Published:Updated:

ஆலயம் தேடுவோம்

ஆலயம் தேடுவோம்

ஆலயம் தேடுவோம்

ஆலயம் தேடுவோம்

Published:Updated:
ஆலயம் தேடுவோம்
ஆலயம் தேடுவோம்

ந்தப் பசு ஒவ்வோர் ஊராகச் சென்று, சிவாலயத்தைத் தேடியது. அங்கே ஒரு சிவன் கோயிலுக்குச் சென்று சிவ சந்நிதிக்கு எதிரே அமர்ந்து, சிவலிங்கத் திருமேனியையே பார்த்துக்கொண்டிருந்தது. 'ம்ஹூம்... இங்கேயும் எனக்கு இரக்கம் அளிக்கமாட்டீர்களா? சரி, அடுத்த தலத்துக்குச் செல்கிறேன்’ என்று கோயிலுக்கு வெளியே வந்து, தெருவில் இறங்கி நடையைக் கட்டியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பசுவின் அழகையும் அதன் கண்களில் தென்பட்ட தீட்சண்யத்தையும் கண்டு, அங்கே மேய்ச்சலுக்கு நின்றிருந்த மற்ற பசுக்கள் வியந்தன. 'நாமளும்தான் இருக்கோமே... இந்தப் பசுவைப்போல தேஜஸ் நம்மிடம் இல்லை, பார்த்தாயா?’ என்று பசுக்கள் எல்லாம் ஒன்று கூடிப் பேசிக்கொண்டன. மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம் போல், மொத்தப் பசுக்களும் அந்தப் பசுவைப் பின்தொடர்ந்தன. அந்தப் பசு ஆடி அசைந்து முன்னே செல்ல... எல்லாப் பசுக்களும் அதைப் போலவே நடந்து, மெள்ளப் பின்தொடர்ந்தன.

சிவாலயம் சிவாலயமாக தேடிச் சென்ற அந்தப் பசு... வேறு யாருமல்ல; சாட்ஷாத் ஸ்ரீபார்வதி தேவிதான். பூவுலகின் மனிதர்களை உய்விப்பதற்காக, தன் இல்லத்தரசியைப் பசுவாக்கி, அந்தப் பசுவுக்கு சாபமும் கொடுத்து, சாப விமோசனம் பெறுவதற்காக தலங்கள்தோறும் வரச் செய்துள்ளார் இறைவன்.

ஆலயம் தேடுவோம்

இதை உணர்ந்த தேவி, உள்ளன்புடன் ஒவ்வொரு தலங்களுக் கும் சென்றார். அங்கே சிவனாரை மனதாரத் தொழுதார். இதையெல்லாம் அறிந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, சகோதரிக்கு உதவவேண்டும் எனத் திருவுளம் கொண்டார். தன்னுடைய பசுக்களையெல்லாம் அந்தப் பசுக்கூட்டத்துடன் இணைத்து அனுப்பி வைத்தார். பிறகு, தானே ஒரு காளையாக உருவெடுத்து, சகோதரிக்கு வழிகாட்டியபடி வந்தார்.

இந்த நிலையில், சிவனார் உமையவளைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் தருணம் வந்தது. அப்போது பசு, வழியில் உள்ள இடத்தில், க்ஷீர புஷ்கரணி எனும் திருக்குளத்துக்கு அருகில், தன் கொம்பினால் பூமியைக் கிளற, அங்கிருந்து வெளிப்பட்டது சிவலிங்கம். உடனே, அந்தப் பசு நெகிழ்ந்து, மகிழ்ந்து, தன் பாலைச் சொரிந்து அபிஷேகித்தது. அதுவே திருக் கொண்டீஸ்வரம் எனும் திருத்தலமாகப் போற்றப்படுகிறது. அம்பிகையும் இங்கே இறைவனுடனேயே தங்கி, ஸ்ரீசாந்தநாயகி எனும் திருநாமத்துடன் அருளாட்சி நடத்துகிறாள்.

அதேவேளையில், திருக்கொண்டீஸ் வரத்தில் இருந்து மேற்கே சிறிது தொலை வில், மேடான ஒரு பகுதியில், காளையாக வந்த திருமால் தன் கொம்பால் குத்தினார். அந்த மண் மேடு சரிந்து விழ, அங்கே அழகிய சிவலிங்கத் திருமேனி வெளிப்பட்டது. அப்போது திருமால் மற்றும் பசுக்களுக்கு ரிஷபாரூடராகத் திருக்காட்சி தந்தருளினார் இறைவன்.

ஆலயம் தேடுவோம்

அந்த மண் மேடாக இருந்த இடம், பிற்காலத்தில் மிகப் பெரிய க்ஷேத்திரமாக உருவானது. அநபாய சோழன் எனும் இரண்டாம் குலோத்துங்க சோழன், அந்தத் தலத்தை அறிந்து, அங்கே அழகிய, பிரமாண்டமான கோயிலைக் கட்டினான். கோயிலைச் சுற்றிலும் ஒரு ஊரையே நிர்மாணித்தான். சேற்றூர் என்றும் சேற்றூர் சதுர்வேத மங்கலம் என்றும் அழைக்கப்பட்டதாகச் சொல் கின்றன கல்வெட்டுகள்.

அதுமட்டுமா? சோற்றீச்சரம் என்றும் சோற்றுக்குடி என்றும் புகழப்பட்ட இந்த ஊர், இன்றைக்குச் சோத்தக்குடி என மருவியுள்ளது. சோத்தக்குடியில் உள்ள இறைவனின் திருநாமம்- ஸ்ரீநந்திகேஸ் வரர். அம்பாளின் திருநாமம்- ஸ்ரீஅபிராமி அம்மை.

நந்திகேஸ்வரர் என்பதால், இங்கே பிரதோஷ காலத்தில் வழிபட்டால், சகல பாபங்களும் விலகும் என்பது ஐதீகம். அதேபோல், அம்பாள் ஸ்ரீஅபிராமியம்மை யாகக் குடிகொண்டிருப்பதால், திருக் கடையூர் தலத்தைப் போலவே இந்தத் தலத்து நாயகியும் ஆயுள் பலமும் ஆரோக்கியமும் தந்தருள்வாள் என்கிறது ஸ்தல புராணம்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது சோத்தக்குடி. திருவாரூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது நன்னிலம். அதேபோல், திருவாரூரில் இருந்து சுமார் 12 தொலைவில் உள்ளது சன்னா நல்லூர். நன்னிலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும், சன்னாநல்லூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது சோத்தக்குடி திருத்தலம்.

வில்வவனம், நந்திகுளம், கோபுரம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் என்றெல்லாம் பிரமாண்டமாகத் திகழ்ந்த ஆலயத்தில்... அஷ்டதிக் பாலகர்களையும் ஒருங்கே கொண்டு அருளாட்சி செய்யும் இறைவன் என்பதை உணர்த்தும் விதமாக எண்கோண் ஆவுடையாராக, பத்ம பீடத்தில் இருந்தபடி தன் அடியவர்களுக்கு அருள்கிறார் ஸ்ரீநந்திகேஸ்வரர்.

ஆலயம் தேடுவோம்

ஆனால் என்ன... கோபுரமும் இல்லை; மண்டபங்களையும் காணோம்! மதில் முழுவதும் இடிந்து தரைமட்டமாகிப் பல வருடங்களாகி விட்டன.

''1919-ஆம் வருஷம், இந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடந்துச்சுன்னு சொல்றாங்க. ஆனா, ரொம்ப வருஷமாவே இந்தக் கோயில் இப்படித்தான் சிதிலமா, முட்புதர்கள் மண்டிக் கிடக்குதுங்க. சக்தி வாய்ந்த கோயில்னு எங்க முன்னோர்கள் சொல்லியிருக்காங்க. இங்கே பிரதோஷ பூஜையை குறைவில்லாம நடத்தினாலும், ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் தவறாம வந்து ஸ்வாமியைத் தரிசனம் பண்ணினாலும், ஏழேழு ஜென்மத்துப் பாபங்களும் போயிடும்னு ஐதீகம். எங்க ஊர் கோயிலுக்கு விமோசனம் நடந்தா... ஊருக்கும் உலகத்துக்கும் மகா புண்ணியம் கிடைக்கும்'' என்று நெகிழ்ந்தபடி சொல்கின்றனர் ஊர்மக்கள்.

தெற்கு நோக்கியபடி, கண்களில் கருணையும் இதழ்களில் மெல்லிய புன்னகையும் கொண்டு இறைவன் சிவனாரை, தன் அன்புக்கு உரிய கணவரைத் திருக்கரம் பற்றிய பூரிப்புடன் இருக்கிறாள் ஸ்ரீஅபிராமியம்மை. 'என் திருமேனிக்கு வஸ்திரமும், என் திருமுடிக்கு ஒரு முழப் பூவும் சார்த்தி எத்தனையோ வருடங்களாகிவிட்டன, தெரியுமா?’ என்று தாயானவள், உரிமையும் அன்புமாகக் கேட்பது போல் உணர்ந்து சிலிர்த்துப் போனோம்.

'சனிக்கிழமை பிரதோஷ தரிசனம் செய்தால், சர்வ பாப விமோசனம்’ என்பார்கள் முன்னோர்கள். ஆனால், இந்தத் தலத்தில், எந்த நாளில் பிரதோஷ வழிபாடு செய்தாலும் புண்ணியம்; பாபமெல்லாம் பறந்தோடிவிடும் என்கின்றனர் பக்தர்கள். ஆனால் என்ன... ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறும் ஆலயத்தில், பிரதோஷ பூஜையாவது... மாத சிவராத்திரி கோலாகலமாவது எனக் கண்ணீருடன் வருந்துகின்றனர் ஊர்க்காரர்கள்.

சிவ கோஷ்டத்தில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீதுர்கை, ஸ்ரீசண்டிகேஸ்வரர் என எந்த விக்கிரகமும் இல்லை. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல் ஸ்ரீநந்திகேஸ்வரர் சந்நிதி மட்டுமே, காரை பெயர்ந்திருந்தாலும், செடிகொடிகள் வளர்ந் திருந்தாலும், ஆங்காங்கே விரிசல்கள் தென் பட்டாலும்... நிலைத்து நின்று சந்நிதியாகவே திகழ்ந்துகொண்டிருக்கிறது. மற்ற சந்நிதிகள் எல்லாமே முற்றிலுமாகச் சிதைந்துவிட்டன.

திருக்கடையூருக்கு இணையான தலமாகச் சொல்லப்படும் சோத்தக்குடி சிவாலயத்துக்கு உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். ஆரோக்கியம் கூடி, ஆயுள் பலத்துடன் வாழ்வீர்கள்.

ஸ்ரீநந்திகேஸ்வரர் எனும் திருநாமத்துடன் திகழும் கோயிலில், நந்திதேவருக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பூஜிக்கப்படும் பிரதோஷ பூஜையைத் தொடர்ந்து நடத்தக் கைகொடுப்போம். தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த சகல பாபங்களும் விலகிவிடும்!

சோத்தக்குடி ஆலயம் பழைய பொலிவைப் பெற்று, கும்பாபிஷேகமும் நடப்பதற்கு உதவி செய்தவர்கள் அனைவரின் இல்லங்களிலும் சுபிட்சம் குடியேறும் என்பது உறுதி!

படங்கள்: ஜெ.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism