கேரள திவ்ய தேசங்கள்

தெளிவிசும்பு கடிது ஓடித் தீவளைத்து மின்இலகும்

 ஒளிமுகில்காள்! திருமூழிக் களத்துறையும் ஒண்சுடர்க்குத்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவிசும்பு திருநாடாத் தீவினையேன் மனத்துறையும்

துளிவார்கள் குழலார்க்குஎன் தூதுரைத்தல் செப்புமினே.

   -நம்மாழ்வார் (9-ஆம் பத்து; 7-ஆம் திருவாய்மொழி)

##~##

பொருள்: தீயாலே சுற்றி வளைப்பது போலத் தெளிவான வானத்தில் மின்னலை விரைவாக ஓடச்செய்யும் ஒளி பொருந்திய மேகங்களே! பெருமாளின் தெளிவிசும்பாகிய பரமபதம் போலத் தீவினையேன் மனத்திலேயும் எழுந்தருளியுள்ளான். அவனே ஒளிப்பிழம்பாகத் திருமூழிக்களம் என்னும் திருத்தலத்தில் உள்ளான். தேன் துளிர்க்கும் மலர்சூடிய குழலைக் கொண்ட அந்தப் பெருமாளிடம் எனக்காகத் தூது செல்ல வேண்டும். நீங்கள் அவனிடம் என்பொருட்டுத் தூது வார்த்தையை விண்ணப்பம் செய்வீர்களாக!

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கன்மாலியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருமூழிக்களம். 'திருமூழிக் களத்து அப்பன்’ என்று குறிப்பிடப்படும் இங்குள்ள மூலவரான ஸ்ரீலட்சுமணப் பெருமாள், ஸ்ரீமகாவிஷ்ணுவாகவே கருதப்படுகிறார். விசுவாமித்திர முனிவரின் மகன் ஹாரீத முனிவர் இங்குள்ள பெருமாளை நோக்கிக் கடும் தவம் இருந்ததாகவும், மகாவிஷ்ணு மனமிரங்கி அவர் முன் தோன்றியதாகவும் புராணம் கூறுகிறது. இங்கே, கலியுகத்தின் கொடுமைகளை ஒழிப்பதற்கான அறிவுரைகளை முனிவருக்கு மகாவிஷ்ணு அருளினாராம். இந்த அறிவுரைகளே 'திருமொழி’ எனப்படும் புனித வார்த்தைகளாயின. புனித மொழிகளை அருளிய இடம் என்னும் பொருளில் 'திருமொழிக்களம்’ என்று இந்தத் தலம் பெயர்பெற்றது. நாளடைவில் திருமூழிக்களம் என்றும், திருமூழிக்குளம் என்றும் மருவி வழங்கலாயிற்று. திருமூழிக்களம், கேரளாவில் அந்தணர்கள் வசிக்கும் பிரபலமான 32 கிராமங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள திவ்ய தேசங்கள்
கேரள திவ்ய தேசங்கள்

இங்கே ஸ்ரீலட்சுமணப் பெருமாள், நின்ற திருக்கோலத்தில் கிழக்கில் திருமுகம் நோக்கி சேவை சாதிக்கிறார். தாயார் ஊர்மிளையாக இருப்பினும் 'மதுரவேணி நாச்சியார்’ என்ற பெயரில் விளங்குகிறார். தாயாருக்குத் தனிச் சந்நிதி இல்லை. ஸ்ரீகணபதி, ஸ்ரீராமர்

சீதைஅனுமன், ஸ்ரீபகவதி, ஸ்ரீசாஸ்தா மற்றும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி வடிவில் ஸ்ரீசிவபெருமானும் இங்கே அருள்பாலிக் கிறார். கோயிலுக்கு வெளிப் பிராகாரத்தில் வலது பக்கம் ஸ்ரீகோசாலகிருஷ்ணர் வீற்றிருக்கிறார்.

சௌந்தர்ய விமானம், பெருங்குள தீர்த்தம், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் என்று, இத்தல ஆலயத்துக்குப் பெருமைகள் பல. ஆலயத்தின் மண்டப விதானத்தில் மரத்தால் அழகாகச் செதுக்கப் பட்ட அஷ்டதிக்குப் பாலகர்கள் காணப்படுகிறார்கள். நாகதோஷத்துக்குப் பிராயச்சித்த வழிபாடு இங்கே பிரசித்தம்!

கேரள திவ்ய தேசங்கள்
கேரள திவ்ய தேசங்கள்

இந்த ஆலயத்தில் 11ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அப்போது இந்தப் பகுதியை ஆண்ட மன்னன் பெயர் பாஸ்கர ரவிவர்மன். பொதுவாக அனைத்து ஆலயங்களின் விதிமுறைகள், வழிபாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை வகுத்தது இங்குதான் என்கிறார் கள். 'மூழிக்களம் கச்சா’ என்ற

கேரள திவ்ய தேசங்கள்

பெயருள்ள அந்த விதிமுறைகளே கேரளாவில் உள்ள எல்லா ஆலயங்களிலும் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

வாக்கேய கைமல் என்ற நிலச் சுவான்தாரின் கனவில், மகாவிஷ்ணுவின் சக்தி கொண்ட நான்கு திருவுருவ விக்கிரகங் கள் கடற்கரையில் ஒதுங்கிக் கிடப்பதாகத் தோன்ற... அவர் அங்கே ஓடிச்சென்று பார்த்தார். ஸ்ரீராமர், ஸ்ரீலட்சுமணன், ஸ்ரீபரதன், ஸ்ரீசத்ருக்னன் ஆகியோரின் விக்கிரகங்கள் அவருக்குக் கிடைக்க, அவற்றைப் பக்தியுடன் எடுத்துவந்து, கனவில் தனக்கு உத்தரவிடப்பட்ட இடங்களில் அவற்றைப் பிரதிஷ்டை செய்தாராம். அந்த தலங்கள்: ஸ்ரீராமர் திரிப்பிறயார், ஸ்ரீலட்சுமணன் மூழிக்களம், ஸ்ரீபரதன் இரிஞ்சாலக்குடா, ஸ்ரீசத்ருக்னன் பயம்மால்.

ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையுள்ள மலையாள கர்க்கிடக மாதத்தில் ஒரே நாளில் இந்த நான்கு தலங்களுக்கும் சென்று (நாலம்பல யாத்ரா) தரிசித்து வழிபடுவதால், எல்லா வளமும் நலமும் கிடைக்கும் என்று நம்பிக்கை. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் ஆர்வத்தோடும் பக்தியோடும் பங்கேற்கிறார்கள்.

மற்ற ஆலயங்களைப்போல பூஜை நேரங்களில் இசை வாத்திய முழக்கம் இந்த ஆலயத் தில் ஒலிப்பதில்லை. திப்புசுல்தான் சூறையாடிய பல ஆலயங்களுள் இதுவும் ஒன்று. அப்படிச் சூறையாடியபோது ஸ்ரீலட்சுமணப் பெருமாளின் விக்கிரகம் சிதைந்து போயிற்று. அதனால், அந்த விக்கிரகத்துக்கு வெள்ளிக் கவசம் சார்த்தி வழிபட்டு வருகிறார்கள். தேவப்பிரஸ்னம் பார்த்தபோது, பெருமாள் இந்தச் சிதைந்த கோலத்தில் இருப்பதையே விரும்புவதாகவும், விக்கிரகத்தை மாற்ற வேண்டாம் என்றும் தெரியவந்தது. அதன்படி, இன்றளவும் அதே

மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

மலையாள மேடம் மாதம் (ஏப்ரல்மே) 15 நாள் திருவிழா இங்கே கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவோண நாளில் ஆராட்டுடன் திருவிழா முடிகிறது. திருவிழாவின்போது ஏராளமான கலைநிகழ்ச்சிகள், புராண நாடகங்கள் ஆலய வளாகத்தில் நடத்தப்படுகின்றன. திருவாதிரைத் திருவிழா டிசம்பர்ஜனவரியிலும், மண்டல வழிபாடு ஜூலைஆகஸ்ட் மாதத்திலும் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

கோயிலுக்கு வந்த துளசிதாஸ் என்ற பக்தரிடம் பேசினோம். 'இந்த ஆலயத்துக்கு வருபவர்கள் கிழக்கு வாசல் வழியே நுழைந்து ஸ்ரீலட்சுமணப் பெருமாளை வணங்க வேண்டும். பிறகு ஸ்ரீகணபதி, ஸ்ரீசிவன் (தட்சிணாமூர்த்தி) ஆகியோரை வணங்கி விட்டுப் பிறகு மற்ற உபதேவதைகளை வணங்க வேண்டும். இறுதியில் இரண்டாம் முறையாக ஸ்ரீலட்சுமணரைச் சென்று வணங்க வேண்டும் என்பது நியதியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது'' என்றார் அவர்.

ஆலய வளாகத்தில் நாம் சந்தித்த இன்னொரு பக்தர், மலையாள நடிகர் எம்.கே.கிருஷ்ணன்போற்றி. இவர், மூலவர் ஸ்ரீ லட்சுமணப் பெருமாளின் அதீத பக்தராம். விகடன் ஒளித்திரையின் 'திருமதி செல்வம்’ மலையாள மொழித் தொடரிலும், வேறு பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். அவர் கூறுகையில், ''இங்கு பல வருடங்களாக வந்து ஸ்வாமியை வழிபட்டு வருகிறேன். இங்கே மூலவருக்குப் பால் பாயஸ வழிபாடு பிரதானமானது. ஸ்ரீகணபதிக்கு அப்பமும், ஸ்ரீபகவதிக்கு மஞ்சள் பொடியும், ஸ்ரீசாஸ்தாவுக்கு நீராஞ்சனமும் கொண்டு வழிபாடு செய்யப்படுகிறது.

இங்கே அருளும் ஸ்ரீலட்சுமண ஸ்வாமி, துயரப்படுவோர் மீது கருணை கொண்டு துன்பம் தீர்ப்பவர். இதயநோய் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் நோய் நீங்கும்; குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும் என்று கேரள மக்கள் பெரிதும் நம்பிக்கையுடன் இந்த ஸ்வாமியை வழிபட்டு வருகிறார்கள்'' என்று நெகிழ்வுடன் தெரிவித்தார்.

ஆலய நடை திறப்பு நேரம்: அதிகாலை 430 மணி முதல் காலை 11 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.

படங்கள்: வி.ராஜேஷ்.