Published:Updated:

ஞானப் பொக்கிஷம் - 22

ஞானப் பொக்கிஷம் - 22

ஞானப் பொக்கிஷம் - 22

ஞானப் பொக்கிஷம் - 22

Published:Updated:
ஞானப் பொக்கிஷம் - 22
##~##

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். அதனாலேயே அது எல்லோராலும் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. நம் முன்னோர்கள் காலத்தில் அன்னதானம் செய்வதற்கென்றே ஆங்காங்கே 'அன்ன சத்திரம்’ கட்டி வைத்திருந்தார்கள். இவ்வளவு சிறப்பாக அன்னதான சத்திரங்களைக் கட்டி வைத்த முன்னோர்கள், கூடவே ''ஆயிரம் அன்ன சத்திரங்கள் கட்டுவதைவிட, ஏழை ஒருவருக்குக் கல்விச் செல்வத்தை அளிப்பதே, அனைத்திலும் சாலச் சிறந்தது!'' என்றும் சொல்லி வைத்தார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கல்விக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்த நாடு நம் பாரத நாடு. தமிழில் 'ஏழை’ என்ற சொல், வறுமையானவர்களைக் குறிப்பதாக இப்போது நாம் சொன்னாலும்... கம்பராமாயணம் முதலான பழந்தமிழ் நூல்கள், கல்வியறிவு இல்லாதவர்களையே 'ஏழை’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றன. ஆகையால், 'ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்ற வாக்கு 'கல்வியறிவு அற்றவர்களுக்குக் கல்விச் செல்வத்தை அளிப்பது’ என்பதையே குறிக்கும்.

இவ்வாறு கல்விச் செல்வம் அளித்த ஒருவரைப் பற்றிய ரசமான தகவல்தான் இது.

ஞானப் பொக்கிஷம் - 22

மன்னர் பெருமக்களான குலோத்துங்க சோழன், கருணாகர பாண்டியன் ஆகியோர் சிம்மாசனங்களில் அமர்ந்திருக்கிறார்கள். சடையப்ப வள்ளல் முதலான முக்கியஸ்தர்களும் அங்கு இருக்கிறார்கள். அரசருடைய ஆணையின்படி, கம்பர் தான் எழுதிய ராமாயணத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது,

'தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேரினும் அவர்தம்

மருண்ட புன்மையை மாற்றுவர் எனுமிது வழக்கே

உருண்ட வாய்தொறும் பொன்னுரு ளுரைத்துரைத் தோடி

இருண்ட கல்லையும் தந்நிற மாக்கின இரதம்...''

என்ற பாடலைச் சொல்லி, அதற்கு விளக்கமும் சொன்னார் கம்பர்.

'பல நூல்களையும் கற்றுத் தெளிந்த பெரியோர், கல்லாத முழு மூடர்களைச் சேர்ந்தாலும், அந்த மூடர்களின் பேதைமை புத்தியை மாற்றி, தங்களைப் போலவே அறிவாளிகளாகச் செய்வார்கள். அதுபோல, கறுத்த கருங்கல் பாறைகளின்மேல் தேர்களின் தங்கச் சக்கரங்கள் உராய்ந்து ஓடி ஓடி, கருங்கல் பாறைகளும் தங்க நிறமாகி விட்டன!' என்பதுதான் மேற்படி பாடலின் பொருள்.

இந்த விளக்கத்தைக் கேட்டதும், சபையிலிருந்த அனைவரும் கம்பரைப் பாராட்டினார்கள். பாராட்டு ஒலி அடங்கியது. சோழ மன்னர் கம்பரைப் பார்த்து, ''கம்பரே! நீங்கள் சொன்ன அந்த உத்தமமான தர்மம் உங்களிடம் அமைந்திருப்பதை நான் அறிவேன்'' என்றார்.

அதைக் கேட்ட மன்னர் கருணாகர பாண்டியன், 'அது என்ன?'' என்று ஆவலுடன் கேட்டார்.

அதற்கு அங்கிருந்த சடையப்ப வள்ளல், கம்பர் வாழ்க்கையில் நடந்த அந்த நிகழ்ச்சியைச் சொல்லத் தொடங்கினார். அது...

சோழ மன்னர் மீது கவிபாடிப் பரிசுபெற்ற புலவர்கள் தெரு வழியே நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்த ஒரு விறகுவெட்டியின் மனைவி, ''இவர்கள் எல்லாம் ஒரு வேலையும் செய்யாமல், கஷ்டப்படாமல் பாட்டுப் பாடி மிகவும் சுலபமாகப் பணம் சம்பாதித்துச் சுகமாக வாழ்கிறார்கள். ஆனால், என் கணவரோ தினமும் காட்டுக்குச் சென்று, காலில் கடுமுள் தைக்க அலைந்து, கட்டைகளை வெட்டிக் கொண்டுவந்து விற்று, மாடு போல் கடுமையாக உழைக் கிறார். அவர் கைகளில் காய்ப்பு காய்த்ததே தவிர, அரை வயிற்றுக் கஞ்சிக்குக்கூட வழியில்லாமல் போய்விட்டதே! என்ன இது... பேசாமல் இந்தத் தொழிலை விட்டுவிட்டு, இவரும் பாடல் பாடி, மன்னரிடம் பரிசு பெற்றுக் கஷ்டப்படாமல் வாழலாமே!'' என்று எண்ணினாள்.

அவளைப் பொறுத்தவரை, கவி பாடுவது சுலபம் என்பது அவள் எண்ணம். அதனால்தான் அவள் தன் கணவனிடம், ''நீயும் சீக்கிரமாக சோழ மன்னரிடம் போய் ஏதாவது பாட்டுப் பாடு. பரிசு தருவார். நமக்கும் நல்ல காலம் பிறக்கும்!'' என்று தூண்டினாள். மனைவியின் வார்த்தைகளை மீறமுடியாமல் விறகுவெட்டியும், ''இதோ!'' என்று கிளம்பிவிட்டார்.

பாவம் அவர், என்ன பாடுவார்? செல்லும் வழியில் காதில் விழுந்த வார்த்தைகளை எல்லாம் தொகுத்து, அப்படியே மனப்பாடம் செய்துகொண்டு வந்தார். அவர் மனப்பாடம் செய்த வார்த்தைகள், 'மண்ணுண்ணி மாப்பிள்ளையே, காவிறையே, கூவிறையே, உங்கள் அப்பன் கோவில் பெருச்சாளி’ என்பவையே!

அந்த வார்த்தைகளைச் சொல்லியபடியே விறகுவெட்டி வந்துகொண்டிருந்தபோது, வழியில் அவரது நண்பரைச் சந்தித்து, மன்னரிடம் தான் பாடல் பாடிப் பரிசு பெறப்போவது பற்றிச் சொன்னார். அந்த நண்பரும் தன் பங்குக்கு, ''கன்னா, பின்னா, மன்னா, தென்னா என்று ஏதாவது பாடு!'' என உற்சாகப்படுத்திவிட்டுப் போனார்.

''ஆஹா! நண்பன் சொன்ன இதையும் சேர்த்துக்கொண்டால், பாடல் உருவாகிவிடும். இது போதும்!'' என்று சந்தோஷத்துடன் வீடு திரும்பினார் விறகுவெட்டி. தான் மனப்பாடம் செய்து வைத்திருந்தவற்றை எல்லாம் மிகுந்த மகிழ்ச்சியோடு மனைவியிடம் சொன்னார். அவள், ''பாட்டு பரவாயில்லை, நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், சோழ மன்னரைப் புகழ்ந்து பாடினால்தானே பரிசு கிடைக்கும்? உங்கள் பாட்டில் அவர் பெயர் இல்லையே! அதனால், 'சோழங்கப் பெருமானே’ என்பதையும் கடைசியாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்'' என்றாள்.

விறகுவெட்டிக்கு இப்போது பாடல் முழுமையாக உருவானதில் பூரண திருப்தி! நேரே அரண்மனைக்குச் சென்றார். அங்கே, அரியாசனத்தில் வீற்றிருந்த மன்னரைக் கண்டு வணங்கி, ''மன்னா! நான் தங்களின் மேல் ஒரு பாட்டு எழுதிக்கொண்டு வந்திருக்கிறேன். இதைக் கேட்டுவிட்டு எனக்குக் கைநிறையப் பொன்னும் பொருளும் அளிப்பீர்கள் அல்லவா?'' என்று கேட்டார். தொடர்ந்து... மிகுந்த நம்பிக்கையோடு,

''மண்ணுண்ணி மாப்பிள்ளையே,

காவிறையே, கூவிறையே

உங்கள் அப்பன் கோவில் பெருச்சாளி

கன்னா, பின்னா, மன்னா, தென்னா

சோழங்கப் பெருமானே!''

என்று, தான் மனப்பாடம் செய்திருந்தவற்றை அப்படியே ஒப்பித்தார்.

அரசர் உள்பட அங்கிருந்த அனைவரும் திடுக்கிட்டுப் போயினர். ''நல்ல கவிஞர்... பாட்டு...'' என்று கேலி செய்து, வாய்விட்டுச் சிரித்தார்கள். இன்னும் சிலர், 'மன்னா, உங்களைப் பார்த்து உங்கள் அப்பன் கோவில் பெருச்சாளி என்று பாட இவனுக்கு எத்தனைக் கொழுப்பு இருக்க வேண்டும்! இவனுக்குத் தகுந்த தண்டனை அளியுங்கள்’ என்றார்கள். அந்த அரசவையில் கம்பர் பெருமானும் இருந்தார்.

'பாவம், இந்த விறகுவெட்டி... ரொம்ப அப்பாவியாக இருக்கிறான். யாரோ சொன்னதைக் கேட்டு, இங்கே வந்துவிட்டான். நம்பி வந்த இவனுக்கு எப்படியாவது உதவவேண்டும்’ என்று தீர்மானித்தார். அதற்காக அவர் என்ன செய்தார் தெரியுமா?

- இன்னும் அள்ளுவோம்...