Published:Updated:

கதை கேளு... கதை கேளு!

கதை கேளு... கதை கேளு!

கதை கேளு... கதை கேளு!

கதை கேளு... கதை கேளு!

Published:Updated:
கதை கேளு... கதை கேளு!
##~##

'நாமகிரிக்குப் போறோம்னு சொல்லிட்டு, இங்கே நாமக்கல்லுக்குக் கூட்டிட்டு வந்திருக்கீங்களே? என்ன தாத்தா இது... ரூட் மாறி வந்துட்டோமா?'' என்று பேரன் குழப்பமும் தவிப்புமாகக் கேட்டான். பேருந்து நிலையத்தில் நிற்பதையும் மறந்து, கலகலவெனச் சத்தமாகச் சிரித்துவிட்டார் தாத்தா. 

பிறகு சிரிப்பை அடக்கிக்கொண்டு, 'கரெக்டா கேட்டடா கண்ணா! புராண காலத்துல, இந்த ஊருக்கு நாமகிரின்னுதான் பேரு. அப்புறம்தான் நாமக்கல்னு பேரு மாறிடுச்சு! பரவாயில்லியே... சமர்த்தா, புத்திசாலித்தனமா, உன்னிப்பா கவனிச்சுக் கேள்வி கேக்கறியே! குட்!'' என்று பேரனின் நெற்றியை வழித்து திருஷ்டி கழித்து, அவனுடைய கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளினார் தாத்தா.

''நாமகிரிங்கற இந்தத் தலம், மிகப் பெரிய புண்ணிய க்ஷேத்திரம். கிரின்னா மலை. கல் மலையா இருக்கிற இந்தப் பகுதியைப் பார்த்தாலே உனக்குத் தெரியுமே! இந்த ஊரின் நாயகன் யார் தெரியுமா? ஆஞ்சநேய ஸ்வாமி. அவர்தான் இங்கே கண்கண்ட தெய்வம்'' என்றார் தாத்தா.  

கதை கேளு... கதை கேளு!

அவரே தொடர்ந்தார்... ''திருமால் எடுத்த அவதாரங்கள்ல ஸ்ரீநரசிம்ம அவதாரமும் ஒண்ணுன்னு எல்லார்க்கும் தெரியும். அந்த நரசிம்மரின் உக்கிரம் தணியணும்னு, திருமகள் இங்கே இந்தத் தலத்துல கடும் தவம் பண்ணினா. புஷ்கரணின்னா தீர்த்தக் குளம். இங்கே, ஒரு புஷ்கரணியை உண்டு பண்ணின திருமகள், அங்கே தினமும் நீராடிட்டு, தவத்துல ஈடுபட்டாளாம். இந்தத் தீர்த்தக் குளத்துக்கு, கமலாலயப் புஷ்கரணின்னு பேரு. அந்தத் திருக்குளம் இன்னிக்கும் இருக்கு. ரொம்ப விசேஷமான புண்ணிய தீர்த்தம் இது'' என்று தாத்தா விவரிக்க... ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கேட்டு உள்வாங்கிக் கொண்டான் பேரன்.

''ராம- ராவண யுத்தம் பத்தி உனக்குச் சொல்லியிருக்கேன்தானே? அந்தத் தருணத் துல, காயம்பட்டவங்களுக்கு மருந்து கொடுக்கறதுக்காக, ஸ்ரீஅனுமன் சஞ்ஜீவிங்கற மூலிகை கொண்ட மலையை, அப்படியே பெயர்த்தெடுத்துட்டு வந்தார். அப்படி வர்றப்ப, நேபாளத்துல இருக்கிற கண்டகி நதியில, சாளக்ராம மலைல, ஸ்ரீநரசிம்ம மூர்த்தியோட திருவிக்கிரகத் திருமேனியைப் பார்த்தார். அப்படியே சாஷ்டாங்கமா விழுந்து நமஸ்காரம் பண்ணினார். அப்புறம், மிகவும் உன்னதமான அந்த சாளக்ராம நரசிம்மரை வழிபடுறது ரொம்பவே விசேஷமாச்சேன்னு புரிஞ்சுக்கிட்டு, அப்படியே அந்தத் திருவிக்கிரகத்தை எடுத்துட்டுப் பறந்து வந்துட்டிருந்தார்.

கதை கேளு... கதை கேளு!

அப்ப சூர்யோதய காலம் நெருங்கும் வேளை. நித்தியானுஷ்ட கடமைகளைச் செய்யறதுக்காக பூமியில இறங்கிய அனுமன், அந்த நிமிஷமே... சிலிர்த்துப் போயிட்டார். ஸ்ரீமகாலட்சுமி கனிவு பொங்கத் தவமிருந்த இடம் அதுன்னு, தன்னோட ஞான திருஷ்டியால தெரிஞ்சுக்கிட் டார்...'' என்று தாத்தா சொல்லிக்கொண்டே போக, பிரமாண்டமான திருமேனி கொண்ட ஸ்ரீஅனுமன், இந்த இடத்தில் எப்படி நின்றிருப்பார், எப்படி வியந்து பார்த்திருப்பார் என்று கற்பனையில் ஓட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான் பேரன்.  

''அந்த இடம், பூக்களும் காய்களும் நிறைஞ்ச நறுமணம் சூழ்ந்த வனமா இருந்துச்சு. ரொம்ப ரம்மியமான இடத்துல, ஸ்ரீமகாலட்சுமி வாசம் செய்யும் இந்தத் தலத்துல, நாம பூஜை பண்றது ரொம்ப விசேஷம்னு நினைச்சு, உள்ளுக்குள்ளே மகிழ்ந்து போனார் அனுமன். ஸ்ரீமகாலட்சுமி உண்டுபண்ணின கமலாலயக் குளத்தங்கரையில சாளக்ராம ஸ்ரீநரசிம்ம விக்கிரகத் திருமேனியை வைச்சுட்டு, தன்னோட அனுஷ்டானங்களைச் செய்யறதுல ஈடுபட்டார்.  அப்புறமா, அங்கேருந்து கிளம்ப முடிவு செஞ்சு, ஸ்ரீநரசிம்ம விக்கிரகத் திருமேனியை எடுக்கப் பார்த்தா... ம்ஹூம்... அந்த விக்கிரகத்தை அசைக்கக்கூட முடியலை. 'நாம ஏதும் தப்புப் பண்ணிட்டோமோ’ன்னு ஒருகணம் கலங்க ஆரம்பிச்சிட்டார் ஆஞ்சநேயர். அந்த நேரத்துல, 'கலங்காதே அனுமா! நான் இங்கேயே இருக்கத் திருவுளம் கொண்டுள்ளேன்.

நீ இலங்கைக்குச் சென்று, ஸ்ரீராம கைங்கர் யத்தை முடித்துக்கொண்டு, ஸ்ரீராமாவதார நிறைவுக்குப் பிறகு, இங்கு வந்து பணி செய்வாயாக!’ன்னு ஒரு அசரீரி கேட்டுதாம். அதன்படி, நாமகிரிங்கற நாமக்கல்ல, ஸ்ரீநரசிம்ம மூர்த்தி கோயில் கொண்டதா ஸ்தல புராணம் சொல்லுது'' என்று விரிவாகச் சொல்லி முடித்துவிட்டு, ஸ்ரீநரசிம்ம மூர்த்தி குடிகொண்டிருக்கும் ஆலயத்தை நோக்கிப் பேரனை அழைத்துச் சென்றார் தாத்தா.

''அப்புறம் என்னாச்சு தாத்தா? இங்கே ஸ்ரீஅனுமன் எப்போ வந்தார்?'' என்று பேரன் கேட்க... சொல்லத் துவங்கினார் தாத்தா.

''ஸ்ரீராம- ராவண யுத்தம்லாம் முடிஞ்சு, அயோத்தியில் ஸ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் எல்லாம் நிறைவேறியபிறகு, இங்கே இந்த நாமக்கல்லுக்கு வந்து எழுந்தருளினார் ஸ்ரீஆஞ்ச நேயர். மிகப் பெரிய திருமேனியோட, கை கூப்பிய நிலைல, அனுமனைத் தரிசனம் பண்றதே ஆனந்தம்தான்! அவ்ளோ அழகு அனுமன்'' என்று தாத்தா சிலிர்த்தபடி சொன்னார்.  

''வழக்கமா இப்படிக் கைதொழுதபடி இருக்கிற அனுமன் ஸ்ரீராமரை வணங் கறார்னுதான் எடுத்துப்போம். ஆனா, இங்கே இப்படிக் கை தொழுதபடி இருக்காரே... இந்த அனுமன் யாரை வணங்கறார்னு தெரியுமா? இங்கே சாளக்ராம மூர்த்தமா குடிகொண்டிருக் காரே ஸ்ரீநரசிம்ம மூர்த்தி,

கதை கேளு... கதை கேளு!

அவரோட திருவடியைப் பார்த்தபடியே, ஸ்ரீஅனும னோட திருக்கண்கள் இருக்கறதா ஓர் ஐதீகம்! அதாவது, ஸ்ரீநரசிம்மரோட திருவடியும் ஸ்ரீஅனுமனோட திருக்கண் களும் ஒரே நேர்க்கோட்டுல இருக்கிற மாதிரி பிரதிஷ்டை செஞ்சு, வணங்கிட்டு வந்திருக்காங்க நம்ம முன்னோர்கள். இதை உணர்த்துற வகையில, ஸ்ரீநரசிம்மரோட கோயில்ல, சந்நிதிக்கு முன்னாடி இரண்டு துவாரங்கள் இருக்கு. இந்த துவாரங்கள் வழியேதான், ஸ்ரீஅனுமன் தன் திருக்கண்களைக் கொண்டு, ஸ்ரீநரசிம்மரின் திருவடியை ஸேவிக்கறதா ஐதீகம்.  

அதேபோல, ஸ்ரீஅனுமன் கோயில்ல இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா? ஸ்ரீஅனுமன் சந்நிதிக்கு மேலே கூரையோ விமானமோ கிடையாது. திறந்த வெளில காற்று, மழை, வெயில்னு இருக்கார் வாயு மைந்தன். நாமக்கல் தலத்துல, ஸ்ரீநரசிம்மரும் அப்படித்தான் இருக்கார். சக்தி வாய்ந்தவர் இந்த அனுமன். இவர் சந்நிதிக்கு வந்து, நாம என்ன நினைச்சுக்கறோமோ... அதையெல்லாம் நிறைவேத்திக் கொடுத்து நம்மை வாழவைப்பார் ஸ்ரீஅனுமன்னு இங்கே வர்ற பக்தர்கள் அத்தனை பேரும் பெருமையாச் சொல்றாங்க!'' என்றார் தாத்தா.  

சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு, ''ஏன் தாத்தா, ஸ்ரீஅனுமனுக்கு வடைமாலை சார்த்துறாங்க? பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை மாதிரி அனுமனுக்கு வடைன்னா ரொம்பப் பிடிக்குமோ?'' என்று கேட்டான் பேரன்.  

''ராகு மற்றும் சனி கிரக தோஷங்கள்லேருந்து விடுபடணும்னா, ஸ்ரீஅனுமனை வழிபட்டால் பலன் நிச்சயம்! ராகு கிரகத்துக்கு உரிய உளுந்து, சனி பகவானுக்கு உரிய எள்ளில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்... இந்த ரெண்டையும் கொண்டு, வடை செஞ்சு, மாலையாக்கிச் சார்த்தினா, சனி தோஷமும் விலகும்; ராகு தோஷமும் போயிடும்! அதனால, ஸ்ரீஅனுமனுக்கு வடைமாலை சார்த்தி வழிபட்டா, இந்த தோஷங்கள் எல்லாமே போய், நிம்மதியாவும் சந்தோஷமாவும் வாழலாம்'' என்று வடை மாலைக்கு அற்புத விளக்கம் சொன்னார் தாத்தா.

பேரன் விடுவானா? ''அப்படின்னா, ஜாங்கிரியும் உளுந்துலதானே தாத்தா செய்யறாங்க! அப்ப, அனுமாருக்கு ஜாங்கிரி மாலை போடலாமா?''  என்று தாத்தாவை மடக்கினான்.

''தாராளமா போடலாமே? வாழ்க்கைல திருமணம், குழந்தை பாக்கியம்னு இனிமையான விஷயங்கள் நடக்கணும்னா இந்த அனுமனுக்கு ஜாங்கிரி மாலை சார்த்தி வழிபடறது வழக்கம்தான்! அதேபோல், கல்வியும் ஞானமும் கிடைக்கணும்னா அனுமனுக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபடணும்! சகல ஐஸ்வரியங்களும் கிடைச்சு நிம்மதியா வாழ, துளசி மாலை சார்த்தி வழிபடலாம்.

இதைத் தவிர, வெண்ணெய்க் காப்பு சார்த்தி வழிபட்டா, மலை போலான துயரமெல்லாம் பனி போல விலகிடும். நல்லா படிப்பு வரணும்னு ஆஞ்ச நேயரை நல்லா வேண்டிக்கோ!'' என்று தாத்தா சொல்ல... 'ஜெய் ஹனுமான்... ஜெய் ஹனுமான்’ என்று பக்தர்கள் கோஷம் பலமாக எழுந்தது. பேரனின் குரலும் அதில் கலந்தது!

- இன்னும் தரிசிப்போம்

படங்கள்: க.ரமேஷ்