Published:Updated:

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

Published:Updated:
பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!
##~##

பிருந்தாவனம் வந்த பிறகுதான் நாங்கள் செய்த தவறு புலப்பட்டது. ஆம்! மதுராவில் தங்கியிருந்ததற்கு பதிலாக பிருந்தாவனத்துக்கே வந்து தங்கியிருந்திருக்கலாம். காரணம், இங்கே தங்கும் வசதிகள் ஏராளம். அவரவர் வசதிக்கு ஏற்ப, குறைந்த கட்டணத்தில் இருந்து 1,000 ரூபாய் வரையிலும் அறைகள் வாடகைக்குக் கிடைக்கின்றன. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வரும் வழியில் இருக்கும் பிர்லாமந்திரின் நிர்வாகத்தினரே இங்கும் மிகத் தூய்மையான தங்கும் விடுதிகளைப் பராமரித்து வருகிறார்கள். தவிர, பல மடங்களைச் சார்ந்த விடுதிகளிலும் குறைந்த கட்டணத்தில் அறைகள் கிடைக்கின்றன.

இதோ... பிருந்தாவனம் கோயிலை நெருங்கிவிட்டோம். உள்ளே நுழையுமுன், சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்வோம்.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

'பிருந்தா’ என்றால் துளசி. புனிதமான துளசிச் செடிகள் அடர்ந்து வளர்ந்த பன்னிரண்டு காடுகளில்தான் ஆநிரைகளை மேய்த்து வந்தான் கண்ணன். அவன் அவதரித்தது மதுராவில் என்றாலும், வளர்ந்ததும் நண்பர்களோடு ஓடியாடி விளையாடித் திரிந்ததும் இந்த பிருந்தாவனத்தில்தான். இன்றைக்கும் நாம் எல்லோரும் போற்றி மகிழும் ஸ்ரீகிருஷ்ண லீலைகள் நிகழ்ந்த இந்தத் தலத்தில்தான்... கோபியர்கள் யாவரும் புருஷோத்தமனின் புல்லாங்குழல் இசைக்கு மயங்கிக் கிடந்தார்கள்.

கோபியர்கள் மட்டுமா?! கோபாலனின் குழலிசைக்கு மயங்கிய பறவைகள் கூடுகளைத் துறந்து, கண்ணன் முன் வந்துவிட்டனவாம். பசுக் கூட்டங்களும் புல்வெளியில் கால்களைப் பரப்பி, காதுகளைக்கூட அசைக்காமல் வேணுகானத்தில் லயித்திருந்தனவாம். இந்தக் காட்சிகளை அப்படியே மனத்தில் இருத்தி, பெரியாழ்வார் பக்திப் பரவசத்துடன் விவரிப்பதைக் கேளுங்கள்:

'சிறுவி ரல்கள் தடவிப்பரி மாறச் செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிப்பக்

குறுவெ யர்ப்புரு வம்கூட லிப்பக் கோவிந்தன் குழல்கொ டூதின போது

பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப

கறவையின் கணங்கள் கால்பரப் பிட்டுக் கவிழ்ந்திறங் கிச்செவி யாட்டகில் லாவே!'

- ஆழ்வாரின் அற்புதமான பாடலை முணுமுணுத்தபடி நகர்கிறோம்.

மதுராவுக்கு வடக்கே சுமார் 11 கி.மீ. தூரத்தில் இருக்கிறது பிருந்தாவனம். வடக்கத்தியர்கள் இதை 'வ்ருந்தாவன்’ என்கிறார்கள். கிருஷ்ண ஜயந்தி அன்று பிருந்தாவனம் கோலாகலமாகக் காட்சி அளிக்குமாம்.

கண்ணனின் குழந்தைப் பருவம் மற்றும் இளமைக் கால லீலைகள் ஆகியவற்றோடு பின்னிப் பிணைந்த தலத்தை, 'விரஜபூமி’ என்கிறார்கள். கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதையின் அவதார ஸ்தலமாகிய பர்ஸானா ஆகியன இருப்பதும் விரஜ பூமியில்தான். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும்பகுதியும், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களின் சிறிய பகுதிகளுமாக பரவிக் கிடக்கும் விரஜ பூமியை, ஒட்டுமொத்தமாக தரிசிக்க இயலாதவர்கள், பிருந்தாவனத்தை மட்டும் தரிசித்துச் செல்கிறார்கள்.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

மடங்களில் இடைவிடாமல் ஒலிக்கும்- ஸ்ரீகிருஷ்ணரின் பெருமைகளைப் போற்றும் பஜனைப் பாடல்கள், வீதிகளில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் 'ராதே ராதே கோஷம்’ என ஆன்மிக அதிர்வுகளால் நிறைந்து திகழ்கிறது பிருந்தாவனம்.

இனி, 'ரங்காஜி மந்திர்’ ஆலயத்துக்குள் நுழைவோமா?

பொதுவாக, தென்னிந்திய கோயில்களைப்போல பிரமாண்டமான கோபுரங்கள், பிராகாரங்கள், சுற்றுச்சுவர், தெப்பக்குளம் போன்றவற்றை வட இந்தியக் கோயில்களில் பார்க்கமுடியாது. ஆனால், ரங்காஜி மந்திர் இதற்கு விதிவிலக்கு.

அச்சு அசலாக அப்படியே தமிழக வைணவ ஆலயம் போன்ற முகப்புத் தோற்றம் மிளிர, வானெழுந்து நிற்கும் ஏழடுக்கு ராஜகோபுரத்துடன் மிக கம்பீரமாக நம்மை வரவேற்கிறது ரங்காஜி மந்திர். முகப்பில் மட்டுமல்ல, ஆலயத்தின் உள்ளேயும் தென்னாட்டு பாணியிலான கட்டட அமைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போன்று ஒரு விஷயம்... தமிழ்நாட்டு அர்ச்சகர்களே இங்கே கைங்கரியம் செய்கிறார்கள்.

உள்ளே கருவறையில்... ஆதிசேஷப் படுக்கையில் அனந்தசயனம் கொண்டிருக்கும் அரங்கனைக் காணக் கண்கோடி வேண்டும். ஸ்ரீதேவி- பூதேவி தாயார்களும் அருகில் இருக்கிறார்கள். ரங்கனின் கம்பீரமும் கருணையும் மிகுந்த அருட்பார்வை நம்மை மெய்ம்மறக்கச் செய்கிறது. 'ரங்கா... ரங்கா’ என்றும், 'நமோ நாராயணாய’ என்றும் வாய் அரற்ற, சிரம் தாழ்த்திக் கரம் கூப்பி வணங்குகிறோம் பாற்கடல் நாயகனை.

ஆழ்வார்களால் பாடப்பெற்ற கோயில்கள் இப்போது இல்லை. நாம் தரிசிக்கும் ரங்காஜி மந்திர் ஆலயம் கி.பி. 1845-ல் கட்டப்பட்டது. சுமார் 45 லட்சம் ரூபாய் செலவில் இதைக் கட்டி முடிக்க ஆறு ஆண்டுகள் ஆனதாம். கோயிலுக்கு உள்ளே துளசிச் செடிகள் நிறைய இருக்கின்றன. வேலி அமைத்து அவற்றைப் பராமரிக்கிறார்கள். புராண நிகழ்வுகளைச் சித்திரிக்கும் தூண் சிற்பங்கள் வெகு அழகு!

பிராகாரத்தின் வலப்பக்கம் சொர்க்கவாசல். ஸ்ரீரங்கமன்னார், ஆண்டாள், கருடன் ஆகியோரின் சந்நிதிகளையும் தரிசிக்கலாம். கோயில் வளாகத்திலேயே பெரிய தெப்பக்குளமும் இருக்கிறது. ஜூலை மாதம் பௌர்ணமியில் கஜேந்திர மோட்ச விழா இங்கே மிகச் சிறப்பாக கொண்டாடப்படுமாம். கோயில் வளாகத்திலேயே திருப்பதி வெங்கடாசலபதி உருவில் ஸ்ரீநிவாஸன் சந்நிதியும் தனியே இருக்கிறது.

ஆசை தீர அரங்கனைச் சேவித்துவிட்டு ஆலயத்துக்கு வெளியே வரும்போது, கண்ணனின் குழலோசை காதினில் ஒலிக்கும் ஓர் உணர்வு. அந்தப் பரவசத்துடன் பிருந்தாவனத்தில் இருக்கும் மற்ற ஆலயங்களையும் தரிசிக்கக் கிளம்பினோம்.

- யாத்திரை தொடரும்...

படங்கள்: துளசி கோபால்

 உங்கள் கவனத்துக்கு...

பிருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. நீண்ட நாட்கள் தங்கியிருக்க வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள், ஒட்டுமொத்த ஆலயங்களையும் தரிசித்து மகிழலாம்.

நாங்கள் ஒரே நாளில் மதுரா, பிருந்தாவனம், கோவர்த்தனம் மூன்றையும் தரிசிக்கத் திட்டமிட்டிருந்தோம். இந்த மூன்று தலங்களும் சேர்ந்தே 'மதுரா’ என்ற ஒரே திவ்யதேசமாகக் கருதப்படுகிறது என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் மொத்தம் 50 பாசுரங்களால் பாடிப்பரவிய வடமதுரை எனும் திவ்யதேசம் இந்த மதுராதான்.

யமுனை ஆற்றில் நீராடிய பிறகு, பிருந்தாவன ஆலயங்களைச் சேவிப்பது சிறப்பு என்கிறார்கள்.

மதுரா- பிருந்தாவனம் பாதையில் ஆங்காங்கே சிறிய உணவகங்களும் குடியிருப்புகளும் உள்ளன. ராதா ரமண் மந்திர், பாங்கே விஹாரி மந்திர், கேசி காட், கோவிந்த்ஜி மந்திர் என்று பல ஆலயங்களும் உண்டு. 'திவ்ய தேசம்’ என்று விசாரித்தால், அங்குள்ளவர்களுக்கு அதிகமாகத் தெரியவில்லை. பிருந்தாவனத்தில் இருக்கும் கோயிலை 'ரங்காஜி மந்திர்’ என்றே அழைக்கிறார்கள். நாமும் அப்படியே விசாரிக்க வேண்டியுள்ளது. அதேபோன்று, உங்கள் குழுவில் ஹிந்தி தெரிந்த யாரேனும் இருந்தால் நல்லது.

நாங்கள் கைடு ஒருவரின் உதவியுடன் சென்றதால், அவர் மூலம் பிருந்தாவனம் பற்றிய பல தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அவருக்கான கட்டணம் ஐம்பது ரூபாய்.