானம். சிவன், இந்திரன், சந்திரன் ஆகியோருக்குத் திருக்காட்சி அருளிய பெருமாள் இவர். நம்மாழ்வார் இவரை 11 பாடல்களால் மங்களாசாசனம் செய்தருளியுள்ளார்.

கேரள திவ்ய தேசங்கள்

இந்த ஆலயத்தில், அனந்த சயனக் கோலத்தில் ஸ்ரீமகா விஷ்ணு காட்சி அளிப்பது தொடர்பான குறிப்புகள், பாகவத புராணம் மற்றும் பிரமாண்ட புராணத்திலும், பலராமன் இங்கு வந்து தீர்த்தக்குளத்தில் நீராடி, பெருமாளைத் துதித்ததற்கான குறிப்புகள் ஸ்ரீமத் பாகவதத் திலும் உள்ளன. சுமார் 4000 சிற்பிகள், 6000 பணியாளர்கள், 100 யானைகள் 6 மாத காலம் உழைத்து, கோயிலின் பலிப்புரா மண்டபத்தைக் கட்டியதாகவும் குறிப்புகள் உண்டு. 1566-ஆம் ஆண்டு ஆலயக் கோபுரம் எழுப்பப்பட்டது.

'அனந்த சயன மகாத்மியம்’ என்ற ஓலைச்சுவடி நூலில், கலி வருடம் தொடங்கி 950-ஆம் நாளில் திவாகர முனி என்ற துளு அந்தணத் துறவியால் இந்தக் கோயில் ஸ்தாபிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் குஜராத், சிந்து நதிக்கரையிலிருந்து 72 குடும்பங்களுடன் இடம் பெயர்ந்து இங்கு வந்ததாகவும், இவர்கள் ஸ்ரீகிருஷ்ணனின் வம்சத்தவர் எனவும், தங்கள் இல்லத்தில் வைத்திருந்த திருவம்பாடி கிருஷ்ணர் விக்கிரகத்தை இங்கு கொண்டுவந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒருமுறை, திவாகர முனி கடுந்தவம் செய்து கொண்டிருந்தார். ஸ்ரீவிஷ்ணு இரண்டு வயது குழந்தையாக வடிவெடுத்து அவர் முன் தோன்றினார். குழந்தையின் அழகில் மெய்ம்மறந்த முனி, ''என்னோடு இருந்து விடேன்!'' என்று அந்தக் குழந்தையிடம் கேட்டார். குழந்தையோ, ''எனக்கு அவமரியாதை ஏதும் செய்யாமல் இருக்கும் வரை இங்கேயே தங்குகிறேன்'' என்று நிபந்தனை விதித்தது. முனிவரும் ஒப்புக்கொண்டார்.

கேரள திவ்ய தேசங்கள்

ஒருநாள், முனிவர் பூஜித்துக்கொண்டிருந் தார். அப்போது அந்தக் குழந்தை அவர் புனிதமாகப் போற்றி வணங்கி வந்த சாளக்கிராமத்தை எடுத்து வாயில் வைத்துக் கடித்தது.  மேலும், சேட்டைகள் பல செய்தது. முனிவர் குழந்தையைக் கோபத்துடன் கடிந்து கொண்டார். அவ்வளவுதான்... முனிவர் ஒப்பந்தத்தை மீறியதால், குழந்தை அங்கிருந்து ஓடி மறைந்தது. முன்னதாக, ''நீங்கள் என்னைப் பார்க்க விரும்பினால், அனந்தன் காட்டுக்கு வாருங்கள்!'' என்று சொல்லிச் சென்றதாம்.

கேரள திவ்ய தேசங்கள்

குழந்தையைப் பிரிந்ததால் மிகவும் வருந்திய முனிவர், குழந்தை சென்ற வழியே தானும் பயணப்பட்டார். ஒரு காட்டின் நடுவே இலுப்பை மரத்தடியில்  தென்பட்ட குழந்தை, மரப்பொந்தில் நுழைந்து மறைவதைக் கண்டார். மறுகணம், அந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்து, ஸ்ரீமகாவிஷ்ணுவின் பிரமாண்ட சயனத் திருக்கோலமாகக் காட்சி அளித்தது. அங்கிருந்து சுமார் 3

கி.மீ. தொலைவிலுள்ள திருவல்லத்தில் தலையும், 5 கி.மீ. தூரத்திலுள்ள திருப்பாதபுரத்தில் திருவடியுமாக பகவான் சயனித்திருந்ததைக் கண்ட திவாகர முனிவர், உருவத்தை சிறிதாக்கிக் கொள்ளும்படி பெருமாளைப் பிரார்த்தித்தார். அதற்கேற்ப, தம்முடைய திருவுருவை 18 அடி நீளத்துக்கு சுருக்கிக் கொண்டார் பெருமாள்.

தனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட பெருமாளுக்கு, தேங்காய் சிரட்டையில் பச்சை மாங்காய்களை நிரப்பிப் பக்தியுடன் சமர்ப்பித்தார் திவாகர முனி (அன்று துவங்கி இன்றளவும் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி பூஜையில், தங்கத் தகடு, வைரம் முதலானவை பதிக்கப்பட்ட தேங்காய் சிரட்டையில், மாங்காய் நிவேதனம் நிறைவேற்றப்படுகிறது). இதனால் மகிழ்ந்த பெருமாள், தனக்கு பூஜை செய்யும் உரிமையை துளு அந்தணர் களுக்கு அளித்தார். திவாகர முனியைத் தொடர்ந்து, வழிவழியாக இன்றளவும் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமிக்கு பூஜை செய்பவர்கள், துளு அந்தணர்களே!

இன்னொரு வரலாறும் உண்டு. புகழ் பெற்ற நம்பூதிரி வகுப்பைச் சேர்ந்த வில்வமங்கலத்து சாமியார் என்பவர் மகாவிஷ்ணுவின் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். அவரது கடும் தவத்தின் பலனாக, பெருமாளின் திருக்காட்சி கிடைத்தது. அப்போது ஸ்வாமிக்கு மாங்காய்களை நிவேதனம் செய்து வழிபட்டாராம் நம்பூதிரி. அதன் தொடர்ச்சியாக, தினமும் ஸ்வாமிக்கு காலை பூஜையின்போது, புஷ்ப அஞ்சலி செய்யும் உரிமை கிடைத்ததாம். இப்போதும் நம்பூதிரி வகுப்பைச் சேர்ந்தவர்களே தினப்படி பூஜையின்போது ஸ்வாமிக்கு புஷ்பாஞ்சலி செய்துவருகின்றனர். அப்படி பூஜை செய்பவருக்கு, 'புஷ்பாஞ்சலி சாமியார்’ என்ற பெயரே வழங்கிவருகிறது. மேலும், ஆலய வழிபாட்டு முறைகளை வரையறுக்கும் 'தந்திரி’கள் நம்பூதிரி வகுப்பினரிலிருந்தே வழிவழியாகத் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

கேரள திவ்ய தேசங்கள்

ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி ஆலயத்தில்... பல அதிசயங்கள் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மண்டபத்தில் பால் வழிவது, இரவில் மணியோசை கேட்பது, சிறு குழந்தையின் காலடியோசை கேட்பது, சலங்கை ஒலிப்பது போன்ற அதிசயங்கள் நடப்பதாகக் கூறுகிறார்கள். 1628-ஆம் ஆண்டு, ஆலயத்தில் உள்ள ஸ்ரீராமர் சந்நிதியின் வடக்குப் பக்கம், பால் பொங்கி வழிந்ததாம். வீர ரவிவர்மா மகாராஜா இந்தத் தெய்வீகக் காட்சியைக் காண முடிந்ததாகவும், அந்தப் பாலைப் பருகி அவர் மகிழ்ந்ததாகவும் குறிப்புகள் உள்ளன. ஸ்ரீபத்மநாப ஸ்வாமி பள்ளிகொண்டிருப்பது பாற்கடலில் அல்லவா? அதனால் அப்படிப் பால் ஒழுகுவதாக புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது. கோயில் மண்டபத்தில்

பால் ஒழுகுவதைத் தடுக்க, ஈயம் உருக்கிப் பூசப் பட்டிருப்பதை இன்றும் காணலாம். கோயிலில் சில நேரம் சில உற்பாதங்களும் நேர்ந்திருக்கின்றன. கருவறையிலிருந்து மூன்று நான்கு பாம்புகள் வெளிப்பட்டதும், 1686-ஆம் ஆண்டு தீப்பிடித்ததுமான நிகழ்வுகள் உண்டு.

இந்த ஆலயத்தில் உள்ள ஸ்ரீதிருவம்பாடி கிருஷ்ணன் சிலை ஸ்ரீபத்மநாப ஸ்வாமி சிலையைவிடப் பழைமையானது என்கின் றனர் ஆராய்ச்சியாளர்கள். ஸ்ரீபத்மநாப ஸ்வாமியை நிறுவியதற்குப் பிறகு, ஸ்ரீசாஸ்தா, ஸ்ரீநரசிம்மர் விக்கிரகங்களும் நிறுவப் பட்டுள்ளன. பல வருடங்களுக்கு முன் மரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த மூலவர் திருவுரு, 1730-ஆம் ஆண்டுவாக்கில் திருவாங்கூர் மகாராஜா மார்த்தாண்டவர்மர் காலத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. 12,008 சாளக்கிராமக் கற்கள் கொண்டு 'கடு சர்க்கரா’ யோகம் எனும் சக்தி வாய்ந்த மூலிகைகளால் உருவாக்கப்பட்டதே, இப்போது நாம் தரிசிக்கும் மூலவர் ஸ்ரீஅனந்த பத்மநாப ஸ்வாமியின் திருவுருவம்.

வழிவழியாகப் பல மன்னர்கள் இந்த ஆலயத்துக்குப் பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்திருக்கின்றனர்.அவர் களில் மகாராஜா ஸ்ரீசித்திரைத் திருநாள் ராமவர்மா மிகவும் போற்றப்படுகிறார். 1936-ஆம் ஆண்டில், இவர் 'க்ஷேத்திரப் பிரவேச விளம்பரம்’ எனும் சட்டத்தை நிறைவேற்றினார். அதன்படி, சாதி வேறுபாடு எதுவும் இந்தக் கோயிலில் கடைப்பிடிக்கலாகாது. பிறப்பால் இந்துவாகப் பிறந்தவர்கள் எவரும் இந்தக் கோயிலில் சாதி வேறுபாடு இன்றி நுழையலாம்; வழிபாடுசெய்யலாம். புரட்சிகரமான, தைரியமான இந்தச் சட்டம் பாரத நாட்டில் முதன்முறையாக இந்த ஆலயத்தில்தான் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீபத்மநாபஸ்வாமி ஆலயத்தின் மேல்சாந்தி- நம்பி மடம் ஸ்ரீபத்மநாப ஸ்வாமி (இவருக்கும் ஸ்வாமியின் பெயரே!). தினமும், ஸ்வாமி தரிசனத்துக்கு வரும் மகாராஜாவுக்குப் பிரசாதம் அளித்து ஆசி கூறும் உரிமை இவருக்கு மட்டுமே உண்டு. அவரைச் சந்தித்த போது, ''பெருமாள் அனந்த சயனத்தில் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக இருக்கிறார். வலக் கையில் சிவலிங்கம் ஏந்தியிருக்கிறார். ஸ்வாமிக்கு அபிஷேகம் இல்லை. தங்க விக்கிரகமான உத்ஸவருக்கே அபிஷேகம் செய்கிறோம். அதிகாலை 3:45 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மதியம் 12:30 மணி வரையும், பிற்பகல் 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 7:30 மணி வரையும் பகவான் தரிசனம் கிடைக்கும். ஐப்பசி, மார்கழி மாதங்களில் தலா 10 நாள் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

இங்கு வித்யாரம்பம் செய்வது, ஸ்ரீவியாஸ பகவான் முன் கல்வி தொடங்குவதற்குச் சமம். ஆறு வருடங்களுக்கு ஒருமுறை லட்ச தீபம், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை 'மு(¬)ற ஜபம்’ (ஸ்ரீஅனந்த பத்மநாப ஸ்வாமிக்கும் ஸ்ரீநரசிம்மருக்கும் சந்தன அபிஷேகம் முதலான ஆராதனைகளுடன் 7 நாட்கள் நிகழும் வைபவம் இது) ஆகிய பெரும் நிகழ்வுகளை ஆலயத்தில் செய்து வருகிறோம். 2008-ல் லட்ச தீபம் கடைசியாக நடந்தது. அடுத்து 2014-ல் நடைபெற உள்ளது. ஸ்ரீஅனந்த பத்மநாப ஸ்வாமியை மனமுருகி வேண்டுவோர்க்கு சர்வாபீஷ்ட ஐஸ்வரியம் கிடைக்கும். அதாவது பக்தர்களுக்கு மன நிறைவையும், அளவற்ற ஐஸ்வரியத்தையும் வாரி வழங்குவார் என்று பொருள்!'' என்கிறார் மெய்சிலிர்க்க.

படங்கள்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism