Election bannerElection banner
Published:Updated:

பணிவோம் ஆஞ்சநேயர் பொற்பாதம்!

பணிவோம் ஆஞ்சநேயர் பொற்பாதம்!

பணிவோம் ஆஞ்சநேயர் பொற்பாதம்!
##~##

'ஆஞ்சநேயர்’ என்று நம் அகம் நினைக்கிறபோதே நமக்குள் ஓர் ஆனந்த அமைதி பூக்கிறது.

 என்ன காரணம்? அவர் தனக்கென வாழா

தகைமையாளர்; பிறர் நலம் பேணும்

பெருந்தகையாளர்.

ஸ்ரீராமபிரானின் துணைபெற்று, இழந்த அரசையும், மனைவியையும் சுக்ரீவனுக்கு மீட்டுத் தந்தவர். பின்னர், சுக்ரீவனின் வானரப்படை துணையோடு ராமபிரானின் மனைவி சீதையை மீட்க மூலகாரணமாய் அமைந்தவர்.

இப்படி, இரு இல்லங்களில் குடும்ப விளக்கு ஏற்றியவர் ஆஞ்சநேயர். ஆனால், அவர் நைஷ்டிக பிரம்மசாரி. 'நீதியில் நின்றவர்; வாய்மை அமைந்தவர்!’

- கம்பனின் காவிய வரிகள் இவை.

பணிவோம் ஆஞ்சநேயர் பொற்பாதம்!

வாயுபுத்திரன், ஆஞ்சநேயர், அனுமன், மாருதி, ராமபக்தன் என்றெல்லாம் நாம்தான் அவரைப் போற்றுகிறோம், ஆராதிக்கிறோமே தவிர, தன் பெருமையில் அவர் ஒருபோதும் தலைநிமிர்ந்து இறுமாப்பு கொண்டதில்லை. 'பணியுமாம் என்றும் பெருமை’ என்ற வள்ளுவரின் வாசகத்துக்கு ஒரு வரலாறு வேண்டும் என்றால், அது மாருதியின் மகத்துவம் மிக்க வாழ்க்கையே!

நம்மவர்களிடையே சற்றுப் படித்தவர்கள்கூட, ஏதோ ஒரு சில கட்டுரைகள் எழுதியவர்கள்கூட இறுமாப்போடு இருக்கிறார்கள். அனைத்தும் தெரிந்தவர்கள்போல வாயாடுகிறார்கள். ஆஞ்சநேயரோ வணங்கிய சென்னியர்; மறைத்த வாயினர்; நுணங்கிய கேள்வியர்.

மாருதி, 'நவவ்யாகரண பண்டிதர்’. ஒன்பது இலக்கணங்கள் கற்ற அவர் பணிவுக்கு இலக்கணமாக

பணிவோம் ஆஞ்சநேயர் பொற்பாதம்!

விளங்கினார். அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை, தொண்டு, புலனடக்கம், பணிவு, உடல்வன்மை, உள்ள உறுதி என அனைத்தின் கலவையாகத் திகழும் கவிக்குலத்து வேந்தரே வாயு புத்திரர். அவரின் ஒரு வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே ராமர் புளகாங்கிதம் அடைந்தார்.

'இல்லாத உலகத்து எங்கும் ஈங்கிவன் இசைகள் கூர

கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற் றன்றே! யார் கொல் இச்சொல்லின் செல்வன்?

வில்லார் தோள் இளைய வீர! விரிஞ்சனோ விடைவல்லானோ?

'இலக்குவனே! இப்படி அற்புதச் சொற்பதங்களை நற்பதத்தில் நல்குகின்றானே, இவன் யார்? சிவபெருமானோ! பிரம்மதேவனோ!’ என, அனுமாரை முதன்முதலாகக் கண்ட மாத்திரத்தில் அதிசயப்படுகிறார் ஸ்ரீராமன். அதை மேற்கண்டவாறு வெளிப்படுத்துகிறார். அப்போது, அனுமாருக்கு 'சொல்லின் செல்வர்’ என ஒரு சிறப்புப் பட்டமும் சூட்டுகிறார்.

அனுமார், சொல்லின் செல்வர் மட்டுமா? காற்றின் மைந்தரான அந்தப் புயலின் புதல்வர், செயலின் முதல்வர்கூட! போர்க்களத்தில் மயங்கி விழுந்தவர்களை எழுப்ப மருத்து மலையையே விரல்களில் தூக்கி வந்தவர்தானே அந்த வீர ஆஞ்சநேயர்?

அதுவரை யாரும் செல்லாத இலங்கைக்குள் தனி ஒருவராய் நுழைந்து, வீரமுடன் பல செயல்களை புரிந்து, ஜானகியின் துயர் களைந்த வானர வீரர்தானே மாருதி?

14 ஆண்டுகள் முடிந்துவிட்டதே என பரதன் தீயில் விழும் தருணம், அவர் முன் ஓடிவந்து நொடிப் பொழுதில் நெருப்பைக் கரியாக்கிய நேர்மையாளர்தானே அனுமார்? சுக்ரீவனோடு ராமரையும், ராமரோடு சுக்ரீவனையும் சேர்த்து வைத்தவர்தானே இந்த அஞ்சனையின் செல்வன்?

அதனால்தான், 'செவிக்கு தேன் என ராகவன் கதையைத் திருத்தும் கவிக்கு நாயகன்’ என்று அவருக்கு புகழாரம் சூட்டுகிறார் கம்பர்.

இங்கே சொன்ன எல்லாச் சம்பவங்களையும் சற்று உற்றுக் கவனியுங்கள். ஆஞ்சநேயர் தன் சுய லாபத்துக்காக எந்தச் செயலையும் செய்யவில்லை என்பது தெளிவாகும். அடுத்தவர் துயர் துடைப்பதே அனுமாரின் தலையாய லட்சியம்.

''அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால்

இன்பநிலை தானே வந்து எய்தும் பராபரமே!''

என்பதுதானே தாயுமானவரின் தமிழ்? 'ஆய்ந்த நேயம்’ உடையவர் என்பதால்தான் அவர் 'ஆஞ்ச நேயர்’ என்றுகூட நாம் எண்ணி இன்புறலாம்.

தமது தலைவர் ராமபிரானையே சதா காலமும் நினைத்து, அவர் பக்தியிலேயே திளைப்பவர் மாருதி.

பணிவோம் ஆஞ்சநேயர் பொற்பாதம்!

தொண்டர் என்பதின் தூய இலக்கணம் அனுமார் என்று நாம் அடையாளப்படுத்தலாம். மார்பைப் பிளந்து ராமர் தரிசன மாண்பைக் காட்டியவர்தானே அவர்?

பொதுவாக மனிதர்களின் மனம் ஓரிடத்தில் நிற்பதில்லை. ஒன்றைப் பற்றுவதில்லை. அதனால்தான் கிளைக்கு கிளை தாவும் வானரத்தை உவமையாக்கி 'மனம் ஒரு குரங்கு’ என்கிறோம். 'குரங்கு கையில் பூமாலை’ என்றும் குறிப்பிடுகிறோம்.

மனிதர்களாகிய நம்முடையவர்களின் மனம் குரங்காக இருக்கிறது. ஆனால், குரங்காகிய அனுமாருடைய மனம் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் நிற்கிறது. அதனால்தான் அவருக்குக் கோயில்! அதிலும் ஒரு அதிசயம் பாருங்கள்.

ராமருக்குக்கூட தனி ஆலயம் கிடையாது. இலக்குவன், சீதை,

ஆஞ்சநேயர் சூழ தரிசனம் தருகிறார் பெருமாள். அனுமாரோ தனித்து ஆலயம் பெற்றார். ராமர் கோயிலிலும் இருக்க இடம் உற்றார்!

காரணம் என்ன? தன்னல மறுப்பாள ராகிய அவருடைய தகைமை தானாக வந்து சேர்கிறது. விநயம் கொண்ட அவருக்கு புகழ் விமரிசையாக வந்து பொருந்துகிறது. மக்கள் மனங்களை எல்லாம் ஆளுகிறார் மாருதி.

கம்ப ராமாயணத்தின் நான்காவது காண்டத்தின் 2-வது படலத்தில்தான் அறிமுகமே ஆகிறார் ஆஞ்சநேயர். ஆனால், அனைவரின் மனங்களையும் அவர்தானே ஆளுகிறார்?

சாதாரணமாக நாம் ஒரே இடத்தில் சேர்ந்து பார்க்காத பல குணங்கள், சக்திகள் மாருதியிடம் ஒன்றியுள்ளன. நல்ல புத்திசாலி, தேக பலம் இல்லாமல் இருப்பான். பெரிய பலசாலி, அறிவுக்கூர்மை இல்லாமல் இருப்பான். இரண்டும் இருந்தால், வீரமில்லாமல் இருப்பான். எடுத்துச் சொல்கிற விழிப்பு உணர்வு இல்லாமல் இருப்பான். அடக்கம் இல்லாமல் தான்தோன்றியாகத் திரிவான். ஆஞ்சநேயரிடமோ எதிரெதிர் குணங் கள், சக்திகள்கூட இணைந்திருந்தன. வலிமை இருக்கிறவன் கெட்ட வழியில் போவதுண்டு. ஆனால், ஆஞ்சநேயர் தூய எண்ணங்களின் துறைமுகமாகத் துலங்குகிறார். இன்றைய பாரத இளைஞர்கள் எல்லாம் அனுமாரிடம் பாடம் படிக்க வேண்டும். அறிவு, திறமை, வீரம், சேவை, சொல்லாற்றல், பணிவு என அனைத்தையும் தன்னை வழிபடுபவர்களுக்கு வாரி வழங்குகிறார் மாருதி. மாதங்களில் சிறந்த மார்கழியில் அவரை வழிபடுகின்றோம். மூலநாளில் அந்த முன்னவரைத் தொழுகின்றோம். வாசம் வீசும் துளசி மாலையும், வடைமாலையும், வெற்றிலை மாலையும் நாம் சூட்டி மகிழ்ந்தால், நமக்கு 'வெற்றி மாலையை’ச் சூட்டுவதற்கு அவர் தயாராக இருக்கிறார்.

நவக்கிரக வினை நாடாமல், சுபக்கிரகம்தனில் நம்மை சோபிக்க வைக்க, இக பர சுகத்தை இனிதே கொடுக்க அனுக்கிரகம் செய்கிறார் ஆஞ்சநேயர். மகாபாரதப் போரில் பாண்டவர்கள் பரந்தாமன் அருளால் வெற்றி பெற்றார்கள். வெற்றி பெறும் விஜயனுக்காக கண்ணபிரான் தேர் நடத்தினார். அந்தத் தேர்க் கொடியில் திகழ்ந்தவர் ஆஞ்சநேயர். தன் மாபெரும் மந்திர சக்தியால், ராம ஜபத்தால் போரில் தேர் எரிந்துவிடாமல் காத்தவர் அவரே!

பன்முகச் சிறப்பு பெற்ற மாருதி, பஞ்ச முகம் பெற்றும் விளங்குகிறார். வாராஹர், நரசிம்மர், ஹயக்ரீவர், கருடர், ஆஞ்சநேயர் எனச் சிறக்கும் அவரின் அடிமலரை நாமும் தொழுவோம். ஆஞ்சநேயர் எப்படிப்பட்ட மூர்த்தி எனப் புரிந்துகொள்வோம். அவரைப் போற்றுவதற்கு அவர் நாமம்கூட வேண்டாம்; ராம நாமம் சொன்னாலே போதும். இப்படி ஒரு இறைவன் வாய்த்ததற்கு நாம் பெருமை கொள்வோம்!

வாயு புத்திரனை நாம் வழிகாட்டியாகக் கொண்டால் வாழ்வு சிறக்கும்; நமக்குள் ஒரு புதிய உத்வேகம் பிறக்கும்; ஆயிரமாயிரம் ஆனந்தக் கதவுகள் திறக்கும்.

மாருதியே! என்றும் நீ கதியே! - பக்தி

வானில் நீயே முழுமதியே! - எம்

வாழ்வில் தருவாய் நிம்மதியே! - தினம்

வழங்குக திருவருள் வெகுமதியே!

பணிவோம் ஆஞ்சநேயர் பொற்பாதம்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு