Published:Updated:

சித்தம்.. சிவம்... சாகசம்! - 10

சித்தம்.. சிவம்... சாகசம்! - 10

சித்தம்.. சிவம்... சாகசம்! - 10

சித்தம்.. சிவம்... சாகசம்! - 10

Published:Updated:
சித்தம்.. சிவம்... சாகசம்! - 10
##~##

'தானான மகிமாவும் கர்மாவோடு

 தங்கும் ஈசத்துவமும் வசித்துவமாகும்

பூனான பிராத்திபிரா காம்யத் தோடு

புகழ் எட்டு தேவதையும் தளத்தில் நின்றே

ஏனான இதழாலே மூடிக் கொள்வார்

ஏற்றமாம் நந்தியைத் தான் காணொட்டாமல்

வானான வஸ்துவை நீ பானம் பண்ணி

வங்ஙென்று வாங்கியுமெ கும்பித்தூதே’

- போகர் 7000-த்தில் ஒரு பாடல்

நீர், நிலம், காற்று, நெருப்பு, வெளி என்னும் ஐந்து பூதங்கள் ஒவ்வொன்றுக்கும் நம் உடலில் ஓர் இடம் உண்டு. இவை தவிர மனம், உயிர் என இரண்டு கூறுகள் சேர்ந்து, மொத்தம் ஏழு ஆதாரங்கள் நம் உடம்பில் உள்ளன. இதைத்தான் சித்தர்கள் உலகம், 'மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராரம்’ என்கிறது.

இந்த ஏழு ஆதாரங்களும் ஏழு சக்கரங்களாக உச்சந்தலையில் இருந்து முதுகெலும்பின் அடிப்பாகம் வரையிலான தூரத்துக்கு உள்ளேயே உள்ளன. ஆதாரம் எதனால் சக்கரமாயிற்று என்று ஒரு கேள்வி எழலாம். சக்கரம் என்பது தடையின்றி இயங்குவதாகும். விசைக்கு ஏற்ப இதன் வேகமும் கூடும்; குறையும். நம் உடம்பிலும் உயிர் விசை உள்ள வரையிலும் இந்தச் சக்கரங்கள் இயங்கிக்கொண்டே இருக்கின்றன.

இந்த ஏழு சக்கரங்களோடு தொடர்புடையதுதான் நம் உடம்பில் உள்ள 72,000 நாடி நரம்புகள். இந்த ஏழு சக்கரங்களும் நாம் உயிர் வாழக் காரணமான சுவாச கதிக்கு ஏற்ப இயங்குகின்றன.

சித்தம்.. சிவம்... சாகசம்! - 10

இதில் நாம் அறியவேண்டிய அடுத்ததோர் உண்மை, நமது ஒரு நாளின் சுவாசம் 21,600 தடவை என்பதாகும். ஒருநாளின் 24 மணிநேரத்தில் இந்த சுவாசமானது, ஏழு ஆதார சக்கரங்களிலும் பங்கு போட்டுக்கொண்டு செயல்படுகிறது. மூலாதாரத்தில்- தினசரி 600 மூச்சுக்காற்று... அதாவது, காலை 6 மணிக்குத் தொடங்கி 6:40 வரை -  நாற்பது நிமிட நேரத்துக்கு இந்த சுவாச ஓட்டம் நிகழ்கிறது. அடுத்ததாக, அது அப்படியே சுவாதிஷ்டானத்துக்கு மாறி (மதியம் 1:20 வரை) செயலாற்றுகிறது. இங்கே 6,000 முறை மூச்சுக்காற்றை உள்வாங்கி வெளியிடுகிறோம். அடுத்து, மணிபூரகத்தில் 6000 மூச்சு இரவு 8 மணி வரை. அதற்கும் அடுத்து அநாகதத்தில் 6000 - இரவு 2:40 வரை. விசுத்தியில் 1000 மூச்சு- 3:46 வரை, ஆக்கினையில் 1000 மூச்சு- 4:54 வரை, சஹஸ்ராரத்தில் 1000 மூச்சு- காலை 6 மணி வரை.

இப்படிச் செயலாற்றும் மூச்சுக்காற்றை, அதாவது இந்த 21,600 எனும் அளவைக் குறைத்துக்கொண்டே போகும்போது ஆயுள் அதிகரிக்கிறது. கூடிடும்போதோ... வேகமாக நாம் நமது முடிவை நெருங்கிவிடுகிறோம். இந்த 21,600 என்ற கணக்குக்கு ஒரு மனிதனின் ஆயுள் 120 வருடங்களாகும். நாம் இன்று 70, 80 வயதுக்குள் போய்ச்சேரக் காரணம், இந்த அளவை அதிகரிக்கும் விதமான சுவாசக் கணக்கோடு நாம் இருப்பதுதான்.

அது எப்படி அதிகரிக்கும் என்றால்... மனம் படபடக்கும்போது, அச்சப்படும்போது, பேராசை வயப்படும்போது! குறிப்பாக கோபப் படும்போது... இந்த 21,600 கணக்கெல்லாம் சும்மா! 30,000, 40,000

சித்தம்.. சிவம்... சாகசம்! - 10

என்று நம் மூச்சுக்காற்றின் எண்ணிக்கை இருக்கும். பேசாமல் ஒரு  மூலையில் அமர்ந்துகொண்டு, மனத்தை ஒருநிலைப்

படுத்தி சீராக மூச்சுவிட்டபடி இருந்தால், இந்த எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும்.

இதில் நாம் உணர வேண்டிய ஒரு விஷயம்... மனிதன் ஒருவன் வெறும் 200 மூச்சை மட்டுமே விட்டு, ஒரு முழு நாளைக் கடத்த முடியும். எனில், 21,400 மூச்சு ஒரு நாளில் மிச்சமாகிறது. இப்படி ஒரு பத்து வருடம் மூச்சுப் பயிற்சியில் இருந்தால்கூடப் போதும்; மிச்சமான மூச்சுக்காற்று நீண்ட ஆயுளாக, அதாவது 300 வருடம், 400 வருடம் என்கிற ஆயுள் காலமாக மாறிவிடுகிறது.

மூச்சால் ஆயுள் நீட்டிப்பு நடக்கும் அதே நேரம், உடம்பையும் கிருமிகள் வெல்ல முடியாதபடியும், பஞ்சபூத அளவு சிதைந்துவிடாதபடியும் அதே கட்டுக்கோப்புடன் வைத்துக்கொண்டு விட்டால்... அவனே நெடுநாள் வாழ முடிந்த, நோய்-நொடியற்ற, நரை- திரையை வெற்றிகொண்ட கல்ப யோகியாவான். இதற்கு மூலிகைகள் பயன்படுகின்றன.

ஆக, ஒரு கல்ப யோகி ஒருபுறம் மூச்சுப் பயிற்சியாலும், மறுபுறம் கல்ப மூலிகைகளாலும் உடம்பைப் பேணிடும்போது, அவன் எமனை வென்றவனாகிவிடுகிறான். கல்ப மூலிகைகள் தங்கள் சக்தியால் உடம்பில் உள்ள ஏழு தாதுக்களான ரசம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மூளை, சுக்கிலம் ஆகியவற்றை வசப்படுத்தி, அவற்றின் மூன்று பூதங்களான 'வாதம், பித்தம், கபம்’ எனும் காற்று, நெருப்பு, அப்புவைத் துளியும் கெட்டுவிடாதபடி வைத்துவிடுகின்றன.

ஒருவருக்கு நோய் என்பது ஏழு தாதுக்களில் மாற்றம் உண்டாகும்போதும், மூன்று பூதங் களிடம் சக்தி குன்றும்போதும்தான் ஏற்படும். இந்த மூன்று பூதங்களையும், அவற்றின் அடிக் கூறுகளான ஏழு தாதுக்களையும் துளியும் கெடாதபடியும், இயல்பு மாறாதபடியும் வைத்துக்கொள்ளும்போது நோயாவது, நொடியாவது?

ஆக, மனிதன் கல்ப யோகியாவது என்பது முதலில் மூச்சால்; பின்பு தேகத்தால்! மூச்சை புரிந்து வசப்படுத்தினால், தேகம் அடிப்படை சக்தி பெறும். அத்துடன், கல்ப மூலிகை மருந்துகள் சேரும்போது அந்தச் சக்தி, உருக்கு போல் ஆகிவிடுகிறது. இந்த மூச்சை புரிந்து வசப்படுத்துவது என்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. மூச்சுப் பயிற்சி என்று இரு சொற் களுக்குள் எளிதில் அடங்கிவிடும் இந்தப் பயிற்சி, ஒரு பல்கலைக்கழகம் அளவுக்குத் தனக்குள் ஏராளமான பாடங்களை உடையது.

பிராணாயாமம் எனும் தலைப்பின் கீழ் தொடங்கும் இது, பிராக்ருதம்- வைகிருதம் என இரண்டு வகைப்படும். இதில் பிராக்ருதம் நாம் இயல்பாக சுவாசிப்பதாகும். வைகிருதம்- இந்த இயல்பில் இருந்து விலகி, ஆயுளை நீட்டித்துக் கொள்ளவும், நமது சில மனோதேவைகளைப் பொருத்தும் மேற்கொள்ளப்படும் முறையாகும்.

மூச்சுப் பயிற்சி இப்படி என்றால், உடம்பை உருக்கு போல் ஆக்கும் காயகற்பம் எப்படிப்பட்டது?

இதைத்தான் போகர் இமயத்து யோகி களிடம் கேட்டு அறிகிறார். அதில் ஒன்று மெர்க்குரி எனப்படும் பாதரசத்தையே காயகற்ப மருந்தாகப் பயன்படுத்தும் முறை!

இந்த பாதரச காயகற்பம் செய்திட, கல்தாமரைக் கிழங்கு என்று ஒன்று தேவை. இது மனித சுவாசம்

சித்தம்.. சிவம்... சாகசம்! - 10

நிகழாத மலைகளில், பாறை இடுக்குகளில் வளரக் கூடியது. இதைத் தேடி அலைந்தபோது, போகர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.

கல் தாமரையைத் தேடிய போகரின் வனப் பயணம் மிக சுவாரஸ்யமானது. இந்தப் பயணமே மிகப் பெரும் பூகோள ஞானத்தை போகருக்குள் உருவாக்கியது. இந்த கல் தாமரை உருவாக பூகோள ரீதியாக பருவ முறைகள் மிக முக்கியம். ஒரு பனிமலையில் இது உருவாகாது; உருவாகவும் முடியாது.

சம அளவு இரவும் பகலும் உள்ள ஒரு நிலப்பரப்பில், அதிலும் பருவங்கள் சமமாகப் பிரித்துக்கொண்ட கால அமைப்பில் (வசந்தம், கோடை, குளிர், மழை, இளவேனில், இலையுதிர்) தமிழ் வருடங்களில் குறிப்பிட்ட சில ஆண்டுகளில்தான் இது மலையகத்துப் பாறை இடுக்குகளில் தோன்றும்.

காற்றின் ஈரப்பதமும், அதனூடே நுட்பமான மகரந்தச் சேர்க்கையும் பாறை இடுக்குகளில் மோதிடும்போது உருவாகி, இத்தாவரம் கருக்கொண்டு வளரும்போது மிதமான மழைப் பொழிவும் அவசியம். அடாது மழை பெய்தாலும், இது வளர முடியாது. பாசியானது ஈரத்தில் பிடித்து தன்னை வளர்த்துக்கொள்வது போல, இதுவும் வளர்ந்து அளவான உஷ்ணத்தை உள் வாங்கி, அப்படியே விரிந்து பரவும். பின்பு, இதில் கிழங்குகள் தோன்றும்.

பொதுவாக கிழங்குகள் பூமிக்கு அடியில், பூமியை கர்ப்பமாக கொண்டு உருத் திரள்பவை. அதனால்தான் கிழங்குகளை மனித உயிருக்கும், ரத்தமும் சதையுமான உயிரினங்களுக்கும் இணை யாகக் கருதி, ஆசாரம் காப்பவர்கள் உண்ண மாட்டார்கள். இவ்வகையில் வெங்காயம், பூண்டு,

முள்ளங்கி போன்றவை அடங்கும். இவை ஜீரணிக்கப்

படும்போது, இவற்றின் குணம் ரத்தத்தில் ஆதிக்கம் செலுத்த முனையும். இதனால் புலன்களை அடக்கித் தவம் செய்ய முனைபவர்களுக்கு கிழங்கு வகைகள் எதிரியாகும்.

இவற்றுக்கு நேர் எதிர்குணம் கொண்டவை பழங்கள். இப்படி கிழங்குகள், பழங்களுக்குப் பின்னாலே நுட்பமான பல சங்கதிகள் உள்ளன. இதிலிருந்து ஓர் உண்மை புலனாகும். கிழங்குகள் உருவாக மண் மூடியிருத்தல் அவசியம். ஆனால், கல் தாமரைக் கிழங்குகள் பாறைகள் மூடப்பெற்ற நிலையில் உருவாகக் கூடியவை. இந்தக் கிழங்குக்கு அரிதான பல குணம் உண்டு. இதில் சாறு பிழிந்து, இந்தச் சாற்றில் இரும்பைப் போட்டு வைத்தால், ஒரு நாளில் அந்த இரும்பு செம்பாகிவிடும். இதன் சாற்றில் செம்பைப் போட்டு வைத்தாலோ, அது குணம் மாறி தங்கமாகிவிடும். இந்தக் கிழங்குகளும் தாமரையும் வளரும் இடத்தில் இருந்து வானத்தைப் பார்த்தால், நட்சத்திரக் கூட்டத்தை மிகத் துல்லியமாகப் பார்க்கலாம்.

இப்படிப்பட்ட இந்தக் கிழங்கை தேடிப் பறித்து வந்து நிழலில் உலர்த்த வேண்டும். நிழலில்தான் இது தன் குணம் கெடாதபடி தன் ஈரத்தை இழக்கும். சுட்டெரிக்கும் வெயில் இதன் குணத்தை உஷ்ணத்தில் மாற்றிவிடும். இப்படி நிழலில் உலர்த்தப்பட்ட கிழங்கை, அது முற்றாக ஈரம் நீங்கிவிட்ட நிலையில் இடித்துப் பொடி போலச் செய்து, ஒரு சிட்டிகை அளவுக்கு தேனில் குழைத்து காலை, மாலை இருவேளை என ஒரு மண்டல காலம் சாப்பிட வேண்டும். இப்படி உட்கொள்வதால் உடல் கல் போலாகும். இந்த ஒரு மண்டல காலத்தில் வெற்றிலை, அகத்திக்கீரை போன்றவற்றை உட்கொள்ளக் கூடாது.

இதே கல்தாமரைப் பொடியைப் பாதரசத்தில் சேர்த்துக் குழைக்க, வெண்ணெய் உருண்டை போலாகும். இந்த உருண்டைகளை மண் கலய நீருக்குள் போட்டு வைக்க, இவை கல்லுருண்டை போலாகும். இதை ரசமணி என்பர். இந்த ரசமணியை, கல்தாமரையை அரைத்துச் செய்த உருண்டையுள் மீண்டும் வைத்து, பின் அப்படியே அதை பூமியில் புதைத்து பசுஞ்சாண வறட்டியால் தீயிட்டுப் புடம் போடவேண்டும். புடம் போடப்பட்ட இந்த ரசமணிதான் பாதரச காயகற்பம்.

இதைச் சிவனாகக் கருதி பூஜித்து வணங்கி எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். தினமும் உறங்கச் செல்கையில், இதை வாயினுள் வைத்துக்கொள்ள, எச்சில் சுரக்கும். இந்த எச்சிலுக்கு அமிர்த குணம் உண்டு. இதை கீழே உமிழ்ந்த நிலையில், இதை உண்ணும் ஈ, எறும்புகள் தங்கள் சராசரி ஆயுளைக் கடந்தும் மிக வலிமையோடு திகழ்ந்து உயிர் வாழும். இந்த எச்சிலை நாமே விழுங்கிட, நம் உடல் ஆரோக்கியமான ஒரு நிலையில், வளர்ச்சியும் வீழ்ச்சியும் இன்றி அப்படியே நின்றுவிடும்.

ஒரு வகையில் இது மரணத்தைத் துரத்தும் குளிகையும்கூட! இதை உண்டு உடம்பு கல்லாகிப் போனவர்கள் தீயில் புகுந்து உயிர் விட்டாலே உடல் அழியும். தானாக உயிர் பிரியும் ஒரு நிலை இவர்களுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு வராது. இந்தப் பாதரச காயகற்பத்தைப் புடம் போடுவதில் மேலும் பல மாதிரிகளும் விதங்களும் உள்ளன. அவற்றுக்கேற்ப அந்த காயகற்பத்தின் தன்மை யும் மாறும். போகர் இந்த காயகற்பத்தைத்தான் செய்து, பிறகு தன் சீடர்களுக்கும் கொடுத்து, அவர்களை எல்லாம் மிகுந்த வலிமை உடையவர்களாக மாற்றிக் காட்டினார். இந்த காயகற்பங்களுக்காகப் பெரும் வீரர்களும், நிலக்கிழார்களும், அரசர் பெருமக்களும் எவ்வளவு பொன்னும் தரத் தயாராக இருந்தனர். அதே நேரம், இதை உண்டவருக்குச் சுக்கிலம் கல்லாகி, காம உணர்வு தலையெடுக்காது என்பதால், பலர் இதை வேண்டாம் என்றும் தவிர்த்தனர்.

போகரின் கல் தாமரைத் தேடலில் அவருக்கு ஒரு ஊருக்கும், வனத்துக்குமான வேற்றுமைகள் புரிந்துபோயின. ஊர் என்பது ஊர்வோராகிய உயிர்கள் வாழுமிடம். உயிர்கள் விடும் மூச்சுக் காற்றால் காற்றுவெளி எங்கும் அதிர்வுகள் பரவியிருக்கும். வனம் இதில் மாறுபட்டது. தாவரம் என்பது நின்ற இடத்தில் வான் நோக்கி வளர்வது. அதுவும் சுவாசிக்கிறது. ஆனால், அதன் சுவாசம் பரவிய ஒரு இடத்துக்கும், மனம் கொண்ட மனிதர்கள் வாழும் இடத்துக்கும் நிறைய வேற்றுமை இருப்பதை அவர் முதலில் கண்டறிந்தார்.

அடுத்து, பறவைகளே தங்கள் எச்சங்கள் மூலம் தாவரங்கள் எல்லா இடங்களுக்கும் செல்லக் காரணமாக இருப்பதையும், வன விலங்குகள் தங்கள் கழிவுகளாலும் கரித்துண்ணும் முறையாலும் வனத்தினைப் பேணுவதையும் புரிந்துகொண்டார்.

எந்தவொரு வனத்தில் மான்கள் மிகுதியாக உள்ளதோ, அங்கே சிறு தாவரம் எனப்படும் புற்கள், கொடிகள் மிகுதி. எங்கே ஒரு வனத்தில் யானைகள் மிகுதியாக உள்ளதோ, அங்கே நீர் நிலைகளும், புதராய் மண்டும் தாவரங்களும், குறு மரங்களும் மிகுதி. இதுபோக, உயரமான மரங்களும், அவற்றில் தேன்கூடும் இருக்கும் பட்சத்தில், அப்பகுதியில் குளிரும் அதிகம் இருந்தால்... ரோமம் அதிகம் கொண்ட செம்மறி ஆடுகள், கரடிகள் ஆகியன இருக்கும் என்று ஒன்றோடொன்று தொடர்புபடுத்தியும், அவை தொடர்போடு இருப்பதையும் அறிந்தார்.

அப்படியே சிங்கம், புலி போன்ற வன் மிருகங்களும் எங்கு இருக்கும் என்பதையும் அவர் அறிந்துகொண்டார். மான் இருந்தாலே புலியும், புலி இருந்தாலே எருதுகளும் என ஒன்றுக்குள் ஒன்று அடங்கிய தன்மையை உணர்ந்து 'வனச்சாகரம்’ என்று ஒரு நூலையும் எழுதினார். ஆனால், அந்த ஏடுகளைக் கால வெள்ளம் கொண்டு சென்றுவிட்டது. இவரது நூல்கள் பற்றிய விவரம் அகத்தியரின் 'சௌமிய சாகரம்’ எனும் நூலில் காணப்படுகின்றது. அதில்... போகர் நிகண்டு, போகர் சப்த காண்டம் 7000, போகர் ஜனன சாகரம், போகர் கற்பசூத்திரம், போகர் அட்டாங்க யோகம், போகர் பூஜாவிதி போன்றவை குறிப்பிடப்பட வேண்டியவை.

மொத்தத்தில், போகர் என்றாலே முதலில் அவரது சித்த வைத்தியம்தான் நினைவுக்கு வரும். பிறகு, அவரால் ஸ்தாபிக்கப்பட்ட பழநி ஸ்ரீதண்டாயுதபாணி ஸ்வாமியின் நவபாஷாண விக்கிரகம்!

இந்த விக்கிரகத்துக்குப் பின்னாலே உணர முடிந்த அளவுக்கும், உணரமுடியாத அளவுக்கும் ஏராளமான நுட்பங்கள் உள்ளன. போகர் மற்ற முனிவர்களின் வழிகாட்டுதலிலும், தன் தேடலிலும் மருத்துவ முறைகளை உலகுக்கு அளித்தது ஒருவிதம் என்றால், ஸ்ரீதண்டாயுத பாணி ஸ்வாமியை அளித்த விதம் ஓர் அற்புதமாகும்.

எவ்வளவோ தெய்வ வடிவங்கள் இருக்க, முருகப்பெருமானின் உருவத்தினை இவர் ஏன் வடிக்க வேண்டும்? முருகன் என்றால் அழகன் என்று பொருள். அவன் வெறும் அழகன் மட்டுமல்ல்; நல்லதோர் தமிழழகனும்கூட! அவனது ஆறுமுகமும், பன்னிரு கரமும், அதன் கூட்டான பதினெட்டும் நம் உயிர்மெய் எழுத்துக்களை நினைவூட்டுபவை. அவனது வேல், கூரிய அறிவின் சின்னம். இப்படிப்பட்டவனை ஆண்டிக் கோலத்தில் வடிக்கவேண்டிய அவசியம் ஏன்? இப்படிப் பல கேள்விகள் நம்முள் எழலாம்.

முருகப்பெருமானின் திருவிளையாடல் கதை ஒன்றும், அதில் அவன் கோபித்துக்கொண்டு பழநி மலை மேல் வந்து நின்றுகொண்டதால் அந்த மலை 'பழநி மலை’ என்றாயிற்று என்கிற புராண வரலாறு ஒருபுறம்; போகர் வேல்முருகனை தண்டபாணி யாகச் சிந்தித்து வந்தித்து, அப்படி வந்தித்த உருவை நவபாஷாணத்தில் உருவாக்கியதன் பின்னாலே, மிகவே நுட்பமான காரண காரியங்கள் உள்ளன.

போகர், உயிர் வாழ்க்கைக்கு இடையூறான நோய்களை வெல்லும் வழிமுறையைக் கண்டறிந்தார். பஸ்பங்கள், காயகற்பங்கள், மூலரசங்கள், குளிகைகள்... என்று எல்லாம் கண்டறிந்தும், மனித இனம் அதனாலேயே கடைத்தேறிவிடும் என்று அவர் நம்பவில்லை.

இவை எல்லாமே அருளுள்ளவர்களுக்கே என்பதுதான் அவர் இறுதியில் அறிந்துகொண்ட பேருண்மை. வியாதியும்- மூப்பும், நரையும்- திரையும் கர்மத்தால் வருபவை. அப்படி அவை வருவதை எது கொண்டும் தடுத்து நிறுத்த போகரால் முடியவில்லை.

இந்த உலகின் எல்லாவிதமான மாயா சுகங்களையும் பெரிதாகக் கருதி, இதில் லயித்திருக்கவே எல்லோரும் விரும்பினார்கள். போகரிடமே சிலர் 'சிற்றின்பத்தில் ஈடுபடும் போது அது நிலைத்திருக்க வழியுண்டா? அதற்கான மருந்து உங்கள் வசம் உள்ளதா?’ என்று கேட்டனர். 'இளமையோடு இருக்க வழி சொல்லுங்கள்; முதுமையே வரக் கூடாது’ என்றனர். புலன் அடங்கியும், புலன் அடக்கியும் வாழும் வாழ்க்கையைவிட மனம் போன போக்கில் வாழவே எல்லோரும் விரும்பினர். இன்றும் அதுதான் வாழ்வின் நிலை!

இதைக் கண்ட போகரும், 'எதை அறிந்தும் பயனில்லை. இறையருள் இல்லையேல் எவராலும் கடைத்தேற முடியாது’ என்பதையே இறுதியாக உணர்ந்து கொண்டார். அருளற்றுப் போகும்போது மெள்ள பொருளற்றுப் போகிறது. பொருளற்றுப் போகப் போக, இருளுற்றவர்கள் ஆகிறோம். இந்த இருளுக்குள் விழுந்தவர்களுக்கான ஒளியை எதனால் தரமுடியும்? இந்தக் கேள்வியோடும் மெய் வருத்தத்தோடும் அவர் தவத்தில் மூழ்கவும் - குறிப்பாக, சித்தர்கள் சக்தியை வாலையாக, கன்னிக்குமரியாக வழிபடும் விதத்தில், அவர் வழிபட்டு தவத்தில் மூழ்கவும் - அவருக்கு அந்த ஆதிசக்தியின் தரிசனம் கிட்டியது.

'போகா... உன் நோக்கம் மிக உயர்ந்தது. நீ அறிந்த எதுவும் வீண் போகாது. ஆயினும், இவை எல்லாம் நோயுற்றவர்க்கே! பிறவி எனும் நோயுற்றவர்க்கும் நீ ஒரு மருந்தை உருவாக்கு. அந்த மருந்துதான் முருகு. முருகன், சக்தியும் சிவமுமானவன்; மாலின் காக்கும் குணப்பாடும் உடையவன். சத்தும் சித்துமாய் வள்ளி- தேவானையை உடன் கொண்டவன். அவன் குழந்தைக்குக் குழந்தை; பிள்ளைக்குப் பிள்ளை; காளைக்குக் காளை; ஞானத்திலும் பரிபூரணன்; அப்பனுக்கே பாடம் சொன்னவன்!

மொத்தத்தில் வானவர்க்கும், தேவர்க்கும், பூதவர்க்கும், ஞானியர்க்கும் என்று, எவர்க்கும் எளியவன், இனியவன். நவகோள்களோடும் தொடர்புடையவன். எனவே, அக்கோளின் குணம்கொண்ட பாஷாணங்களால் அவனை வடிவாக்கு. மற்றவை, அந்த உருவம் உருவாகுங்கால் உனக்கே தானாகப் புரியும்...' என்று கூறி மறைந்தாள்.

போகருக்கும் அப்போதுதான், 'பிறந்துவிட்டவர்க்கு மருந்தை அறிந்த எனக்கு, பிறப்புக்கே மருந்து இருப்பது தெரியாமல் போனதே’ என்பது புரிந்தது. நவபாஷாணங்களால் முருகப்பெருமானும் தண்டபாணியாக எழும்பி நிற்க ஆரம்பித்தான்.

- சிலிர்ப்போம்