
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருநாகேஸ்வரரின் பிரமாண்ட ஆலயம். ராகு- கேது பரிகாரத் தலம்; திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தலம் எனும் பெருமைகள் கொண்ட கோயில் இது.
விநாயகர் தன் தந்தையான சிவனாரிடம் ஆசி பெறும் வேளையில், சிவனாரின் கழுத்தில் இருந்து நாகம் ஆணவத்துடன் பார்ப்பதை அறிந்து கொதித்துப் போனார் கணபதி. 'என்ன ஆணவம் உனக்கு! உன் வலிமையை இழக்கக் கடவாய்’ எனச் சாபமிட்டார். இதைக்கேட்டு நொந்துபோன நாகம், 'என்னை மன்னித்து விமோசனம் தாருங்கள்’ என வேண்ட... 'திருக்குடந்தை யில் சிவனாரைத் தொழுதால், சாப விமோசனம் பெறுவாய்’ என அருளினார் ஆனைமுகன்.
அதன்படி, திருக்குடந்தைக்கு வந்து, அங்கேயுள்ள சிங்கமுக தீர்த்தக் குளத்தில் நீராடி, வில்வ வனத்தில் இருந்த ஈஸ்வரனை வழிபட்டு வரம் பெற்றது அந்த நாகம். எனவே இங்கேயுள்ள இறைவன் திருநாகேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார் என்கிறது ஸ்தல புராணம். இங்கு வந்து, திருநாகேஸ்வரருக்கு பாலபிஷேகமும் வில்வ அர்ச்சனையும் செய்து வழிபட, நாக தோஷம் விலகும் என்கிறார் கோயிலின் செந்தில்குமார் குருக்கள்.

தவிர, சூரிய பகவான் வணங்கி வழிபட்டு, வரம் பெற்ற திருத்தலம் எனும் சிறப்பும் இந்தக் கோயிலுக்கு உண்டு. சித்திரை மாதம் 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில், திருநாகேஸ்வரரின் திருமேனியில் சூரியக் கதிர்கள் விழுந்து நமஸ்கரிப்பதைத் தரிசிக்கலாம்.
இத்தகு பெருமைகள் கொண்ட கோயிலில், ஆனந்தத் தாண்டவக் கோலத்தில் அருள்கிறார் ஸ்ரீநடராஜர். சிதம்பரத்தை அடுத்து பிரமாண்டமான உத்ஸவர் விக்கிரகம் இந்த ஆலயத்தில்தான் அமைந்துள்ளது என்கின்றனர் (இவரின் சந்நிதிக்கு எதிரில், ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாக தலை மேல் காலைத் தூக்கியுள்ள நடராஜரையும், அருகில் ஸ்ரீகாளிதேவியும் உள்ள காட்சியைத் தரிசிக்கலாம்).
மார்கழித் திருவாதிரைத் திருவிழா வேளையில், அதிகாலையில் ஸ்ரீநடராஜருக்கு சிறப்பு ஆராதனைகளும் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. சர்வ அலங்காரத்தில் உத்ஸவ மூர்த்தியைக் காணக் கண்கோடி வேண்டும். இந்த நாளில், இந்தத் தலத்துக்கு வந்து வணங்கினால், வாழ்வில் வளம் பெருகும்; கல்வி- கேள்விகளில் குழந்தைகள் ஞானத்துடன் திகழ்வர் என்பது நம்பிக்கை.
இங்கே, பிரளயகால ருத்ரரும் காட்சி தருகிறார். இவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், தீராத நோயும் தீரும். அதேபோல், இந்தத் தலத்தில் உள்ள ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை வணங்கினால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும். தவிர, 27 நட்சத்திரங்களுக்கு உரிய நாக கன்னியரும் இங்கே தரிசனம் தருவதும் சிறப்பான ஒன்று!
- மு.சா.கௌதமன்
படங்கள்: செ.சிவபாலன்