Published:Updated:

திருப்பணி நிறைவேற்றுவோம்!

திருப்பணி நிறைவேற்றுவோம்!

திருப்பணி நிறைவேற்றுவோம்!

திருப்பணி நிறைவேற்றுவோம்!

Published:Updated:
திருப்பணி நிறைவேற்றுவோம்!
##~##

காசியம்பதிக்குச் சென்ற அந்த முனிவர், அதிகாலை பிரம்மோத்ஸவ நேரத்தில் கங்கையில் நீராடிவிட்டு, ஸ்ரீவிஸ்வநாதரையும் விசாலாட்சியையும் தரிசிப்பது எனத் தீர்மானித்தார். அதன்படி, கிடுகிடுக்கச் செய்கிற குளிரையும் பொருட்படுத்தாமல், ஒரு வளர்பிறை நாளில் கங்கைக் கரைக்கு வந்தார். அந்த நிலவொளியில், கங்கையின் நிறம் கருமையேறிக் கிடந்தது தெளிவுறத் தெரிந்தது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிர்ந்து போனார் முனிவர். 'கங்காதேவியே... வெயில் பட்டு தகதகவென பொன்னிறத்தில் ஜொலிப்பாய்! நிலவொளியில் நீலநிறத்தில் மினுமினுப்பாய். இப்போது என்ன... கருமை நிறத்தில் இருக்கிறாய்? என்னாயிற்று உனக்கு?’ என்று வருத்தத்துடன் கங்காதேவியை வணங்கித் தொழுதார்.

'மகரிஷியே! உலக மக்கள் தாங்கள் செய்த பாவங்களையெல்லாம் போக்கிக் கொள்வதற்காக என்னிடம் வருகிறார்கள். கங்கை நீரில் தங்களின் பாவங்களைப் போக்கிக் கொள்கிறார்கள். ஆண்டாண்டுக் காலமாக, அவர்களைத் தூய்மைப்படுத்தும்பொருட்டு அவர்களின் பாவக் கறைகளை நான் வாங்கிக்கொண்டதன் விளைவு... நான் மாசாகிவிட்டேன். கருமை படர்ந்து காட்சி அளிக்கிறேன்’ என்று அலுப்பும் சலிப்புமாகத் தெரிவித்தாள் கங்காதேவி.

திருப்பணி நிறைவேற்றுவோம்!

அதைக் கேட்ட அந்த மகரிஷி, ஒரு நிமிடம் யோசித்தார். பிறகு, 'காவிரி பாய்ந்தோடுகிற மாயூரம் பகுதிக்கு உன்னை அழைத்துச் செல்கிறேன். அங்கே துலா மாதம் எனப்படுகிற ஐப்பசி மாதத்தில், காவிரியில் நீராடினால் உன் பாவக் கறைகள் எல்லாம் நீங்கிவிடும். பழையபடி பொலிவுடன் களங்கமறத் திகழ்வாய்’ என்று சொல்லிவிட்டு, கங்காதேவியுடன் மாயூரத்துக்கு வந்தார். ஐப்பசி மாதத்தில், காவிரியில் நீராடினாள் கங்கை; மீண்டும் தன் பொலிவைத் திரும்பப் பெற்றாள்; அந்த மகரிஷிக்கு நன்றி தெரிவித்துவிட்டு, காசியம்பதிக்குத் திரும்பிச் சென்றாள் என்கிறது மயூரநாதர் கோயிலின் ஸ்தல புராணம்.

திருப்பணி நிறைவேற்றுவோம்!

மாயூரம் என்றும் மாயவரம் என்றும் அழைக்கப்பட்டு, தற்போது மயிலாடுதுறை என்று அழைக்கப்படும் அற்புதமான திருத்தலத்தில் துலா ஸ்நானம் வெகு பிரசித்தம். இன்றைக்கும் அந்த நாளில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுகின்றனர்.

உலக மக்களின் துயரங்களையும் பாவங்களையும் போக்கிய கங்காதேவியின் துக்கத்தைப் போக்கி, பழைய பொலிவையும் அழகையும் பெறுவதற்கு அவளுக்கு உதவியவர்... கண்வ மகரிஷி. அதன் பிறகு அவர் மாயூரத்தில் உள்ள ஸ்ரீஅபயாம்பிகை சமேத ஸ்ரீமயூரநாதரை வணங்கித் தொழுதுவிட்டு, காவிரிக் கரையின் வடக்குப் பகுதியில், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, சிறிதாகக் கோயில் அமைத்து, அனுதினமும் வழிபட்டு, தவம் செய்து வந்தார்.

மயிலாடுதுறையில், காவிரியின் வடகரையிலும் தென்கரையிலுமாக சிவ ஸ்தலங்கள் பல உள்ளன. வடகரையில் உள்ள பகுதிகளை உத்தர மாயூரம் என்றும், தென்கரையில் உள்ள பகுதிகளை தட்சிண மாயூரம் என்றும் அழைப்பார்கள்.

அதேபோல், காவிரியில் கங்காதேவி நீராடிப் பலன் பெற்றதை அறிந்த சப்தரிஷிகளும் மாயூரத்துக்கு வந்தார்கள். அங்கே கண்வ மகரிஷியை சந்தித்து, அவரை வணங்கியபோது, 'இந்த மாயூரம் காசிக்கு நிகரான தலம். காசிக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கும் அத்தனைப் புண்ணியங்களும் இங்கே கிடைக்கப் பெறலாம். பித்ருக்கள் எனப்படும் முன்னோர்களின் சாபத்தில் இருந்தும், நாம் முன் ஜென்மத்தில் செய்த பாவங்களில் இருந்தும் விடுபடுவதற்கு இந்தத் தலத்துக்கு வந்து வேண்டிக்கொண்டால் போதும். நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபடுங்கள். முக்தி நிச்சயம். எல்லா ஸ்வாமிகளுக்கும் ஸ்ரீவிஸ்வநாதர் என்றே திருநாமம் சூட்டுங்கள்’ என அருளினார்.

அதன்படி, சப்தரிஷிகளும் தனித் தனியே சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டனர். பிறகு அந்தந்த இடங்களில் மன்னர் பெருமக்கள், ஆலயம் எழுப்பி வழிபடத் துவங்கினார்கள். இந்த ஏழு ஆலயங்களும் மயிலாடுதுறைக் குள்ளேயே அமைந்திருக்கின்றன. இதில் ஒரேயரு ஆலயம் மட்டும் முழுவதுமாகச் சிதிலமுற்று, காலச் சுழற்சியில் காணாது போய்விட்டதாகச் சொல்கின்றனர்.

திருப்பணி நிறைவேற்றுவோம்!

இதேபோல், சிவலிங்கம் ஸ்தாபித்து கண்வ மகரிஷி வழிபட்ட ஆலயம், இன்றைக்கும் உள்ளது. மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வள்ளலார் அகரம். இங்கே, ஸ்ரீவிசாலாட்சி சமேதராக ஸ்ரீவிஸ்வநாதர் அருள்பாலிக்கும் ஆலயம் கண்வ மகரிஷியால் வழிபடப்பட்டு, மன்னர் பெருமக்களால் கட்டப்பட்டது.

இந்தத் தலத்துக்கு வந்து வணங்கினால், காசியம்பதியில் வணங்கிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்! தவிர, இங்கு வந்து சிவனாருக்கும் அம்பிகைக்கும் வஸ்திரம் சார்த்தி வழிபட்டால், கண்வ மகரிஷி மற்றும் சப்தரிஷிகளின் பேரருளும் கிடைக்கப் பெறுவோம்; பித்ருக்களின் ஆசீர்வாதமும் கிடைக்கப் பெறுவோம் என்பது நம்பிக்கை.

ஆனால், இத்தனை அற்புதமான வரங்களை வாரி வழங்கும் திருத்தலம், வழிபாடுகளும் பூஜைகளும் இன்றி, சிதிலம் அடைந்து இருப்பதுதான் வேதனைப் படுத்துகிறது நம்மை. கும்பாபிஷேகம் செய்து பல வருடங்களாகிவிட்டன என்றும், போதிய நிதி இல்லாததால் அம்பாளும் சிவனாரும் வஸ்திரமோ நைவேத்தியமோ இல்லாமல் பக்தர்களை எதிர் நோக்கிக் காத்திருக்கின்றனர் என்றும் வருத்தத்துடன் தெரிவிக்கிறார் கோயிலின் பரம்பரை டிரஸ்டி பாலசுப்ரமணியன் சிவாச்சார்யர்.

திருப்பணி நிறைவேற்றுவோம்!

ஐப்பசி மாதத்தில், காவிரியில் துலா ஸ்நானம் செய்துவிட்டு, கண்வ மகரிஷி வழிபட்ட இந்த ஆலயத்துக்கு வந்து வணங்கினால், காசி க்ஷேத்திரத்துக்கே சென்று தரிசித்த மனநிறைவைப் பெறும் பக்தர்கள், 'கோயில் எப்போது சீராகும்? வழிபாடுகளும் விழாக் களும் எப்போது நடைபெறும்?’ எனக் கண்ணீருடன் கேட்கின்றனர்.

முள்ளும் புதருமாக இருந்த கோயில் பிராகாரப் பகுதிகளை தற்போது சுத்தம் செய்து, நித்தியப்படி பூஜைகளைக் குறைவற நடத்தி வருகின்றனர் பக்தர்கள் சிலர். ஸ்ரீவிஸ்வநாத ஸ்வாமி நற்பணி மன்றத்தைச் சேர்ந்த அன்பர்கள், கோயில்களைச் சீரமைக்கும் பணியிலும் திருப்பணியிலும் முழுவதுமாக ஈடுபட்டு வருகின்றனர்.

''ஒருகாலத்தில், இந்தக் கோயிலில் தேர்க்கூட்டம் திருவிழாக்கூட்டம்னு எப்பவும் விசேஷமாத்தான் இருக்கும். அந்தக் காலத்துல அந்தப் பக்கம் தஞ்சாவூர் திருச்சிலேருந்தும், இந்தப் பக்கம் வேதாரண்யம் நாகப்பட்டினத்துலேருந்தும் இங்கே வந்து வழிபடுறதுக்காக, வண்டி கட்டிக்கொண்டு வருவாங்களாம். 'காவிரித்தாயே போற்றி... கங்காதேவியே போற்றி...’ன்னு சொல்லி, காவிரியில குளிச்சு, இங்கே இருக்கற மயூரநாதர் கோயிலையும், இந்த வள்ளலார் விஸ்வநாதர் கோயிலையும் (இப்போது மக்கள் அப்படித்தான் சொல்கின்றனர்) தரிசனம் பண்ணிட்டுப் போவாங்களாம்!'' என்று சிலிர்ப்புடனும், வருத்தத்துடனும் சொல்கின்றனர் ஊர்க்காரர்கள்.

திருமணத் தடையும், பிள்ளை பாக்கியம் இல்லாத நிலையும், வறுமையான சூழலும், வசதிகள் இருந்தும் நிம்மதியும் அமைதியும் இல்லாத துர்பாக்கியமும் விளைவது, முன் ஜென்ம பாவங்களாலும் பித்ருக்களி டம் இருந்து ஆசீர்வாதம் கிடைக்கப் பெறாததாலும் என அறிவுறுத்துவார்கள், பெரியோர்.

இதோ... மயிலாடுதுறையில் வள்ளலார் அகரத்தில் உள்ள ஸ்ரீவிசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீவிஸ்வநாதர் கோயிலின் திருப்பணிக்கு உங்களால் முடிந்த கைங்கர்யத்தைச் செய்யுங்கள். அந்தக் கைங்கர்யத்தால், உங்கள் இல்லம் செழிக்கும்; சந்ததிகள் சிறந்து விளங்குவார்கள். தடைகள் யாவும் விலகும். சந்தோஷமும் அமைதியும் பெருகும். நீங்கள் நிம்மதியாக வாழ்வீர்கள்.

வள்ளலார் அகரம் ஸ்ரீவிஸ்வநாதர் கோயிலில், கும்பாபிஷேகம் நடைபெறும் நாள், வெகு தொலைவில் இல்லை என்கிற நம்பிக்கையுடன் அவனை வணங்கி, அவன் தாள் பணிந்தோம்!

  படங்கள்: ஜெ.ராம்குமார்