Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 11

சித்தம் அறிவோம்...

சித்தம்... சிவம்... சாகசம்! - 11

சித்தம் அறிவோம்...

Published:Updated:
சித்தம்... சிவம்... சாகசம்! - 11

'அஞ்சல்லவோ பூதம்? பஞ்சல்லோ வெழுத்து?

 அஞ்சொடுங்கும் போது நெஞ்சடங்கும் அத்தான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆறுமுகமல்லோ அறுபதியா லெட்டாம்

ஆறல்லவோ தாரம்? வேறல்லோ சொரூபம்?’

- சேஷ யோகியார்

##~##

பழநியம்பதியில், சண்முக நதிக்கரையில் ஆஸ்ரமம் கண்ட நிலையில், நவபாஷாணங்களைக் கொண்டு அந்த ஆதிசக்தி தேவியின் கட்டளைக்கு ஏற்ப, அவளது சக்திச் சுடரானது பொய்கையில் விழுந்து, பின் குளிர்ந்து, மலர்ந்து எழுந்து, கார்த்திகைப் பெண்களால் ஆராதிக்கப்பட்டு, அதற்கும் பின் ஆறும் கூடி ஒன்றாகிய ஆறுமுகனை- கார்த்திகேயனை- அழகனை, அதன் காரணப்பெயரான முருகனை தண்டபாணியாக தன்னுள் வாங்கி, அந்த ஆண்டிக்கோலத்தையே உருவாக்குகிறார் போகர்.

இந்த ஆண்டிக்கோலத்தின் பின்னால் உள்ள புராணச் சங்கதியை நாம் எல்லோருமே ஓரளவு அறிவோம். ஒரு மாம்பழத்துக்காக விளைந்த சண்டையில் விநாயகப் பெருமான் முந்திக்கொள்ள, தான் பிந்திவிட்டதால் உண்டான கோபத்தோடு, பிஞ்சு பாலகனாக முருகன் திகழ்ந்தபோதே துறவிக்கோலத்துக்குத் தாவி, அந்த கோலத்தோடு அவன் பூவுலகில் வந்து நின்ற இடம்தான் பழநி.

இந்தப் பெயர்கூட அவ்வையால்தான் விளைந்தது. 'குமரா, நீயே ஒரு பழம்; ஞானப் பழம். உனக்கெதற்கு ஒரு மாம்பழம்?’ என்று அந்தக் கிழவியால்தான் உரிமையோடும் வாஞ்சையோடும் கேட்க முடிந்தது. பின்னர், முருகனும் சினம் தணிந்தான். ஆனாலும், அவன் தனது கை வேலை வீசி எறிந்துவிட்டு, ஒரு கோலைப் பிடித்துக்கொண்டு, பட்டை உதறிவிட்டு, ஒரு கொட்டை கட்டிக்கொண்டு பாலயோகியாக நின்றது என்பது... என்ன, தூங்கி எழுவதுபோல ஒரு சாதாரண சம்பவமா?

சித்தம்... சிவம்... சாகசம்! - 11

அதன்பின்னே, நாம் ஆய்ந்தறிய ஏராளமான கேள்விகள் உள்ளன. பரந்த இப்பூவுலகில் எவ்வளவோ இடங்கள் இருக்க, இன்றைய நம் பழநியம்பதியின் அந்தச் சிறு குன்றை அவன் ஏன் தேர்வு செய்ய வேண்டும்? அங்கேயே போகர்பிரானும் ஏன் இருக்க வேண்டும்? அவரை ஏன் ஆதிசக்தி பாஷாண உருவைச் சமைக்கப் பணிக்க வேண்டும்? இப்படி நமக்குள் நிறையவே கேள்விகள் எழும்பும்.

இவை மட்டுமா?

எங்காவது இறைவனே மனிதனைப் போலச் சினந்து துறவு மேற்கொள்வானா? அதுவும், ஒரு பழத்துக்காக என்னும் கேள்வி எழும்பும். இந்தக் கேள்விக்கு பின்னால் உள்ள சம்பவங்களைத்தான் திருவிளையாடல் என்கிறோம். உலகில், இளம்வயதில் பிள்ளைகள் ஆடுவது விளையாட்டு. இந்த விளையாட்டே மாந்தர்க்கு வெற்றியையும் தோல்வியை யும் அறிமுகம் செய்கிறது. ஒரு விளையாட்டில் கிட்டும் வெற்றியையும் சரி, தோல்வியையும் சரி, சமமாக எடுத்துக்

கொண்டாலே நாம் தொடர்ந்து விளையாட முடியும். வெற்றியும் தோல்வி

யும் நிரந்தரமுமில்லை. அது மாறி மாறி வரும். இதனால், பிஞ்சாக இருக்கும் போதே நெஞ்சம் பண்பட்டு விடுகிறது. பின், வளர்ந்து எழுந்து வாழும் நாளில், வாழ்வில் ஏற்படும் இன்ப- துன்பங்களை

யும் சமமாக பாவிக்கும் தன்மை சற்றேறக் குறைய எல்லோருக்கும் வந்துவிடுகிறது.

இந்த விளையாட்டு உடலுக்கும் சரி, உள்ளத்துக்கும் சரி... பெரிதும் ஆரோக்கியத்தை மட்டுமே அளிக்கிறது. விளையாடுபவருக்கு மட்டுமா... பார்ப்பவர்க்கும் அது ஆனந்தத்தை வாரி வழங்குகிறது.

மானுட விளையாட்டுக்கே இத்தனை மகிமை என்றால், இறை விளையாட்டுக்குள் எத்தனை மகிமை இருக்க முடியும்? அதனாலேயே இறைவிளையாடல்கள் திருவிளையாடல்கள் ஆகின. திருவாகிய பெரும் சிறப்புகள் அதனுள் பூடகமாய்ப் பொதிந்துள்ளன.

சரி, தண்டபாணிக் கோலம் குறித்து சிறிது சிந்திப்போமா?

அந்தக் கோலம் ஏற்படக் காரணம், ஒரு மாம்பழம். அதை உண்டால் ஞானம் ஸித்திக்கும் என்பதே அந்தப் பழத்தின் பின்னுள்ள சிறப்பு. அப்படிச் சொல்லியே நாரதர் அதை ஈசனாரிடம் தந்தார்.

எங்காவது பழம் ஞானம் தருமா?

அது பசியாற்றும், ருசியாற்றும். அதைக் கடந்து அது அளிப்பது ஒருவித திருப்தி. இந்த உண்மை, இந்த உலகைப் படைத்து, அதனுள் ஒரு மாமரம் படைத்து, பின் அதனுள் அப்பழத்தை படைத்த ஈசனாருக்குத் தான் தெரியாதா? இல்லை, நாரதர்தான் சராசரி மானிடனா, இந்த உண்மை தெரியாமல் போக..!

சித்தம்... சிவம்... சாகசம்! - 11

ஆனாலும், அந்தப் பழம் ஞானப்பழம்தான்!

எப்படி?

அது இருக்கப்போய்தான், அதனால்தான் போட்டி உண்டானது. அதாவது, ஞானத்தை யார் அடைவது என்னும் போட்டி. அதில், கணபதி அலுங்காமல் குலுங்காமல் அம்மையப்பனைச் சுற்றிவந்து, தன் சூட்சும ஞானத்தால் பழத்தைப் பெற்றுவிடுகிறார். கணபதி இந்த விளையாட்டில் வெற்றிபெற வேண்டும் என்றால், முருகன் தோற்றுத்தானே ஆக வேண்டும்? எனவே, அந்த விதி முருகனை உலகத்தைச் சுற்ற வைக்கிறது. பின், கோபம் கொள்ளவும் வைக்கிறது. அதனால், அம்மையப்பனைப் பிரியவும் நேர்கிறது. பழநியம்பதி குன்றின் மேல் ஒரு துறவியாக வந்து நிற்கவும் வைத்துவிடுகிறது.

துறவி வேண்டுவதும் ஞானத்தைதானே? இகபர சுகங்களை அல்லவே..! இதை, இனி இப்படிப் பார்க்க வேண்டும்.

'சூட்சும ஞானம் உள்ளவர்கள் இறைவனைப் பிரியவே மாட்டார்கள். அதனால், துறவு பூண்டு மனத்தை அடக்கிப் பின் ஞானம் தேடும் ஒரு போக்குக்கு அவசியம் இல்லாது போகிறது. அல்லாதவர்க்கே கோபம் வரும். கோபம் வந்தால் பிரிய வேண்டிவரும். பிரிந்துவிட்டால், துன்பமின்றி இன்பமாக வாழ்வது சாத்தியமில்லை. அவனோ ஓர் ஆண்டியாகிவிட நேரும். பின், தவத்தாலேயே உய்வடைய முடியும்.’ இதுவே இந்தத் திருவிளையாடல் உணர்த்தும் செய்தி. அடுத்து... முருகன் என்னும் தெய்வீக பாத்திரமானது, அப்பனுக்கே பாடம் சொன்ன பெரும் ஞானியவன் என்பதையும் உள்கொண்டது.

சித்தம்... சிவம்... சாகசம்! - 11

பிரணவத்துக்கே பொருள் சொன்னவனுக்கு அம்மையப்பனே உலகம் என்பது தெரியாதா என்ன? ஆனாலும், தெரியாததுபோல பாவிக்கப் போய்த்தான் இச்சம்பவம் நிகழ்ந்தது.

இப்படிப் பெரும் பொருள் கொண்ட முருகன்,

காக்கும் கடவுளாம் மாலுக்கு மருகன். கூட்டிக் கழித்துப் பார்த்தால் சிவமும் சக்தியும், மாலும் கணபதியும், முருகனுக்குள் அடங்கியும், ஆனந்தமாய்க் கலந்தும் இருப்பதை நாம் உணர முடியும். இந்திரன் மகளான தேவயானையை மணக்கப் போய், தேவர் உலகின் மாப்பிள்ளையாகி, அவர்களாலும் துதிக்கப்படுபவன் முருகன்.

இத்தனைப் பெரியவனுக்கு மண்ணுலகில் எத்தனையோ கோயில்கள்! அதிலெல்லாம் அவனை நாம் நம் விருப்பத்துக்கு ஏற்பவும் அந்தத் தலத்தின் நோக்கத்துக்கு ஏற்பவும் வடிவமைத்தோம். ஆனால், பழநியில் அவனுக்கினிய கோலம், பற்றற்ற ஆண்டிக் கோலம்தான். அதுவே, பூவுலகில் முக்தி பெறவும் உற்ற வழிகாட்டவும் கூடியது என்று உணர்த்தவே ஆண்டியாய்- தண்டபாணியாய் வந்து நின்றான் என்பர்.

மண்மிசை பழநிமலை மேல் அக்கோலம் கொள்ள விஞ்ஞான பூர்வமாகவும் பூகோள ரீதியாகவும் சில காரணங்கள் கூறப்படுகின்றன. அதன்படி பார்த்தால், நவகோள்களில் ஒன்றான செவ்வாய் என்னும் சிவந்த கோளின் நேரான வீச்சு பழநிமலை மேல் பட்டுத் தெறிப்பதாகவும், அந்தக் கோளின் தலைவனான முருகன் அந்த மலைமேல் நின்ற நிலையில் அதன் வீச்சை அவன் தன்னுள் வாங்கி, பின்... ஆகம விதிப் படியால் ஆன பூஜைகளால் அருள் அலைகளாக ஆக்கி, அதை பக்தர்களுக்கு அன்றாடம் வழங்கிக் கொண்டிருப்பதாகவும் ஒரு கருத்து உண்டு.

செவ்வாயின் வீச்சை ஒரு கற்சிலை உள்வாங்கு வதைவிட, பாஷாணம் உள்வாங்கி வெளியிடுவதில் பற்பல ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்திட இடம் இருக்கிறது. இதனாலேயே போகர்பிரானும் நவபாஷாணத்தால் இந்தச் சிலையை உருவாக்கினார். இந்த பாஷாணங்கள் ஒவ்வொன்றுமே ஒரு கோளை பிரதிபலிக்கும். ஒன்பது கோள்களே ஒன்பது பாஷாணங்கள். மனித வாழ்வும் ஒன்பது கோள்களாலேயே வழி நடத்தப்படுகிறது. பழநி முருகனை வணங்கிடும் நிலையில், இந்தக் கோள்களையும் வணங்கிய ஒரு பரிகாரார்த்தம் ஏற்படுகிறது என்போரும் உண்டு.

மானுடர்கள் இப்படிப் பரிகாரார்த்தம் புரியவும், யோகியர் தங்களின் ஞானத் தலைவனாகக் கருதவும் இந்தத் தண்டாயுத பாணி காரணமாக விளங்கிவருகிறான். நவபாஷாணத்துக்கு என்று குணப்பாடு உண்டு. விஷத்துக்கு எதிரானது அமிர்தம். இது, வாழ்வாங்கு வாழ வைப்பது. விஷமோ அழிப்பது.

நவபாஷாண தண்டபாணியும் தன்னை தரிசிப்பவரின் விஷமாகிய அஞ்ஞானத்தை தான் ஏற்று அழிக்கிறான். அஞ்ஞானம் அழிந்தாலே மெய்ஞ்ஞானம் தோன்றிவிடும். அவனை தரிசித்த மாத்திரத்தில் அங்கு நிலவும் கதிர்வீச்சால் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். அவன் திருமேனி அபிஷேகப் பிரசாதம் நம் வரையில் அமிர்தமாய் நம்மை அடைகிறது. அவன் திருமேனி படும் விபூதியும் மருந்தாகி நமக்கு நலம் தருகிறது.

இப்படி இந்தத் தண்டபாணிக்குப் பின்னாலே நாம் உணர்ந்திட ஏராளமான சங்கதிகள் உண்டு. இவ்வண்ணம், தன்னை போகரைக் கொண்டு அந்த முருகன் நிறுவிக் கொண்டான். இதனால் போகரும் இறவாப்புகழும் பெயரும் கொண்டார். அங்கேயே ஜீவசமாதியும் கொண்டார். இப்படி ஒரு நவபாஷாண உருவை போகர் உருவாக்கியபோது, எஞ்சிய பாஷாணக் கலவை கொண்டு மேலும் ஒரு சிலை செய்ததாகவும், அது பழநியம்பதிக்குள்ளேயே பத்திரமாக உள்ளதாகவும், உரிய காலத்தில் அது வெளிவரும் என்றும் ஒரு கதை காலம் காலமாகப் பழநியம்பதியை வலம் வந்தபடி உள்ளது. இல்லையில்லை, அதன் மிச்சம்தான் பூம்பாறையில் முருகனாக உள்ளது என்போரும் உண்டு. ஆனால், இது குறித்தெல்லாம் திண்மையான ஆதாரங்கள் இல்லை. அருஞ்சிறப்புடைய விஷயங்களின் பின்புலத்தில், காலத்தால் இதுபோன்ற சங்கதிகள் முளைப்பது என்பது ஒன்றும் புதிதல்ல.

போகர்பிரானை சீனர் என்று கூறுவோரும் உண்டு; அதை வன்மையாக மறுப்போரும் உண்டு. அவர் ஒரு குயவர். அதற்கான சான்று அவர் பாடலிலேயே காணக்கிடைக்கிறது என்று, அவர் பாடல் ஒன்றை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அதுமட்டுமல்ல; அவரது சீடராக புலிப்பாணி, கொங்கணர், கருவூரார், சுந்தரானந்தர், மச்சமுனி, இடைக்காடர், கமலமுனி, சட்டைமுனி என்று ஒரு சித்தர் கூட்டத்தையே காட்டுகின்றனர்.

போகரின் சீடர்கள் இவர் கள் என்றால், போகரோ அகத்தியரின் சீடர் என்கிறது அபிதான சிந்தாமணி.

இவர் எழுதிய நூல்களும் ஏராளமாக காணக் கிடைக் கின்றன. போகர் 12000, சப்தகாண்டம், நிகண்டு 1700, போகர் வைத்தியம் 1000, போகர் சரக்கு வைப்பு, போகர் ஜனன சாகரம், போகர் கற்பம், போகர் உபதேசம், போகர் ரணவாகடம், போகர் கற்ப சூத்திரம், போகர் அட்டாங்க யோகம், போகர் பூஜாவிதி என்று போகரின் நூல்கள் விரிந்துகொண்டே செல்கின்றன. இதில், போகர் 12000-மும், ரணவாகடமும் என்னாயிற்று என்று தெரியவில்லை. மற்ற நூல்கள் இன்று சான்றோர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

போகர் தண்டபாணி உருவைச் சமைத்த நிலையில், ஆகமப்படி அவரே பல காலம் பூஜித்தும் வந்தார். அவருக்குப் பின் புலிப்பாணியும், அவர் தொடர்பில் வந்தோரும் பூஜித்து வந்து, அந்த பூஜா முறைகளே இன்றுவரையிலும் தொடர்கின்றன.

இவரது வாழ்வில் இன்ன மும் பல ரசமான சம்பவங்கள் இறைந்து கிடக்கின்றன. இவர் மிருகங்களுக்குக்கூட ஞானோபதேசம் செய்திருக் கிறார் என்பது விந்தையான தொரு தகவலாகும். ஒரு பூனைக்கு இவர் வேதமந்திரம் ஓதக்கற்றுக் கொடுக்க, அதுவும் மந்திரம் ஜபித்த கதை, அதில் ஆச்சரியமூட்டும் ஒன்றாகும். இச்சம்பவம் தொடர்பான பாடல் ஒன்று, போகர் 7000 நூலில் காணப்படுகிறது.

மிகுந்த சுவாரஸ்யம் கொண்ட, பூனை மந்திரம் சொன்ன சம்பவத்துக்குப் பின்னால், பெரும் ரசவாதச் செயலையும் போகர் புரிகிறார்.

அந்தச் சம்பவம்...?

- சிலிர்ப்போம்...