Published:Updated:

அல்லல் நீக்கும் ஆதிரைத் திருநாள்!

ஆருத்ரா தரிசனம் செய்வோம்!

அல்லல் நீக்கும் ஆதிரைத் திருநாள்!

ஆருத்ரா தரிசனம் செய்வோம்!

Published:Updated:
அல்லல் நீக்கும் ஆதிரைத் திருநாள்!
அல்லல் நீக்கும் ஆதிரைத் திருநாள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ந்நாட்டவர்க்கும் இறைவனாம் சிவபெருமான், பஞ்ச பூதங்களில் - எல்லையே காண முடியாத ஆகாயத்தைத் தனதாக்கிக்கொண்டு அருளும் திருத்தலம் சிதம்பரம். இந்தப் புண்ணிய க்ஷேத்திரத்தில், மார்கழி மாதம் திருவாதிரை தினத்தன்று நிகழும் ஆருத்ரா தரிசனம், மிக அற்புதமான வைபவம்.

ஆருத்ரா என்பது திருவாதிரையைக் குறிக்கும். இந்தத் திருவாதிரை நட்சத்திரத்தன்றுதான் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் திருநடனம் ஆடிக் காண்பித்தார் ஸ்ரீநடராஜ பெருமான். உலக இயக்கத்துக்குக் காரணமான ஈஸ்வரனின் உன்னத நடனத் திருக்கோலத்தைச் சிறப்பிக்கும் திருநாள்தான் திருவாதிரை. இந்த நாளில் சிதம்பரம் சென்று ஸ்ரீநடராஜரைத் தரிசித்து வழிபட்டு வர, நம் இன்னல்கள் யாவும் அகன்று, வாழ்க்கை இனிமையாகும்.

சிதம்பரம் செல்ல இயலவில்லையென்றாலும், தென்னாடுடையானின் ஆடல் கோலத்தைச் சிறப்பித்து அடியார்கள் பாடிவைத்த பாடல்களைப் பாடி, வீட்டிலேயே வழிபடலாம்.

அல்லல் நீக்கும் ஆதிரைத் திருநாள்!

இறைவனின் திருநடனத்தை நாவுக்கரசர் போற்றுவதைப் பாருங்கள்.

சுற்றிப்பறக்கும் சடைமுடி, அதில் பதிந்து இருக்கும் சுட்டி, திலகம் தவழும் நெற்றி, வில்லைப் போல வளைந்த புருவம், எடுப்பான மூக்கு, ஆனந்தம் தவழும் அமைதியான புன்னகை கூடிய திருமுகம், மடிப்புகளுடன் கூடிய கழுத்து, திரண்ட தோள்கள், எடுப்பான மார்பு, வளைந்த இடுப்பு, தூக்கிய திருவடி, அகந்தையை அடக்கி அழுத்தும் மற்றொரு திருவடி, தீமைகளைப் பொசுக்கும் தீ, அஞ்சேல் என முழங்கும் உடுக்கை... எனக் காட்சி தரும் நடராஜப் பெருமானை திருவாதிரையன்று தரிசித்தால், மனம் அமைதி பெறும்.

இந்த நடராஜரின் கோலத்தைத் தரிசித்த திருநாவுக்கரசர்,

'குனித்த புருவமும் கொவ்வைச்
  செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல்
  மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தமுடன் எடுத்த பொற்
   பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
  இ(ந்த)ம்மா நிலத்தே’

என்று பாடியிருக்கிறார்.

நடராஜரின் நடனக் கோலத்தைப் பலர் பலவாறாகப் பாடியிருந்தாலும், குகை நமசிவாயர் என்ற மகான் சொன்னதற்காக, விக்கிரக வடிவில் இருந்த நடராஜர் நடனமாடிக் காட்டியது மிக விசேஷம்! குகை நமசிவாயர் மிக உத்தமமான பக்தர். சிவபெருமானுடன் நேருக்கு நேர் பேசுபவர். அவர் ஒருமுறை நடராஜப் பெருமானுக்காகத் தங்கத்தில் சதங்கை செய்துகொண் டிருந்தார். அதைப் பார்த்த நாத்திகர்கள் சிலர், ''உன் இறைவன் ஆடுவாரோ?'' என்று பரிகாசம் செய்தார்கள். ''ஆடாத அவருக்குப் போய் தங்கத்தில் சதங்கையா?'' என்றும் கேட்டார்கள்.

உடனே குகை நமசிவாயர்,

'அம்பலவா! இன்னொருக்கால்
  ஆடினால் ஆகாதோ?
உம்பரெல்லாம் கண்டது
உனக்கு ஒப்பாமோ? சம்புவே!
வெற்றிப் பதஞ்சலிக்கும்
  வெம்புலிக்கும் தித்தியென
எற்றுப் பதஞ்சலிக்குமே...’

என்று பாடினார்.

இந்தப் பாடலின் கருத்து: நடராஜப் பெருமானே! தேவர்கள் எல்லாம் உன் நடனத்தைத் தரிசித்து இருக்கிறார்கள். பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத (புலிக்கால்) முனிவரும் உன் நடனத்தை தரிசித்து இருக்கிறார்கள். அவர்களெல்லாம் மட்டும் கண்டால் போதுமா? இன்னொரு முறை ஆடினால் ஆகாதோ? (இந்த வம்பர்கள் வாய் அடங்குமே!) பாடலின் முடிவில், விக்கிரக வடிவில் இருந்த நடராஜர் நடனமாடிக் காட்டினார் என்பது வரலாறு.

அல்லல் நீக்கும் ஆதிரைத் திருநாள்!

அம்பலக்கூத்தனுக்கு ஆண்டுக்கு ஆறு முறைதான் அபிஷேகம் நடக்கும். அதுவும் சிதம்பரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடக்கும் (ஆருத்ரா தரிசன) அபிஷேகம் மிகவும் விசேஷமானது. பால், தேன், பன்னீர், சந்தனம் முதலானவை குடம் குடமாக அம்பலக்கூத்தனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.

''இந்த நடராஜரின் திருநடனத்தைக் காண வாருங்கள்'' என்று ஸ்ரீகுமரகுருபர ஸ்வாமிகள் அழைக்கிறார்...

'கூற்றிருக்கும் மடலாழிக் குரிசின் முதலோர்
இறைஞ்சக் கொழுந்தேன் பில்கி
ஊற்றிருக்கும் தில்லைவனத் தசும்பிருக்கும்
பசும்பொன் மன்றத்து ஒருதாள் ஊன்றி
வண்டு பாடச் சுடர் மகுடமாப் பிறைத் துண்டமாடப்
  புலித்தோலுமாடப் பகிரண்ட மாடக் குலைந்து அகிலாடக்
கருங் கொண்டலோடும் குழற் கோதையோடும் கறைக்
   கண்டனாடுந் திறங்காண்மினோ’

- இப்படி நடராஜரின் ஆருத்ரா தரிசனக் காட்சியை நேருக்கு நேராக நமக்குக் காட்டி அழைக்கிறார் ஸ்ரீகுமரகுருபரர்.

வாருங்கள்... நாமும் ஆருத்ரா நாயகனைத் தரிசனம் செய்வோம்; அல்லல்கள் ஓடச் செய்வான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism