Published:Updated:

குருபலம் கூட்டும் ஆரண்ய சேஷத்திரங்கள்!

குருபலம் கூட்டும் ஆரண்ய சேஷத்திரங்கள்!

குருபலம் கூட்டும் ஆரண்ய சேஷத்திரங்கள்!
##~##

'திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ எனப் போற்றுவார்கள் சமயச் சான்றோர். மனப் பிணியை அகற்றும் அருமருந்தான இந்த ஞானநூலை அருளிய மணிவாசகப் பெருமான் தமது சிவபுராணப் பாடலில், ''நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த...'' எனக் குறிப்பிடுகிறார். ஐந்து முகம் கொண்ட பரமேஸ்வரனை, 'ஐந்து வண்ணம் கொண்டான்’ எனச் சிறப்பிக்கிறார் அவர். இப்படி ஐந்து வண்ணங்களுடன் திகழும் ஈஸ்வரனைத் தரிசிப்பது பெரும்பேறு அல்லவா? 

தென்னாடுடையான் தமது பொன்னார்மேனியில் ஐந்து வண்ணங்களைக் காட்டி அற்புதம் நிகழ்த்தும் சிற்சில தலங்கள் நம் பூவுலகில் உண்டு. அவற்றில் ஒன்று... சென்னை- திருவள்ளூருக்கு அருகில் உள்ள ஈக்காடு. இங்கு, அம்பிகை திரிபுரசுந்தரியுடன் கோயில்கொண்டிருக்கிறார் அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர்.

வனம் சூழ்ந்த திருத்தலங்களை ஆரண்யம் என்றும், காட்டுத் தலங்கள் என்றும் சிறப்பிப்பார்கள். சென்னை- திருவள்ளூரைச் சுற்றி ஐந்து காட்டுத் தலங்கள் உண்டு. திருவாலங்காடு (ஆலங்காடு), திருப்பாசூர் (மூங்கில் காடு), திருவெண்பாக்கம் எனப்படும் பூண்டி (இலந்தைக்காடு), திருவிற்கோலம் (தர்ப்பைக்காடு), ஈக்காடு (ஈச்சங்காடு) ஆகிய ஐந்தையும் பஞ்சாரண்ய தலங்கள் எனப் போற்றுவர். இவற்றுள் ஈக்காடு தலம் தவிர, மற்றவை தேவாரப் பாடல் பெற்றவை. ஒருவேளை, இந்தத் தலத்துக்கும் பதிகம் பாடப் பெற்று, அது கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனாலும், பாடல் பெற்ற தலங்களுக்கு இணையான புராணச் சிறப்புடன் திகழ்கிறது ஈக்காடு.

குருபலம் கூட்டும் ஆரண்ய சேஷத்திரங்கள்!

தேவ- அசுரர்கள் அமிர்தம் வேண்டிப் பாற்கடல் கடைந்த கதை நமக்குத் தெரியும். அமிர்தத்தில் ஒரு பகுதி குபேரனுக்கும் கிடைத்தது. அவனது பங்கில் ஒரு துளி கீழே சிந்தியது. அந்த இடத்திலிருந்து அமிர்தத் தாரைகளுடன் லிங்கத் திருமேனி ஒன்று வெளிப்பட்டது. அப்போது ஒட்டுமொத்த தேவர்களும் பயபக்தியுடன் வணங்கித் தொழுத அந்தச் சிவலிங்கமே, இன்றும் ஈக்காட்டில் நாம் தரிசிக்கும் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர்.

லிங்கங்கள் ஏழு வகைப்படும். தானாகத் தோன்றிய லிங்கத்தை சுயம்புவம் என்பர். தேவி சக்தியால் வழிபடப்பட்டது தேவிகம், தேவர்களால் வழிபடப்பட்ட லிங்கம் தைவிகம், மனிதர்களால் பூஜிக்கப்பட்டது மானுஷம், ராட்சதர்கள் தொழுதது ராக்ஷஸம், முனிவர்கள் வணங்கிய லிங்கம் ஆர்ஷம், பாணாசுரன் வழிபட்ட லிங்கம் பாணம்.

குருபலம் கூட்டும் ஆரண்ய சேஷத்திரங்கள்!

ஈக்காடு பஞ்சவர்ணேஸ்வரர்... தானாகத் தோன்றியதால் சுயம்பு லிங்கம்; தோன்றிய கணமே தேவர்களால் வழிபடப்பட்டதால் தைவிக லிங்கம்; இன்றும் மானுடர்களால் போற்றி பூஜிக்கப்படுவதால் மானுட லிங்கம் என மூவகைச் சிறப்புடன் திகழ்கிறார்.

பதினெண்சித்தர்களில் ஒருவரான போகர், இந்த லிங்கத்துக்கு நவபாஷாண கலவை சேர்த்திருப்பதாகவும், இந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்த திரவியங்களை அருந்த, தீராத பிணியும் தீரும் என்றும் நம்பிக்கை உண்டு.

குருபலம் கூட்டும் ஆரண்ய சேஷத்திரங்கள்!

சுமார் 1000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது இக்கோயில். சோழர் ஆட்சியில் தொண்டை நாடு, 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில், ஈக்காடு கோட்டத்தின் தலைநகர் இந்தத் தலம். இக்கோட்டம் 1010 சதுர கி.மீ. பரப்பளவு இருந்ததாகத் தெரிகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பராமரிப்பு இல்லாமல் இருந்த காரணத்தால், ஆலயத்தின் பெரும்பகுதி சிதிலம் அடைந்துள்ளது. ஈஸ்வரன் மற்றும் அம்பிகை சந்நிதிகள் கருங்கற்களால் அமைக்கப்பட்டி ருப்பதால், நல்ல நிலைமையில் உள்ளன. ஸ்வாமி சந்நிதியின் அர்த்தமண்டபத்தில் காஞ்சி- ஏகாம்பரேஸ்வரர், காளஹஸ்தி- காளஹஸ்தீஸ்வரர், திருவாவடுதுறை கோமூக்தீஸ்வரர், திருக்காரிக் காரை (ராமகிரி) ராமகிரீஸ்வரர், நர்த்தன விநாயகர், பைரவர், விநாயகர், முருகன், அப்பர், திருஞானசம்பந்தர், ரிஷிகள், அன்னம், ஆமை, நந்தி உருவங்களுடன் திகழும் தூண் சிற்பங்கள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு!

இந்த ஆலயத்தில் ஈசன், அம்பிகை, நந்தி, சூரியன் ஆகிய தெய்வ மூர்த்தங்கள் பழைமையானவை. ஸ்ரீகணபதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, லிங்கோத் பவர், பிரம்மா, துர்கை ஆகிய கோஷ்ட தெய்வங்களும், ஸ்ரீபைரவர், ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீஐயப்பன் ஆகிய தெய்வ மூர்த்தங்களும் புதிய பிரதிஷ்டை.

கருவறையில்... கிழக்கு நோக்கி விசேஷ திருக்கோலம் காட்டுகிறார் ஸ்ரீபஞ்ச வர்ணேஸ்வரர். இரண்டு ஆமை ஓடுகளைப் பொருத்தியது போன்று வித்தியாசமாய்த் தோற்றம் காட்டும் ஸ்வாமியின் லிங்கத் திருமேனியில், மேலிருந்து கீழாக கறுப்பும் வெள்ளையுமாகக் கோடுகள் தெரிகின்றன. இரண்டு யானைத் தந்தங்களைப் பிடிப்புக்கு நிறுத்தி, மூலிகைப் பொருட்களால் நிலைநிறுத்தியது போல் தோன்றுகிறது. சாம்பல், மஞ்சள், வெண்மை, கறுப்பு, சந்தனம் என ஐந்து நிறங்களில் இந்த லிங்கம் வண்ணம் மாறுவதாகத் தெரிகிறது.

அம்பிகை திரிபுரசுந்தரி தெற்கு நோக்கி சந்நிதி கொண்டிருக்கிறாள். மேலிரு கரங்களில் அங்குச- பாசமும் கொண்டு, கீழிரு கரங்களால் அபய- வரதம் காட்டும் அன்னையை நாள் முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு சாந்நித்தியம்!

ஆலயத்தின் குபேரமூலையில் காசிவிஸ்வநாதரைத் தரிசிக்க லாம். கற்பூர தீபவொளியில் ஜொலிக்கிறார் இந்த ஈஸ்வரன். இவரின் திருமேனி ஸ்படிக லிங்கம் என்கிறார்கள். நீண்ட காலம் வழிபாடில்லாமல் மூடியே கிடந்த இந்த ஆலயத்தில், 2002-ஆம் ஆண்டு முதல் மீண்டும் வழிபாடுகள் துவங்கின. இந்தக் கோயிலின்மீது ஈர்ப்பு கொண்ட ஆன்மிக இறைபணிக் குழுவினர் மற்றும் பக்தர்கள் பலரது முயற்சியால், அதே ஆண்டில் இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகமும் சிறப்புற நடந்தேறியது.

எனினும், இன்னும் பல திருப்பணிகள் காத்திருக்கின்றன. இந்தப் பணிகளை நிறைவேற்ற உதவி செய்து, எல்லாம் வல்ல ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரரின் அருளுக்குப் பாத்திரமாவோம்.

 எப்படிச் செல்வது?

திருவள்ளூரிலிருந்து செங்குன்றம் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது ஈக்காடு. இங்கே, பழைய தபால் நிலையம் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் கோயில்கொண்டிருக்கிறார் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர்.

அருகில் தரிசிக்கவேண்டிய திருத்தலங்கள்: திருவள்ளூர்- ஸ்ரீவீரராகவப் பெருமாள், ஸ்ரீதீர்த்தேஸ்வரர் திருப்பாசூர்- ஸ்ரீவாசீஸ்வரர், திருவாலங்காடு- ஸ்ரீவடாரண்யேஸ்வரர், நடராஜ சபை, திருவெண்பாக்கம்-

ஸ்ரீஊன்றீஸ்வரர் திருவிற்கோலம்- ஸ்ரீ திரிபுராந்தகேஸ்வரர், தக்கோலம்- ஸ்ரீ உமாபதீசுவரர், திருமால்பூர்- ஸ்ரீமணிகண்டேஸ்வரர் ஆகிய தலங்கள் அருகே உள்ளன.

 காட்டுத்தலங்களைப் பற்றி ஸ்ரீகாஞ்சி முனிவர்...

குருபலம் கூட்டும் ஆரண்ய சேஷத்திரங்கள்!

'ஜன்ம குரு ராமர் வனவாசம்’ என்று ஒரு சொல்வழக்கு உண்டு. ஒன்பது கிரகங்களில் ஒன்றான குரு பகவான், ஒருவருடைய ஜன்ம ராசியில் சஞ்சரிக்கும்போது நிறைய கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று ஒரு கருத்து உண்டு. ஸ்ரீராமர் காட்டுக்குப் போகும்போது, ஸ்ரீராமரின் ஜாதகத்தில் ஜன்மத்தில் குரு பகவான் இருந்தாராம்.

ஒரு குருப்பெயர்ச்சி தினத்தன்று ஸ்ரீகாஞ்சிப் பெரியவரை ஒரு பக்தர் தரிசித்தார். 'எனக்கு ஜன்ம ராசியில் குரு பகவான் வந்திருக்கிறார் என்று ஜோஸ்யர் சொல்லுகிறார். இதனால் எனக்கு ஏதாவது கஷ்டம் வருமா?’ என்று அந்தப் பக்தர் கேட்டார். ''அப்படியில்லை. ஸ்ரீராமர் காட்டில் தவம் செய்துகொண்டு, பல முனிவர்களோடு தொடர்புகொண்டிருந்தார்; செயற்கரிய பல செயல்களைச் செய்தார். அது போகட்டும்; ராமர் காட்டுக்குப் போனதாலே, நீயும் காட்டுக்குப் போகணுமோன்னு பயப்படறே.... அவ்வளவுதானே? வேதாரண்யம், ஸ்வேதாரண்யம், வில்வாரண்யம், சண்பகாரண்யம், தர்ப்பாரண்யம்னு பல காட்டு க்ஷேத்திரங்கள் இருக்கு. இதில் ஏதாவது ஒரு ஆரண்யத்துக்குப் போய் இரண்டு மூன்று நாள் தங்கி, ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு வா! உனக்கும் மனச் சாந்தி கிடைக்கும்; ஜோஸ்யர் சொன்னதும் சரியாகப் போனமாதிரி இருக்கும்'' என்று காஞ்சி முனிவர் கூறியதும், பக்தர் பெருத்த நிம்மதி அடைந்தார்.

பெரியவரின் வாக்கிலிருந்து, காட்டுத்தலங்களைத் தரிசித்தால் ஜன்ம குருவின் வேகம் குறையும் என்று தெரிகிறது. ஈக்காடும் காட்டுத்தலமாக இருப்பதால், இங்கே முறைப்படி வழிபட்டு, குருபலம் பெற்றுச் சிறப்போம்.

அடுத்த கட்டுரைக்கு