Published:Updated:

'நல்ல வாழ்க்கைத் துணை வேண்டும், தம்பிராட்டியம்மா!'

'நல்ல வாழ்க்கைத் துணை வேண்டும், தம்பிராட்டியம்மா!'

'நல்ல வாழ்க்கைத் துணை வேண்டும், தம்பிராட்டியம்மா!'

கி.பி. 10-ஆம் நூற்றாண்டில், வல்லநாடு பகுதியை ஆண்டு வந்தவன்

வல்லப்பராயன். தனது குலதெய்வமான ஸ்ரீதம்பிராட்டி அம்பாளுக்கு ஒரு கோயில் கட்டவேண்டும் என்பது இந்த மன்னனின் நீண்டநாள் விருப்பம். அதை நிறைவேற்ற, அம்பாளின் உத்தரவுக்காகக் காத்திருந்தான்.

ஒரு வெள்ளிக்கிழமையன்று இரவில், மன்னனின் கனவில் தோன்றிய அம்மன், ''பாண்டியனே... தாமிரபரணிக் கரையில், ஈசான மூலையில் கருத்த மேனியும், விரித்த சடையும், முக்கண்களும், ஆயுதங்கள், அபய- ஹஸ்த முத்திரைகளுடன் எட்டுக் கரங்களும் கொண்டவளாக, செவ்வாடை உடுத்திய அமைப்பில்... வடக்கு நோக்கி எனக்கு விக்கிரகம் அமைத்து கோயில் கட்டு!'' என்று உத்தரவு தந்து மறைந்தாள்.

மறுநாளே, அரசவை ஜோதிடரை அழைத்து நல்ல நாள் குறித்து,

கோயில் வேலைகளைத் துவங்கினான் மன்னன். கனவில் அம்பாள் சொன்ன இடத்தில், சுயம்புவாக முளைத்த வேம்பு இருந்ததாம். அதையே கோயிலின் ஸ்தல விருட்சமாக ஏற்றனர். அந்த மரத்தில் தம்பிராட்டியம்மனே குடியிருப்பதாகக் கருதிய குடிமக்களும் மன்னனும், கோயில் வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே, மரத்தை அம்மனாக பாவித்து வழிபட்டு வந்தனர்.

'நல்ல வாழ்க்கைத் துணை வேண்டும், தம்பிராட்டியம்மா!'

இந்த நிலையில், அந்த ஊர் வழியாகப் பயணித்த ஆங்கிலேயே துரை ஒருவன், இவர்களது வழிபாட்டை கேலி செய்தான். 'துரை அவர்களே, தெய்வக் குற்றத்துக்கு ஆளாகிவிடாதீர்கள். எங்கள் தம்பிராட்டி அம்மன் சக்தி வாய்ந்தவள்’ என்று ஊர்மக்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் கேட்கவில்லை. 'நான்

தினமும் இந்த வழியாகத்தான் குதிரையில் செல்வேன். எங்கே... உங்கள் அம்மனுக்குச் சக்தி இருந்தால் என்னைத் தடுத்து நிறுத்தட்டும், பார்க்கலாம்!’ என்று சவால் விட்டுச் சென்றான்.

'நல்ல வாழ்க்கைத் துணை வேண்டும், தம்பிராட்டியம்மா!'

மறுநாள், ஆங்கிலேய துரையின் குதிரை மிகச் சரியாக  தம்பிராட்டி அம்மன்கோயில் வாசலுக்கு வந்ததும் நின்றுவிட்டது. அவன் எவ்வளவோ முயன்றும், அடுத்து ஓர் அடிகூட எடுத்து வைக்கவில்லை குதிரை. அப்போதும் ஆணவம் அடங்கவில்லை அவனுக்கு. குதிரையை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றவன், மறுநாள் வேறொரு குதிரையில் வந்தான். அதுவும் அம்மன் கோயிலை நெருங்கியதும், அதற்குமேல் நகராமல் அங்கேயே படுத்துவிட்டது. அப்போதுதான் அம்பாளின் சக்தியை உணர்ந்தான் ஆங்கிலேயே துரை.

கோயிலின் முன், அம்மனிடம் மன்னிப்புக் கேட்டுத் தோப்புக்கரணம் போட்டு வணங்கியவன், தனது கையில் இருந்த காசுகளைத் கோயில் திருப்பணிக்காகக் கொடுத்துவிட்டு, குதிரைக்கு அருகில் வந்தான். அவ்வளவுதான்; உடலை சிலுப்பியபடி எழுந்து நின்ற குதிரை, சவாரிக்கு உற்சாகமாகத் தயாரானது.

திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது வல்லநாடு. இங்குதான் அழகுறக் கோயில்கொண்டிருக்கிறாள் ஸ்ரீதம்பிராட்டியம்மன்.

ஆதிகாலத்தில் சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தர்களும் இந்த அம்மனை வழிபட்டுச் சிறந்துள்ளார்கள். இதற்குச் சான்றாக, இவ்வூரின் அருகிலேயே சேரன் குளம், சோழன் குளம், பாண்டியன் குளம் ஆகிய குளங்கள் உள்ளதாகக் கூறுகிறது தலபுராணம்.

'நல்ல வாழ்க்கைத் துணை வேண்டும், தம்பிராட்டியம்மா!'

மன்னனின் கனவில் கூறியதுபோன்றே, காளியின் அம்சத் துடன்... அதேநேரம் சாந்தமுகத்துடன் அருள்பாலிக்கிறாள் ஸ்ரீதம்பிராட்டி அம்மன். இப்பகுதி மக்களுக்குக் கண்கண்ட தெய்வமாகத் திகழும் இந்த அம்பாளை வழிபட, வேண்டிய காரியங்கள் யாவும் விரைவில் நிறைவேறும் என்கிறார்கள் பக்தர்கள். உத்ஸவராக சிறிய தம்பிராட்டி அருள்பாலிக்கிறாள். அம்பாள் சந்நிதிக்கு வலப்புறத்தில் ஸ்ரீகருப்பசாமி, ஸ்ரீபிரம்மசக்தி ஆகியோர் காட்சி தருகின்றனர். மேலும் சுடலை, பேச்சியம்மன், கோயிலின் நடுவில் மகிடாசுரன், வேதாளம், கொம்பமாடன், கொம்ப மாடத்தி, தளவாய், சங்கிலிபூதத்தார் ஆகியோரையும் இந்தக் கோயிலில் தரிசிக்கலாம். பைரவர், விநாயகர், சின்னத்தம்பி ஆகிய தெய்வ மூர்த்தங்களும் இங்குண்டு. கோயிலுக்கு வெளியே கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார் வண்ணாரமாடன்.

பக்தர்களின் வீட்டில் ஏதேனும் பொருட்கள் தொலைந்துவிட்டால், இங்கு வந்து சின்னத்தம்பி ஸ்வாமிக்கு 21 நாட்கள் அவல்- பொரி கடலை படைத்து வழிபடுகின்றனர். இதன் பலனாக 21-வது நாளே தொலைந்துபோன பொருள் மீண்டும் கிடைத்துவிடும் என்கிறார்கள்.

பொங்கல் விழா இங்கே சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம் அம்பாளுக்கு 11 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு, கோயிலுக்கு நடுவில் பெரிய மண்பானையில் பொங்கலிட்டுப் படைத்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அம்பாளுக்குச் சிவப்புப் பட்டு, செவ்வரளி மாலை அணிவித்து, புட்டு, வடை மற்றும் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, நீராஞ்சன விளக்கேற்றி வழிபட்டால் வியாபாரம் செழிக்கும். குழந்தை இல்லாத தம்பதிகள், இங்கு வந்து கோயில் கிணற்றில் குளிக்க வேண்டும். பிறகு, ஈரத்துணியுடன் கையில் மரத்தொட்டிலை ஏந்தியபடி அம்பாளை 18 முறை வலம் வந்து வணங்கவேண்டும். பிறகு, ஸ்தல விருட்சமான வேப்ப மரத்தில் அந்தத் தொட்டிலைக் கட்டி மூன்று முறை ஆட்டிவிட, விரைவில் வீட்டிலும் தொட்டில் ஆடும் என்பது நம்பிக்கை.

அதேபோன்று திருமணத் தடையுள்ள ஆண்கள், ஆண் உருவ பொம்மையையும், பெண்கள் பெண் உருவ பொம்மையையும் வாங்கி வந்து, கோயிலின் பிராகாரத்தில் வைத்துவிட்டு, 'நல்ல வாழ்க்கைத் துணை வேண்டும், தம்பிராட்டியம்மா’ என வேண்டிக்கொண்டால், சீக்கிரமே வீட்டில் கெட்டிமேளம் கொட்டுமாம்!

- ச.காளிராஜ்

படங்கள்: ஏ.சிதம்பரம்

அடுத்த கட்டுரைக்கு