புனனூர் தாத்தா - 3
புனனூர் தாத்தா - 3
புனனூர் தாத்தா - 3

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'சபரிமலைக்கு மாலை போடுறோம். இருமுடி கட்டிட்டுக் கிளம்பிப் போகும்போதும், ஐயப்பனைப் பார்த்துட்டு வரும்போதும் என்னென்ன கோயில்களையெல்லாம் பாக்கப்போறோம், தெரியுமா?’ என இன்றைக்கு பக்தர்கள் குழுவினர், மிகப் பெரிய பட்டியலை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். கூகுள் மேப் மூலம் கோயிலின் இருப்பிடத்தையும் தூரத்தையும் தெரிந்துகொண்டு, கச்சிதமாகத் திட்டமிடுகிறார்கள். பஸ், வேன் அல்லது கார் என வாகனங்களை அமர்த்திக்கொண்டு, ஒவ்வொரு தலமாகச் சென்று தரிசித்துவிடுகிறார்கள். இன்றைக்குச் சாலைகளும் கடைக்கோடி வரை ஊடுருவிவிட்டன; வாகனங்களும் பெருகிவிட்டன.

ஆனால், அந்நாளில் சபரிமலை யாத்திரையின்போது, இத்தனை வசதி வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில், பக்தர்கள் அனைவரும் செல்ல நினைத்த இடம் எது தெரியுமா? பார்க்க விரும்பிய நபர் யார் தெரியுமா? செங்கோட்டையில் வசித்து வரும் வாஞ்சீஸ்வர ஐயர் சொல்வதைக் கேளுங்கள்...

''அந்தக் காலத்துல மலைக்கு நெருக்கமா, இன்னிக்கி இருப்பது மாதிரியெல்லாம் பஸ் வசதி கிடையாது. இன்னும் சொல்லப் போனா, எரிமேலிக்கேகூட பஸ் வசதி ரொம்பக் குறைவுதான்! ஆனா, பக்தர்கள் உற்சாகமாவும் சந்தோஷமாவும் பயம் இல்லாமலும் வந்தாங்கன்னா... அதுக்குக் காரணம் புனலூர் தாத்தாதான்!'' என்று அவரிடம் நெருங்கிப் பழகிய வாஞ்சீஸ்வர ஐயர் தெரிவித்தார்.

புனனூர் தாத்தா - 3
##~##
''செங்கோட்டை, திருவனந்தபுரத்துலேருந்து கொட்டாரக்கரைன்னு பல வழிகள்ல சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வர்ற பக்தர்கள் உண்டுதான். இதுல, செங்கோட்டை வழியா கேரளத்துக்கு வர்ற பக்தர்கள், புனலூருக்கு வந்தே ஆகணும். அப்படி வர்றவங்க, புனலூர் தாத்தாவைப் பார்க்கணும்; அவர் வீட்டுக்குப் போகணும்; அங்கே தர்ற அன்னதானத்தைச் சாப்பிடணும்னு அவ்வளவு ஆசையா வருவாங்க. புனலூர் தாத்தா வீட்டுக்கு வந்துட்டுக் கிளம்பும்போது, ஏதோ சபரிமலை ஐயப்ப ஸ்வாமியையே கண்ணாரத் தரிசனம் பண்ணிட்டுக் கிளம்பற மாதிரி, முகத்துல அப்படியரு பரவசத்தையும் நிறைவையும் அவங்ககிட்ட பார்த்திருக்கேன்'' என்று அவர் சொல்லும்போதே வார்த்தையிலும் கண்களிலும் மிளிர்கிறது வெளிச்சம்.

''உண்மைதான். இதுல என்ன சுவாரஸ்யம்னா, செங்கோட்டைலேர்ந்து ஒண்ணரை மணி நேரத்துல புனலூர் வந்துடலாம். ஆனா, திருவனந்த புரத்துலேருந்து புனலூர் ரொம்பவே தூரம். ஆனாலும், அந்தப் பக்கத்துலேருந்து வர்ற பக்தர்களும் புனலூர் வீட்டுக்கு வந்து, சாப்பிட்டுட்டுப் போறதை வழக்கமா வைச்சிருந்தாங்க.

புனனூர் தாத்தா - 3

'பாவம்... இங்கிருந்து பஸ் வசதி இருந்தா சிரமப்படாம போவாங்களே...’ னு அப்பா சொல்லிக்கிட்டே இருந்தார். அப்புறம் நாலு நாள் இருக்கும்... வாசல்ல எந்நேரமும் நாலஞ்சு பஸ் தயார் நிலையிலேயே வந்து நின்னுச்சு. என்னன்னு பார்த்தா... அப்பாவுக்கு லாரி உரிமையாளர்கள் நிறைய பேரைத் தெரியும். அவங்ககிட்ட சொல்லி, பஸ் முதலாளிகள்கிட்ட பேசியிருக்கார் அப்பா. 'கார்த்திகை, மார்கழி இந்த ரெண்டு மாசமும் நிறைய பக்தர்கள் இங்கே வருவாங்க. அவங்க வயிறாரச் சாப்பிட்டுட்டு பஸ் ஏறினா, எரிமேலிக்கு ஈஸியா போற மாதிரி பஸ் வசதி ஏற்பாடு செஞ்சு தரணும்னு விரும்பறேன். அதுக்கான தொகை எவ்வளவோ அதை நான் கொடுத்துடுறேன்’னு அப்பா சொல்ல... 'அடடா... இது எங்களுக்குக் கிடைச்ச பாக்கியம்’னு சொல்லி பஸ் முதலாளிங்க பஸ்ஸைக் கொண்டு வந்து வீட்டு வாசல்ல நிறுத்திட்டாங்க. அப்புறம் எரிமேலி, ஆரியங்காவுன்னு பக்தர்கள் இங்கேருந்து ரொம்ப சுலபமா கிளம்பிப் போனாங்க. அந்த அளவுக்கு, அடுத்தவங்களைப் பத்தி ரொம்பவே அக்கறையோட கவலைப்படறவர் அப்பா'' என்று சொல்லிச் சிலிர்க்கிறார் புனலூர் தாத்தாவின் மகன் ராமகிருஷ்ண ஐயர்.

ஒரேயரு முறை சபரி மலைக்குச் செல்வது என்று முடிவெடுத்து, அதன்படி சபரிமலைக்குச் சென்று, ஸ்வாமியைத் தரிசித்து வந்தவர்தான் புனலூர் தாத்தா. அச்சங்கோவில் ஐயனைப்போல, ஆரியங்காவில் குடியிருக்கும் பகவானைப்போல, சபரிமலை ஐயப்ப ஸ்வாமியும் அவர் மனத்துள் புகுந்து என்னவோ செய்ய... அடுத்தடுத்து அடிக்கடி சபரிமலைக்குச் செல்ல வேண்டும் என உள்ளுணர்வு உசுப்பிவிட்டிருக்கிறது அவருக்கு!

அதுமட்டுமா? 'என் ஐயனே... உன் சித்தம் என் கடமை. உன் அழைப்பை ஏற்று மலைக்கு வருகிறேன்’ என்று உறுதி பூண்டதுடன், தன்னுடன் அன்பர்கள் பலரையும் அழைத்துச் சென்று வழிகாட்டுவது என மனத்துள் சங்கல்பம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது.

''சபரிமலைக்குப் போறதுன்னா, உடம்புல அப்படியரு சக்தி பரவிடும் அவருக்குள்ளே! சபரி யாத்திரை பண்றதுக்கு உதாரண புருஷரா விளங்கினவர் புனலூர் தாத்தா. நித்திய அனுஷ்டானங்களை எந்த இடையூறும் இல்லாம செய்றதுக்கான இடம் எது எதுன்னு தாத்தாவுக்கு நல்லாவே தெரியும். 'நம்மோட நித்தியப்படி கடமையை ஒருபோதும் கைவிட்டுடக் கூடாது. அதேநேரம், ஐயன் ஐயப்பனைத் தரிசனம் பண்ணினாத்தான் மகா புண்ணியம்’னு எல்லார்கிட்டயும் வலியுறுத்தினார் தாத்தா.

புனனூர் தாத்தா - 3

வீட்ல நடந்த அன்னதான சேவையை, காட்டிலும் தொடரணும்னு முடிவு பண்ணினார். வெறுமனே அன்னதானம் பண்ணினா போதாதுன்னு, அன்னதானம் நடக்கற இடங்கள்ல சின்னதா கணபதி ஹோமம், விசேஷ பஜனை, சிறப்பு பூஜைன்னு எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சார். மளிகை சாமான்கள், அவல், அரிசி வகைகள், மண்ணெண்ணெய் டின், பெட்ரோமாக்ஸ் விளக்குகள், விறகு வெட்டுவதற்கான கோடரி, சமையல் செய்றதுக்கும் எடுத்துப் பரிமாறுவதற்கும் சின்னதும் பெரியதுமா பாத்திரங்கள், பாத்திரங்களையும் அரிசி மூட்டைகளையும் தூக்கிச் சுமக்கவும் பக்தர்களுக்குப் பாதுகாப்பா இருக்கவும் வேடர்கள் என மிகப் பெரிய குழுவையே உருவாக்கி வைச்சிருவார். ஒரு மிலிட்டரி பட்டாலியன் மாதிரி, தாத்தாவோட கட்டளைகள் பறந்துக்கிட்டே இருக்கும். அந்தக் குழுவினர் பம்பரமா வேலை செஞ்சுக்கிட்டே இருப்பாங்க.

அந்த நாட்கள்ல, வீட்டுக்கே போகமாட்டார் தாத்தா. காட்டுலயே தங்கி, அன்னதானம் நடக்கற இடங்களைச் சுத்திச் சுத்தி வந்துட்டிருப்பார். அப்ப தாத்தாவைப் பாக்கணுமே... ஏதோ இந்த ரூமுக்கும் அடுத்த ரூமுக்கும் போறது மாதிரி, மலையோட இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமா பரபரன்னு ஓட்டமும் நடையுமா வலம் வர்ற புனலூர் தாத்தாவைப் பார்த்துதான், அந்தத் தலைமுறைக்காரங்க ஐயப்ப ஸ்வாமிக்கு அதீத பக்தர்களா மாறினாங்கன்னு கூடச் சொல்லலாம். நிச்சயமா, அவர் வயசு உள்ளவங்க யாரும் அப்படி ஓடியாடி வலம் வரவே முடியாது. அந்த சாஸ்தாவோட சக்திதான் அவர் உடம்புக்குள்ளே இறங்கி, எல்லா பக்தர்களையும் வழிநடத்துச்சுன்னு நான் நினைக்கிறேன்'' என்று விழிகள் விரியச் சொல்கிறார் வாஞ்சீஸ்வர ஐயர்.

''எனக்கு எல்லாம் கிடைச்சிடுச்சு, ஐயப்ப ஸ்வாமியோட அருள் உட்பட! நம்மளைச் சுத்தி இருக்கற எல்லா மக்களுக்கும் கிடைக்கணும். எல்லாரும் அவன் அருளைப் பெற்று சுபிட்சமா வாழணும். அவ்ளோதான். அதுபோதும் எனக்கு'' என்று அடிக்கடி நெகிழ்ந்து சொல்வாராம் புனலூர் தாத்தா.

அவர் விருப்பப்படி... இன்றைக்கு வருடந் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரியாத்திரைக்குச் செல்வதை ஒருகணம் யோசிக்க... உள்ளுக்குள் அந்த சபரிகிரிவாசனின் ஏகாந்தமான திருமுகம் நினைவுக்கு வந்து சிலிர்க்க வைக்கிறது!

- சரண கோஷம் தொடரும்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism