Published:Updated:

யாக்ஞவல்கியர்

யாக்ஞவல்கியர்

யாக்ஞவல்கியர்

யாக்ஞவல்கியர்

Published:Updated:
யாக்ஞவல்கியர்
##~##

ரு முக்கியமான முடிவை எடுக்கும் தருணத்தில், அனைத்து மகரிஷிகளையும் மந்திரிப் பிரதானிகளையும் அழைத்து, அவர் களின் கருத்துக்களைத் தெரிந்துகொள்வது அந்நாளைய வழக்கம். அப்படிக் கூடும் கூட்டத்துக்கு 'சதஸ்’ என்று பெயர். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாமன்னர் ஜனகரும் சதஸ் ஒன்றைக் கூட்டினார். அவர் ஏற்கெனவே வேதங்களை அறிந்த ஞானியாக இருந்தாலும், யாக்ஞ வல்கியரின் சீடராக இருந்து, வேதங்களின் நுண்பொருளை அறிய விருப்பம் கொண்டார். அதற்கு முன்னதாக, அவர் ஒரு மகத்தான பிரும்மஞானி என்று உலத்தினர் அனைவரும் அறியும்படி செய்ய வேண்டும் என்பது ஜனகரின் எண்ணம்.

அவரது உத்தரவின்படி, ஆயிரம் பசுக்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றின் கொம்புகளில் இருபது தங்கக் காசுகள் கட்டப்பட்ட முடிச்சுகள் இருந்தன. யார் பிரும்மஞானியோ, அவருக்கே இந்தப் பசுக்கள் தானமாக வழங்கப்படும் என்று அறிவித்தார் மன்னர். எவரும் வாய் திறக்கத் துணியவில்லை. காரணம், பிரும்மஞானியாகப்பட்டவர் தம்மை அப்படிக் காட்டிக்கொள்ள முயன்றால், அந்தக் கணமே அவருக்கு அந்தத் தகுதி இல்லாமல் போய்விடும் என்பது விதி.

யாக்ஞவல்கியர்
யாக்ஞவல்கியர்

இந்நிலையில், யாக்ஞவல்கியர் முன்வந்து, தனது சீடர்களை அழைத்து, ஆயிரம் பசுக்களையும் ஓட்டிச் செல்லும்படி சைகையில் கட்டளையிட்டார். இவரது  மனத்தின் உறுதியை அறிந்த ஜனகர் மனத்துக்குள் மகிழ்ச்சி கொண்டார். அவரது விருப்பமும் பூர்த்தியாயிற்று. ஆனால், மற்ற முனிவர் களுக்குப் பொறாமை எழுந்தது. 'நீர் பிரும்மஞானி என்பதால்தான் பசுக்களை ஓட்டிச் செல்லும்படி உமது சீடர்களுக்குப் பணித்தீரோ?'என்று வினவ, யாக்ஞவல்கியர், 'நான் அப்படிச் சொல்லவில்லையே! நீங்கள் அனைவரும் சேர்ந்துதான் இப்போது என்னை பிரம்மஞானியாக ஒப்புக்கொண்டுள்ளீர்கள்' என்று பதிலளித்தார். யாக்ஞவல்கியரது இந்தச் சாதுர்யமான பதில் ஜனகருக்கு மகிழ்ச்சியை அளித்ததோடு, அவரது புத்திகூர்மையும் சமயோசித உணர்வும் மற்ற முனிவர்களுக்கும் புலனாயிற்று.  

யாக்ஞவல்கியர் தமது வாழ்க்கையின் நிறைவுக் காலத்தில் துறவறம் பூண்டு, வனத்தில் வாழ்க்கை நடத்தினார். இவருக்கு முன்னர் எந்த முனிவரும் சந்நியாச வாழ்க்கை மேற்கொண்டதில்லை. அந்த வகையில், இவர் பிரும்மஞானியாகவும், முதல் சந்நியாசியாகவும் திகழ்ந்தார்.  

யாக்ஞவல்கியர்

யாக்ஞவல்கியரது சிறப்பு, அவர் வாழ்ந்த தவ வாழ்க்கையில் மட்டுமல்லாமல், அவர் உபதேசித்த தத்துவங்களை அறியும்போது பன்மடங்காக அதிகரிக் கிறது. இந்து தர்மசாஸ்திரத்தை விளக்கும் மூன்று முக்கிய ஆதாரங்களாக மனுஸ்ம்ருதி, யாக்ஞவல்கிய ஸ்ம்ருதி, கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.  இவற்றையே இந்து மதச் சட்டங்களின் ஆணி வேராக, அடிப்படையாக, இங்கிலாந்து உச்சநீதிமன்றத்தின் ப்ரிவி கவுன்சில் (ஜீக்ஷீவீஸ்ஹ் நீஷீuஸீநீவீறீ) ஏற்றுக்கொண்டிருக்கிறது.

யாக்ஞவல்கிய ஸ்ம்ருதி பிரம்மம், பரப் பிரம்மம், பரமாத்மா, பஞ்சபூதங்கள் போன்ற உயர்ந்த விஷயங்கள் மட்டுமல்லாமல், கருவின் பரிணாம வளர்ச்சி, உடல்ரீதியான அறிவியல் போன்றவற்றையும் விளக்குகிறது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன், எந்தவிதமான நவீன கருவிகளும் இல்லாத நிலையில், தனது ஞானத்தால் மட்டுமே யாக்ஞவல்கியர் கண்டுணர்ந்து சொன்ன உண்மைகள் இன்றைய அறிவியலுக்கும் பொருத்தமானதாக இருக்கின்றன. இவை தவிர, ராஜ்யம் சார்ந்த நிர்வாகம், மன்னர்கள் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகள், வருமானம், சேமிப்பு, மக்களின் மனோபாவ மாற்றங்கள், பிரம்மசரியம், சந்நியாசம், மக்கள் அன்றாடம் கடைப் பிடிக்கவேண்டிய பழக்கங்கள், திருமணப் பொருத்தங்கள், திருமண வகைகள், யாகங்கள், நில ஒப்பந்தங்கள், வட்டி விகிதங்கள், வெளிநாட்டு ஒப்பந்தங்கள்... ஆகிய அனைத்தும் தெளிவாக விளக்கப்படுகிறது.

யாக்ஞவல்கியர்

யாக்ஞவல்கியரின் காலம் 6,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சென்னையில் பல்வேறு இடங்களில் சிறிய அளவில் இதற்கு முன்னர் இயங்கி வந்தாலும், ஆலயத்துடன்கூடிய யாக்ஞவல்கிய சபா 1998-ல்தான் நிர்மாணிக்கப்பட்டது. பழைய பல்லாவரத்தில் இயங்கி வரும் இந்தச் சபா, பெருமாள் கோயில் தெருவில், கிராமியம் மாறாத சூழலில் அமைந்திருக்கிறது. 2000-வது ஆண்டில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  

யாக்ஞவல்கியரின் சுக்ல யஜுர் வேதத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் ஸ்ரீயாக்ஞவல்கியர் சபா. இந்தச் சபா யாக்ஞவல்கியருக் கான ஆலயப் பணிகளைச் செவ்வனே ஆற்றுகிறது. ஆலயத்தின் நுழைவாயிலிலேயே வலப் புறத்தில் யோக கணபதி எழுந்தருளியிருக்கிறார். ஆலயத்துக்குள் காயத்ரி தேவி, மைத்ரேயி, காத்யாயினி உடன் ஸ்ரீயாக்ஞ

வல்கியர், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தைச் செலுத் தும் சூரிய நாராயணர் ஆகியோருக்குச் சந்நிதிகள் அமைந்துள்ளன.    

'நவக்கிரகங்களுள் நடுநாயகமாக விளங்குபவர் சூரிய பகவான். அவருக்குத் தனிச் சந்நிதி அமைந்திருப்பதும், அவரிடம் வேதம் பயின்று சுக்ல யஜுர் வேதத்தை அருளிய யாக்ஞவல்கியர் தனது தேவியர்களுடன் மத்தியில் வீற்றிருப்பதும், அவரை சூரிய பகவானிடம் கற்க வழி செய்த காயத்ரிதேவிக்குத் தனியரு சந்நிதி அமைந்திருப்பதும் இங்குள்ள சிறப்பம்சங்கள். இங்கு வந்து சுக்ல யஜுர் வேத மந்திர கோஷங்களைக் கேட்கும்போதே, அந்தச் சத்தம் அனைவரது மனங்களிலும் சாந்தி ஏற்படுத்தி, அவர்கள் மேற்கொள்ளும் காரியங்கள் அனைத்தும் ஜெயமாக அமைகின்றன என்பதை இங்கு வரும் பக்தர்கள் வாயிலாக அறிந்து கொள்கிறோம்'' என்கிறார் இந்த ஆலயத் தில் பூஜைகள் செய்யும் ரவி குருக்கள்.  

சங்கடஹர சதுர்த்தியன்று யோக கணபதிக்கு விசேஷ அபிஷேகம், சுக்ல துவாதசியன்று யாக்ஞவல்கியருக்கு விசேஷ அர்ச்சனை, சதய நட்சத்திரத் தன்று பிரதி மாதமும் சகஸ்ரநாம அர்ச்சனை, பௌர்ணமியன்று காயத்ரி தேவிக்கு விசேஷ பூஜை மற்றும் அன்ன

தானம் ஆகியவை தவறாமல் நடை பெறுகின்றன. கார்த்திகை மாதம் சுக்ல துவாதசியன்று ஸ்ரீயாக்ஞவல்கிய ஜயந்தி மஹோத்ஸவம், விசேஷ ஹோமங்கள், வேத பாராயணங்கள், மாலையில் இன்னிசை, உபன்யாசங்கள் என ஒரு வாரம் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடப் பிறப்பன்று  பிரபல ஜோதிடர்கள் இங்கு வந்து பஞ்சாங்கம் படிப்பதும், வருஷப் பலன்கள் சொல்வதும் தொடர்கின்றது. நிச்சயதார்த்தம், சீமந்தம் போன்ற சுப வைபவங்களுக்கு வாடகைக்கும் ஒரு பகுதி விடப்படுகிறது.  

இந்த ஆலயத்துள் அமர்ந்து  அரை மணி நேரம் தியானம் செய்தால் போதும்... மனம் தெளிவுறும்; உடற்பிணிகள் நீங்கும்; புத்தி பிரகாசமாகும்; செய்யும் செயல்களையெல்லாம் இறைவனுக்கு அர்ப்பணிக்கும் உணர்வு ஏற்படும். மனம் நிரந்தர சாந்தி பெறும்!

படங்கள்: க்ளிக் ரவி, காமேஷ்

என்ன சொல்கிறது யாக்ஞவல்கிய ஸ்ம்ருதி?!

யாக்ஞவல்கியர்

மனம் என்ற வார்த்தையிலிருந்து கிளைத்ததுதான் மனிதன் என்ற பதம். சிந்திக்கத் தெரிந்தவன் மனிதன் மட்டுமே! சுய விசாரணையும், சுய தேடலும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படவேண்டிய ஒன்றாகும். மனத்தை அலைபாயாது அடக்குபவனால் மட்டுமே ஆனந்த நிலையை அடைய முடியும். அவனால் மட்டுமே சாதனைகள் புரிய முடியும். மனித குலத்துக்குத் தொண்டாற்றும் வகையில் அரிய செயல்கள் செய்யமுடியும்.

உடல் என்பது ஒரு தேர் என்றால், அதைச் செலுத்தும் சாரதியாக மனம் இருக்கிறது. அந்தச் சாரதியை வழிகாட்டிச் செல்லும் எஜமானனாக 'புத்தி’ இயங்கவேண்டும். இல்லையேல், சாரதி அதாவது மனம் தனக்குத் தோன்றியபடியெல்லாம் தான்தோன்றியாக அலைய ஆரம்பித்துவிட்டால், அவன் உடலாகிய தேரை கண்மூடித்தனமாகச் செலுத்தத் தொடங்கிவிடுவான். விளைவு, மனித குலத்துக்கே நாசமாக முடியும். புத்தி சரியான பாதையில் மனத்தைச் செலுத்துவதற்கு யோக சாதனைகளும், யோகாசனப் பயிற்சிகளும் உதவுகின்றன.