Published:Updated:

ஞானப் பொக்கிஷம் - 21

ஞானப் பொக்கிஷம் - 21

ஞானப் பொக்கிஷம் - 21

ஞானப் பொக்கிஷம் - 21

Published:Updated:
ஞானப் பொக்கிஷம் - 21
##~##

பிரத்யட்ச தெய்வம் என்று போற்றித் துதிக்கப்படுபவர் சூரிய பகவான். தினமும் தோன்றி, அனைவர் கண்களிலும் காட்சி அளிக்கும் தெய்வமான அவர் இல்லாவிட்டால், உலகமே இயங்காது. சூரியனின் இயக்கத்தையும் நமது முன்னோர் அறிந்து வைத்திருந்தனர். அதை தட்சிணாயனம், உத்தராயனம் என்றே கூறி வைத்தார்கள். 

வேதம் பாடுகிறது, சூரியனின் புகழை! நம் காலத் திரைப்படப் பாடல் 'ஆயிரம் கரங்கள் நீட்டி...’ எனப் பாடுகிறது, சூரியனின் புகழை. ஆக மொத்தத்தில், வேத காலம் முதல் இன்றைய காலம் வரை சூரியனின் புகழைப் பாடாத புலவர்களே இல்லை எனலாம்.

'உலகம் உவப்ப வலநேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு’ என நக்கீரரும், 'ஞாயிறு போற்றுதும்... ஞாயிறு போற்றுதும்’ எனப் பழந்தமிழ்க் காப்பியங்களும், 'கடலின் மீது கதிர்களை வீசி கடுகி வான் மிசை ஏறுதி ஐயா...’ எனத் தொடங்கி பாரதியாரும், 'ஒளி செய்தான் கதிர்க் கோமான் வானகத்தில்’ எனத் தொடங்கி பாரதிதாசனும், 'சூர்ய சதகம்’ என்ற பெயரில் சூரியனைப் புகழ்ந்து தனி நூலே பாடிய மயூரகவியும், சூரியனைப் பற்றிப் பலவிதங்களிலும் பாடிப் பரவியிருக்கிறார்கள்.

ஞானப் பொக்கிஷம் - 21

ஆனால், உலகத்திலேயே எந்தவொரு புலவரும், எந்தவொரு மொழியிலும் சூரியனைப் பற்றி ஆயிரம் பாடல்கள் பாடியதாக வரலாறே இல்லை. அதைச் செய்திருக்கிறார் நம் தமிழ்ப் புலவர் ஒருவர்!

கோள்களில் மட்டுமல்லாமல், கிழமைகளிலும் முதலாவதாக இருப்பது ஞாயிறு. ஞாயிறு புகழ்பாடும் இந்நூலுக்கு 'ஞாயிறு ஆயிரம்’ என்றே பெயர். இதன் பாடல்கள் எல்லாம் ஒரே முறைப்படி அமையாமல், இலக்கண வகைகள் பலவும் இந்த ஆயிரம் பாடல்களில் விரவி அமைந்திருக்கின்றன. இந்த நூலில், தமிழ் அகராதிகளில் கூடக் காணப்பெறாத சூரியனின் திருநாமங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தலைமாட்சி, என்னூழ், ஆரண விதி என்றெல்லாம் சூரியன் குறிப்பிடப்படுகிறார்.

ஞானப் பொக்கிஷம் - 21

எல்லா ஜீவராசிகளும் செய்யும் எல்லாவிதமான தொழில்களுக்கும் சாட்சியாக இருப்பவன் சூரியன்; இயக்கி வைப்பதும் சூரியனே என்று சொல்லும் பாடல், அந்த சூரியனை மார்த்தாண்டக் கடவுள் என்கிறது. 'அனைத்துயிர் செய் தொழில்களுக்கும் ஆன்றசான்றாய்க் காரணகாரிய முழுதும் இயக்குவிக்கும் மார்த்தாண்டக் கடவுளானே’ என்கிறது அந்தப் பாடல்.

பத்து பாடல்கள் சேர்ந்தது ஒரு பதிகம். அவ்வாறு நூறு பதிகங்கள் இந்த நூலில் அமைந்துள்ளன.

சூரியனைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் அடங்கிய இந்த நூலில் ஓர் அற்புதமான அமைப்பு முறை உள்ளது.

ஒவ்வொரு பதிகத்திலும், பத்தாவது பாடலில் குந்திதேவிக்கு சூரியன் அருள்புரிந்து கர்ணன் பிறந்த செய்தி இடம்பெற்றுள்ளது. அத்துடன், பொதுவாக நூல்களில்... இந்தப் பாடலைப் படித்தால் கிடைக்கும் பலன் என்ன என்பதைச் சொல்லும் பலஸ்ருதியாக 11-வது பாடலும் உண்டு. அப்படி, ஒவ்வொரு பதிகத்திலும் உள்ள பதினோராவது பாடல் ஆஞ்சநேயரைப் பற்றிய தகவலுடன் திகழ்வது இந்த நூலின் தனிச்சிறப்பு!

'பாய பார்க்குப் பருவரல் நீக்குகார்

மாயன் வென்றி யென் மாட்டுற நல்குவாய்

கூய வட்கெழிற் குந்தலத்தன் றொர்நற்

சேய ளித்த திவாகர மூர்த்தியே!’

இப்பாடலில், கர்ணனை 'நற்சேய்’ என்று சொல்லும் நூல், மற்றொரு பாடலில் கர்ணணின் கொடைத்தன்மை பற்றிப் பேசுகிறது.

'குந்தல நாட்டொரு பேதை கூவும் நாள் கொடைப்பெருஞ்சீர்

மைந்தனும் பெற்றிடத் தந்த மார்த்தாண்ட வானவனே!’

ஆஞ்சநேயருக்குக் குருவாக இருந்து உபதேசம் செய்தவர் சூரிய பகவான். அவர், ஒன்பது வகை இலக்கணங்களையும் ஆஞ்சநேயருக்குச் சொன்னார். இந்தத் தகவலைச் சொல்லும் பாடல்...

'தப்பில் உண்மைச் சமரச வாழ்வுறும்

இப்பிறப்புடன் என்னை உன்னுள் கொள்வாய்

ஒப்பில் மாருதிக்கு ஒன்பதிலக்கணம்

செப்பி ஆண்ட திவாகர மூர்த்தியே!’

ஞானப் பொக்கிஷம் - 21

நீரின் (கடல்) நடுவில் இருந்த இலங்கையை நீறாக்கிய (சுட்டுச் சாம்பலாக்கிய) ஆஞ்சநேயருக்கு அருள்செய்து குருவாக இருந்ததைச் சொல்லும் பாடல்...

'நீருததி சூழிலங்கை நீறெழச்சுட்டு அளிகூரும்

மாருதிக் கன்று அருள் செய்தாய் மார்த்தாண்ட வானவனே!’

ஆதவனைப் பற்றி ஆயிரம் பாடல்கள் கொண்ட 'ஞாயிறு ஆயிரம்’ என்ற இந்த நூலை எழுதியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் என்ற மகான். 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், பற்பல ஊர்களுக்கும் சென்று அங்கங்குள்ள இறைவனைப் பாடியிருக்கிறார்.

சென்னை கந்தகோட்டத்தில் இவர் தான் எழுதிய நூலை அரங்கேற்றியபோது, முருகப் பெருமானே காட்சியளித்து அதை ஏற்றது வரலாற்றுச் செய்தி.

'ஏகதாள் இதழகல் அந்தாதி’ எனும் அற்புதமான அமைப்பு கொண்ட அந்தாதி நூல், தமிழின் வளமையை வெளிப்படுத்தும். அளவில்லாத தமிழ்ப் பாடல்களை அந்தந்த ஊர்த் தெய்வங்களின் மீது எழுதிய இவரின் பாடல்களை வெளியிட விருப்பம் உள்ள தமிழன்பர்கள் 'நிர்வாகி, கௌமார மடாலயம், திருவாமாத்தூர், விழுப்புரம்’ என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

'ஞாயிறு ஆயிரம்’ என்ற இந்த நூலைத் தவிர, திருவரங்கத் திருவாயிரம், பழனித் திருவாயிரம், தில்லைத் திருவாயிரம், தெய்வத் திருவாயிரம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.

- இன்னும் அள்ளுவோம்...

ஞானப் பொக்கிஷம் - 21